இலங்கைச் செய்திகள்


33 ஆவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 37 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.!

முல்லைத்தீவில் வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்!


33 ஆவது நாளாகத் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம்!

28/03/2017 வவுனியாவில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (28) 33 ஆவது நாளாக  தொடர்கிறது.எங்களது கோரிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் அல்லது ஜனாதிபதி ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து முடிவு தெரிவிக்கும் வரையில் போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பொது அமைப்புக்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவை தாங்கள் வேண்டி நிற்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 37 வது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.!

28/03/2017 கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  கவனயீர்ப்பு போராட்டம் இன்று 37வது  நாளாக  தீர்வின்றி தொடர்கிறது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும்  வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த மாதம் 20 ஆம் திகதி காலை  கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட  தொடர் கவனயீர்ப்பு போராட்டமே இரவு பகலாக  தொடர்கிறது.
 நன்றி வீரகேசரி 


முல்லைத்தீவில் வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்!

30/03/2017 முல்லைத்தீவு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து இன்று (30) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாகக் ஒன்றிணைந்த பட்டதாரிகள் தமக்கு வேலைவாய்ப்பினை உடன் வழங்கவேண்டும் எனவும், இந்த கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த ஒருமாதகாலமாக தொடர்ந்து போராடிவருவதாகவும் இதுவரையில் இதற்கு நல்லதொரு தீர்வு வழங்கப்படவில்லை எனவும் இதனால் வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இன்றையதினம் குறித்தத கண்டன ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
இந்த நல்லாட்சி அரசு விரைவில் தமது கோரிக்கையினை ஏற்று நல்லதொரு முடிவினை தரவேண்டும் என்றும், நாட்டில் பட்டம் பெறாதவர்கள் எல்லாம் அரச துறைகளில் அரசியல் வாதிகளின்  அனுசரனையோடு வேலை  புரிகின்ற போது தாங்கள் மட்டும் வேலையில்லாது வீதியில் அலைவதாகவும் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து தமது  கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் ஒப்படைப்பதற்காக முல்லை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரிடம் ஒப்படைத்திருந்தனர்.   நன்றி வீரகேசரி