தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர்!


Image result for அம்பேத்க்கார்ப்ரல் 14 அன்று நாடு முழுவதும் அம்பேத்கரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. மத்திய - மாநில அரசுகளின் சார்பிலும் விழாக்கள் நடத்தப்பட்டன. அதேநேரத்தில், தமிழகத்தின் சில கிராமங்களில் சாதியப் பார்வையுடன் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா தடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கு காவல் துறையும் துணைபோய் உள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாக்களுக்கு அனுமதி வழங்கிய காவல் துறையினர், சில இடங்களில் அதாவது தலித் அல்லாதோர் வசிக்கும் பகுதிகளில் கொடிகள், ஒலிபெருக்கிச் சாதனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று முன்நிபந்தனை விதித்ததாகத் தெரிகிறது. இது அம்பேத்கரைக் குறுகிய பார்வையுடன் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகவும் அமைந்திருக்கிறது.


.

ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி கிராமத்தைச் சேர்ந்த ‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி’ அமைப்பினர் அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாட காவல் துறையிடம் அனுமதி கோரியுள்ளனர். அதற்கு உள்ளூர் காவல் ஆய்வாளர் குணசேகரன் ஏழு நிபந்தனைகளின்பேரில் அனுமதி வழங்கியுள்ளார். “அம்பேத்கரின் படத்தின் மீது மலர் தூவி, இனிப்புகள் வழங்கிய பிறகு அவர் படத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் விளையாட்டுகளை நடத்தக் கூடாது, கொடிகளையோ பதாகைகளையோ உயர்த்திப் பிடிக்கக் கூடாது, விளம்பரப் பலகைகளை வைக்கக் கூடாது, முன் அனுமதியின்றி கூட்டமோ ஊர்வலமோ நடத்தக் கூடாது, மற்ற சாதியினர் வசிக்கும் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது’’ என்பதே அந்த நிபந்தனைகள். ராமநாதபுரம் மாவட்டத்தின் மற்ற கிராமங்களிலும் விழா நடத்த அனுமதி கேட்டவர்களுக்கு இதே நிபந்தனைகளே விதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு என்ற பெயரில், மறைமுகமாக காவல்துறையே சாதிய ஆதிக்கத்துக்குத் துணைபோயிருப்பது கண்டிக்கத்தக்கது. இது அம்பேத்கரைச் சிறுமைப்படுத்தும் நிகழ்வல்ல, மாறாக ஒட்டுமொத்த பொதுச்சமூகமும் தன்னைத்தானே இழிவுபடுத்திக்கொள்வதாகும்.
குறிப்பிட்ட கிராமத்திலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் பல ஆண்டுகளாக அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுவருகிறது. ஆனால், இதுவரை காவல் துறை இப்படி எந்த நிபந்தனையையும் விதித்ததில்லை என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். கவலையளிக்கும் இந்தப் போக்கு தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
நவீன இந்தியாவை வடிவமைத்த மாபெரும் தலைவர்களில் ஒருவர் அம்பேத்கர். அவரது சிந்தனைகள் அனைவருக்குமானவை. அவரது பிறந்த நாள், அனைத்து சமூகங்களும் இணைந்து நடத்துகிற விழாவாக மாற வேண்டும். அரசும், அரசியல் கட்சிகளும் மட்டுமே அல்ல, பொதுச் சமூகமும் சேர்ந்து அதைக் கொண்டாட வேண்டும். அம்பேத்கரைக் கொண்டாடுவது, அடிப்படையில் நமக்குள் உள்ள சாதிய உணர்வை அழிப்பதற்கான குறியீடுகளில் ஒன்று. காந்தி, நேரு வரிசையில் தேசத்தின் பெருமிதம் அம்பேத்கர். அவர் இந்த நாட்டின் சொத்து. 
***************

No comments: