முன்னாள் போராளிகளுக்கு விசேட மருத்துவ பரிசோதனை
பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் : தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம் (காணொளி இணைப்பு)
இலங்கையில் காணாமல்போனோர் குறித்த விசேட உபகுழு கூட்டம் ஜெனிவாவில்
இலங்கை தொடர்பில் எதனையும் குறிப்பிடாத செய்ட் அல் ஹூசேன்
புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்
24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.!
இலங்கை அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்
முன்னாள் போராளிகளுக்கு விசேட மருத்துவ பரிசோதனை
12/09/2016 வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்படுகின்ற முன்னாள் போராளிகளுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகள் எதிர்வரும் வியாழன்(15) மற்றும் வெள்ளிக்கிழமைகளில்(16) முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில் வியாழக்கிழமை மு.ப 8 மணிக்கு முல்லைத்தீவிலும் வெள்ளிக்கிழமையன்று பி.ப. 1 மணிக்கு வவுனியாவிலும், மு.ப. 8 மணிக்கு மன்னாரிலும், பி.ப. 4 மணிக்கு கிளிநொச்சியிலும் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாண வைத்தியசாலையில் இவ்வாரம் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறமாட்டாது.
இதேவேளை எதிர்காலத்தில் வாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மேற்படி மருத்துவ பரிசோதனைகள் நடைபெறவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் : தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம் (காணொளி இணைப்பு)
12/09/2016 பம்பலப்பிட்டி குடியிருப்பிலிருந்து வெளியேறுமாறு எமக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது. எவ்விதமான கரிசனையுமற்ற வகையில் 64 மாடிகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்பில் எம்மை அடைத்து துன்புறுத்தவே அரசாங்கம் விரும்புகின்றது என்று பம்பலப்பிட்டி தொடர்மாடி குடியிருப்பு மக்கள் விசனம் தெரிவித்தனர்.
இந்தக் குடியிருப்பு தொகுதியை வர்த்தக நடவடிக்கைககளுக்காக பயன்படுத்திக்கொண்டு முதியோரையும் சிறுவர்களையும் அநாதரவாகவே பலரும் முயற்சிக்கின்றனர். குறித்த விவகாரத்தில் உடனடியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலையிட்டு பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் எனவும் அங்குள்ள மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
குறித்த விடயம் தொடர்பில் பம்பலப் பிட்டி குடியிருப்பு நலன்புரி சங்கத் தலைவர் என்.ரகுநந்தன், பம்பலப்பிட்டியில் வசிக்கின்ற சுமார் 300 குடும்பங்கள் 10.5 ஏக்கர் நிலப்பரப்பில் பல தொகுதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
குறித்த மக்களை தற்போது புதிய வேலைத்திட்டத்தின்கீழ் ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்குள் 64 மாடிகளை கொண்ட தொடர்மாடி குடியிருப்புக்குள் முடக்க வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
இது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். இரு தலைமுறைகளுக்கு மேற்பட்ட காலம் வாழ்ந்த மக்களை எவ்விதமான தூரநோக்குமின்றி ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்குள் முடக்க நினைப்பது மிகவும் வேதனையான விடயமாகும்.
மேலும் புதிய வீடமைப்புத் திட்டம் மூலமாக எங்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் பூர்த்தி செய்யப்படாது என்பது எமக்குத் தெரியும். அவ்வாறிருக்கும் போது இத்திட்டத்தை ஆரம் பிப்பதற்கு ஏன் இவ்வாறு பிரயத்தனங்களை மேற்கொள்கின்றார்கள் என்பது தெரியாமலுள்ளது.
கொழும்பு மாநகர சபை மற்றும் தேசிய வீடமைப்பு அதிகாரசபை போன்றவற்றின் ஊடாக அடிக்கடி அறிவித்தல்களும் அனுப்பப்படுகின்றனர். இவை எல்லாம் சட்டத்துக்கு முரணானவையாகும். குறித்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பல அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொண்டும் எவையும் பயனளிக்கவில்லை. இந்த நிலம் எங்களுக்குச் சொந்தமானது.
எங்களது உரித்தின்றி எங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. குறித்த புதிய வீடமைப்புத் திட்டம் மூலம் சுமார் 1098க்கும் மேற்பட்ட மக்கள் பெரும் பாதிப்படைவர். முழு மையான எங்களது அடையாளமாக உள்ள இந்நிலத்தை சூறையாட முயற்சிக்க வேண்டாம்.
சிறுவர்களும் முதியோருமே அதிகமாக இக்குடியிருப்பில் உள்ளனர். அவர்களால் புதிய குடியிருப்பில் வாழ்வதென்பது மிகவும் கடினமாகும். இது மனிதாபிமானமற்ற செயற்பாடாகும். இந்த நிலப்பரப்பில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிகின்றோம். அப்படியாயின் அதற்கு ஏன் எங்களது குடியிருப்பை தேர்ந்தெடுத்தார்கள்? இவற்றுக்கெல்லாம் கூடிய விரைவில் அரசாங்கம் பதிலளிக்க வேண்டும் என்றார். நன்றி வீரகேசரி
இலங்கையில் காணாமல்போனோர் குறித்த விசேட உபகுழு கூட்டம் ஜெனிவாவில்
13/09/2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை தொடர்பில் நான்கு உபகுழுக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.
அபிவிருத்தி மற்றும் சமூக வலுவூட்டல் நிறுவனம் பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் பசுமை தாயகம் அமைப்பு மற்றும் அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கம் ஆகிய அமைப்புக்களே இலங்கை தொடர்பான உபகுழுக் கூட்டங்களை ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தில் நடத்தவுள்ளன.
இலங்கையில் காணாமல் போனோர் குறித்த விவகாரம் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஜெனிவா மனித உரிமை பேரவை வளாகத்தின் 27 ஆவது அறையில் உபகுழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அனைத்து விதமான அநீதிகளுக்கும் எதிரான சர்வதேச இயக்கம் என்ற அமைப்பு நடத்தவுள்ள இந்த உபகுழுக் கூட்டத்தில் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் முக்கியஸ்தர்கள் இலங்கையிலிருந்து ஜெனிவா கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் இராஜதந்திரிகள் என பலர் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த உபகுழுக் கூட்டத்தில் இலங்கையில் காணாமல் போனோர் குறித்த நிலைமைகள் மற்றும் அதற்கான தீர்வு விவகாரம் குறித்து கலந்துரையாடப்படும். இதில் தமிழர் தரப்பு பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர். குறிப்பாக வட மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் இந்த உபகுழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரி இலங்கை தொடர்பில் எதனையும் குறிப்பிடாத செய்ட் அல் ஹூசேன்
13/09/2016 ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமான நிலையில் ஆரம்ப உரையை நிகழ்த்திய மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசேன் இலங்கை குறித்து எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை.
இலங்கைக்கு கடந்த வருடம் விஜயம் செய்திருந்த பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு தமது அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையிலும் அதற்கு இலங்கை பதிலளித்துள் சூழலிலும் அது தொடர்பில் எந்தவொரு விடயத்தையும் செய்ட் அல் ஹூசேன் இன்று குறிப்பிடவில்லை.
இன்றைய உரையில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த செய்ட் அல் ஹூசேன் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். எனினும் இலங்கை தொடர்பில் ஹூசேன் எதனையும் பிரஸ்தாபிக்கவில்லை. நன்றி வீரகேசரி
புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது கிளர்ச்சிக்கு பிள்ளைகளை பயன்படுத்தவேண்டாம்
13/09/2016 உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே மேற்கொள்ளப்பட்டது. இந்நியமனத்தில் எவ்விதமான அரசியல் தலையீடுகளும் இல்லை என தென்னிந்திய திருச்சபையின் பேராயர் டானியல் எஸ்.தியாகராஜா தெரிவித்தார்.
உடுவில் மகளிர் கல்லூரி புதிய அதிபர் நியமனம் தொடர்பில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று மாலை வட்டுக்கோட்டை தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பேராயர் அவர் மேலும் தெரிவிக்கையில்,
உடுவில் மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற புதிய அதிபர் நியமனம் சட்டரீதியாகவே இடம்பெற்றது. மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும். தவறான புரிந்துகொள்ளுதல், உண்மையை மறைத்தல், உண்மையை மூடுதல் காரணமாகவே இத்தகைய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
192 வருட பாரம்பரிய மிக்க கல்லூரியில் சுமார் ஆயிரத்து 300 மாணவிகள் கல்வி கற்று வரும் நிலையில் 20, 30 பிள்ளைகளை வைத்துக்கொண்டு மூன்றாம் தரப்பினரால் எங்களுடைய முயற்சிகளைக் கேலிக்கூத்தாக்குவதும் இடர் விளைவிப்பதும் வருந்தத்தக்க விடயமாகும்.
இம்மாதம் 7ஆம் திகதி புதிய அதிபர் திருமதி ஜெபரட்ணத்திற்கு நியமன ஆராதனை வழிபாடு நடைபெற்றது. இதன்போது மூன்று அல்லது நான்கு ஆசிரியர்களைத் தவிர ஏனைய ஆசிரியர்கள், தென்னிந்திய திருச்சபையின் செயற்குழு உறுப்பினர்கள், ஆளுநர் சபை உறுப்பினர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் இதர நிறுவனங்களின் அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
எனவே பிள்ளைகளை நீங்கள் படிக்க அனுப்புங்கள். பிள்ளைகளை நீங்கள் உங்களுடைய கிளர்ச்சிகளுக்காக பயன்படுத்தாதீர்கள். இங்கே பிள்ளைகள் ஏதாவது குறைகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு எவ்விதமான தண்டனையோ கண்டிப்புக்களோ இருக்கமாட்டாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அமைதிக்கு யாராவது பங்கம் விளைவித்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உடுவில் மகளிர் கல்லூரி பிரச்சினையானது ஒரு உள்வீட்டுப் பிரச்சினை. இதில் வெ ளியார் தலையீடு செய்து அதை பூதாகரமாக வெளிப்படுத்தி பிள்ளைகளை தெருவிலே வைத்து பிள்ளைகளுடைய நல் வாழ்க்கையை குலைத்திருப்பது வேதனைக்குரியது. அது தவிர எங்களுடைய தென்னிந்திய திருச்சபையைச் சேராத குருமார்களுக்கு இதிலே எந்தவிதமான தொடர்பும் இல்லை. உரித்துமில்லை. அவர்கள் தான் இதனை முன்னின்று நடத்துகிறார்கள். அவர்களிலே ஒரு குருவானவர் அரசாங்க பாடசாலையிலே கல்வி கற்பிக்கின்ற ஒரு ஆசிரியராவார்.
எனவே மாணவ சமூகம் மற்றும் பெற்றோர் சமூகத்தை அன்போடு கேட்டுக் கொள்வது என்னவெனில் எமக்கு ஒத்துழைப்புத்தாருங்கள். புதிய அதிபருடைய வழிகாட்டலின் கீழ் பிள்ளைகள் வளப்படுத்தப்பட இடம்கொடுங்கள்.
இதேவேளை இன்று (நேற்று) காலையிலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் என்னைச் சந்தித்து கலந்துரையாடினார்கள். இவர்களுடன் எமது செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது குறித்த பெற்றோர்கள் மூன்று கோரிக்கைகளை விடுத்தார்கள்.
முதலாவதாக பழைய அதிபரை இரண்டு வருடங்களுக்கு வைத்திருங்கள் என்று கேட்டார்கள். இரண்டாவது பிள்ளைகளுக்கு ஏதாவது பழிவாங்கல்கள் இருக்கக்கூடாது என்று கூறினார்கள். மூன்றாவது ஆசிரியர்கள் யாராவது இதில் தவறாக சம்பந்தப்பட்டிருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
இதற்கு தெளிவாக அவர்களுக்குக்கு நான் பதிலளித்தேன். புதிய அதிபர் நியமிக்கப்பட்டு விட்டார். பொறுப்பெடுத்துவிட்டார். பழைய அதிபர் இழைப்பாறி விட்டார். ஆகவே முதலாவது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படமுடியாது என்று கூறினேன். . அவர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவது மூன்றாவது கோரிக்கைகள் நிச்சயமாக கவனத்தில் எடுப்பதாக உறுதியளித்தேன்.
அதுமட்டுமன்றி பெற்றோரின் பங்களிப்பை வைத்து கல்லூரியினை நடாத்துவதற்குரிய திட்டங்களை உருவாக்குவீர்களா எனக் கேட்டபோது இதற்கு மனப்பூர்வமான சம்மதத்தை நான் கொடுத்திருக்கிறேன். கல்லூரி தொடர்பான தவறுகள் பிரச்சினைகள் இருந்தால் அதனுடைய முகாமையாளர் இருக்கின்றார். அதற்குமேல் தலைவராகிய நான் இருக்கின்றேன். என்னுடைய கவனத்திற்கு எப்பொழுதும் கொண்டு வரலாம். அதற்கேற்ற நடவடிக்கை எடுத்து நல்ல முறையிலே கல்லூரி நடைபெறுவதற்கு ஒழுங்கு செய்வோம் எனத் தெளிவாகக் கூறிக் கொள்கிறேன்.
இது தென்னிந்திய திருச்சபைப் பாடசாலை. தென்னிந்திய திருச்சபையின் பேராயருக்கே இறுதியான முடிவு எடுக்க முடியும். இப்பொழுது பேராயர் நான். எனக்கு முன்பிருந்த பேராயர்களும் கல்லூரிக்கு அதிபர்களை நியமித்தார்கள். தற்போது என்னுடைய பொறுப்பு. நான் நியமித்திருக்கிறேன் என்றார். நேற்று மாலை 5 மணியளவில் புதிய அதிபரிடம் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் முன்னாள் அதிபர் ஒப்படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று வழமைபோல் பாடசாலை நடைபெறும். நன்றி வீரகேசரி
24 வருடங்களின் பின்னர் மீன்பிடிக்க அனுமதி.!
14/09/2016 கிளிநொச்சி - இரணைதீவில் 24 வருடங்களின் பின்னர் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடற்படையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இரணைதீவு மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக, நேற்று மாலை முதல் மீனவர்கள் அங்கு தங்கியிருந்து தொழிலில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாக 1992 ஆம் ஆண்டின் பின்னர் இரணைத்தீவில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
இலங்கை அகதிகள் 90 பேர் நாடு திரும்பினர்
14/09/2016 இந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 90 பேர் இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளனர்.
இதில் 45 பெண்கள் உட்பட 90 பேர் இலங்கை வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இலங்கை வந்துள்ளவர்கள்யாழ்பாணம், அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த 90 பேரையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment