இலங்கையில் பாரதி - அங்கம் 14 - முருகபூபதி

.


புரிந்துணர்வும்  ஓரளவு கருத்தொற்றுமையும் கொண்டிருந்த சில இலக்கியவாதிகளினால் 1975 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது ' அலை' இலக்கிய வட்டம். இந்த அமைப்பின் காலாண்டு இதழாக வெளியானது ' அலை'.
முதல் இதழ் 1975 நவம்பரில் வெளியானது. தொடக்கத்தில் அலையின் ஆசிரியர் குழுவில் அ.யேசுராசா, மு.புஷ்பராஜன், குப்பிளான் ஐ. சண்முகன், இ. ஜீவகாருண்யன் ஆகியோர் அங்கம் வகித்தனர்.
1972 ஆம் ஆண்டளவில் ஆழ்ந்த சிந்தனையாளர்கள் சிலரது கூட்டு முயற்சியால்  வெளிவரத்தொடங்கி, சில இதழ்களை இலக்கிய உலகிற்கு  வரவாக்கிய 'பூரணி' காலப்போக்கில் மறைந்ததனால், அந்த இடைவெளியை அல்லது அதன் இடத்தை 'அலை' நிரப்பும் என இலக்கிய வாசகர்கள்  எதிர்பார்த்தனர்.
'பூரணி'க்கு நேர்ந்தது போலவே அலை ஆசிரியர் குழுவினர் மத்தியிலும் அதன் உள்ளடக்கம் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் தோன்றியமையால், பின்னாளில் அலையின் இணையாசிரியர்களாக அ.யேசுராசாவும் மு. புஷ்பராஜனும் மாத்திரமே அள்ளுண்டு சென்றுவிடாமல் ' அலை' யுடன் தாக்குப்பிடித்துக்கொண்டனர்.
 இலங்கையில் பாரதி தொடரில் மல்லிகை இதழ் பற்றிய பதிவில்,  "பொதுவுடைமையில் நம்பிக்கை வைத்திருந்த மல்லிகை ஜீவா, தமது மல்லிகை விடயத்தில், கூட்டுச்சேர்தல் -  கூட்டுறவு அடிப்படை - குழுவாக செயற்படல் முதலான வழிமுறைகளை பின்பற்றவில்லை."  என்று எழுதியிருந்தோம்.அதனால் மல்லிகை 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியானது. எனினும், அதன் ஆசிரியராலேயே அது நிறுத்தப்பட்டது.
இலக்கிய ஏடுகளை நடத்துவதற்கு கூட்டுச்சேர்தல் அல்லது குழுவாக இயங்குதல் முதலான நடைமுறைகள், அவ்வாறு இணைவோர் மத்தியில் கருத்தொற்றுமை நீடிக்கும் வரையில்தான் சாத்தியப்படும். பூரணிக்கு நேர்ந்தது அலைக்கும் நேர்ந்தது.
பூரணியில் முரண்பட்டவர்கள் பின்னாளில் அதற்கான காரணத்தையும் நியாயத்தையும்  விளக்க மல்லிகையை களமாக்கினர். அதே நிலைதான் அலைக்கும் வந்தது.


ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் சிற்றேடுகளின் வாழ்வை அலசி ஆராய்ந்தால் சுவாரஸ்யங்களுக்கும் குறைவிருக்காது.
இது இவ்விதமிருக்க, அலை இலக்கிய வட்டம் 'அலை' இதழை மாத்திரம் வெளியிடாமல் நூல் வெளியீட்டு முயற்சிகளிலும் அக்கறைகொண்டிருந்தது. ஆக்க இலக்கிய நூல்களுடன் அரசியல் இலக்கியப்பதிவுகளையும் கடற்றொழில் துறை சார்ந்த 'அம்பா' எனப்படும் மீனவர் பாடல்கள் பற்றிய கட்டுரை நூலையும் வெளியிட்டது.
அலை ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்று,  அதன் நிருவாக ஆசிரியராகவுமிருந்த அ.யேசுராசா ஈழத்தில் கவனிப்புக்குள்ளான படைப்பாளி. கவிதை, சிறுகதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, பதிப்புத்துறை, திரைப்பட விமர்சனம், இதழியல் என பல தளங்களில் இயங்கிவருபவர். யாழ்ப்பாணத்தில் தேர்ந்த சினிமா ரசனைக்காக திரைப்பட  வட்டம் உருவானபோது அந்த  அமைப்பிலும் இணைந்திருப்பவர். ஓயாமல் கலை, இலக்கியம் சார்ந்து இயங்கிவருபவர்.  சில நூல்களை வரவாக்கியவர். அத்துடன் சில நூல்களின் தொகுப்பாசிரியர். இவ்வாறு பன்முக ஆளுமைகொண்டிருந்த இவர், அலை யேசுராசா என்றும் இலக்கிய வட்டாரத்தில் அறியப்படுபவர்.
விடுதலைப்புலிகள் களத்தில் இருந்த காலத்தில் திரைப்படத்தணிக்கைக்குழுவிலும் இடம்பெற்றவர். தெரிதல் என்ற ஏட்டையும் நடத்தியிருக்கிறார். யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான திசை பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தவர். புதிய தலைமுறை கவிஞர்களுக்காக கவிதை இதழும் நடத்தியவர்.  தமது அலை வெளியீடாக சில நூல்களையும் பதிப்பித்தவர்.


அலை இதழ்  சிறிதுகாலமாவது தொடர்ந்து வெளியானதென்றால் அதற்கு அச்சாணியாக இருந்தவர் யேசுராசா அவர்கள்தான் என்பது வெற்றுப்புகழுரை அல்ல.  ஈழத்து இலக்கிய உலகில் எவரையும்  விமர்சிக்கத்தயங்காது வெளியான அலை, பாரதி நூற்றாண்டுக்கென தனியாக சிறப்பிதழ் வெளியிடவேண்டும் என்ற சம்பிரதாய ஆர்வத்தினை கொண்டிராதபோதிலும், அவ்வப்போது பாரதி பற்றிய புதிய தரிசன வீச்சுக்களை வழங்கியிருக்கிறது.
கோ. கயிலாசநாதன் ( அலை 19 ஆவது இதழ் - ஐப்பசி - கார்த்திகை 1981) அ. மாற்கு ( அலை 20 ஆவது இதழ் - தை - பங்குனி 1982) ஆகியோர் வரைந்த  முகப்போவியங்களுக்குப் பொருத்தமாக பாரதியின் கவிதை வரிகளையே பதிவுசெய்திருந்தது.
அலையின் 21 ஆவது இதழில் மு. புஷ்பராஜன் (பதிவுகள்) தெரிவித்த கருத்துக்கள்  இங்கு கவனத்தில் கொள்ளப்படவேண்டியவை.
அவர் இவ்வாறு எழுதுகிறார்:
                     " நமது கோயில்களில் கொடியேறிவிட்டால் இதற்கென்றிருக்கும் திருவிழாக்காரர்கள் மக்கள் முன் தற்செயலாகத்தோன்றுவதுபோல் ( திட்டமிட்டுத்தான் ) அடிக்கடி தோன்றிக்கொண்டிருப்பது  வழக்கம். இன்று பாரதியில் கொடியேறிவிட்டது. அவரது இலட்சியங்கள் கனவுகளுடன் மாறுபட்டவர்கள்  அவரைத் தம்மவருள் ஒருவராக ஏற்று,  தம்மை நினைவூட்ட  பாரதிக்கு விழா எடுக்கத்தொடங்கிவிட்டார்கள். பாரதியே மீண்டும் தனது இலட்சியங்களுடன் வேறு பெயரில் இவர்கள் முன் வந்தால், தமது நெற்றிக்கண்ணால் பொசுக்கிவிடுவார்கள். இவர்களுக்குத்தேவையெல்லாம் அந்தக்கறுத்தக்கோட்டும்  முறுக்கு மீசையும் முண்டாசுமே.
இன்னொருவகையில்  பாரதி நிலைநிறுத்த முனைந்தது பார்ப்பனியத்தையே ( கிருதயுகத்தையல்ல) என்றும்  காலத்திற்கு முந்திய ஆர். எஸ். எஸ். காரனே பாரதி என்றெல்லாம் போர்க்கொடி உயர்த்தியிருக்கின்றார்கள். பாரதியின் வேரை அறியாதவர்கள் இவர்கள். பட்டுக்கருநீலப்புடவையில்  பதித்த நல் வயிரம்போல் பாரதியின் பின்னணியில் பார்க்க விரும்புகிறார்கள் போலிருக்கிறது.
குவளைக்கண்ணன் அன்று யானையின் காலடியில் கிடந்த பாரதியைக்காப்பாற்றினார். இன்று பாரதியை பாரதியாக - அவர் பலவீனங்கள், முரண்பாடுகளுடன் நோக்காமல், தமது போக்கிற்கெல்லாம் இழுத்தடிக்கும் இந்த சுயலாப ஆராய்ச்சிக்காரரிடமிருந்தும் அரசியல்வாதிகளிடமிருந்தும் பாரதியை மீட்டெடுப்பவர்கள்  தமிழுக்குத் தொண்டு செய்தவர்களாவர். "


இவ்வாறு எழுதியிருப்பதன் மூலம் 'அலை' இலக்கிய உலகில் உண்மையைத்தேடியது. பாரதி பற்றிய பொய்மைகளைத் தெரிவிப்பதில் 'குமரன்' இதழ் கொண்டிருந்த அக்கறையை கடந்த அங்கத்தில் பார்த்தோம்.  பாரதி பற்றிய உண்மைகளை தெரிவிப்பதிலும், பாரதியை இனங்காணமுயல்வோரை இனம் காண்பிப்பதிலும் 'அலை' தீவிரம் காண்பித்தது.
இந்த இரண்டு தரப்புக்கும் இடையேதான் நாம் (வாசகர்கள்) தெளிவைத்தேடவேண்டியவர்களாக  இருக்கின்றோம்.
அலையின் 22 ஆவது இதழ் ( மார்ச் - 1983) யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான பீக்கிங் சார்பு பத்திரிகையான செம்பதாகை 1982 இல் தனது 11 ஆவது இதழில் பதிவுசெய்திருந்த கட்டுரை ஒன்றை தேவை கருதி மறுபிரசுரம் செய்திருக்கிறது.
தலைப்பு: "பாரதி பற்றிய சில மதிப்பீடுகள்" இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்வதற்கான நோக்கத்தை 'அலை' இணையாசிரியர்கள், இவ்வாறு தெரிவிக்கின்றனர்:
" தம் நிஜவாழ்வின் போலித்தனங்களை மறைக்கும் அவதியில், அதிதீவிரக்கருத்துக்களை இலக்கியக்காரர்களில் சிலர் வெளிப்படுத்திவருகின்றனர். பாரதி பற்றிய வரட்டுக்கருத்துக்களும் இப்போலிகளாற் பரப்பப்படுகின்றன. இச்சூழலில் பொருத்தமும் பயனும் கருதி இக்கட்டுரையை செம்பதாகையிலிருந்து நன்றியுடன் வெளியிடுகின்றோம்."
பாரதியை மாக்சிஸக் கண்ணோட்டத்தில் அணுகி அவரின் பொய்மைகளை பகிரங்கப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் முற்போக்குவாதிகள் 'ஒரு சிலருக்கு' பதிலடிகொடுக்குமாப்போலும் காலத்தையும் கருத்தையும் ஒப்புநோக்கி, பாரதி வாழ்ந்த காலச்சூழ்நிலையுடனேயே பாரதியின் கருத்துக்களையும் செயல்களையும் ஆராயவேண்டும் என்ற அடிப்படையில் நின்று விலகாமல், பாரதி பற்றிய தரிசனங்களை ' ஜெ' என்பவர் மேற்படி கட்டுரையில் வழங்கியிருந்தார்.
பாரதியை கற்க முனைபவர்கள், பாரதி மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் சரியானவையா...? பிழையானவையா...? என்பதை அறிய முனைபவர்கள் அவசியம் படிக்கவேண்டிய பயனுள்ள இக்கட்டுரை, பாரதி நூற்றாண்டு காலத்தில் இலங்கையில் வெளியானவற்றுள் குறிப்பிடத்தகுந்தது.
பாரதி பற்றிய சில மதிப்பீடுகளைத்தெரிவிக்கும் இக்கட்டுரை ஓரிடத்தில், " பாரதியின் அரசியல் கம்யூனிஸ அரசியல் அல்ல. பாரதி ஒரு தேசியவாதி. பாரதி ஆழமான சமய நம்பிக்கையுடையவர். அவர் சமுதாய சீர்திருத்தத்தில் மிகுந்த ஈடுபாடுடையவர். இதையெல்லாம் வைத்துக்கொண்டு யாராவது பாரதி பிற்போக்குவாதி என்று வாதிப்பதனால், அவருக்கு மாக்சிஸமே தெரியாது என்றுதான் கூறவேண்டும்.
பாரதி வாழ்ந்த காலமும் சமுதாய சூழ்நிலையும் தேசிய விடுதலை இயக்கத்தில் தேசிய முதலாளித்துவம் ஆதிக்கம் செலுத்திய காலமும், கம்யூனிஸ இயக்கம் ஆழமாக வேரூன்றாத சூழ்நிலையுமாகும். ஆனாலும், பாரதி கம்யூனிஸ விரோதி அல்ல. ரஷ்யப்புரட்சி பற்றி அறிந்தவுடனேயே அதை வியந்து பாராட்டினார். " மாகாளி கண்வைத்தாள்" என்ற வார்த்தையின் கவிதை நயம் தெரியாத மூடர்கள் அதில்கூட மதத்தை கண்டுவிட்டுப்போகட்டும். ஆனால், அந்த வார்த்தைகள் ரஷ்யப்புரட்சிக்கு பாரதி கொடுத்த மதிப்பையே பிரதிபலிக்கின்றன." என்று தெரிவிக்கின்றது.
பிறிதோர் இடத்தில், " புஷ்கின், ரோல்ஸ்ரோய், துர்கனேவ் போன்ற பலரும்  செக்காவ் போன்று சமுதாயப்பிரக்ஞை மிகுந்தவர்களும் ரஷ்யப்புரட்சியுடன் நெருங்கி நின்ற கோர்க்கி போன்றவர்களுடன் வைத்துப்போற்றப்படுவதைப்பற்றியோ, லூசுன் பச்சையான சுலோகங்களை எழுதாத ஓர் எழுத்தாளர் என்பதையோ,  சார்ள்ஸ் டிக்கன்ஸ், ஷேக்ஸ்பியர், மார்க்ட்வெய்யின் போன்ற ஆங்கில அமெரிக்க எழுத்தாளர்களது படைப்புகட்கு, சோஷலிஸ சீனாவில் பெருமதிப்பு இருந்துவருகிறது என்தையோ, கண்களை இறுக மூடிக்கொண்டுள்ள நம் இலக்கியப்புரட்சிப்பூனைகளினால் என்றுமே காணமுடியாது." என்றும் குறிப்பிடுகின்றது.
மேற்படி கட்டுரையுடன், "கொள்கைக்கும் செய்கைக்குமுள்ள தூரம்" என்ற தலைப்பில் பாரதியாரின் கட்டுரை ஒன்றையும் (பாரதியார் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டது) காலத்தின் தேவை கருதி 'அலை' அவ்விதழில் மறுபிரசுரம் செய்திருந்தது.
சு. வில்வரத்தினம், " விடுதலைக்குருவியும் வீட்டு முன்றிலும் " என்னும் நீண்ட கவிதையை எழுதியிருந்தார்.
பாரதிபடும் பாடு (!) பற்றியும் சில குறிப்புகளை அலை பதிவுசெய்திருந்தது. அதிலெல்லாம் பாரதி குறித்த உண்மைகளை தேடும், நிறுவும் குணாம்சங்கள் நிறைந்திருக்கக்காணப்பட்டது.
அக்காலப்பகுதியில்  யாழ். சிற்றேடுகள் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக மௌனம் அனுட்டிப்பதாக ' குமரன்' இதழ் விடுத்த குற்றச்சாட்டுக்களுக்கும் 'அலை' பதில் தந்திருந்தது.
அலை இதழ், இலங்கையின் தேசிய அரசியலிலும் அக்கறை காண்பித்து வந்துள்ளது. எமது நாட்டில் நடந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக கண்டனம் தெரிவித்த அதே சமயம், இலங்கை அரசுகள் தமிழ் இலக்கியங்களுக்கென (சாகித்திய விருது) வழங்கிவரும் பரிசில்களை (1977 - 1980) பகிஷ்கரிக்கவேண்டும் என்ற கோரிக்கையையும் சில இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து முன்வைத்துவந்தது.
நடைமுறையிலிருந்த  பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சில தமிழர்களுக்காக குரல் கொடுத்து,  அச்சட்டதை எதிர்க்கும் நோக்கத்தில்  அக்குரல் எழுந்திருந்தது.  அக்காலப்பகுதியில் வைகறை வெளியீடாக வந்திருந்த இரண்டு நூல்களுக்கு இலங்கை அரசு தேசிய  சாகித்திய பரிசில்களை வழங்க தீர்மானித்திருந்தது.
மு. நித்தியானந்தனின் வெளியீட்டு பதிப்பகத்தின் பெயர்தான் வைகறை. தெளிவத்தை ஜோசப்பின் நாமிருக்கும் நாடே (சிறுகதைத்தொகுதி) , சி.வி.வேலுப்பிள்ளையின் இனிப்படமாட்டேன் (நாவல்) என். எஸ்.எம். ராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து (சிறுகதைத்தொகுதி) என்பன மு. நித்தியானந்தனின் வைகறை வெளியீடாக வந்திருந்தன.
" இலங்கை வாழ் மூவின மக்களின் வரிப்பணத்தில்தான் அரசு இயங்குகிறது. அதிலிருந்துதான் சாகித்திய மண்டலம் இயங்குகிறது. அதனால் அது வழங்கும் பணம் மக்களுடையதே. அதனால் அதனை பகிஷ்கரிக்கத்தேவையில்லை"  என்ற குரலும் இலக்கியப்படைப்பாளிகள் தரப்பிலிருந்து அக்காலப்பகுதியில் எழுந்திருந்தது.
இலங்கையின் தேசிய அரசியலில் படைப்பாளிகள் எத்தகைய நிலைப்பாட்டைக்கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பதில் இலக்கியச்சிற்றேடுகளிடம் மட்டுமல்ல, இலக்கிய அமைப்புகளிடமும் மாறுபட்ட கருத்தியல்கள் நிலவிய காலத்தில் பாரதி நூற்றாண்டு இலங்கையில் கொண்டாடப்பட்டது.
இலங்கையில் பாரதியின் தாக்கத்தை ஆராய முற்படுகையில் அக்காலப்பகுதியில் இங்கு வெளியான இலக்கியச்சிற்றேடுகளில் பாரதி எவ்வாறு பந்தாடப்பட்டார் என்பதையும் மதிப்பீடுசெய்யவேண்டியது அவசியம்.
(தொடரும்)

No comments: