உலகச் செய்திகள்


பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி பலி

ஜனாதிபதிக்கெதிரான போராட்டத்தினால் கலவர பூமியான வெனிசுவேலா..! 

மூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு

ஷிம்லா பேருந்து விபத்தில் 44 பேர் பலி; எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்: காணொளி வெளியீடு

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது.!

தமிழக அரசியலில் பரபரப்பு: அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவதற்கான சமிக்ஞைகள்; சசிகலாவின் எதிர்காலம் இருளில்?

மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்!

பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதி யார்? முதல் கட்ட வாக்கு பதிவு இன்று..!

பிரான்ஸில் துப்பாக்கிச் சூடு : பொலிஸ் அதிகாரி பலி

21/04/2017 பிரான்ஸின் தலைநகர் பாரிஸின் சாம்பஸ் எல்யஸ் பகுதியில் ஆயுததாரியொருவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் கொல்லப்பட்டதாகவும் இருவர் பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஆயுததாரி கொல்லப்பட்டதாக பிரான்ஸ் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி   


ஜனாதிபதிக்கெதிரான போராட்டத்தினால் கலவர பூமியான வெனிசுவேலா..! 

20/04/2017 ஜனாதிபதியின் சீரற்ற ஆட்சியை எதிர்த்து இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் வெனிசுவேலா கடந்த இரண்டு நாட்களாக கலவர பூமியாக இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
வெனிசுவேலாவின் முன்னாள் ஜனாதிபதி ஹியூகோ சவோஸ், கடந்த 2013 ஆம் ஆண்டு மரணமடைந்ததை தொடர்ந்து, நிக்கோலஸ் மாதுரோ அந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். 
இந்நிலையில் சவோஸ் ஆட்சியை விட நிக்கோலஸ் மாதுரோவின் ஆட்சியில் பல்வேறுபட்ட அரசியல் குழப்பங்களும், நாட்டின் பொருளாதாரத்தில் சடுதியான வீழ்ச்சியும் ஏற்படவே, அந்நாட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
மேலும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை நிக்கோலஸ் மாதுரோ பலவந்தமாக சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டிருந்தார். அத்தோடு நாட்டில் அடிப்படை பொருட்களை வாங்குவதற்கு மக்களிடம் பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதோடு, பணவீக்கம் அதிகரித்த வண்ணமிருப்பதால், ஜனாதிபதியை பதவி விலககோரி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
வெனிசுவேலா தலைநகர் கராகஸ், மற்றும் முக்கியநகரான சான் கிறிஸ்டோபல் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் மக்கள்வீதிகளில் திரண்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.
அத்தோடு குறித்த போராட்டத்தை தடுப்பதற்காக அந்நாட்டு பாதுகாப்பது படையினர் நடத்திய தாக்குதலில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவான போராட்டத்தாரர்கள் காயமுற்றுள்ளனர்.
மேலும் தலைநகர் கராகஸ்ஸில் ஜனாதிபதி ஆதரவாளர்கள் கூடி போராட்டக்காரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளதோடு, போராட்டத்தை தடுப்பதற்கு பாதுகாப்பது தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொள்வதால், போராட்டக்காரர்கள் பெற்றோல் குண்டு தாக்குதல்களை நடத்தி பதற்ற நிலையை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி   

Shமூன்றாம் உலகப் போர் இன்னும் ஒரு சில வாரங்களில் ஆரம்பம் ; டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியை எதிர்வுகூறிய தீர்க்கதரிசி அதிரடி அறிவிப்பு

19/04/2017 அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் தான் பதவியேற்பார் என யாரும் எதிர்பார்த்திருக்காத காலகட்டத்தில் சரியாக எதிர்வுகூறியதோடு மட்டுமன்றி தன்னைத் தானே இறைவனின் தூதர் என பிரகடனப்படுத்திக் கொண்டிருந்த தீர்க்கதரிசியான ஹொராசியோ வில்லேகாஸ் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் காலத்தை தற்போது எதிர்வுகூறியுள்ளார். 
அவரது எதிர்வுகூறலின் பிரகாரம் உலக அணு ஆயுதப் போர் ஆரம்பமாக ஒரு சில வாரங்கள் மட்டுமே உள்ளன. 
டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவாகிய பின், சிரியா மீது தாக்குதலை நடத்துவார் என ஹொராசியாவால் ஏற்கனவே கூறப்பட்டிருந்த எதிர்வுகூறலை நிஜமாக்கும் வகையில், டொனால்ட் டிரம்ப் அண்மையில் சிரிய ஹொம்ஸ் நகரிலுள்ள விமானப் படைத்தளத்தின் மீது வான் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
சிரியா மீதான தாக்குதலே ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனாவை அதிக உயிர்களை பலிகொள்ளக் கூடிய உலகப் போர் ஒன்றுக்குள் தள்ளும் என ஹொராசியோ தெரிவித்திருந்தார்.இந்நிலையில் அவர் தற்போது தூய பாத்திமா அன்னை காட்சியளித்த 100 ஆவது ஆண்டு காலத்தில் மூன்றாம் உலகப் போர் ஆரம்பமாகும் என எதிர்வுகூறியுள்ளார். 
அந்த வகையில் மூன்றாம் உலகப் போரானது எதிர்வரும் மே 13 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 13 ஆம் திகதிக்கும் இடையில் இடம்பெறும் எனவும் இதன்போது பாரிய பேரழிவு மற்றும் மரணங்கள் இடம்பெறும் எனவும் ஹொராசியா தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி   

ஷிம்லா பேருந்து விபத்தில் 44 பேர் பலி; எண்ணிக்கை உயரலாம் என அச்சம்!

19/04/2017 ஷிம்லாவில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 44 பேர் பலியாகினர்.
ஷிம்லாவில் இருந்து தியூனி என்ற இடத்துக்கு தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்தது. இதில், சாரதி மற்றும் நடத்துனர் உட்பட 56 பேர் பயணித்தனர்.
மலைப்பாங்கான நெர்வா பகுதியருகே சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து ஒரு பக்கமாகச் சரிந்து உருண்டு, தோன் ஆற்றில் விழுந்தது. விபத்து பற்றித் தெரியவந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை 44 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன. எஞ்சிய 12 பேரும் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.   நன்றி வீரகேசரி

அமெரிக்க நகர் ஒன்றின் மீது வடகொரியா அணுகுண்டு தாக்குதல்: காணொளி வெளியீடு

19/04/2017 அமெரிக்கா - வடகொரியா இடையே பதற்ற நிலை முற்றியுள்ள நிலையில், வடகொரியா ஏவிய ஏவுகணையொன்று அமெரிக்க நகர் ஒன்றில் விழுந்து வெடிப்பதுபோன்ற காட்சியொன்றை வடகொரியா வெளியிட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் பாட்டனார் கிம் இல் சங்கின் பிறந்த நாள் நேற்று (18ஆம் திகதி) கொண்டாடப்பட்டது. ‘சூரியனின் தினம்’ என்ற பெயரில் வருடந்தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த நிகழ்வில் இராணுவ அணிவகுப்பு மற்றும் இராணுவத்தின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்படும் கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வடகொரியாவின் வழக்கம்.
அதன்படி, நேற்று நடைபெற்ற நிகழ்வில், இராணுவத்தினரின் இசை நிகழ்ச்சியொன்றும் நடத்தப்பட்டது. இதில், வடகொரியாவின் இராணுவ பலத்தை இராணுவ வீரர்கள் உணர்ச்சிபூர்வமான பாடல் மூலம் வெளிப்படுத்தினர். இதையொட்டி, பிரமாண்டத் திரையொன்றில், அமெரிக்கா மீது வடகொரியா ஏவுகணைத் தாக்குதலை நடத்துவது போன்ற ‘அனிமேஷன்’ காணொளியொன்றும் வெளியிடப்பட்டது.
அதில், வடகொரியா ஏவும் ஏவுகணையொன்று பெயர் குறிப்பிடப்படாத அமெரிக்க நகர் ஒன்றின் மீது விழுந்து வெடிப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த ஏவுகணை வெடிக்கும்போது, அணுகுண்டு வெடிப்பதற்கொப்பான எதிர்விளைவுகள் ஏற்படுவது போல் காட்டப்பட்டுள்ளது. அத்துடன், அமெரிக்கக் கொடியில் உள்ள நட்சத்திரங்கள் கல்லறை மீது சொரிவது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்கா மீது வடகொரியா அணுவாயுதத் தாக்குதலையே நடத்துவதாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமது நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் அணுகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்ற எச்சரிக்கை அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்டுள்ளது என்றே நம்பப்படுகிறது.   நன்றி வீரகேசரி


பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது.!

18/04/2017 இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல், லண்டலின் பதுங்கியிருந்த விஜய் மல்லையாவை ஸ்கார்ட்லாந்து பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
Image result for விஜய் மல்லையா virakesari
விஜய் மல்லையா, இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். ஆனால் அதை திருப்பி செலுத்த வில்லை. எனவே, அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால், கைது நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக அவர் லண்டன் தப்பி சென்றார். 
எனவே, அவரை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. இது தொடர்பாக ஸ்கார்ட்லாந்து யார்டு பொலிஸாhரின் உதவியை நாடியது. 
இதையடுத்து தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே, விரைவில் அவர் இந்தியாவிற்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.    நன்றி வீரகேசரி


Share3


தமிழக அரசியலில் பரபரப்பு: அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் இணைவதற்கான சமிக்ஞைகள்; சசிகலாவின் எதிர்காலம் இருளில்?

18/04/2017 இரு அணிகளாகப் பிரிந்து நிற்கும் அ.தி.மு.க. கட்சி மீண்டும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் முதல்வராகத் துடிக்கும் டி.டி.கே.தினகரன், இரட்டை இலைச் சின்னத்தை தனது அணிக்குப் பெற்றுத் தருவதற்காக தேர்தல் திணைக்கள அதிகாரியொருவருக்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டதாக சில தினங்களுக்கு முன் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அவர் பேரில் டெல்லி பொலிஸார் வழக்கு ஒன்றையும் பதிவுசெய்தனர்.
இதையடுத்து, அவரைக் கைது செய்யுமாறு எதிர்க் கட்சிகள் சார்பில் அழுத்தங்களும்  கொடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே மீண்டும் இரண்டு அணியினரும் ஒன்றிணைவதற்கான பேச்சுக்கள் கிளம்பியுள்ளன.
இதன்படி, நேற்று (திங்களன்று) இரவு, தமிழக மின்சாரத் துறை அமைச்சர் கே.தங்கமணியின் வீட்டில் இரு அணியின் பிரதிநிதிகள் சிலர் ஒரு மணிநேரத்துக்கு மேலாகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பத்து சிரேஷ்ட அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை விரைவில் சந்தித்து இது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதேவேளை, சசிகலா அணியினர் பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் அதில் நாம் கலந்துகொள்ளத் தயார் என்று ஓ.பன்னீர்செல்வமும் தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் இரு அணியினரும் சமரசம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அப்படி இணைந்தால், அ.தி.மு.க.வில், சிறையில் இருக்கும் சசிகலாவுக்கான அதிகாரம் குறையலாம் எனவும் நம்பப்படுகிறது.    நன்றி வீரகேசரி

மாறுவேடத்தில் வந்த தலிபான்கள் ஆப்கான் முகாமில் தாக்குதல்; பலி எண்ணிக்கையில் குழப்பம்!

22/04/2017 ஆப்கான் இராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐம்பது இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மஸார் இ ஷரீப் என்ற இடத்தில், பள்ளிவாசல் ஒன்றுக்கு அண்மையில் அமைந்துள்ள இந்த இராணுவ முகாம், வெளிநாட்டு இராணுவ ஆலோசகர்கள் பயன்பாட்டுக்கானது. உள்ளூர் நேரப்படி நேற்று பகல் ஜும்மா தொழுகைக்காக இராணுவ வீரர்கள் பள்ளிவாசலுக்குச் சென்றிருந்தபோதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆறு தலிபான் தீவிரவாதிகள் ஆப்கான் இராணுவ வீரர்களின் சீருடையை அணிந்துகொண்டு இரண்டு இராணுவ வாகனங்களில் முகாமின் சோதனைச்சாவடிக்குச் சென்றுள்ளனர். அனுமதி கிடைத்து முகாமினுள் நுழைந்ததும், ரொக்கெட் எறிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிகளை இயக்கியும் தாக்குதல்களில் ஈடுபட்டனர்.
தீவிரவாதிகளுள் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட வீரர்கள் குறித்த எண்ணிக்கை முன்னுக்குப் பின் முரணாகச் சொல்லப்படுவதால், பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.   நன்றி வீரகேசரி
பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதி யார்? முதல் கட்ட வாக்கு பதிவு இன்று..!

23/04/2017 பிரான்ஸின் 25 ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்கு பதிவுகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
பிரான்ஸின் 24ஆவது ஜனாதிபதியாகவுள்ள பிரான்கொய்ஸ் ஹோலண்டேவின் பதவிக்காலம், இம்மாதத்துடன் நிறைவடைவதனால் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவுகள் இன்று ஆரம்பமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.
மேலும் குறித்த ஜனாதிபதி தேர்தலில் இம்மானுவேல் மக்ரோன், மரின் லி பென், பிராங்கோயிஸ் பிலான், ஜீன் மெலன் சோன் மற்றும் பெனுவா ஹமூன் உள்ளிட்ட 11 பேர் போட்டியிடுகின்றனர். 
அத்தோடு குறித்த ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பாரம்பரிய அரசியல் கட்சிகளை சாராத இரண்டு வேட்பாளர்களே முன்னிலையில் இருப்பதாக பிரான்ஸில் இடம்பெற்றுள்ள கருத்து கணிப்பு தரவொன்று தகவல் பகிர்ந்துள்ளது.
இரண்டு கட்டங்களாக இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில், முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று இடம்பெறுவதோடு, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுகள் எதிர்வரும் மே 7 திகதி இடம்பெறும். மேலும் அதிக ஆதரவை பெரும் வேட்பாளர் எதிர்வரும் மே 14 ஆம் திகதி பிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பிரான்ஸில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல்கள் காரணமாக அந்நாட்டில் அவசர சட்டம் அமுலில் உள்ளதோடு, கடந்த இரு தினங்களில் இருவேறு தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் ஒரு சம்பவத்துடன் தொடர்ப்புடைய ஆயுததாரி தாக்குதலுக்கு முன்பாகவே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடுபூராகவும் சுமார் 10,000 பொலிஸாரின் பாதுகாப்புடன் தேர்தல் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி
No comments: