அரசுப்பொதுத் தேர்வில்
மாணவிகள் முதலிடம்!
ஆசிட் வீச்சில்
மாணவிகள் மரணம்!
பலகலை நிகழ்ச்சிகளில்
மாணவிகள் முதலிடம்!
ஒருதலைக் காதலால்
மாணவிக்கு அரிவாள்வெட்டு!
விண்வெளியை ஆராய்ந்திட
விரைகிறார்கள் பெண்கள்!
பாலியல் பலாத்காரத்தால்
பலியாகிறார்கள் பெண்கள்!
மாதவம்செய்து மங்கையராய்ப் பிறந்தால்
சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்!
நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன,
வரதட்சனைக் கொடுமையெனும் கூர்வாள்களால்!
நிமிர்ந்த நன்நடைகள்
முடங்கிப் போகின்றன,
மதங்களெனும் பிரிவினைஆயுதங்களால்!
பெண்விடுதலை பெற்றுள்ளோம்,
நீதிகேட்டு வழக்கில் உள்ளது சுதந்திரம் வேண்டிய திருமணங்கள்!
மணமாகும்வரைப் பெற்றோர் சொல்கேட்டு,
கல்யாணமானபின் கணவனுக்குக் கட்டுப்பட்டு,
மரணம்வரை மகனை எதிர்பார்த்து....
மீறினால் வதைகளும்
மாறினால் கதைகளும்!
கூட்டநெரிசல்களில்,ஓடும் பேருந்துகளில்,பயணிக்கும் ரயில்களில்,உடைகள் சரிபார்க்கும் கடைகளின் அறைகளில்,தங்கும் விடுதிகளில்,ஆசிரியர்களின் ஆசைகளில், அலுவலக மேலாளர்களின் கழுகுப் பார்வைகளில், இன்னும்பலவற்றில் சிக்கித்தான் தினமும் திரும்புகிறோம்!
வாழ்க்கைப் படகை சமுத்திரத்தில் செலுத்துகிறோம். வீழ்ந்தால் முத்தெடுப்போம்,வாழ்ந்தால் கரைசேர்வோம் "நாங்கள் புதுமைப்பெண்கள்"
|
No comments:
Post a Comment