.
உலகப் புத்தக தினத்தில் எழுத்தாளர்களுக்கு இணையாகக் கொண்டாடப்பட வேண்டியவர்கள் நல்ல எழுத்தைத் தேடித் தேடிப் படிக்கும் வாசகர்கள். தமிழகத்தின் பல்வேறு தரப்பு வாசகர்களை அவர்களது வாசிப்பு அனுபவம், பிடித்த புத்தகங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டோம். அவர்களின் பகிர்வுகள் இங்கே…
ஜான்சி, பி.ஏ. பொருளாதாரம் இறுதி ஆண்டு மாணவி, இராணி மேரி கல்லூரி, சென்னை:
ஆப்பிரிக்க மாடல் அழகியான வாரீஸ் டைரீ எழுதிய ‘பாலைவானப் பூ’ என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பைச் சமீபத்தில் படித்தேன். சோமாலியாவைச் சேர்ந்தவரான வாரீஸ் டைரீக்கு நடந்த பிறப்புறுப்புச் சிதைப்பு குறித்தும் மற்றும் பாலியல் வன்முறை குறித்தும் வாரீஸ் டைரீ இந்த நூலில் குறிப் பிட்டுள்ளார். அதேபோல், 13 கோடி பெண்கள் பிறப் புறுப்புச் சிதைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலையும் இந்த புத்தகத்தின் வாயிலாக தெரிந்துகொள்ள முடிகிறது. இத்தனை வலி மிகுந்த துயரங்களை கடந்து அவர் எவ்வாறு ஒரு மாடல் அழகியாகவும் வலிமையான பெண்ணாகவும் மாறினார் என்பதை இந்த புத்தகம் மூலம் அறிந்துக் கொள்ள முடிகிறது. எப்படிப்பட்ட துயரங்கள் வந்தாலும் அதிலிருந்து மீள இந்த புத்தகம் எனக்கு உதவியாக இருக்கிறது.
சண்முகவடிவு, வலைப்பதிவர், கோயம்புத்தூர்:
என் உறவினர் வீட்டில் இருந்து வாங்கி வந்த ஜாவர் சீத்தாராமன் அவர்களின் 'பணம் பெண் பாசம்' தான் நான் வாசித்த முதல் நாவல். அகங்காரம் பிடித்த, அடுத்தவர் உணர்வைச் சற்றும் மதிக்காத, பணம் மட்டுமே பிரதானமென்று வாழும் தொழிலதிபர் சக்ரபாணி தன் மகளின் மீது அதீதப் பாசம் கொண்டவர். செல்வாக்கிலேயே வளர்ந்த அவர் பெண் பாலா திரிபுர சுந்தரி. எதேச்சையாய்த் தன் தாத்தாவைச் சந்தித்து அவர் மூலம் தன் தந்தையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பற்றி அறிகிறாள். தன் வீட்டை விட்டு வெளியேறி, தன் தந்தையின் பாவங்களுக்குப் பரிகாரம் தேடும் விதத்தில் அவரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சரிசெய்கிறாள். என் சிறு வயதில் படித்த கதை என்றாலும், அதன் கருத்தினால் என் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்து போன எழுத்து இது.
மு. தாமோதரன், களப்பணியாளர், சென்னை:
எப்போதும் எனது பையில் புத்தகத்தோடு பயணிக்கும் எனக்கு, எங்கு எப்போது சற்றுநேரம் ஓய்வு கிடைத்தாலும் புத்தகத்தை எடுத்துப் படிக்கத் தொடங்கிவிடுவேன். என் வாசிப்பில் என்னை மிகவும் ஈர்த்தது ஒன்றல்ல, இரண்டு நூல்கள். தெலுங்கு எழுத்தாளர் ஜி. கல்யாணராவ் எழுதி, தமிழில் ஏ.ஜி. எத்திராஜூலு மொழிபெயர்த்த ‘தீண்டாத வசந்தம்’ எனும் நூலைப் படித்து முடித்த கணத்தில் வேறொரு ஆளாக நான் மாறியிருந்தேன். ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறெல்லாம் சமூக இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை வாசித்தபோது, அந்த மக்களுக்காக ஏதாவது செய்ய வேண்டுமென்கிற எண்ணம் எனக்குள் எழுந்தது. முதுகலை மானுடவியல் படிக்கும்போதே மலைவாழ் மக்களுக்கான கல்விப் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’ பழங்குடியின மக்கள் மீதான காவல்துறையின் கோரத் தாக்குதல் குறித்து நெஞ்சதிரச் செய்த எழுத்துப் பதிவு. என்னால் மறக்கவே முடியாத நூல்கள் இவையிரண்டும்.
சதீஷ், விவசாயி, நாமக்கல்:
ஒரு எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். வழமையாய் விவசாயிகளைச் சூழும் காரிருள் எங்களையும் விட்டு வைக்கவில்லை. மீள வகை தெரியாமல் திகைத்துப் போயிருந்த தருணத்தில் கைவிளக்காய் சீனத் தத்துவ ஞானி லாவோ ட்சு என் வாழ்வில் வந்தார். கலங்கல் தெளியும் வரை காத்திருக்கும் சூட்சுமம் கற்றுத்தந்தார். உக்கிரமான காற்றும் பயங்கர மழையும் நாள் முழுவதும் நீடிக்காது; பொறுமைகொள் என்றார். ஒவ்வொரு காலடியாய் எடுத்து வைக்கச் சொல்லி, ஆயிரம் மைல் பயணமும் காலடியிலிருந்து தொடங்குவதைச் சொல்லிக்கொடுத்தார். அதிகம் பேசினால் அயர்ந்து போவாய் என்றார். பேச்சைக் குறைத்தேன். நீரைப் போன்று என்னைத் தாழ்மைப்படுத்திக்கொண்டதன் மூலம் பேரன்பு நெஞ்சங்களைப் பெற்றேன். எளிமை மூலம் பல சிக்கல்களைக் களைந்தேன். வெற்றியின் விளிம்பில் தோற்காமல் இருக்கும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டேன். வாசிக்க எளிய, இன்சொல் கூடிய ஒப்பற்ற நூல் லாவோ ட்சுவின் ‘தாவோ தே ஜிங்’. அதைத் தமிழுக்குத் தந்த சி. மணி வணக்கத்துக்குரியவர். ‘தாவோ தே ஜிங்’கை நீங்களும் வாசித்துப் பாருங்கள். அதன் ஒரு சொல் நம் வாழ்வை மாற்றும்.
ஜி. பாஸ்கரன், தனியார் நிறுவனப் பணியாளர், சென்னை:
வாசிப்பு எனக்கு அலாதியான அனுபவத்தைத் தருகிறது என்பதாலேயே வாசிக்கிறேன். அந்தக் காலத்தில் கதைகளைச் சொல்ல தாத்தா, பாட்டி போன்ற உறவுகள் இருந்தார்கள். இப்போது அவர்கள் இல்லை. அவர்களை விடுதிகளில் கொண்டுபோய் விட்டுவிடுகிறோம். ஆகவே, இப்போதைக்குத் தாத்தா, பாட்டியெல்லாம் புத்தகங்கள்தான். என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் தி. ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவல்தான். பல முறை படித்தபோதும் ஒவ்வொரு முறையும் அந்தந்த வயதுக்கு ஏற்ற விதவிதமான அனுபவத்தை அது தந்தது. அதேபோல் விடலைப் பருவத்தில் பெண்கள் பற்றிய தன்னுடைய பார்வை மாறுவதற்கே காரணமாக இருந்தது பாலகுமாரனின் ‘ஏதோ ஒரு நதியில்’ என்ற குறுநாவல். அசோகமித்திரன், லா.ச.ரா. என்று என் வாசிப்பனுபவம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது.
வே. திருமுருகன், அருப்புக்கோட்டை:
சித்திரக் கதைகளைத் தேடித்தேடிப் படித்துக்கொண்டிருந்த பருவத்தில் உறவினர் வீட்டு முன்னறையில் கிடந்த சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலும், கி.ரா.வின் ‘கோபல்ல கிராமம்’ நாவலும் என்னுடைய வாசிப்புக்கு வாயிலாக அமைந்தன. நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள், கவிதைத் தொகுப்புகள் என்று எனது வாசிப்பு பல தளங்களிலும் விரிந்துசெல்கிறது. என்றாலும், என் மனதில் நிற்கும் நாவல் என்றால் அது சி.சு. செல்லப்பாவின் ‘வாடிவாசல்’தான். ஜான் பெர்கின்ஸ் எழுதித் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ எனது மனப் போக்கையே மாற்றியமைத்தது. மனிதர்களுக்குள் திட்டமிட்டு நடத்தப்பட்ட கதையை இந்தப் புத்தகம் வெளிப்படுத்தியது. இவை போன்ற நூல்களே வாசிக்கத் தகுந்தவையாக எனக்குத் தோன்றுகின்றன.
கமலி பன்னீர்செல்வம், ஊடகவியலாளர், சென்னை:
எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களில் ஒன்று பியதோர் தஸ்தாயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’.ஒரு உணர்ச்சிகரமான காதல் கதை இது. இந்தக் கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் இடையே நடக்கும் உரையாடலின் மூலம் ஆண்-பெண் இடையிலான தீராப் பகிர்தலை வாசித்துதான் அனுபவிக்க முடியும். அவ்வளவு நுணுக்கமான உணர்வுகளை வார்த்தைகளாகக் கோத்திருக்கிறார் ஆசிரியர். நாயகி நாஸ்தென்காவின் மனப்போராட்டமும் உணர்ச்சி வசப்பட்ட நேரத்தில் அவள் எடுக்கும் நிலையில்லா முடிவும் என்று அநேக பெண்களின் உணர்வுகளின் உருவமாய் இருக்கிறாள். மிக நுணுக்கமாக நுண் உணர்வுகளுக்குள் பயணித்திருக்கிறார் ஆசிரியர். கதையின் தாக்கம் மனதை விட்டு அவ்வளவு எளிதில் அகலாது. வாசித்து முடித்தவுடன் மனம் ‘நாஸ்தென்கா, நாஸ்தென்கா’ என்று அரற்றும்.
அருணா ரெத்தினசாமி, குடும்பத் தலைவி, வந்தவாசி:
சிறு வயதில் பாட்டி சொன்ன கதைகள் கேட்டு வளர்ந்த எனக்கு, புத்தகம் படிப்பதில் எப்போதும் தீராத ஆர்வமுண்டு. நூலகத்திலிருந்து எனது இரு அட்டைகளுக்கான இரண்டு நூல்களை எடுத்து வருவேன். ஒரு நூலைக் கையிலெடுத்தால், ஒரே மூச்சில் படித்துவிடும் பழக்கமுடையவள் நான்.
நான் வாசித்த நூல்களுள் எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய ‘நான் நானாக...’ எனும் நாவல்தான் என்னை வெகுவாக பாதித்தது. திருமணமான நாவலின் நாயகி, தன்முனைப்போடு சுயமாய் வாழ நினைக்கையில், தன் பெற்றோர் தொடங்கி அனைவரிடமும் அவள் எதிர்கொள்ளும் விமர்சனங்களும், பிறகு அவளது செயலுக்குக் கணவனே உறுதுணையாக மாறுவதும் வாசிக்கிற எந்தப் பெண்ணுக்கும் உத்வேகமூட்டும்.
No comments:
Post a Comment