உரத்தகுரலை எழுப்புவோம் ! எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண்

.
   உணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு
          உறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு
          அனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு
          அகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு !

          உழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா
          உழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார் 
          களைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே
          கலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் !

           உழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது
           உழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும் 
           உழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க
           உலக   முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் !

           முதலைவைத்து ஒருநாளும் உழைப்புவர மாட்டா
           முதலோடு தொழிலாளி இணைப்பு வரவேண்டும் 
           தொழிலாளி உழைப்பினிலே முதலிணையும் போது
           உற்பத்தி புறப்பட்டு உலகெங்கும் பரவும் !

           மாடிமனை கோடிபணம் வாகனங்கள் எல்லாம்
           வாழ்க்கையிலே வருவதற்கு வருந்துகிறார் பலபேர் 
           கோடிபணம் கிடைத்தவுடன் கோபுரத்தில் ஏறி 
           குருதிசிந்தி உழைப்பாரைக் கொன்றுவிடல் முறையோ !

           சேற்றிலே காலைவைத்துத் தினமுமே உழைக்காவிட்டால்
           சோற்றிலே கையைவைத்துச் சுவைத்திடல் முடியுமன்றோ 
           ஆற்றையே மறித்துக்கட்டும் ஆற்றலை கொண்டுநிற்பார் 
           அகிலத்தில் உழைப்பதாலே அனைவரும் வாழுகின்றோம் !

           காலையில் எழுந்துநாளும் மாலையில் படுக்கும்போது
           கடினமாய் உழைத்துநிற்பார் காவலாய் நிற்கின்றார்கள்
           கஷ்டத்தைப் பார்த்திடாமல் இஷ்டமாய் உழைப்பதாலே
           களிப்புடன் நாளும்நாங்கள் களிக்கிறோம் வசதியாக !


           உழைக்கின்றார் மனம்மகிழக் கொடுக்க வேண்டும்
           உழைப்பதனை உயர்வாக மதித்தல் வேண்டும் 
           உழைக்கின்றார் உள்ளத்தை உடைக்கா நிற்க
           உழைக்கின்றார் தினமதனில் உறுதி கொள்வோம் ! 

           நிலத்தில் வியர்வைசிந்தவே
           நிதமுழைக்கும் யாவரும்
           உளத்திலுவகை பெற்றிட
           உரத்தகுரலைஎழுப்புவோம் 
           பணத்தையெண்ணி பெட்டியில்
           பதுக்கிவைக்கும் போக்கினை
           நிலத்தைவிட்டு ஓட்டியே
            நித்தமுழைப்பைப் போற்றுவோம் !

No comments: