வேண்டா விடுதலை - பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர்)

.
     

  கட்டடக்  காடுகளின்
  காட்சிப்  பெருவெளியில்
  அடர்ந்த  காடெங்கே
  அடர்மர  நிழலெங்கே
  எதோ   ஆங்காங்கே
  இருக்கின்ற மரங்களில்தான்
  குயிலிருந்து கூவவேண்டும்
  குஞ்சுகளைப் பேணவேண்டும்

  எங்கள் குடியிருப்பில்
  ஏழெட்டு மரங்களுண்டு
  ஏழெட்டு மரமெனினும்
  எல்லாம்  அடர்மரங்கள்
  வெயிலே நுழையாது
  விரித்த உயிர்க்குடைகள்
  அங்கேதான் பறவைகளின்
  அன்றாடக் கச்சேரி  மணிப்புறா  இணையொன்று
  மணிக்கணக்கில் உரையாடும்
  மஞ்சல்  நிறப்பறவை
  மாம்பழக் கொன்னை
  மனம்போல கவிபாடும்
  இன்னும்சில குருவி
  என்னையே நோட்டமிடும்

  அண்டாமல் அகலாமல்
  அழகை ரசித்திருப்பேன்
  அங்கம் அசையாமல்
  அபிநயம் பார்த்திருப்பேன்
  நெருங்கிப் பழகாமல்
  நெடுநேரம் கேட்டிருப்பேன்
  கண்ணும் காதும்
  திறந்துவைத்துப் பூத்திருப்பேன்

  பழகாமல் பேசாமல்
  பாழாகும் வாழ்வெண்ணி
  கனத்த சுமையோடு
  கழிகின்ற நாளெண்ணி
  வாடுகிறேன் வாடுகிறேன்
  நொடிதோறும் வாடுகிறேன்
  தேடுகிறேன்  தேடுகிறேன்
  வேண்டா விடுதலையை

(26.2.2017 தொடங்கி பல்வேறு பணிகளுக்கிடையில் 2.3.2017-ல் முடிக்கப்பட்டது)


No comments: