சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து
மீண்டும் ஒரு விமான விபத்து ; 27 பேர் பலி?
'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' : அப்போலோ தலைவர் வேதனை
ரஷ்ய தூதுவர் மீது சற்றுமுன் துப்பாக்கிச்சூடு
கிறிஸ்மஸ் சந்தையில் தீவிரவாத தாக்குதல் ; 12 பேர் பலி ; ஜேர்மனியில் பரபரப்பு
மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனம் : அவகாசம் கேட்கும் தலைவர்
ஈரானில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி..!
அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? ; இறுதி முடிவு வெளியானது
மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் பாரிய வெடிப்பு ; 27 பேர் பலி, 70 பேர் காயம்
இந்தியாவின் 'அக்னி–5' ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது
ஓடு பாதையை விட்டு விலகிய விமானம் ; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
சசிகலா தலைமையின்கீழ் பணியாற்ற அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்
சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது - விசாரணை அதிகாரியின் அதிர்ச்சி கருத்து
19/12/2016 ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைன் கொல்லப்பட்டிருக்க கூடாது என அவரை விசாரணைக்குட்படுத்திய அதிகாரியான ஜோன் நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
சதாம் ஹுசைனை விசாரணைக்குட்படுத்திய ஜோன் நிக்ஸன் எழுதியுள்ள Debriefing The President: The Interrogation Of Saddam Hussein எனும் நூலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சதாம் ஹுசைன் தன்னிடம்" அமெரிக்கா நினைப்பதை போன்று அரபு மொழியையும் எம்மக்களையும் புரிந்து செயற்பட முடியாது.
எமக்குள்ளே பல்வேறு கலாசார மற்றும் சமூக செயற்பாடுகள் அடங்கியுள்ளன. அதனை உள்ளூர் நபர்களை தவிர வெளிநாட்டவர்;களால் சரியான முறையில் பின்பற்ற முடியாது" எனக் கூறியதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு ஈராக்கிற்குள் பிளவுப்பட்டிருந்த பல்வேறு சமூகத்தினரை ஒன்று சேர்ப்பதில் அவர் வெற்றிக் கொண்டிருந்தார்.
எப்போதும் தனது நாட்டு மக்களின் நலனில் குறியாக இருந்த தலைவர் அவர். அவர் கட்டாயமாக தண்டிக்கப்பட்டிருக்க கூடாது.
மாறாக ஈராக்கிற்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என ஜோன் நிக்ஸன் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சதாம் ஹுசைனின் 2003 ஆம் ஆண்டு ஆட்சி காலப்பகுதியில் ஈராக்கில் அணுவாயுத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவினால் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
ஈராக்கில் சதாதமின் ஆட்சி 2003 ஆம் ஆண்டு அங்கு அணுவாயுத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டப்பட்டு அமெரிக்காவால் கவிழ்க்கப்பட்டது.
பின்னர் பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு சதாம் ஹுசைன் கைது செய்யப்பட்டு 2006 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார். நன்றி வீரகேசரி
மீண்டும் ஒரு விமான விபத்து ; 27 பேர் பலி?
19/12/2016 ரஷ்யாவின் ஐ.எல் .18 என்ற பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு செயலகம் தகவல் தெரிவித்திருந்தது.
எனினும் மீண்டும் குறித்த அறிக்கையை திருத்தம் செய்து 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த விமானம் பயணிக்கும் போது விமானத்தில் சுமார் 32 பயணிகள் மற்றும் 7 விமானப் பணியாளர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாதாரண காலநிலைக்காரணமாக குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் ஐவர் உயிருடன் இருக்கலாம் என நம்பப்படுவதுடன், விபத்து இடம்பெற்ற இடத்துக்கு 8 ஹெலிகொப்டர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
'ஜெயலலிதா விஷயத்தில் அது நடக்கவில்லை!' : அப்போலோ தலைவர் வேதனை
19/12/2016 மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்போலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 75 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பலனின்றி கடந்த டிசம்பர் 5ம் திகதி மரணம் அடைந்தார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் பல மர்மங்கள் நிலவுவதாக சொல்லப்படுகிறது. அந்த மர்மங்களுக்கு விடை கிடைக்காத நிலையில் அப்போலோ வைத்தியசாலையின் தலைவர் ஆங்கில ஏடு ஒன்றில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை குறித்து அவரே கட்டுரை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம் இங்கே....
''மறைந்த மரியாதைக்குரிய முதல்வரின் பல நற்குணங்களை கண்டு நான் வியந்துள்ளேன். எனக்கு அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு. தான் நினைத்த காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்கும் அவரது ஆற்றலை கண்டு நான் வியந்து போயிருக்கிறேன். எனக்கு அவரிடம் நல்ல பரிச்சயம் உண்டு. இதற்கு முன்பும் பல முறை நான் அவரை சந்தித்திருக்கிறேன். அதில் ஒன்றை இப்போது நினைவு கூற விரும்புகிறேன். நான் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின், ஹெச்.எம் வைத்தியசாலையில் பணியில் இருந்தேன். ஒரு முறை உடல்நலக்குறைவாக காரணமாக என்னிடம் ஜெயலலிதா வந்தார். துணைக்கு அவரது தோழிகள் சிலரும் இருந்தனர். எப்போதும் அவரது முகத்தில் அந்த புன்னகை தவழும். என்னை மட்டுமல்ல சுற்றியிருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்தாலும் அந்த புன்னகை மலரும். காலங்கள் ஓடி முதலமைச்சர் பதவி வரை அவர் உயர்ந்தாலும் என்னை பார்த்தால் அதே முக மலர்ச்சியுடன்தான் பேசுவார்.
இந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திததி அப்போலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாள் முதல் நான் அவரது சிகிச்சை முறைகளை தீவிரமாகவே கண்காணித்துக் கொண்டிருந்தேன். சொல்லப் போனால், இந்த இரண்டு மாதங்களும் சென்னை நகரை விட்டு நான் வெளியே எங்கேயும் செல்லவில்லை. என்னால் முடிந்த வரை அவருக்கு அளிக்கப்படும் மருத்துவத்தை நேரில் ஆய்வு செய்து கொண்டிருந்தேன். எங்கள் சக்திக்குட்பட்டு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதனை செய்து விட வேண்டுமென்பதுதான் எனது எண்ணம். அவரை விரைவில் குணப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது.
ஜெயலலிதா மரணம் அடைவதற்கு முன், ஒரு முறை நான் ஹைதரபாத்துக்கு போக வேண்டியது இருந்தது. அதுவும் ஒரு நாள் பயணம்தான். புறப்படுவதற்கு முன்பு கூட அவரை சென்று சந்தித்தேன். நலமாக இருந்தார். என்னை பார்த்ததும் அதே புன்னகையுடன் எதிர்கொண்டார். அவரிடம் பேசி விட்டுதான் நான் புறப்பட்டேன். அந்த சமயத்தில் தொலைக்காட்சியில் அவர் சினிமா பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம் 'ஹைதரபாத்தில் இருந்து நான் திரும்பும் போது நீங்கள் எழுந்து நடமாடுவீர்கள்' என்று கூறினேன்.
ஹைதரபாத்தில் இருந்து திரும்பியதும் ஜெயலலிதாவை டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்கிற எண்ணமும் எனக்குள் இருந்தது. வந்ததும் அது குறித்து முடிவெடுக்கலாம் என்று யோசித்தவாறு புறப்பட்டேன். நம்பிக்கையுடன்தான் ஹைதரபாத் புறப்பட்டேன். ஆனால், அங்கிருந்து திரும்பியதும் ஜெயலலிதாவுக்கு 'கார்டியாக் அரெஸ்ட்' என்றதும் நொறுங்கிப் போனேன். இத்தனைக்கும் இதயநோய் நிபுணர் ஒருவர் அவரை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தார். கார்டியாக் அரெஸ்ட் வந்தது என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால் அவரது இதயத்தில் கார்டியாக் அரெஸ்ட் வருவதற்கான எந்த அறிகுறியும் அது வரை தென்படவில்லை.
கார்டியாக் அரெஸ்ட் என்றதும் அடுத்த நொடியே எங்கள் மருத்துவக்குழு சிகிச்சையை தொடங்கி விட்டது. இதனை வைத்தியசாலையில்; 'கோல்டன் ஹவர் 'என்று நாங்கள் குறிப்பிடுவோம். ஜெயலலிதா சிகிச்சை எடுத்த அறையில் இருந்து இரண்டு அறைகள் தாண்டிதான் 'எக்மோ ' சிகிச்சை அளிக்கப்படும் அறை இருந்தது. கார்டியாக் அரெஸ்ட் தாக்கிய பல நோயாளிகள் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு பிழைத்து வீடு திரும்பியிருக்கிறார்கள். துரதிருஷ்டவசமாக நமது அம்மா சி.எம். விஷயத்தில் அது நடக்கவில்லை. ஜெயலலிதா ஜென்டில் வுமேன், சிகிச்சைக்கு அருமையாக ஒத்துழைத்தார். கருணைமிக்கவர், நோய் தந்த வலியை எளிதாக தாங்கிக் கொண்டவர்.
என்னை பொறுத்த வரை ஜெயலலிதா ஒரு அபூர்வமான பெண். அன்பானவர். அவரது கோபத்தில் கூட ஒரு நியாயம் இருக்கும். ஜெயலலிதாவின் கட்சித் தொண்டர்கள மட்டுல்ல தமிழக மக்கள் மட்டுமல்ல அவரது திட்டங்களால் நாடு முழுவதும் உள்ள மக்கள் பயன் அடைந்திருக்கிறார்கள். ஜெயலலிதா என்ற மாபெரும் பெண் மறைந்தாலும் நமது உள்ளத்தில் என்றும் வாழ்வார்.'
டாக்டர் பிரதாப் ரெட்டி
தலைவர் அப்போலோ வைத்தியசாலை
நன்றி வீரகேசரி
ரஷ்ய தூதுவர் மீது சற்றுமுன் துப்பாக்கிச்சூடு
19/12/2016 துருக்கிக்கான ரஷ்ய நாட்டு உயர்ஸ்தானிகர் தூப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கவலைக்கிடமான நிலையில் அங்காரா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துருக்கியின் ரஷ்ய தூதுவரான அன்றேய் கார்லோவ் அங்காராவில் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியினை திறந்துவைத்து அந்நிகழ்வில் உரையாட்டும் வேளையிலே இனந்தெரியாத நபரினால் சுடப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தில் மேலும் நால்வர் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
கிறிஸ்மஸ் சந்தையில் தீவிரவாத தாக்குதல் ; 12 பேர் பலி ; ஜேர்மனியில் பரபரப்பு
20/12/2016 ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்மஸ் சந்தையினுள் திடீரென லொறி புகுந்தததில் 12 பேர் பலியானதோடு, 48 பேர் படுகாயமடைந்தனர்.
குறித்த தாக்குதல் தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தையில் பொருட்கள் வாங்கும் பகுதியில் மக்கள் அதிகமாகவுள்ள சமயத்தில் அப்போது கூட்டத்திற்குள் திடீரென லொறியினை வேகமாக மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் 12 பேர் சம்பவயிடத்திலே உயிரிழந்ததோடு 48 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும், தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலில் இருவர் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவர் உடல் நசுங்கி பலியானதாகவும், மற்றைய நபர் கைது செய்யப்பட்டதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பெர்லின் நகரில் வசிப்பவர்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மியன்மாரில் முஸ்லிம்கள் மீதான அடாவடித்தனம் : அவகாசம் கேட்கும் தலைவர்
20/12/2016 மியன்மாரில் உள்ள ரொஹிங்கியோ முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் கொடுமையான தாக்குதல்கள் மற்றும் பாலியல் வன்முறைகளை நிறைவுக்கு கொண்டு வர கால அவகாசம் தேவையென அந்நாட்டு தலைவர் ஆன்சாங் சூகி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என அயல் நாட்டு வெளியுறவு அமைச்சர்களால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பங்குபற்றிய போதே ஆன்சான் சூகி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்நிலைமைகள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் மனிதாபிமான உதவிகளுக்கு தாம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் ஆன்சான் சூகி தெரிவித்துள்ளார்.
இருப்பினும் பதற்றநிலை அதிகமாக உள்ள ரக்கீன் மாநிலத்தின் ரொஹிங்கியோ முஸ்லிம்கள் வாழும் பகுதிகள் மாத்திரம் தொடர்ந்து தனிமை படுத்தப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றச் செயல்களை உடனடியாக நிறுத்துமாறும் இல்லாவிடின் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை மியன்மார் அரசாங்கத்துக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஈரானில் புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ள ஜனாதிபதி..!
20/12/2016 ஈரானில் தனிமனித உரிமை சார்ந்த புதிய சட்டங்களை அந்நாட்டு ஜனாதிபதி ஹசன் ருஹானி அறிமுகப்படுத்தியுள்ளார்.
உலகத்தில் உள்ள ஏனைய ஜனநாயக நாடுகளைப் போன்று ஈரான் பொதுமக்கள், அரசு பற்றிய விமசர்னங்களை முன்வைப்பதற்கும், ஏனையவர்களுடன் சுதந்திரமாக கூடி பேசுவதற்கும் நியாயமான இருதரப்பு சார்ந்த நீதி விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தடையாக இருந்தது.
இந்நிலையில் குறித்த தடையை மாற்றி அரசியலமைப்பில் புதிய சட்டத்தை அந்நாட்டு ஜனாதிபதி அறிமுகம் செய்துள்ளார்.
இதற்கு முன்பும் இதுபோன்ற சட்டங்கள் நிறையவே உருவாக்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை நடைமுறைபடுத்தல்களில் சிக்கல்கள் காணபட்டன.
இந்நிலையில் புதிய சட்டங்களை தெளிவான வகைப் படுத்தல்களுடன் உருவாக்கியுள்ளதோடு, கட்டாய நடைமுறைப்படுத்தலை இச்சட்டம் வலுப்படுத்தியுள்ளமையே இச்சட்டத்தின் சிறப்பம்சமாகும்.
இஸ்லாமிய புரட்சி விவாதங்களை முன்னெடுக்கும் கடும்போக்காளர்கள் நீதித்துறை உள்ளிட்ட பல்வேறு அரச துறைகளை நிர்வகித்து வரும் நிலையில் அவர்களின் கொள்கைக்கு எதிரான முறiயில் இவ்வாறு சட்டத்தை உருவாக்கியுள்ளமையானது ஈரானை ஒரு ஜனநாயக மரபிற்கு கொண்டு செல்வதற்கான பாதையை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது. நன்றி வீரகேசரி
அமெரிக்காவின் ஜனாதிபதி யார்? ; இறுதி முடிவு வெளியானது
20/12/2016 ஐக்கிய அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தல் கல்லூரி வாக்களிப்பில் ஹிலாரியை தோல்வியடையச் செய்து டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவு செய்யபட்டுள்ளார்.
தேர்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் தமது வாக்குகளை ஹிலாரிக்கு மாற்றியளிக்கும் பட்சத்தில் டிரம்ப் ஜனாதிபதியாவதில் சிக்கல்கள் இருப்பதாக தகவல்கள் வந்த நிலையிலேயே ஹிலாரியை (224) விட அதிக வாக்குகளை பெற்று (304) அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக டிரம்ப் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
முதல்கட்ட ஜனாதிபதி தேர்தலில் எதிர்பாராதவிதமாக டிரம்ப் வெற்றி பெற்றிருந்தார். அதே நேரம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹிலாரி கிளிண்டன் அதிர்ச்சியான தோல்வியை தழுவியிருந்தார்.
ஹிலாரிக்கு டிரம்பை விட மக்கள் ஆதரவு அதிகமாக இருந்தாலும், அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியை முடிவு செய்யும் அதிகாரமானது தேரல்தல் கல்லூரியின் தேர்வாளர்கள் அளிக்கப்படும் வாக்குகளின் அடிப்படையிலேயே முடிவுசெய்யப்படும். அதனடிப்படையில் முதல் கட்ட வாக்களிப்பில் டிரம்பிற்கு 306, ஹிலாரிக்கு 232
வாக்குகள் என வாக்களித்து தேர்வாளர்கள் டிரம்ப் ஜனாதிபதியாவதை உறுதி செய்திருந்தனர்.
இந்நிலையிலேயே அடுத்தக்கட்ட தேர்வாளர் வாக்கு பதிவுகள் இன்று (20) இடம்பெற்ற நிலையிலேயே டிரம்பிற்கு அதிகளவான வாக்குள் அளிக்கப்பட்டிருந்தன. வெற்றிக்குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் தனது முழு அர்ப்பணிப்பு
மிகு சேவையை நாட்டுக்கு வழங்கி நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபடவுள்ளதாகவும், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் உத்தியோகபூர்வ ஜனாதிபதியாக டொணால்ட் டிரம்ப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தகு விடயமாகும். நன்றி வீரகேசரி
மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் பாரிய வெடிப்பு ; 27 பேர் பலி, 70 பேர் காயம்
21/12/2016 மெக்ஸிக்கோ வானவேடிக்கை சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு 70 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சான் பப்ளீட்டோ சந்தையில் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக விற்பனைக்கு வைக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசு தீ பிடித்து வெடித்ததில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து மெக்ஸிக்கோ நேரப்படி நேற்று மாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இவ்விபத்தில் 300 விற்பனை நிலையங்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி
இந்தியாவின் 'அக்னி–5' ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது
26/12/2016 இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் பரிசோதிக்கப்பட்ட அக்னி - 5 வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த அக்னி - 5 ஏவுகனையானது அப்துல் கலாம் தீவில் வைத்து இன்று 11.05 மணியளவில் ஏவப்பட்டுள்ளது.
'அக்னி–5' ஏவுகணையானது சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை சென்று தாக்கக்கூடியதெனவும், இன்று விண்ணில் ஏவப்பட்ட நிலையில் தூரம் மற்றும் இலக்கை சரியாக தாக்கியுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
ஓடு பாதையை விட்டு விலகிய விமானம் ; அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்
27/12/2016 டுபாயிலிருந்து 161 பயணிகளுடன் கோவா விமான நிலையத்திற்கு சென்ற ஜெட் ஏயர்வேஸ்க்கு சொந்தமான விமானம் சில பயணிகளை இறக்கிவிட்டு தொடர்ந்து மும்பைக்கு புறப்பட்டபோது இன்று அதிகாலை ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவத்தின் போது விமானத்திலிருந்து புகை வெளியேறியதால் அவசராமாக பயணிகளை இறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமானத்திலிருந்த 12 பயணிகள் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விமானத்தின் அவசர தரையிறங்கள் பகுதியின் ஊடாக பயணிகள் மோதிக்கொண்டு வெளியில் வர முனைந்தமையாலேயே பயணிகள் காயமுற்றுள்ளனர்.
அத்தோடு குறித்த ஓடுபாதையை சீர் செய்யும் பணிகள் இடம்பெற்ற நிலையில் பகல் 12.30 மணி வரையில் விமான சேவைகள் கோவாவில் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி
சசிகலா தலைமையின்கீழ் பணியாற்ற அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம்
29/12/2016 ஜெயலலிதாவின் மறைவையடுத்து அவரது தோழி வி.கே. சசிகலாவின் தலைமையின்கீழ் பணியாற்றுவோம் என சென்னையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. செயற்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னை வானகரத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் ஜெயலலிதாவின் படத்துக்கு அக்கட்சி தலைமை நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செய்தனர். பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2 நிமிடம் அஞ்சலி செலுத்தினர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து பதவி காலியாக உள்ள அக்கட்சியின் புதிய தலைமையை தேர்வு செய்வதற்கான அவசர செயற்குழு, பொதுக்குழு இன்று காலை சென்னை வானகரத்தில் கூடியது.
இந்த கூட்டத்துக்கு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கட்சியின் மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், தம்பித்துரை, பொன்னையன், உள்ளிட்டோர் முன்னிலையில் முதலில் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
மேடையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. பின்னர், அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று ஜெயலலிதாவின் மறைவுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தலைமையின்கீழ் விசுவாசமாக கட்சிப் பணியாற்றுவோம் என அனைவரும் உறுதி ஏற்றனர். சசிகலாவை அ.தி.மு.க.வின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கவும் செயற்குழுவில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல், சசிகலாவின் நியமனம் உள்ளிட்ட 14 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு பொதுக்குழுவின் ஒப்புதலுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அ.தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment