யாழ்ப்பாணமும் வாழ்வெட்டும் - செ.பாஸ்கரன்

.

யாழ்ப்பாணம் போற சந்தர்ப்பம் கிடைச்சதும் மனதுக்குள்ள ஒரு இனம்புரியாத  சந்தோசம். சண்டைக்குபிறகு போய் வந்தபிறகு இப்ப திரும்ப போறம் எண்டதும் பிள்ளையள் வளர்ந்த பிறகு அவையளையும் கூட்டிக் கொண்டுபோய் நாம நடந்து திரிந்த நகரத் தெருக்களையும் கிராம வாழ்க்கையையும் காட்ட கிடச்ச சந்தர்ப்பம் எண்டதையும். யாழ்பாண கிடாய்க் கறி சாப்பிட்ட பிறகும் கை மணத்தில நாக்கில எச்சில் ஊறுகிற விடயங்களையும் நினைச்சுக்கொண்டு கொழும்பில காலடி வைச்சாச்சு . பெரியவளின்ர திட்டமிடல் பிரகாரம் போற இடங்கள் தெரிவு செய்யப்பட்டாலும் நம்மட பழைய சந்தோசங்கள் நடந்த இடங்களும் போறதென்று ஆட்சேபனையின் மத்தியிலும் மனுசியின்ர வாக்களிப்பால ஐம்பதுக்கு ஐம்பது என்று வந்து செருகப்பட்ட பிறகு கொஞ்சம் சந்தோசம்.

சின்னவள் கையில போனையும் பிடிச்சுக்கொண்டு பதட்டமாய்  வந்து அப்பா யாழ்ப்பாணம் போகேலாது எண்டு குண்டத்தூக்கி போடுறாள். என்ன பிரச்சின ஆமி மறிச்சுப் போட்டாங்களோ எண்டு கேக்கிறன். "அங்க வாலால வெட்டுராங்கலாம் "  என்னது வாலால வெட்டுராங்களோ கேட்டபடி யோசிக்கிறன். அந்த நேரத்தில ஆரியகுள பொன்ராசா, கொட்டடி மணியம் கரையூர் சிலுவை இவங்கள் திருக்க வால் கொண்டு திரிஞ்சதும்  பலபேர அதால விளாசினதும் கண்டிருக்கிறன். சிலவேளை அப்பிடித்தான் ஏதாவது நடக்குதோ எண்டு நினைச்சாலும் அதென்னெண்டு வெட்ட முடியும் எண்டு யோசிக்கிறபோதுதான் பிள்ளையின்ர தமிழ்க்கொலை நினைவில வந்தது. \
நான் சொன்னன் வடிவாபார் வாலால இல்ல வாளாலயோ எண்டு . yes yes வாளாலதான் என்கிறாள். சரியான சொல்லைக் கண்டுபிடித்த பெருமிதம்  முகத்தில தெரிய என்ன பேப்பரில போட்டிருக்கோ மீண்டும் கேள்விக்கணை. இல்ல அப்பா என்ர friend family யோட ரெண்டு நாளைக்கு முதல் Australia வில இருந்து வந்து நிக்கினம். அவா text பண்ணியிருக்கிறா அங்க வாள் வெட்டு நடக்குதாம் தாங்கள் ஐஞ்சு   மணிக்கு பிறகு வெளியால போறதில்லையாம், சரியான பயமாம். சொல்லி முடித்துவிட்டு பயபீதி தெரிய என்னைப் பார்க்கிறாள். பெரிய மகளுக்கு தான் போட்ட Travel plan பிளைக்கப் போகுதெண்ட கவலை.  எனக்கோ பழைய ஞாபகங்கள் .





வெலிங்டன் தியேட்டர் சந்தியில் நண்பர்களோடு சைக்கிளில் யாழை நோக்கி போய்க்கொண்டிருப்பம் . சனம் அறக்க பறக்க ஓடி வரும் , என்னண்ண ஒடுறியள் எண்டு கேட்டால் ஆமி வருது ஆமி வருது எண்டுவினம் நாமளும் விடாபிடியா அண்ண கண்டனியளோ எண்டுவம் ஓடிக்கொண்டே ஏன் தம்பி நாம உயிரோட இருக்கிறது விருப்பமில்லையோ எண்டு கேட்டு விட்டு மற்றவர்கள் கேட்டும் கேள்விகளுக்கு ஆமி வருது ஆமி வருது எண்டு கூறிக்கொண்டே ஓடுவினம் மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து ஆமி வருது ஆமி வருது என்று கூவிக் கொண்டே ஓடுவினம். நாம் தொடர்ந்து யாழை நோக்கி சென்றால் அங்கு எதையும் காணமுடியாது. இந்த பழைய ஞாபகங்கள் வந்ததும் சிரித்துக் கொண்டே பயப்பட தேவையில்லை நாங்க யாழ்ப்பாணம் போறம் என்று அறிவித்து விடுகின்றேன்.

காரில் பயணம் தொடங்குகிறது. அழகிய நாடு போகும் வழி எல்லாம் பசுமை பார்ப்பதற்கு பல விடயங்கள். பலதையும் பார்த்து பல மக்களோடு பேசியதில் பிள்ளைகளுக்கும் பயம் போய்விட்டது. யாழ்ப்பாணம் வரவேற்கிறது என்ற அறிவித்தல் பலகையை கண்டதும் உரும்பிராயின் பெருமைகள் பற்றியும் தங்கள் சின்ன வயது வாழ்வு பற்றியும் மனைவி பிள்ளைகளோடு பேசிக்கொண்டே செல்வதை பார்த்துவிட்டு நான் சைக்கிளில் திரிந்த இடங்களை பார்த்து பழைய நினைவுகள் நெஞ்சை வருடிச் செல்ல  அமர்ந்து இருக்கிறேன்.


ஒரு சில நாட்கள் இரவு பகல் என்று எங்கும் சுற்றித்திரிகிறோம். இரவில் நண்பர் ஒருவரோடு உரையாடுகின்றேன் இவர் ஒரு நீதிபதியும் கூட . அதனால் இந்த வாழ்வெட்டு பற்றி உரையாடி பலவிடயங்களைப்பற்றி  தெரிந்து கொள்கின்றேன்.

பலகுழுக்கள் இபோது இருக்கிறது முன்பு இருந்த ஆரியகுள பொன்ராசா, கொட்டடி மணியம் கரையூர் சிலுவை, நாச்சிமார் கோவிலடி தொம்பை ஸ்ரீதர் தியேட்டர் வாத்தி இவர்களுக்கு பின்னால் ஒரு சில அடியாட்கள் இருந்தார்கள் கூலிக்கு வெட்டுவது, பணத்துக்காக வெட்டுவது குழுச் சண்டையில் வெட்டுவது , சைக்கில் பார்க்கிங் குத்தகை எடுப்பதில் தகறாறு இப்படி அவர்கள் தங்களுக்குள் வெடடுவதும் மற்றவர்களை வெடடுவதும் கப்பம் பெறுவதுமாக இருந்ததை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம் இன்று அவர்கள் இல்லை புதிய பெயரில் புதியவர்கள் குழுக்களாக  இருக்கிறார்கள்.  முன்பிருந்த சின்ன சின்ன விடயங்கள் பெரிதாக மாறியிருக்கிறது. தூள் கடத்துவது தூள் விற்பது சாராய கடைகள் ஏலம் , விபச்சார வியாபார போட்டி இதனால் ஏற்படுகின்ற குழு மோதலில் வெட்டிக் கொள்வது , ஒரு சாராய கடை ஆளை மற்ற சாராய கடை ஆளின் பணத்திற்காக வெட்டுவது. இவைகள் நடந்து கொண்டே இருக்கிறது முன்பு நடந்தது போல் தான் ஆனால் விடயம் மாறி இருக்கிறது செய்யும் விதம் மாறியிருக்கின்றது. பொன்ராசா ஆட்கள் நடந்து வந்து வெட்டினார்கள் அல்லது A40 காரில் வந்து வெட்டினார்கள் இவர்கள் நவீன மோட்டார் சைக்கிளில் வந்து வெட்டுகின்றார்கள் படங்களிலே காட்டப் படுவது போல் கைத் தொலை பேசியின் தகவல் தொழில் நுட்பத்தோடு இடம் பெறுகின்றது. பத்திரிகைகள் , இலத்திரன் இயல் பத்திரிகைகள் உடனடியாக இவற்றை பெரிதாக்கி கொண்டுவந்து பணமாக்கிவிடுகிறது. மக்களுக்கு கிலி  பிடித்து விடுகிறது.


ஆழமாக பார்த்தால்  இந்த குழுக்களுக்கு பின்னால் அரசியல் வாதிகள் ( சில தமிழ் அரசியல் வாதிகள் உட்பட)  ஆமி கொமாண்டோக்கள் , திறமை வாய்ந்த வக்கீல்கள், பிரபல வியாபாரிகள் என்று பலர் மறைந்து கிடக்கின்றார்கள்.  அது மட்டுமல்லாது இவர்கள் குழுக்களுக்குள் குழுக்களைத் தான்  வெட்டுகின்றார்கள் , அதிகமான நிகழ்வுகளில்  போது ஆஸ்பத்திரிக்கு  சென்றாலும் பொலிசாரிடம் புகார் கொடுக்க மறுக்கின்றார்கள் , நீதி மன்றம் செல்ல மறுக்கின்றார்கள் தாங்களே பார்த்துக் கொள்கின்றோம் என்கின்றார்கள் . பொலிசிற்கோ நீதிக்கோ சென்றால் தங்கள் குழு நிலை தெரிய வந்துவிடும் என்பற்காக இப்படி செய்கின்றார்கள்.  பொது மக்களுக்கு மத்தியில் ஒரு குழு இருக்கும் போது மற்றக் குழு வெட்டிவிட்டு சென்று விடுகின்றது. சில வேளைகளில் பொது மக்களும் காயப் படுகின்றார்கள்  ( மிக குறைவாகவே நடந்துள்ளது)
இப்படியான குழுச் சண்டைகள் இங்கும் மாபியாக்கள் என்ற பெயரிலே  நடக்கின்றது .என்ன துப்பாக்கி பாவிக்கின்றார்கள்

நீதிபதி கூறுவதுபோல் அவர்கள் முறைப் பாடு செய்யும் வரை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பது ஒரு உண்மை. யாழ்ப்பாணத்தில் மூன்று polish sub inspectors தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் . மிகவும் திறமை வாய்ந்தவர்கள். அவர்களும் இதையே கூறுகின்றார்கள். நாம் பிடித்தாலும் அவர்கள் மீது வழக்கு போடமுடியாது சாட்சிகள் இல்லை . தடுத்து வைத்திருந்தாலும்  நம்மவர்களே வெளியில் எடுத்து விடுகின்றார்கள் என்ன செய்வது என்கின்றார்கள். பத்திரிகைகளோ செய்தியை போட்டு பரபரப்பாக்கி வியாபாரத்தை கவனித்து கொள்கின்றார்கள். எந்த பத்திரிகையும் investigative journalism articles எழுத அனுமதிப்பதே இல்லை என எழுத்தாளர் ஒருவர் கூறி கவலைப் பட்டார் .

முன்பு இந்த குழுவில் ( பொன்ராசா ) போன்றவர்கள் படிக்காதவர்களாக இருந்து சமுகத்தில் தங்களை தக்க வைத்துக் கொள்ள இந்த பாதையை தேர்தெடுத்தார்கள் . இப்போ படித்தவர்கள் பணம்  படைத்தவர்கள் போன்றவர்களே இந்த குழுவில் இடம் பெறுகின்றார்கள். காரணம் thrill. மோட்டார் சைக்கில் இருக்கிறது , போன் இருக்கிறது , வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் அனுப்பும் பணம் இருக்கின்றது. இதற்கு மேல் அவர்களுக்கு இது பிடிக்கிறது. 



இது தான் யாழ்பாணத்து வாழ்.வெட்டு கலாச்சாரம். சங்கிலி மன்னன் வாழோடு இருக்கிறான் ஏன் நாமும் எடுத்தால் என்ன எண்டு கூட கேக்கலாம் . அவன் இனம் வாழ வாழெடுத்தான் இவர்கள் ஏன் எடுக்கின்றார்கள் என்பதை உறவினர்கள் தான் சிந்திக்க வேண்டும். அந்த இளைஞகளுக்கு மரியாதையான தொழில் வேண்டும். கோழிப் பண்ணையும், தும்புத்தடி தொழில்சாலையும் நிறுவாமல் நல்ல உற்பத்தி தொழில்சாலைகள் நிறுவ வேண்டும் அதற்கான கூட்டு முயற்சியை புலம் பெயர்ந்தவர்கள் எடுக்கவேண்டும் .

போராட்ட காலத்தில் கோழி பிடித்தவனையும் மின்கம்பத்தில் கட்டி சுட்டார்கள் இயக்க காவலர்கள் ( எல்லா இயக்கமும்) அவர்கள் உணரவில்லை சமுதாயத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு ்போகும் வரை இப்படியான சிறு தவறுகள் இருக்கத்தான் செய்யும் அதற்கு  தீர்வு மரண தண்டனை அல்ல சீர்திருத்தம் மட்டுமே .

யாழ்ப்பாணத்தில் நடந்த இன்னுமொரு குற்ற சம்பவமும் யாழ்ப்பாண தமிழ் பத்திரிக்கை நடந்து கொண்ட விதம் பற்றியும் அடுத்தவாரம் எழுதுகிறேன் .  







No comments: