தமிழ்நாடு செய்திகள்


Image result for nellai banana

.
நெல்லை அருகே 10 ஆயிரம் வாழைகள் சரிந்தன
நெல்லை, மார்ச்.30-
நெல்லை மாவட்டம் பேட்டை அருகே கருங்காடு அமைந்து உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான வாழைகள் பயிரிடப்பட்டு உள்ளன. இந்த வாழை மரங்கள் குலை தள்ளும் பருவத்தில் உள்ளன.
இந்த நிலையில் திடீரென வீசிய சூறாவளி காற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்து உள்ளன. இதனால் விவசாயிகளுக்கு லட்சக் கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இந்த நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
--------------------------------------------------------
இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிய விளையாட்டு வீரர்
நெல்லை, மார்ச்.30-
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் 2016-17-ம் ஆண்டிற்கான கூடைப்பந்து போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு அரங்கில் நடக்கின்றன. மாநில அளவிலான இப்போட்டிகளில் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியில் பங்கேற்ற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஜவஹர் (36) என்ற கூடைப்பந்து வீரர் வந்து உள்ளார். இவர் எதிர்பாராதவிதமாக, கால்நடைகள் மைதானத்திற்குள் நுழைவதை தடுக்க அமைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கூடைப்பந்து வீரர் ஜவஹரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேர பரபரப்பை ஏற்படுத்தியது.


---------------------------------------------
தாமிரபரணியில் இருந்து குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்குவதா?
ஜான் பாண்டியன் எச்சரிக்கை
நெல்லை, மார்ச்.30-
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பான ஆலைகளுக்கு தண்ணீர் வழங்கினால் போராட்டம் நடத்தப்படும் என்று ஜான் பாண்டியன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் ஜான் பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜான் பாண்டியன் கூறியதாவது:-
விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே விவசாய கடனை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். சாதி மற்றும் ஆணவக் கொலைக்களை தடுத்திட தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.
தாமிரபரணி ஆற்றில் இருந்து வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தண்ணீர் வழங்குவது முறையல்ல. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிடில் எனது தலைமையில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து நிருபர்களிடம் பேசிய ஜான் பாண்டியன், தேர்தல் ஆணையம் செயல்படாமல் உள்ளது என்றும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலுக்கு பின்னர் தான் இந்த ஆட்சி நீடிக்குமா என்பது குறித்து தெரியவரும் என்றும் கூறினார்.
--------------------------------
திருச்செந்தூர் கடல் திடீரென நிறம் மாறியது
தூத்துக்குடி, மார்ச்.30-
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்று திருச்செந்தூர். இங்குள்ள முருகப் பெருமானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் கடல் திடீரென நிறம் மாறியது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் கடலில் இறங்கி பக்தர்கள் குளித்தனர்.
பெரும்பாலானோர் நாழிக்கிணற்றில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்தனர். இதுகுறித்த தகவலையடுத்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். கடலில் மிதந்தது எண்ணெய் படலம் என்றும் இதுதான் கடல் நிறம் மாற காரணம் என்றும் கூறப்படுகிறது.
எனினும் இதுகுறித்து முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மணப்பாடு மீனவர்கள் கூறும்போது, கடலில் இதுபோன்ற கழிவுகள் மிதப்பு வழக்கமான ஒன்றுதான் எனவும் இது ரசாயன கழிவோ எண்ணெய் படலமோ இல்லை எனவும் கூறினர்.
----------------------------------------------
ஆர்.கே. நகரில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு
கி.வீரமணி கணிப்பு
நாகர்கோவில், மார்ச்.30-
இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களை சந்தித்த கி.வீரமணி இதுகுறித்து மேலும் கூறியதாவது:-
சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அறிவித்த பிறகு தேர்தல் கமிஷன் இருக்கிறா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆம்புலன்சுகளில் நோயாளிகளை தான் ஏற்றிச் செல்வார்கள். ஆனால் ஆர்.கே. நகரில் பணத்தை ஏற்றிக் கொண்டு வாக்காளர்களுக்கு சப்ளை செய்கிறார்கள்.
எனினும் ஆர்.கே. நகரில் தி.மு.க.வுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால் மத்திய அரசு கண்டுக் கொள்ளவில்லை. விவசாயிகள் பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.
ஹெட்ரோ கார்பன் திட்டத்தை மக்களின் எண்ணத்தையும் மீறி மத்திய அரசு திணிக்க முயல்கிறது. நீட் தேர்வுக்கு சமூக நீதிக்கு எதிரானது. இதில் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும். இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளுக்கும் போராட வேண்டும்.
ஜனநாயக பாதுகாப்பு கூட்டு இயக்கத்தின் நோக்கம் மத சார்பின்மை, சமூக நீதி, மாநில உரிமை ஆகும். இதில் ஒத்த கருத்துடையவர்கள் இயக்கத்தில் இணையலாம்.
துமிழகத்தில் பொறுப்பு கவர்னர், பொறுப்பு முதல்- அமைச்சர் என்ற நிலை மாறி நிரந்தர ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments: