இலங்கையில் பாரதி - அங்கம் 16 - முருகபூபதி -

.

 பாரதியின்  சிந்தனைகள் இலங்கையில் வேரூன்றுவதற்கு அடிப்படையான காரணங்களை 1925 ஆம் ஆண்டு முதல் இங்கு நிகழ்ந்த  சம்பவங்களிலிருந்தே ஆராயமுடியும். எமக்கு கிடைத்த தரவுகள், தகவல்களின் அடிப்படையிலேயே  இந்த நீண்ட தொடரை எழுதத்தொடங்கினோம்.
இலங்கையில் பாரதியின் நாமம், பாடசாலைகளில், நகரங்கள், கிராமங்கள், வீதிகள், பாடசாலைகளின் மாணவர் இல்லங்களில், சனசமூக நிலையங்களில், இலக்கிய அமைப்புகளில் நீக்கமற நிறைந்திருக்கின்றது.
பாரதியின் முற்போக்கான சிந்தனைகளின் தாக்கத்தினால் இலங்கையில் தோன்றிய மூத்த இலக்கிய அமைப்பு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.
அதன் வரலாற்றுச்சுவடுகள் 1954 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதியிலிருந்து பதிவாகியிருக்கிறது.
இச்சங்கத்தின்  அங்குரார்ப்பணம் அன்றையதினம் கொழும்பில் மருதானை வீரரத்தன மண்டபத்தில் நடந்திருக்கிறது.  இதன் கொள்கைப்பிரகடனம், அதே ஆண்டில் ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி வெளியானது.
அதற்கு முன்னர் குறிப்பிட்ட கொள்கைப்பிரகடனம் சங்கத்தின் மத்தியகுழுவினால் பரிசீலிக்கப்பட்டது.




" ஒரு  முற்போக்கு  இலக்கியப்பரம்பரை வளர நம்நாட்டு எழுத்தாளர்களுக்குச் சரியான தலைமை அளித்து வழிநடத்தும் அமைப்பாகவும், அதன் கொள்கைகளையும் வேலைத்திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும் உயிர்த்துடிப்பும் செயலாற்றும்  திறமையுமுள்ள நிறுவனமாகவும் இ.மு.எ.ச. திகழவேண்டும். எமது மக்களின் இலக்கிய எதிர்காலத்தை பொறுப்புணர்ச்சியுடன், கடமை உணர்வுடன் நாம் ஒவ்வொருவரும் கூட்டாகவும் தனித்தும் பொறுப்பெற்று எமது பணியை உற்சாகத்துடனும் உறுதியுடனும் நிறைவேற்ற வேண்டும்" என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டு ஏற்கப்பட்டது.


" இ.மு. எ.ச.வுடன் இணைந்து ஏற்கனவே இயங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு  மேலும் ஓர் உந்துதலைக் கொடுப்பதற்காக விடுக்கப்பட்ட இந்த அறைகூவல் முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டதை பின்வரும் ஆண்டுகளில் நடந்த நிகழ்ச்சிகள் நிரூபித்தன. அதற்கு முன்னோடியாக அமைந்தது 1956 இறுதியில் இ.மு. எ.ச. விரிந்த அளவில் நடத்திய பாரதி விழா.
( ஆதாரம்: ஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும் - நூல் சுபைர் இளங்கீரன்)
இளங்கீரன் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர். பாரதியிடத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இளங்கீரன் (1927-1997) "பாரதி கண்ட சமுதாயம் " என்ற நூலையும் எழுதியவர். தமிழகத்திலும் மலேசியாவிலும் வாழ்ந்திருக்கும் இளங்கீரன், அங்கும் இலங்கையிலும் பாரதியின் புகழைப்பரப்புவதில் தீவிரமாக இருந்தவர்.
1956 ஆம் ஆண்டில் - இலங்கையில் கொழும்பு, குருணாகல், கண்டி, மாத்தளை, திருக்கோணமலை, அநுராதபுரம், யாழ்ப்பாணம் ஆகிய ஊர்களிலும் மலையகத்தில் பல நகரங்களிலும் அவர் அங்கம் வகித்த இ.மு. எ. சங்கம் பாரதிக்காக பல விழாக்களை நடத்தியது. இதற்கென தமிழகத்திலிருந்து மூத்த எழுத்தாளரும் பாரதி இயல் ஆய்வாளருமான தொ. மு. சி. சிதம்பர ரகுநாதனையும் சங்கம் வரவழைத்தது.
இலங்கையில் பாரதியை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முன்னிறுத்தியதற்கான காரணத்தை இளங்கீரன் தமது  நூலில் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:
" இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு தசாப்தங்களில்  தமிழ் இலக்கியத்தில் தேசிய உணர்வையும் முற்போக்கு கருத்துக்களையும் புதிய தமிழையும் தொடக்கிவைத்தவர் மகாகவி பாரதியே. எனினும், அவரைப்பற்றி 1956 வரை, இலங்கையில் பேசியும் எழுதியும் வந்தவர்கள் அம்மகாகவியின் தமிழ்த்தொண்டையும் கவிதையில் அவர் புகுத்திய புதுமையையும் மேல்வாரியாக சிலாகித்துக் கூறிவந்தனரே தவிர, பாரதி இலக்கியத்தின் முழு உள்ளடகத்தையும் அதன் உணர்வுபூர்வமான இலட்சியங்களையும்  மக்களுக்கு  சரிவர விளக்கிக் காட்டவில்லை. பாரதியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு,  தேசிய உணர்வு, சகோதர இனங்களையும் சகோதர மொழிகளையும் அவர் மதித்த விதம், ஆங்கில  மோகத்திற்கும் தமிழ் மொழியில் படித்தவர்கள் மத்தியில் நிலவிய தாழ்வுணர்ச்சிக்கும் எதிராக தாய்மொழிப்பற்றை ஊட்டிய  பாங்கு, தேசிய ஐக்கியத்தில் அவர் கொண்டிருந்த பற்றுறுதி, சாதிக்கொடுமையை வெறுப்போடும் வெஞ்சினத்தோடும்  சாடிய முறை, முப்பது கோடி ஜனசங்க முழுமைக்கும் பொதுவுடமை வேண்டி நின்ற அவரது சமூதாயக்கொள்கை, அவரில் காணப்பட்ட சர்வதேச உணர்வு ஆகியவற்றை மக்களுக்கு எடுத்துச்சொல்லாமல் மறைத்துவிட்டார்கள்  என்றே கூறலாம். காரணம், நிலபிரபுத்துவ அமைப்பின் பிற்போக்கான சமூகக்கருத்துக்களையும் கோட்பாடுகளையும் மனோபாவத்தையும் கொண்டிருந்த அவர்கள், மேலே கூறப்பட்ட பாரதியின் முற்போக்கான அம்சங்களை அங்கீகரிக்க விரும்பாததுதான். சொல்லப்போனால் தமிழ் மொழிக்கும் தமிழ் கவிதைக்கும் மறுமலர்ச்சியை உண்டாக்கிய ஒரு புதுமைக்கவி என்ற அளவில் அவரைக்காட்டினரே தவிர (பண்டித வர்க்கம் இதனைக்கூடச்செய்யவில்லை) அம்மகா கவியின் முழுமையான தரிசனத்தை - பரிமாணத்தை மக்களுக்கு காட்டவில்லை."
இலங்கையில் முற்போக்கு இலக்கியத்தை வளர்த்தெடுக்கவேண்டிய தேவை அக்காலப்பகுதியில் இருந்தமைக்கு இங்கிருந்த தமிழ் சமூக அமைப்பும் ஒரு முக்கிய காரணம்.


சாதி வேற்றுமை, ஏற்றத்தாழ்வு, ஆலயங்களில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமை, குடிநீர் கிணறுகளில் அம்மக்களுக்கு காட்டப்பட்ட புறக்கணிப்பு, பாடசாலைகளில் நடந்த வேற்றுமை, அவற்றின் வெளிப்பாடாக வெடித்த கலவரங்கள் என்பன ஈழத்து இலக்கியத்தில் சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் முதலானவற்றில் இப்பிரச்சினைகள் மண்வாசனை கமழ பதிவுசெய்யப்பட்டன.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் அறுவடையை எம்மவர்கள் அனுபவித்தார்கள். இச்சங்கத்திற்கு ஆதார சுருதியாகத்  திகழ்ந்தவர் பாரதியார். இன்று யாழ்ப்பாணத்தில் இயங்கும் பல்கலைக்கழகத்தின் தோற்றத்திற்கும் பின்னணியில் நின்று இயங்கியது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற வரலாற்று உண்மையும் இன்று மறைக்கப்பட்டு  மறக்கப்பட்டிருக்கிறது.
இச்சங்கத்திற்கென  இலங்கையின் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி எழுதியிருக்கும் எழுத்தாளர் கீதம் சங்கம் 1962 இல் சங்கம்  நடத்திய அகில இலங்கைத் தமிழ் எழுத்தாளர் பொது மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதிலும் பாரதியின் பிரசித்திபெற்ற கவிதை வரிகளே தொடக்கமாக அமைந்திருந்தன.
குறிப்பிட்ட எழுத்தாளர் கீதம்:
நமக்குத்தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
 இமைப்பொழுதும் சோரா திருத்தல்
    சங்கு முழங்குது ! சங்கு முழங்குது !
    சங்கு முழங்குது கேள் - புமைச்  சங்கு முழங்குது கேள்
எழுத்தெனும் சங்கம் ஒலித்திடுகின்றது
உழுத்திடும் உலகம் ஒழிந்திடவே - சங்கு முழங்குது
சுரண்டல் மிகுந்தது, சூழ்ச்சி நிறைந்தது
இருண்ட இச்சமூதாயம் !
வரண்டு கிடந்திடு மக்களின் துன்ப
வதைகள் ஒழித்திடுவோம் !
திரண்டிவண் எழுவீர் பேனா மன்னர்
தீரமுடன் நீரே - கலைச்  சிற்பிகளே ! எம் எழுத்தாற் பற்பல
அற்புதம் செய்திடுவோம் ! புது அமைப்பும் நிறுவிடுவோம்.
 சங்கு முழங்குது
கம்பன், வள்ளுவன், காளமேகம் வழி
வந்தவர் நாமன்றோ ?
கீரன், ஓளவை, இளங்கோ பெற்ற கீர்த்தி நமதன்றோ ?
நாவலன் , பாரதி - சோமசுந்தரன்
நமது இனமன்றோ ? இவர்
யாவரும் காட்டும் வழியே நமது இலக்கிய நல்வழியாம் ! அவ்
வழியே சென்று ஒளிசேர் தமிழை
 விழிபோற் காத்திடுவோம். - சங்கு முழங்குது
வானவில் வர்ணம் ஏழு  வளைவதை கண்டிடுவீர் !
கானகத்தில் கனிகள் ஆயிரம்  காற்றில் அசைவதைப்போல்
பூங்கா வனத்தில் ஆயிரம் ஆயிரம் பூக்கள் மலர்வதைப்போல்
புத்தம் புதிய கருத்துக்கள் ஆயிரம்
நித்தம் பெருகவென  - சங்கு முழங்குது
நமக்குத்தொழில் கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல்.
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் இந்த எழுத்தாளர் கீதத்தை இயற்றிய அ.ந. கந்தசாமி அவர்கள்தான் பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமி பற்றி தீவிரமாக தேடி ஆராய்ந்து,  அவரது சமாதி அமைந்துள்ள பருத்தித்துறை வியாபாரிமூலையில் அன்னாருக்காக சங்கத்தின் சார்பில் பெருவிழாவே எடுப்பதற்கு தூண்டுகோலாக இருந்தவர்.
இச்சங்கமே 1982 - 1983 காலப்பகுதியில் பாரதி நூற்றாண்டு விழாக்களையும் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுத்தது. இதற்காக தமிழகத்திலிருந்து பாரதி இயல் ஆய்வாளர்கள் தொ.மு. சி. ரகுநாதன், பேராசிரியர் எஸ். இராமகிருஷ்ணன், ராஜம் கிருஷ்ணன் ஆகியோரையும் அழைத்திருந்தது.
இலங்கையில் நடந்த பாரதி நூற்றாண்டு குறித்த அங்கத்தில் இதுபற்றி மேலும் விரிவாகப்பார்க்க முடியும்.
செழுமை, குளிர்மை, பசுமை படர்ந்துள்ள மலையகத்தில் பதுளையில் பசறை வீதியில் 1957 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி பாரதி கல்லூரி அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இக்கல்லூரியின் பத்தாவது ஆண்டு நிறைவுவிழா கொண்டாட்டத்திற்காக வருகை தந்திருந்தவர் பாரதியின் பேத்தி திருமதி விஜயபாரதி சுந்தரராஜன். இவரது கணவர் பேராசிரியர் கே. சுந்தரராஜன்.
அந்த விழாவில் சுந்தரராஜன் பேசியபோது குறிப்பிட்டதாவது:
" நாங்கள் ஈழம் வந்ததிலிருந்து இதுவரை கலந்துகொண்ட பாரதிவிழாக்களில் எல்லாம் பாரதியாரின் உருவத்தையோ படத்தையோ அரையும் காலுமாகக்கண்டோம். எனினும் இப்பொழுது பதுளை பாரதி கல்லூரியால் அவருக்கு முழு உருவச்சிலை எழுப்பப்பட்டு சிறப்பான முறையில் மக்கள் பெருவெள்ளத்தில் விழா எடுக்கப்பட்டுள்ளது. இங்குதான் பாரதி விழா பூரணத்துவம் பெருகிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அநேகமாக நான் சென்ற பல இடங்களிலும் கேள்விப்பட்ட  ஊர்களிலும்கூட பாரதியாரின் பெயரில் ஒரு கல்லூரி இயங்குவதையோ அல்லது ஒரு கல்லூரிக்காவது பாரதியார் என்று பெயரிட்டோ உள்ளதாக நான் இதுவரையில் அறியவில்லை. அவர் பெயரில் பல மன்றங்கள் இருக்கலாம். ஆனால், ஒரு கல்லூரி இருப்பதாக நானறியேன். எனினும், பாரதியாரின் பெயரில் ஏழைக்குழந்தைகளின் பெயரில் கல்வி விருத்திக்காக இங்கு இக்கல்லூரி அமைந்திருப்பதைக்கண்டு எம் உள்ளம் பூரிக்கின்றது." (ஆதாரம்: பதுளையில் பாரதி நினைவாலயம் - பாரதி கல்லூரி - க.இரமசாமி பதுளை சிந்தனை ஒன்றியம் பாரதி நூற்றாண்டு மலர்) இக்கல்லூரி பின்னாளில் தரமுயர்த்தப்பட்டதாக அறியக்கிடைக்கிறது.
இவ்வாறு இலங்கையில் மலையகப்பிரதேசங்களான பதுளை, பண்டாரவளை, அப்புத்தளை, இரத்தினபுரி, பலாங்கொடை, நாவலப்பிட்டி, கம்பளை, கண்டி, நுவரேலியா, தலவாக்கலை, புசல்லாவை  உட்பட பல ஊர்களில் பாரதிக்கு விழா எடுத்தும் சிறப்புமலர்கள் வெளியிட்டும் பாரதியின் புகழையும் சிந்தனைகளையும் மலையகத்தமிழ் மக்கள்  பரப்பி வருகிறார்கள்.
இம்மக்கள் இந்தியாவிலிருந்து பிரிட்டிஷாரால் அழைத்தவரப்பட்டவர்களின் சந்ததியினர்.
இந்தப்பிரதேசங்களில் இயங்கிய தற்பொழுதும் இயங்கிவருகின்ற அமைப்புகள் தொடர்ச்சியாக பாரதியை நினைவுகூர்ந்து  நிகழ்ச்சிகளை முன்னெடுத்துவருகின்றன.
(தொடரும்)


No comments: