படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி - அவுஸ்திரேலியா

.
கிரிதரனின் குடிவரவாளன் கதை
அகதியாக தஞ்சம் கோருபவர்களின் வாழ்வுக்கோலங்களை  சித்திரித்த தன்வரலாற்று நாவல்
       
                                 
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு திங்கட்கிழமை காலை 7 மணியளவில் நான் மெல்பனில் வாடகைக்கு இருந்த அந்த தொடர்மாடிக்குடியிருப்பில் எனது வீட்டின் வாசல் கதவு தட்டப்பட்டது.
முதல் நாள் மாலை  வேலைக்குச்சென்று,  அன்று  அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பி,  ஆழ்ந்த உறக்கத்திலிருந்த என்னை,  இந்த நேரத்தில் யார் வந்து  கதவு தட்டி எழுப்புகிறார்கள்...?
எனது கட்டிலுக்கு அருகில் மற்றும் ஒரு படுக்கையில் உறங்கிய அந்தத் தமிழ் இளைஞர் காலை வேலைக்குச்சென்றிருந்தார்.
சென்றவர்தான் எதனையும் தவறவிட்டுச்சென்று,  மீண்டும் வருகிறாரோ...? அல்லது வீட்டின் சாவியை விட்டுச்சென்றுவிட்டாரோ...?
அந்தக் காலைவேளையில் எவரும் வரமாட்டார்கள். ஆனால், யாரோ கதவை அடித்துத்  தட்டுகிறார்கள்.
போர்த்தியிருந்த  போர்வையை விலக்கிக்கொண்டு கதவைத்திறக்கின்றேன். வெளியே இரண்டு அவுஸ்திரேலியர்கள் தாம் குடிவரவு திணைக்களத்திலிருந்து வந்திருப்பதாக தமது அடையாள அட்டையை காண்பித்தார்கள்.




தயக்கத்துடன் கதவைத்திறந்தேன். நன்றி சொன்னார்கள்.
" என்ன விடயம் ? " எனக்கேட்கிறேன். வந்தவர்கள் எனது கேள்விக்கு உடனடியாக பதில் தராமல் வீட்டின் ஹோல், அதனோடிணைந்த சமையல்கட்டு , நான் உறங்கிய அந்த ஒற்றைப்படுக்கையறை யாவற்றையும் கழுகுப்பார்வை பார்த்துவிட்டு, சீராக இருந்த மற்ற கட்டிலைப்பார்த்து, " இதில் படுத்திருந்தவர் எங்கே...?" எனக்கேட்டார்கள்.
" அவர் தனது நண்பரை பார்க்கச்சென்றிருப்பார்" என்று பொய் சொன்னேன்.
" நண்பரைப்பார்க்கச்செல்லும்போது பாணில் சாண்ட்விஷ்ஷ_ம் செய்து எடுத்துச்செல்வரா...?" என்று ஒருவர் கேட்டார்.
அதற்கு நான் பதில்சொல்லத்தெரியாமல் விழித்தேன். மற்றவர் கையிலிருந்த வோக்கி டோக்கியில் ஏதோ பேசினார்.
சில நிமிடங்களில் ஒரு பெண் அதிகாரி தனது அடையாள அட்டையை காண்பித்தவாறு எனது அறையிலிருந்து வேலைக்குச்சென்ற  அந்த இளைஞருடன் வாசலில் தோன்றினார். எனக்கு  யாவும்  அந்தக்கணமே  புரிந்துவிட்டது.
வீட்டில்  முன்னர்  இருந்துவிட்டு வேறு  இடங்களில் வேலைதேடிக்கொண்டு விடைபெற்றுவிட்ட  மூன்று பேருக்கு ஊரிலிருந்து வந்த கடிதங்களை ஒரு அதிகாரி கைப்பற்றினார்.
" இவர்கள் எங்கே...?"
" வேறு வீடுபார்த்துக்கொண்டு  போய்விட்டார்கள்"
" நீர் ஏன் இன்று வேலைக்குச்செல்லவில்லை...?"
" எனக்கு வேலை இல்லை."  - மீண்டும் ஒரு பொய் வாயில் உதிர்ந்தது.
" நீங்கள் எல்லோரும் ஶ்ரீலங்காவிலிருந்து வந்த அகதிகள்தானே....?"
" ஆமாம்" உண்மை உதிர்ந்தது.
" எவ்வாறு சீவிக்கிறீர்கள்...? உணவு,  வாடகை, தொலைபேசி செலவுகளை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்...?"
அடடா...  எவ்வளவு மனிதாபிமானம் மிக்க கேள்வி..., விசாரிப்பு...?
" சில நண்பர்களின் உதவியில் வசிக்கின்றோம்." மீண்டும் மற்றும் ஒரு பொய் உதிர்ந்தது. அதேசமயம்,  சற்றும் தாமதிக்காமல், எனது சூட்கேசைத்திறந்து அகதிக்கோரிக்கைக்கு விண்ணப்பித்திருக்கும் ஆவணங்கள்,  எமது சட்டத்தரணியின் கடிதங்கள் யாவற்றையும் காண்பித்தேன்.  வெளியே வேலைக்குச்செல்லும் வழியில் அவர்களிடம் பிடிபட்ட  அந்த  இளைஞரும் தம்மிடமிருந்த ஆவணங்களைக்காட்டினார்.
" இங்கு உங்களுக்கு வேலை செய்வதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை. விசாரணையில்தான் முடிவு வரும். இனிமேல் வேலைக்குச்செல்லவேண்டாம்  என்று உமது  நண்பரிடம் சொல்லும்"


" Yes Sir... Yes Sir..." என்று அந்த நண்பரும் நாவரட்சியோடு  சொன்னார்.
வந்தவர்கள் எம்மை அனுதாபத்துடன் பார்த்துவிட்டு எமது கையொப்பங்களை ஒரு படிவத்தில் பெற்றுக்கொண்டு விடைபெற்றனர்.
அவர்கள் மாடிப்படியிறங்கி தெருவுக்குச்சென்றதும்,  தெலைபேசியில்  எமது சட்டத்தரணியிடம் நடந்ததைச் சொன்னோன்.
" மற்றவர்களுக்கும்  தொலைபேசியில் தகவல் சொல்லி, எவரையும் வேலைக்குச்செல்லவேண்டாம்  எனச்சொல்லும்" என்றார் அவர்.
இது நடந்த முப்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. எனக்கும் அந்த நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் இந்தக் கங்காரு நாட்டில் நிரந்தர வதிவிட  அனுமதியும் கிடைத்து, குடியுரிமையும் அவுஸ்திரேலியா கடவுச்சீட்டும்  கிடைத்துவிட்டது.
எங்கள் தாயகம்  ஶ்ரீலங்கா திரும்பிச்சென்று வாழத்தக்கதாக இல்லை என்று சொல்லி இங்கு நிரந்தர வதிவிட உரிமையும் குடியுரிமையும் பெற்றவர்கள், தற்பொழுது  இரட்டைக்குடியுரிமையும் பெற்றுவிட்டனர்.
எனினும்  படகுகளில் வந்து இறங்கிய ஆயிரக்கணக்கானோர் இன்னமும் அகதிகளாக வாழ்கின்றனர். அகதிகளின்  அவலக் கதை இன்னமும்  முற்றுப்பெறவில்லை.
ஐரோப்பிய நாடுகளிலும் இந்த நிலைதான் நீடிக்கிறது.
அவ்வாறு  அமெரிக்காவில்  சந்தர்ப்பவசமாக சிக்கிய ஒரு ஈழ அகதியின் வாழ்வுக்கோலம்தான்  கனடாவில் வதியும் வ.ந. கிரிதரனின் குடிவரவாளன் நாவலின் கதை. இதனை படித்தபோது இது எங்களின் கதையாகவே  இருந்தமையால், எமது அவுஸ்திரேலியா வாழ்வின் தொடக்கப்பகுதியும்  நினைவுக்கு  வந்துவிட்டது.
" அகதியாகத்தான்  வந்தோம் "  எனச்சொல்வதற்கும் பலர் கூச்சப்படும் இக்காலத்தில், அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா மற்றும் அய்ரோப்பிய  நாடுகளுக்குச்சென்ற அனைவரிடமும்  நான் மேற்சொன்ன  எனது கதையைப்போன்று  ஏராளமான கதைகள் இருக்கும்.
அகதி அந்தஸ்துக்கோரிக்கைக்காக விண்ணப்பிக்கும்பொழுது தயாரிக்கப்படும் கதைகளுக்கும் -- அகதியாக வாழ்ந்து அவலப்பட்ட ஒரு எழுத்தாளன் படைக்கும்  கதைகளுக்கும்  வேறுபாடுகள்  இருக்கின்றன.
கனடாவில் வதியும் கிரிதரன், சிறுகதை, நாவல், ஆய்வு, கவிதை, பத்தி, விமர்சனம் முதலான பல்துறைகளில் அயற்சியின்றி எழுதிவருபவர். பதிவுகள் என்னும் கலை, கல்வி, இலக்கியம், அறிவியல் சார்ந்த இணையத்தளத்தை பலவருடங்களாக தங்கு தடையின்றி நடத்திவருபவர். என்போன்ற பலருக்கு களம் வழங்கிவருபவர்.
குடிவரவாளனில் வரும் நாயகன் இளங்கோ அவரேதான் என்பதை புரிந்துகொள்வது  இலகுவானது. இந்த நாயகனின் பொழுதுபோக்கு சிந்திப்பது. செலவில்லாத பொழுதுபோக்கு.
புகலிடவாழ்வில்  செலவுக்கு வழிசொல்லும் பொழுதுபோக்குகள் பல இருக்கும்  நிலையில்,  இளங்கோ தனிமையில் சிந்திக்கிறார். நேரம் கிடைக்கும் தருணங்களில் நாட்குறிப்பு எழுதுகிறார்.
அதில் அவருக்கு கவிதையும் பத்திகளும் வருகின்றன. தனிமையின் துயரைப்போக்கிக்கொள்ளும் பொழுதுபோக்காகவே  சிந்திக்கிறார் - எழுதுகிறார்.
சொந்த பந்தங்கள் இல்லாத அந்நியச்சூழலில்  எட்டயபுரத்து மகாகவியும் -- அளவெட்டி  மகாகவியும் பக்கத்துணையாக இருக்கிறார்கள்.
புகலிடத்தில் எதிர்கொள்ளும் சவால்களில் மிக முக்கியமானது சீவியத்திற்கான பொருளாதார பலம். அந்தப்பலத்தை நாடி பலவீனங்களையெல்லாம் மறைத்துக்கொண்டு வேலை தேடும் படலம்.
கிடைக்கும் வேலைகளும் நிரந்தரமற்று, வேலை தருபவர்களின் ஏமாற்றுதலுக்கு மத்தியில் ஊர் கவலைகளையும் சுமந்து, நல்ல பேச்சுத்துணைக்கும் வழியற்று -- ஏன் வந்தோம்... இனி எவ்வாறு வாழப்போகிறோம்  முதலான ஏக்கங்களுடன் காலத்தைக்கடத்தி கற்பனை உலகில் சஞ்சரித்து ஏகாந்திகளாக அலைந்துழலும் அகதிகளின் வாழ்க்கைச்சித்திரம்தான் கிரிதரனின் குடிவரவாளன்.
இந்த நாவல் பிறந்து வளர்ந்த கதையையும் இந்நூலில் அவர் இவ்வாறு பதிவுசெய்துள்ளார்:
" இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப்புகலிடம் நாடிப்புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைப்பட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா 'எயார் லைன்ஸ் ' எம்மை ஏற்றிச்செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்துவைத்து, சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள். "
இந்த முன்கதைச்சுருக்கம் இல்லையென்றால் இந்த நாவலின் கதை வேறு ஒருவரது என்ற முன்தீர்மானத்திற்கு வந்திருப்போம்.
தமது தடுப்பு முகாம் வாழ்க்கை குறித்து அமெரிக்கா என்ற நாவலையும் கிரிதரன் ஏற்கனவே எழுதியிருப்பவர். அதன் தொடர்ச்சியாக ' அமெரிக்கா 2' என்ற நாவலையும் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் எழுதியிருப்பவர்.  அமெரிக்கா: சுவர்களுக்கப்பால் என்ற தலைப்பிலும் மீள் பிரசுரம் கண்டுள்ளது. அந்த நாவலே தற்பொழுது குடிவரவாளன் என்னும் பெயரில் எமக்கு படிக்கக்கிடைத்திருக்கிறது.
இவ்வாறு ஒரு நாவல் காலத்துக்குக்காலம் பெயரில் மாற்றம்பெறுவது புதிய செய்தியல்ல.
தினமணிக்கதிரில் வெளியான ஜெயகாந்தனின் காலங்கள் மாறும் தொடர்கதைதான் பின்னாளில் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற பெயரில் வெளியாகி,  அதே பெயரில் திரைப்படமாகியது. அவரது கைவிலங்கு, காவல்தெய்வமாகியது.
இந்நாவலின் நாயகன் இளங்கோ உடல் உழைப்பையும் அதேசமயம் தன்னம்பிக்கையையும் தேடுகிறார். தேடலே அவரது வாழ்க்கையாகிவிடுகிறது.
தென்னிலங்கையில் தர்மிஷ்டரின் பதவிக்காலத்தில் 1983 இல் அரங்கேற்றப்பட்ட கலவரத்தில் அகதியாகிப்போன இளைஞனின் கதை,  அந்தப்பின்னணியிலிருந்து தொடங்குகிறது.
குறிப்பிட்ட  கலவரப்பகுதியின் சித்திரிப்பு ஆவணப்பதிவாகியிருக்கிறது. ரோல்ஸ்ரோயின் போரும் சமாதானமும் என்ற பெரிய நாவலும் இத்தகைய ஆவணப்பதிவுப்போக்கினையே  கொண்டிருந்தது.
அதனால் வாசகருக்கு சில சமயங்களில் அயற்சி வருவது தவிர்க்கமுடியாதிருந்தாலும், ஈழத்து அகதியின் அந்நியப்புலப்பெயர்வு அவலத்தை பதிவுசெய்வதற்கு  இத்தகைய ஆவணப்படிமமும் தேவைப்படுகிறது.
அமெரிக்க குடிவரவு அதிகாரியின் முன்னால் தன்வசம் வைத்திருந்த ஆவணங்களையும் தமிழர்கள் இலங்கையின் தலைநகரில் தாக்கப்பட்ட  காட்சியை  சித்திரிக்கும் பத்திரிகைப் படங்களையும் இளங்கோ காண்பிக்கின்றார். நெஞ்சை உறையவைக்கும் படங்களில் ஒன்றில்  கொழும்பு புதுக்கடைப்பிரதேசத்தில் ஒரு தமிழரை நிர்வாணமாக்கி  தாக்கும் காட்சி. புதுக்கடை பிரதேசம் அன்றைய கலவர காலத்தில் பிரதமராக பதவியிலிருந்த பிரேமதாசவின் தொகுதிக்குள் வருகிறது. உலகப்பிரசித்தமான படம்.  இன்றும் 1983 கலவரத்தை  நினைவுகூரும் பதிவுகள் ஊடகங்களில் வரும்பொழுது இடம்பெறும்  படம்.
வியட்நாம் யுத்தம் முடிவுக்கு வருவதற்கு ஒரு சிறுமியின் (கிம்புக்கின்) படம் வெளியானதுபோன்று,  அண்டைய இந்தியா உடனடியாக தலையிடுவதற்கு  வழிகோலியதற்கும் அந்தப்படம் இந்திராகாந்திக்கு பயன்பட்டிருக்கலாம்.
புலம்பெயர்ந்த  ஒவ்வொரு அகதியும் ( எந்த நாட்டிலிருந்து வந்திருந்தாலும்) தஞ்சம்கோருவதற்கு அத்தகைய படங்களும் செய்தி நறுக்குகளும்தான் உற்ற துணை.
புகலிடத்தில் வாழும் ஒவ்வொரு ஈழ அகதியும் இந்நாவலின் இந்தக்காட்சிகளை கடந்துதான் வந்திருப்பார்கள். அகதிகளை விசாரிக்கும்  குடிவரவு அதிகாரிகள் விசாரணைகளில் பழுத்த அனுபவம்  மிக்கவர்கள்.
யாழ். கோட்டையிலிருந்து ஏவப்பட்ட எறிகணை வீச்சால் சங்கானையிலிருந்த வீடும் சேதமாகி,  குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டார்கள்  எனச்சொன்னால், அதுவரையில் அமைதியாக இருக்கும் அதிகாரி, மேசை லாச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வரைபடத்தை  எடுத்துக்காண்பித்து, எங்கே இருக்கிறது யாழ். கோட்டை...?, எங்கே  இருந்தது உனது சங்கானை வீடு...? எனக்கேட்பார்.
விசாரணைக்குச்செல்லும் ஈழ அகதி சாதுரியமாக பதில் சொல்லத்தெரிந்திருக்கவேண்டும். இத்தகைய அனுபவங்களை பலர் கடந்திருப்பார்கள்.
கிரிதரனின்  இந்நாவலில் அகதி விசாரணைப்பகுதிகளில் வரும் அதிகாரிகள்  சுவாரஸ்யமானவர்களாக  இருக்கிறார்கள். அவர்களின் கேள்விகள் கூர்மையானவை.
தடுப்பு முகாம் வாழ்வு இருண்ட  யுகம் என்றால், அங்கிருந்து விடுதலையாகியதும் வீடு தேடுவதும்  வேலை தேடுவதும்  மற்றும் ஒரு இருள் கவிந்த உலகம். வாழ்வதற்காக ஏதாவது ஒரு வேலையும் தேடிக்கொண்டு, சமூகக்  காப்புறுதி அட்டைக்காக அலுவலகங்களுக்கு அலைந்துலைந்து, கிடைக்கும் ஓய்வில் கனவுலகில் சஞ்சரித்து பெருமூச்சுக்களையே வரவாக்கிக்கொண்டு அந்த அகதி தனது அடையாளத்தை தக்கவைக்க முயல்கிறார்.
ஆயினும்,  அவருக்கு அந்த நியூயோர்க் வாழ்வில் பல நண்பர்கள் கிடைக்கிறார்கள். அவர்களின்  குணாதிசயம் ஆசிரியர் கூற்றாகாமல், அவர்தம் பேச்சு நடைமுறைகளின் ஊடாகவே வெளிப்படுகிறது.
சுதந்திரச்சிலை அமைந்திருக்கும் அந்த மாநகரில் ஒரு அகதியின் அகச்சுதந்திரமும் புறச்சுதந்திரமும்  கேள்விக்குள்ளாகும் காட்சிகளின் சித்திரிப்பு   நாவலின் நாயகனின்  செலவில்லாத பொழுதுபோக்கான சிந்தனையின் வெளிப்பாட்டுக்கு பதச்சோறு.
மூளை தீவிரமாக சிந்திக்கிறது, உடல் கடினமாக உழைக்கிறது. உணவகத்தில் கிட்டார் அடித்து, மழைக்காலத்தில் வீதியோரத்தில் நின்று குடை வியாபாரம் செய்து, நடைபாதை வர்த்தகத்திலும் ஈடுபட்டு, கடை விளம்பர பிரசுரங்கள் விநியோகித்து, உணவு விடுதியிலிருந்து உணவு விநியோகமும் செய்து,  ஓடி ஓடி உழைத்து ஊருக்குப்பணம் அனுப்பும் ஈழ அகதியின் கதை  இந்நாவலில் உருக்கமாகச்சொல்லப்படுகிறது.
வாராந்தம்  குறைந்தது ஐம்பது டொலர்களாவது சேமித்தால்தான் ஊருக்கு  அனுப்பமுடியும் என்பதனால்  ஒரு  தொழில் இல்லாமல்போனால்  மற்றும் ஒரு தொழிலைத்தேடிக்கொள்ளவேண்டிய  அவதிக்குள்ளும் நாயகன் நாட்குறிப்பு  எழுதுவதை  நிறுத்திவிடவில்லை.
இந்நாவலின் படைப்பாளர் நாட்குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவராக இருந்திருக்கவேண்டும்  என்பதையும் நாவலின் காட்சிகள் புலப்படுத்துகின்றன.
இளங்கோ என்ற பாத்திரத்திற்கு ஆண்களும் பெண்களுமாக சிலர் சிநேகிதமாகின்றனர்.
அவர்களின் பலம் -  பலவீனம், நிறை குறைகளெல்லாம் நாவலின் பக்கங்களில் விரவிக்கிடக்கிறது.
குடிவரவாளன் ஒரு ஈழ அகதியின் தப்பித்தல் வாழ்வின் அவலத்தையே பேசுகிறது. தாயகத்திலிருந்து தப்பித்தல், அமெரிக்காவில் தடுப்பு முகாமிலிருந்து தப்பித்தல், குடிவரவு அதிகாரிகளிடமிருந்து தஞ்சக் கோரிக்கைக்கான தப்பித்தல், வேலைகளில் மாறி மாறி புதிய வேலைகளுக்கு தப்பித்தல் இறுதியில், எங்கு செல்வதற்காக தாயகத்திலிருந்து புறப்பட்டாரோ அதே கனடா தேசத்திற்கு செல்வதற்கான பஸ் பயணத்தப்பித்தல்.
குடிவரவாளன் மற்றும்  ஒரு  நாவலுக்கான பாதையைத்தான் திறந்திருக்கிறதேயன்றி,  முற்றுப்பெறவில்லை.  அகதியாக புலம்பெயர்ந்த ஒவ்வொரு ஈழ அகதியின் புகலிடவாழ்க்கைக்கும்  நெருக்கமான கதைதான் குடிவரவாளன்.
அதனால் இதனைப்படிக்கும் புகலிட தமிழ் வாசகர்கள் தங்களையும் இந்நாவலில் இனம் காணமுடியும்.  தேடிக்கொள்ளமுடியும். அவர்களின் அடையாளம் அழுத்தமாக பதிவாகியிருக்கிறது இந்தப்படைப்பில்.
தனது வாழ்வின் தரிசனத்தை பதிவுசெய்திருக்கும் கிரிதரனுக்கு எமது வாழ்த்துக்கள். இந்நாவலை தமிழ்நாடு ஓவியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
---0---




No comments: