இலங்கையில் பாரதி ( அங்கம் -04) - முருகபூபதி

.
பாரதியின் புகழ் பரப்பிய இலங்கைத்தமிழ்ப் பத்திரிகை உலக முன்னோடிகள்
                                                         

இலங்கையில் பாரதியின் தாக்கம் பற்றிய ஆய்வில் ஈடுபடும்பொழுது பல பத்திரிகையாளர்களே முதலில் நினைவுக்கு வருகிறார்கள்.
இந்தத்தொடரின் தொடக்கத்திலிருந்து பாரதியின் பாதிப்புக்குள்ளான பத்திரிகையாளர்களே வருவது தவிர்க்கமுடியாதது. பாரதியின் நண்பர் வ.ரா.வைப்போன்று மற்றும் ஒருவர்  வ.ரா.வுக்கு முன்பே 1920  காலப்பகுதியில்  இலங்கைக்கு வந்தார்.
1921 இல் தேசநேசன் என்ற பத்திரிகையையும் வெளியிட்டிருக்கிறார். அவரது பெயர் கோதண்டராம அய்யர் நடேசய்யர் (1887-1947)
தஞ்சாவூரில்  பிறந்திருக்கும்  நடேசய்யர், பன்முக ஆளுமைகொண்டவர். தாம் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் மூலதனமாகக்கொண்டு காப்புறுதி, வங்கி நிருவாகம், வர்த்தகம்  முதலான துறைகளில் நூல்களும் எழுதியிருப்பவர்.
ஒரு வழக்கறிஞராக இருந்த வ.உ.சிதம்பரப்பிள்ளை  எவ்வாறு பிரிட்டிஷாரை  எதிர்த்து  தமிழ்மக்களுக்காக கப்பல் ஓட்டினாரோ அவ்வாறே  தமிழக மக்கள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு  மாற்றீடாக  வர்த்தகத்துறையில்  மேம்படவேண்டும் என்று விரும்பியவர் நடேசய்யர். அதற்காகவே  தஞ்சாவூரில்  வர்த்தக மித்திரன் என்ற பத்திரிகையையும்  வெளியிட்டவர்.
 வர்த்தகர்களை  ஒருங்கிணைத்து தொழிற்சங்கமும் அமைத்தவர். பிரிட்டிஷாரால்  இலங்கைக்கு  அழைத்துச்செல்லப்பட்ட  இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலும் வர்த்தகத்துறையில் விழிப்புணர்வுகளை  ஏற்படுத்தும்  நோக்கத்தில்  இலங்கைத்தலைநகர் வந்தார்.   ஆனால்,  இங்கு மலையகத்தில் இந்திய மக்கள் படும் துயர்கண்டதும்  அவரது  நோக்கத்தில்  மாற்றம் உருவானது.

இலங்கைப் பொருளாதாரத்தில் 60 சதவீதமான அந்நிய செலாவணியை  ஈட்டித்தந்துகொண்டிருந்த  மலையக இந்தியவம்சாவளி  மக்களின்  வாழ்க்கைத்தரம்  உயராமல், தேயிலைச்சக்கையாக  அவர்களின்  கடின உழைப்பு  சுரண்டப்படுவது கண்டு  கொதிப்படைந்திருந்த  நடேசய்யர், ஒரு இந்தியப்புடவை வியாபாரி வேடத்துடன் மலையத்தில் நடமாடி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை  ஏற்படுத்தினார்.

நடேசய்யருடைய  செயல்பாடுகளுக்கும்    பாரதியே  துணைக்கு வந்திருக்கிறார்.

பிஜித்தீவில்  கரும்புத்தோட்டங்களில்  இந்திய மக்கள் படும் சொல்லொனா  துயர் கண்ட  பாரதி,

 " நாட்டை நினைப்பாரே...? எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே,
 அன்னை  வீட்டை  நினைப்பாரோ...?
அவர் விம்மியழுங் குரல் கேட்டிருப்பாய் காற்றே...! துன்பக்கேணியிலே  எங்கள் பெண்கள்
அழுதசொல் மீட்டும்  உரையாயோ...?
 அவர் விம்மியழவும்  திறங்கெட்டும் போயினர்"

என்று  குமுறி எழுதியிருப்பதுபோன்று பின்னாளில் புதுமைப்பித்தனும் இலங்கையில் மலையக  மக்களின் ஆத்மாவை தமது துன்பக்கேணியில்   கதையில்  சித்திரித்திருக்கிறார்.

இந்தியத்தமிழர்கள்  பிஜித்தீவில்  கரும்புத்தோட்டங்களிலும் இலங்கைத்தீவில்  தேயிலை, ரப்பர், கொக்கோ தோட்டங்களிலும் பட்ட துன்பங்களை  வரலாற்றின்  ஏடுகளில்  நாம் காணமுடியும்.

தஞ்சாவூரில்  பிறந்திருக்கும் கோ. நடேசய்யர், பாரதியையும் புதுமைப்பித்தனையும்  போன்று எழுத்திலே அம்மக்களின் துயரத்தை பதிவுசெய்யாமல்,  நேரிலே வந்து துயர் களைவதற்காக போராடிய  ஒரு கர்மவீரர்.

ஆயினும்,  அவர்களின் துயர் இற்றைவரையில் நீங்கவில்லை.  லயன்  குடியிருப்புகள்  ஒழியவில்லை.  மலையக மண்சரிவு அபாயங்கள் நீங்கவில்லை.  உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை.   அவர்கள் மத்தியில் புதிய  புதிய  தலைவர்கள்தான் தோன்றினார்கள்.  தொழிற்சங்கங்களும்  அரசியல்  கட்சிகளும்தான் பிறந்தன.

தேசம் விட்டு தேசம் உழைக்கவந்த பரதேசிகளான அம்மக்களின் உழைப்பைசுரண்டிய  பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம்,  இறுதியில் அவர்களை  நாடற்றவர்களாக்கியது.


தொழிற்சங்கவாதியாக,  தமிழ்  அறிஞராக, பத்திரிகையாளராக, படைப்பாளியாக, பதிப்பாளராக, அரசியல்வாதியாக அயராமல் இயங்கிய  நடேசய்யர், 1924 முதல் இலங்கை சட்ட சபையிலும் பின்னர் அரசாங்க சபையிலும்  உறுப்பினராகவும்  இருந்தவர்.

இந்தியாவிலிருந்து  அடிமைகளாக  இறக்குமதி செய்யப்பட்ட மக்களின்  உரிமைக்காக குரல் எழுப்பிய நடேசய்யரையும்  அவரது  மனைவி மீனாட்சியையும் நாடுகடத்துவதற்கு அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர் சதித்திட்டங்கள்  தீட்டியதாகவும் அறியக்கிடைக்கிறது.

  தமிழகத்திலும்  புதுவையிலும்  மக்களிடத்தில் சுதந்திரவேட்கையை  ஊட்டுவதற்காக பாரதி,  பத்திரிகைகளை ஆயுதமாக்கினார்.   இலங்கை  வந்திருக்கும் நடேசய்யரும் இங்கிருந்த மலையக  மக்களின் அடிமை விலங்கை  உடைத்தெறியப்பாடுபட்டவர். அதற்காகவே  பத்திரிகைகளை தமிழில் (தேசபக்தன்) மாத்திரமின்றி ஆங்கிலத்திலும் (The Citizen ) தொடக்கினார்.

நடேசய்யர் - மீனாட்சியம்மா தம்பதியர் மலையகத்தோட்டப்புறங்கள் எங்கும் பாரதியின் எழுச்சிமிக்க பாடல்களை பரப்பியிருக்கிறார்கள். துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் தேசபக்தன் பத்திரிகை வாயிலாகவும் பாரதியின் விழிப்புணர்வுச்சிந்தனைகளை பரப்பியிருக்கிறார்கள்.

மலையகத்தின் முதல் பெண்மணி என்ற பெருமையைப்பெற்றிருக்கும் மீனாட்சி அம்மையார், தென்னிலங்கையில்  இடதுசாரிகளுடன் இணைந்து  மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியிருக்கிறார். பாரதியின் புதுமைப்பெண்ணாகவே  அக்காலப்பகுதியில் இலங்கையில்  வாழ்ந்திருக்கும் மீனாட்சி அம்மையார், தேசபக்தன் பத்திரிகையின் பதிப்பாசிரியராகவும்  பணியாற்றியவாறு, அதில்  பெண்கள் பகுதியில் எழுதியும்  வந்துள்ளார். "  மீனாட்சி அம்மையாரை ஒவ்வொரு ஆண்டும் வரும்  அனைத்துலக பெண்கள் தினத்தில் நினைவுகூரவேண்டியது  மலையக மக்களின் கடமை "   என்று அந்தனிஜீவா, ஞானம் 2004  மார்ச் சர்வதேச மகளிர் தினச்சிறப்பிதழில் பதிவுசெய்துள்ளார்.

மீனாட்சி அம்மையார் பாரதியின் சிந்தனைகளின் ஊடாக மலையக மக்களிடம் மேற்கொண்ட பல ஆக்கபூர்வமான பணிகளை லெனின் மதிவானம் , சாரல் நாடன்  ஆகியோர் விரிவாக ஏற்கனவே எழுதியிருக்கின்றனர்.


வடக்கில் ஈழகேசரியின் தோற்றம்

சுன்னாகத்தில் 1926 இல் தனலக்குமி  புத்தகசாலை என்ற கடையை நா.பொன்னையா  அவர்கள் ஆரம்பித்து, பாரதி சம்பந்தப்பட்ட நூல்களையும்  விற்பனைக்கு  வைத்து  இங்கிருந்த மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

" வியாபாரத்துக்கு அழகு விளம்பரம் செய்தல் " என்பார்கள். புத்தகசாலையில்  அலுமாரியில் புத்தகங்களை  அடுக்கிவைத்தால் மாத்திரம்  அவை  வெளியே  அறிமுகமாகிவிடுமா...?

22-06-1930 ஆம்  திகதியன்று     சுன்னாகத்திலிருந்து  தாம் வெளியிட்ட ஈழகேசரி பத்திரிகையில்  தனது  தனலக்குமி புத்தகசாலைக்கு ஒரு விளம்பரத்தை  வெளியிட்டார்.
" முந்துங்கள்...!!! முந்துங்கள்...!!! புதிய பதிப்பு...!!! மலிந்த விலை...!!! பாரதி நூல்கள்...!!! என்ற விளம்பரத்தில்  தேசிய  கீதங்கள், தோத்திரப்பாடல்கள், வேதாந்தப்பாடல்கள், எனப்பதினைந்து நூல்களின்  விலையையும்  அதில்  குறிப்பிட்டிருந்தார் நா.பொன்னையா.
( ஈழம்தந்த கேசரி-  நூல் கனகசெந்திநாதன்)

அக்காலப்பகுதியில்  (1930 இல்) ஒரு பத்திரிகை  உரிமையாளரான அதன் ஆசிரியர், தனது  நிருவாகக்கட்டமைப்புக்குள்  வரும் புத்தகசாலையில்  விற்பனைக்கிருந்த பாரதி நூல்களை மக்கள் மத்தியில்   பிரபல்யப்படுத்துவதற்கு  தனது  பத்திரிகையையே பயன்படுத்தி  பாரதிக்கும்  வாசகர்களுக்குமிடையே  உறவை ஏற்படுத்தியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

ஈழகேசரியின் முதல் இதழில் நா.பொன்னையா எழுதியிருக்கும் ஆசிரியத்தலையங்கத்தில்  சில  வரிகளைப்பாருங்கள்:

" நமது  நாடு  அடிமைப்படுகுழியிலாழ்ந்து அந்நியர்வயப்பட்டு அறிவிழந்து, மொழிவளங்குன்றி, சமயமிழந்து, சாதிப்பேய்க்காட்பட்டு,   சன்மார்க்க  நெறியிழந்து  உன்மத்தராய்  - மாக்களாய்  உண்டுறங்கி வாழ்தலே கண்ட காட்சியெனக் கொண்டாடுமிக்காலத்தில் எத்தனை பத்திரிகைகள் தோன்றினாலும்  மிகையாகாது"  என எழுதியிருக்கிறார்.

பாரதியின்  சிந்தனைத்தாக்கத்தை  இந்த  வரிகளில்  நாம் காணமுடிகிறது.

" ஈழகேசரி இதழில் வெளியிடப்பட்ட  பாரதி பாடல்களையும்  ஏனைய செய்திகளையும்  ஒருங்கு  நோக்குங்கால் நா. பொன்னையா சுதந்திர இயக்கத்திலும்  மகாத்மா காந்தியிலும் பாரதியிலும்  பற்றுடையவரென்பதும்  தரமான  இலக்கிய வளர்ச்சியை விரும்பியவர் என்பதும் புலனாகும்." என்று பேராசிரியர் சி. தில்லைநாதன்  பதிவுசெய்துள்ளார். ( பாரதியும்  இலங்கையும் கட்டுரை - பாரதி பன்முகப்பார்வை நூல்:1984)

ஈழகேசரியினால்  பாரதியின்  கருத்தியல்கள்  மக்கள் மத்தியில் பரவியிருப்பதை  நினைவுபடுத்தும்  இச்சந்தர்ப்பத்தில்,   இதன் ஆசிரியர்களாக   இயங்கிய  மேலும்  இருவரைப்பற்றியும் பதிவுசெய்தல் மிகவும் பொருத்தமானது.

சோ. சிவபாதசுந்தரம் ( 1912 - 2000 )

ஈழகேசரியில் 1938 முதல் 1942 வரையில் பணியாற்றியிருக்கும் சோ. சிவபாதசுந்தரம், ஈழகேசரி இளைஞர் கழகம் என்ற பெயரில் ஒரு அமைப்பை தோற்றுவித்து, வாசகர் வட்டத்தை உருவாக்கியவர். பத்திரிகைகளுக்கு இவ்வாறு வாசகர் வட்டத்தை உருவாக்கிய முன்னோடி அவர்.

பத்திரிகை  அச்சிட்டு  வெளியிட்டு  விநியோகித்து  விற்பனை எண்ணிக்கை ( Circulation)  பற்றி  மாத்திரம்  சிந்திக்கும் காலங்களைத்தான் நாம் கடந்துவருகின்றோம்.

அவற்றின்  வாசகர்களின்  நாடித்துடிப்பறிவதற்கு  ஏற்றவாறு  வாசகர் வட்டங்களை  அமைப்பதில் ஏனோ எவரும் கவனம் செலுத்துவதில்லை.  ஆனால், 1940 இற்கு முன்னர் வடக்கிலிருந்து வெளியான ஈழகேசரியின் வாசகர்களின் கருத்தை அறிவதற்காக இருநூறுக்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைத்  திரட்டியவராக சோ. சிவபாதசுந்தரம் அறியப்படுகிறார்.

1942 இல் கொழும்பில் இலங்கை வானொலியில் இணைந்திருக்கும் சோ. சிவபாதசுந்தரம்  அவர்கள்தான்  இன்றும்  நாம்  கேட்டுவரும் லண்டன் பி.பி.சி. தமிழ் ஒலிபரப்பிற்கு தமிழோசை என்ற பெயரைச்சூட்டியவர்.

பாரதியின் தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் என்ற பாடல் வரிகளிலிருந்து  பிறந்த தமிழோசையின்  பெயரிலேயே  இன்றுவரையில்  உலகத் தமிழர்களிடம்  லண்டன்  ஒலிபரப்பு சென்றுகொண்டிருக்கிறது.

இராஜ அரியரத்தினம் ( 1916-1998 )

இலங்கைத்தமிழ்ப்பத்திரிகைத்துறையின்  முன்னோடிகளில் ஒருவராகத்திகழும்  இராஜ அரியரத்தினம் அவர்கள், ஈழகேசரி, ஈழநாடு, சிந்தாமணி  ஆகிய  பத்திரிகைகளில் பணியாற்றியவர்.

ஆரம்பத்தில்  ஆங்கில இதழ்களுக்கு கட்டுரைகள் எழுதியிருக்கும் இராஜ அரியரத்தினம், எழுதிய முதலாவது சிறுகதை வயலுக்குப்போட்டார் என்பதாகும்.

1941 ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு ஈழகேசரி நிறுத்தப்படும் வரையில் அதன் ஆசிரியராக பணியாற்றியிருக்கும் இராஜ அரியரத்தினம் அவர்கள், தமிழ்நாட்டின் இலக்கிய முன்னோடிகள் பெரியசாமித்தூரன், கல்கி முதலானோருடனும் நட்புறவு கொண்டிருந்தவர்.

இராஜ அரியரத்தினம் அவர்களின் பத்திரிகைத்துறை வாழ்க்கை ஈழகேசரியில் ஆரம்பித்து, ஈழநாடு, சிந்தாமணி எனத்தொடர்ந்து நிறைவுற்றது.

நா.பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், இராஜ அரியரத்தினம் ஆகியோர் 1930 - 1958 காலப்பகுதியில் ஈழகேசரி பத்திரிகை ஊடாக பாரதியின் பாடல்களையும் சிந்தனைகளையும்  இலங்கையில் குறிப்பாக வடபுலத்தில் பரவச்செய்த முன்னோடிகளாவர்.
அஸ்தமனத்தில் உதயம் போன்று ஈழகேசரிக்கு 1958 இல் மூடுவிழா நிகழ்ந்த அதே காலப்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அதே ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி ஈழநாடு வார இதழ் வெளியானது.
(தொடரும்)

No comments: