உயர்வினையே உணர்ந்திடலாம் !

                                 
      
       ( எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) 

        உலகத்தில் பிறந்திடுதல் உயர்வான நிலயென்று 
        உம்பர்களே எண்ணுவதாய் உரைத்திடுவார் வாசகரும் 
        உலகத்தில் பிறந்தாரோ பிறப்பதனை உணராமல் 
        பித்தேறி பலசெய்து  பேதலித்துநிற்கின்றார் !

        மானிடராய் பிறந்துவிடல் மாநிலத்தில் பெருப்பயனே
        ஆறறிவை பெற்றுநிற்கும் அருமையவர்க் அமைந்ததுவே 
        தாறுமாறாய் நடக்காமல் தடம்புரண்டு போகாமல்
        நேரான வழிசெல்ல நிற்கிறதே அறிவாகும் !

        அறிவுபெற்ற மனிதனிடம் அசிங்கம்பல இருக்கிறது
        ஐந்தறிவு ஜீவன்கூட அசிங்கம்பல செய்வதில்லை 
        பேரறிவு பெற்றுவிட்டோம் எனவெண்ணி நின்றுநிதம்
         பிரியமில்லாக் காரியங்கள் பெருமளவில் செய்கின்றார் !

        வாழ்கின்ற வேளையிலே மற்றவர்க்கு இடைஞ்சலின்றி 
        வாழ்க்கையினை அமைத்துவிட்டால் வாழ்வினுக்கே வளமாகும்
        வாழ்க்கைதனை வீழ்த்துதற்கு வழியாக வாழ்ந்திடுவார் 
        வாழ்க்கையிலே பிறப்பதனை வரட்சியாய் ஆக்கிநிற்பார் !

        பூமிதனில் பிறப்பார்கள் சாமியாய் மாறுவதும்
        பூனிதனில் பிறப்பார்கள் சாத்தானாய் மாறுவதும் 
        யார்கொடுத்த வரமென்று நாமொருக்கால் சிந்திக்கின் 
        அவரவரின் மனவெழுச்சிதான் அதற்குக் காரணமாம் !


        யேசுநபி காந்திமகான் நிறைவுடைய ரமணரிஷி 
        பூமியிலே பிறப்பதனை புனிதமாய் ஆக்கிநின்றார் 
        பாவிகளை ரட்சித்தார் பலவற்றை சொல்லிநின்றார்
        ஆர்வமுடன் கேட்டவர்கள் அறிவுபெற்று விழிப்படைந்தார் !

        வேதமொடு உபநிடதம் விதம்விதமாய்க் கற்றாலும்
        பாதகமாம் எண்ணமதை பதுக்கியே வைத்திருப்பார் 
        பூதலத்தில் என்னாளும் பொழுதையே அழிக்கின்றார்
        பாதகத்தை ஒழித்துவிடின் பயனாகும் இப்பிறவி !

       பிறக்கின்றார் யாவருமே இறப்பதனைக் கண்டிடுவார்
       இருகின்ற வாழ்க்கையிலே எல்லோர்க்கும் உதவிடுவோம்
       பிறவியிலே மற்றவரை பேணிநின்று வாழ்ந்துவிடின்
       பிறப்பெடுத்த பெரும்பயனைப் பெற்றிடுவோம் யாவருமே !

       பார்க்கின்றோம் சிரிக்கின்றோம் பலவற்றைப் பேசுகிறோம்
       உண்கின்றோம் உடுக்கின்றோம் உல்லாசம் காணுகிறோம்
       ஊனமே இல்லாமல் வாழுகின்றோம் எனநினைத்தால்
       உண்மையிலே பிறப்பதனின் உயர்வினையே உணர்ந்திடலாம் !


image1.PNG



No comments: