உலகச் செய்திகள்


ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கைது..!

மற்றுமொரு ரொக்கெட் என்ஜினைப் பரிசோதித்தது வடகொரியா

கிம் ஜோங் நம்மின் உடலை கொடுப்பதற்கு மலேசியா தீர்மானம்..!

ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரித்தானியா : 'லாயிட்ஸ் ஒப் லண்டன்' அதிரடி அறிவிப்பு


ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 பேர் கைது..!

27/03/2017 ரஷ்ய பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட சுமார் 800 போராட்டக்காரர்களை, அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.



ரஷ்யாவில் ஊழல் பெருகி விட்டதாக கூறி, பிரதமர் பதவியிலிருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னி தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக சுமார் 800 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. 
மேலும் ரஷ்யா முழுவதும் 99 நகரங்களில் போராட்டம் நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், 72 இடங்களில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை, இந்நிலையில் தலைநகர் மொஸ்கோவில் நடந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தலைமையில் பெரும்திரளானவர்கள் பங்குபற்றியுள்ளனர்.
மேலும் மொஸ்கோ தவிர்த்த சென் பீட்டர்ஸ்பார்க், விலாடி வோஸ்டோக், நவோசி பிரிஸ்க் மற்றும் டாமஸ்க் உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டினை எதிர்த்து செயற்பட்டுவரும், எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி எதிர்வரும் 2018ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள தக்க அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி  












மற்றுமொரு ரொக்கெட் என்ஜினைப் பரிசோதித்தது வடகொரியா

28/03/2017 வடகொரியா மீண்டும் ஒரு ரொக்கெட் என்ஜின் பரிசோதனையை நடத்தியிருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. கண்டம் விட்டுக் கண்டம் பாயக்கூடிய ஏவுகணைத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இம்மாத முற்பகுதியில் இதேபோன்றதொரு பரிசோதனையை வடகொரியா நடத்தியிருந்தது. உயர் உந்து திறன் கொண்ட இந்த ரொக்கெட் என்ஜினின் வருகையானது ஏவுகணைச் சரித்திரத்தில் புதியதொரு பரிணாமம் என்று வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் இதைக் குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில், மீண்டும் அதேபோன்றதொரு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது, வடகொரியாவின் ஆயுதப் பரிகரணத்தின் முன்னேற்றத்தின் அறிகுறியே என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
எனினும், வடகொரியா நடத்திவரும் இதுபோன்ற பரிசோதனைகள் அமெரிக்காவை அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிவருவது கண்கூடு!    நன்றி வீரகேசரி  













கிம் ஜோங் நம்மின் உடலை கொடுப்பதற்கு மலேசியா தீர்மானம்..!

30/03/2017 மலேசிய விமான நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நம்மின் சடலத்தை அவரது குடும்பத்தாரிடம் கொடுப்பதற்கு மலேசியா விருப்பம் தெரிவித்துள்ளது. 
வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜோங் நம் கொலையால், விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு தடை செய்து உத்தரவிட்ட நிலையில், வடகொரிய அரசும் மலேசியாவிற்கு எதிரான விசா தடையை ஏற்படுத்தி இரு நாடுகளுக்கிடையில் முறுகல் நிலை ஒன்று நிலவி வந்தது.
மேலும் கிம் ஜோங் நம் கொலையுடன் தொடர்புடைய கொலையாளிகளை மலேசிய காவல்துறை, தீவிரமாக தேடிவருகின்றது. அத்தோடு சர்வதேச ரீதியாகவும் குறித்த கொலை தொடர்பான பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது குறித்த படுகொலை காரணமாக வடகொரியா தடுத்து வைத்திருந்த மலேசியர்களை விடுவித்துள்ளது. 
இந்நிலையில் இரு நாடுகளும் பரஸ்பரமான முறையில் குறித்த படுகொலை விவகாரத்தை கையாளுவதற்கு முடிவுசெய்துள்ளதாகவும், ஏற்படுத்தப்பட்டுள்ள விசா தடைகளில் கூடிய விரைவில் சலுகைகள் அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி  










ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறிய பிரித்தானியா : 'லாயிட்ஸ் ஒப் லண்டன்' அதிரடி அறிவிப்பு

30/03/2017 உலகின் மிகப்பெரிய காப்பீடு சந்தையான 'லாயிட்ஸ் ஒப் லண்டன்' என்ற நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவதால் தமது வர்த்தகத்தை இழக்க முடியாது என தெரிவித்தே தமது புதிய அலுவலகத்தை பிரஸ்ஸல்ஸ் நகரில் அமைக்க முடிவு செய்துள்ளதாக லாயிட்ஸ் ஒப் லண்டன் இன்று தெரிவித்துள்ளது.
லண்டனில் இயங்கி வந்த 329 வருட பழமையான லாயிட்ஸ் ஒப் லண்டன் நிறுவனத்தின் இந்த அடிதிரடி முடிவானது பிரித்தானியாவின் வர்த்தக வரலாற்றில் பாரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான, பிரதமர் தெரசா மே கையெழுத்திட்ட அறிக்கை நேற்று பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரிட்டன் தூதர் சர் டிம் பரோ வழங்கினார். இந்நிலையில் கடிதத்தை வழங்கி ஒரு நாளிலேயே இந்த தீர்மானத்தை லாயிட்ஸ் ஒப் லண்டன் எடுத்துள்ளது.    நன்றி வீரகேசரி