யுகத்துக்கு ஒருவன் ! வைரமுத்து

.

ஒரு மகாகவியின் உடலென்ற பொருளைத் தீ தின்று தொண்ணூற்றைந்தாண்டுகள் தொலைந்தழிந்தன. காலமென்ற கானற்
கடலில் கலந்து கழிந்தன வருஷநதிகள். அவனது சமகாலத் தோழர்களும் தொண்டர்களும் தலைவர்களும் ஐம்பூதங்களோடு ஐக்கியமாகிப் போயினர். ஆயின், அவன் கவிதையாகிய உயிர்ப்பொருளை அழிப்பதற்கு ஐம்பூதங்களால் ஆகாது. காரணம், பாரதி கவிதைகள் காலத்தின் நித்தியங்கள்; கற்பனையைச் சற்றே தொட்டுக்கொண்ட சத்தியங்கள். அவை உடல்சார்ந்து வாழவில்லை; உண்மை சார்ந்து வாழ்கின்றன.

ஒரு நற்கவிதை என்பது பழையது புதியது என்ற காலப்பரிமாணம் கடந்தது. காற்று பழையதாயினும் உள்ளிழுக்கும் போதெல்லாம் உயிராற்றல் ஊறுமாறு போல - சூரியன் பழையதாயினும் அதன் கிரண விரல்கள் சென்றுக் கிச்சுகிச்சு மூட்டும் போதெல்லாம் கமலமொட்டுகள் கட்டவிழுமாறு போல - எழுதி நூறாண்டுகள் கடந்த பின்னும் அக்கினிக் கொழுந்துகளின் ஆவேசத்தோடு துடிதுடிக்கின்றன பாரதி பாடல்கள்.


வள்ளுவன் போன்ற உலகப் பொதுமையோ - இளங்கோ போன்ற காப்பியப் பெருமையோ - கம்பன் போன்ற நாடகச் செழுமையோ பாரதிக்கு வாய்க்கவில்லையெனினும் பாரதியை அவர்தம் வரிசையில் வைத்து அழகுபார்க்கக் காலம் தயங்க வில்லையே! ஏன்?

மொழியால் தன் தேவையை ஈடு செய்துகொள்கிறவன் கவி. மொழியால் காலத்தின் தேவையை ஈடுசெய்கிறவன் மகாகவி. பாரதி மகாகவி. பாரதி பெற்றெடுக்கப்பட்டபோது காலத்தின் வெற்றிடம் இரண்டாக இருந்தது. ஒன்று மொழி வெற்றிடம்; இன்னொன்று சமூக வெற்றிடம். அந்த இரண்டு வெற்றிடங்களையும் தனது முப்பத்தொன்பது வயதை மொத்தமாய் உருக்கி ஊற்றி முற்றும் நிறைக்க முயன்ற கவிஞன் என்ற வரலாற்று வாய்ப்பு தமிழில் முன்னொரு கவிஞனுக்குக் கிட்டவில்லையென்பது உரித்துவைத்த உண்மை.

பாரதி பிறந்த காலவெளியில் காமப் படுக்கையில் கவலைக்கிடமாய்க் கிடந்தது கவிதை. சிற்றிலக்கியங்களில் வழிந்த சீழ் - சிலேடைகளில் தெறித்த இந்திரியம் - கட்டளைக் கலித்துறைகளில் வழிந்த கட்டில் வேர்வை - கடவுட்பாடல்களில் கசிந்த கண்ணீர் என்று நனைந்து நனைந்து நைந்து கிடந்தது நந்தமிழ்.""காவடிச் சிந்தும் கலித்துறையும் தெம்மாங்கும் - சித்திரக் கவியும் எளிமையான கும்மியும் - புலமை திமிர்ந்த தலபுராண வீச்சும் - வறட்டுத் தத்துவ வாதப்பிரதிவாத பாணியும் - வானளாவ எதுகைமோனைகளை வீசிப்பந்தாடிய வண்ணங்களும் - கடவுட்பாட்டும் காமவெறிச் சேற்றை வாரியிறைத்த சொற் சிலம்பங்களும் ஒன்றாகக் கைகோத்து உலாவிய ஜமீன் மாளிகையின் விசித்திர நிழலில் பாரதியின் இளமைப்பருவம் கழிந்தது''
என்று "ஒரு நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை' நூலில் பேராசிரியர் அ. சீனிவாச ராகவன் அளந்து சொல்லியிருப்பதை விதந்து சொல்லியிருப்பதாகக் கருதிவிட முடியாது.

இப்படி இருண்டு கிடந்த மொழிக்கு சோதிமிக்க நவகவிதை வேண்டுமென்று சிந்திக்கிறான் சுப்பைய பாரதி.

கவிதை சோதிமிக்கதாய் சுடர் கொண்டதாய்த் திகழ வேண்டுமெனில் அதன் சுவையும் பொருளும் வளமும் சொல்லும் புத்தம் புதிதாய்த் துலங்க வேண்டுமென்று துணிகிறான்.

பொருள் மட்டும் புதிதாய் இருப்பின், அது சுவை - பொருள் - சொல் மூன்றையும் இழுத்துக்கொண்டோடி வந்துவிடும் என்று அவன் நம்பியிருக்கக் கூடும். ஆயின் எங்கிருந்து பெறுவது பொருளை?
அஃதாவது பாட்டின் உள்ளடக்கத்தை - உயிர்ப்பை. அவன் கண்முன் விரிந்த சமூகம் "என்னிலிருந்து எடுத்துக்கொள் மகனே' என்று கந்தல் விரித்து வரவேற்கிறது.

அவன் கவிதை வெளியைப் புரிந்துகொள்ள அவன் காலவெளியை அறிந்துகொள்வது அவசியம்.

சிற்றரசுகளாய் - பாளையப்பட்டுகளாய் - சமஸ்தானங்களாய் - ஜமீன்களாய்க் கிழிந்துகிடந்த தேசத்தைத் தன் வாள் முனையில் தைக்கிறான் வெள்ளைக்காரன். அது நிர்வாக வசதிக்காக.

சமூகத்தைத் துண்டுதுண்டாய்ச் சதையாடிய நால் வருணங்களை - மதமாறுபாடுகளை - மொழிப் பிளவுகளை - சாதிப் பிரிவுகளை - பண்பாட்டு வேற்றுமைகளை அப்படியே தக்கவைத்துக் கொள்கிறான்.
அது சுரண்டலுக்குப் பாதுகாப்பாக.

இந்தியாவுக்கு "இந்தியா' என்பதுதான் புதியதே தவிர அடிமைத்தனம் என்பது புதிதல்ல. ஆயிரம் ஆண்டுகளாய் இந்தியாவின் நாளங்களில் ஓடியதெல்லாம் அடிமை ரத்தமன்றி வேறல்ல.

ஆனால் தண்டுகள் அழுகிவிட்டாலும் அற்றுப் போகாத தாமரைக் கிழங்குகளைப்போல, எந்த ஆதிக்கத்திலும் தன் பண்பாட்டு வேர்களைப் பத்திரப்படுத்தியே வைத்திருந்தது தேசம். ஆனால், பிரிட்டிஷ் பேராதிக்கமோ அதன் வேர்களையும் கருக்கிவிட்டது. இந்த என் கருத்துக்கு ஆதரவாக ஓர் உலகச் சிந்தனையாளனை உதவிக்கழைக்கிறேன்.

""இந்துஸ்தானத்தில் உள்நாட்டுப் போர்களும் படையெடுப்புகளும் புரட்சிகளும் வென்றடக்கும் ஆக்கிரமிப்புகளும் பஞ்சங்களும் அடுத்தடுத்து நிகழ்ந்தன என்பது உண்மையே. ஆனால் அவையெல்லாம் சமுதாயத்தின் மேற்பரப்பையே பாதித்தன. இங்கிலாந்தோ இந்தியச் சமுதாயத்தின் மொத்த அமைப்பையும் உடைத்தெறிந்துவிட்டது. அதன் பண்டைய மரபுகள் அனைத்திலிருந்தும் அதன் கடந்தகால வரலாறு முழுவதிலிருந்தும் துண்டித்துவிட்டது''.

- இது 1853 ஜூன் 25-இல் "நியூயார்க் டெய்லி ட்ரிபியூன்' பத்திரிகையில் செய்யப்பட்ட ரத்தப்பதிவு; செய்தவன் காரல் மார்க்ஸ்.

இந்தக் கட்டுரை வெளிவந்த 24-ஆம் ஆண்டில் அதாவது 1877-இல் டெல்லியில் பெருந் தர்பார் கூட்டி இந்தியாவின் பேரரசியாக விக்டோரியா மகாராணியை அறிவிக்கிறார் லிட்டன் பிரபு. 30 கோடி இந்தியத் தலைகளை 6 லட்சம் வெள்ளைத் துருப்புகள் கையில் எடுத்துக்கொள்ளும் கால்கோள் நிகழ்கிறது. இதையடுத்த ஐந்தாண்டுகளில் எட்டயபுரத்தில் கண் விழிக்கிறது பாரதி என்கிற அக்கினிக் குஞ்சு.


அவன் முற்றும் வளர்ந்தபோது, மூளையில் வெயிலடித்தபோது, அவன் சுட்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் மத்தியில் தமிழ் கட்டுப்பட்டபோது அவன் காதில் விழுகிறது காலத்தின் அசரீரி: "மகனே! சோதிமிக்க நவகவிதை கொண்டு தமிழை எழுப்பு தேசியம் கொண்டு தேசம் எழுப்பு'.
இந்த இரண்டு கட்டளைகளுக்காகவும் தன் உயிரையும் வாழ்வையும் தேய்த்துக் கொண்டதுதான் பாரதி என்ற சிறிய ஜீவிதத்தின் பெரிய சரித்திரம்.

"பாரதம் - சுதந்திரம் - தேசியம்' என்ற மூன்று புதிய சொற்கள் தமிழ் நிலத்தில் முதன்முதலாய் முளைவிடுகின்றன. பாரதி இந்தக் கருத்தாக்கங்களைக் கையாள்கிறபோது அதுவரை கேளாத தொனியில் தமிழ் பேசத் தொடங்குகிறது.

""பாரதநாடு பழம்பெரும் நாடுநீரதன் புதல்வர் - இந்நினைவகற்றாதீர்''
""எங்கள் பாரத தேசமென்று
தோள் கொட்டுவோம்''
-என்று பாடியவன் தன் கவிதைக்கு நீண்ட நிலப்பரப்பைத் தயாரிக்கிறான்.
""தில்லை வெளியிலே
கலந்துவிட்டால் - அவர்
திரும்பியும் வருவாரோ''
-என்ற கோபாலகிருஷ்ண பாரதியின் வர்ண மெட்டில்
""வீரசுதந்திரம் வேண்டி நின்றார் - பின்னர்
வேறொன்று கொள்வாரோ?''
- என்று வினாக்குறியில் கோபக்குறி காட்டுகிறான்.

கனகவிசயன் முடித்தலை நெரித்துச் சேரமகன் கல்லெடுத்தபோதும் - பாண்டிய மாமன்னன் மீன்கொடி பொறித்த
போதும் - இமயமலை எங்களுக்குச் சொந்தம் என்று பழந்தமிழ்ப் புலவர் யாரும் உரிமை கொண்டாடவில்லை. முதன்முறையாக பாரதிதான் ""மன்னும் இமயமலை எங்கள் மலையே'' என்று இமயத்தை எடுத்துத் தன் இடுப்பில் முடிந்து கொள்கிறான்.

அறியப்பட்ட தமிழ்க் கவிகளுள் பாரதி மாறுபட்டவன். அவனைப் பற்றிய குணச்சித்திரமே ஒரு கவிதை. அவன் ஒரு சித்தனைப்போல தெரிவான்; ஆனால் சித்தனல்லன். அவன் ஒரு பித்தனைப்போல் திரிவான்; பித்தனுமல்லன்.

இந்த நாட்டின் வீரமரபுகளையும், ஞானப் பெருமைகளையும், தத்துவத் தரவுகளையும் தூசுதுடைத்து நிகழ்கால நீரோட்டத்தில் கலக்க நினைத்தான் கவிஞன். இழந்த பெருமிதங்களை மீட்டெடுக்க அவன் நம்பிய சக்திகளுள் தலையாயவை நான்கு. திலகர் - காந்தி - காங்கிரஸ் - மற்றும் காளி.
முதல் மூன்றின் மீது அவன் கொண்டிருந்த நம்பிக்கை நிலத்தடி நீரைப்போல கூடியிருக்கலாம்; குறைந்துமிருக்கலாம். காளியின் மீது கொண்டிருந்த நம்பிக்கை மட்டும் கெட்டியானது; மரணம் வரைக்கும் மாறாதது. காளியை அவன் வழிபாட்டுப் பொருளாகக் கொள்ளாமல் வழித்துணைப் பொருளாகவே கையாள்கிறான்.

கடவுள் என்ற கட்டமைவு நம் முன்னோடிகளுக்குப் பெரும்பாலும் உளவியற்பொருளே தவிர உலகியற்பொருள் அல்ல.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கவும் ஊனினை உருக்கவும் உள்ளொளி பெருக்கவும் திருமேனிகள் மீது சூழ்த்த மாமலர் தூவித் துதிக்கவும் - இறைநாமம் ஓதி ஓதி ரோமாஞ்சனம் பெறவும் - பிறப்பறுத்துக் கடைத்தேறவும் - ஊன் கழிந்து உய்யவுமே ஆழ்வார்களும் நாயன்மார்களும் பெரும்பாலும் தமிழ் செய்தார்கள் என்றே பாசுரங்களும் பதிகங்களும் பேசுகின்றன.

பாரதிதான் தேசத்தின் தெருவுக்கு தெய்வத்தை இழுத்து வருகிறான். தெய்வத்தின் உயரம் குறைத்தோ தெய்வநிலைக்குத் தானே மேலெழுந்தோ காளி என்ற கடவுளை அடிபோட்டு அழைக்கிறான்.

""சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே''
- என்று கடவுளை அடித்து வணங்குகிறான்.

அவன் வல்லமை கேட்டது தன்னலத் துய்ப்புக்கல்ல; பேரின்பப் பெருக்குக்குமல்ல. பாழ்பட்டு நின்ற மாநிலம் பயனுற வாழ்வதற்கு. ரஷ்யப் புரட்சியின் எழுச்சியையும் "கடைக்கண் வைத்தாள் காளி' என்று அவளுக்கே காணிக்கையாக்குகிறான்.

காளி என்பது அவனுக்கு ஆற்றலின் வடிவம். திரிசூலம் என்பது மாஸ்கோ வரைக்கும் ஏவப் பரவும் எரிகணை. கடவுள் அவனுக்குக் கைக்கருவி மற்றும் அறிவின் குறியீடு. அதனால்தான் "அறிவொன்றே தெய்வமெ'ன்று பின்னொரு பொழுதில் பேசுகிறான்.

எழுதியபடி வாழவும் வாழ்ந்ததை எழுதவும் வாய்த்த கவி பாரதி.
"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங்கொள்ள லாகாது' என்று பாடியவன்
தன் வாழ்வின் பொதுவெளியொன்றில் அதை மெய்ப்பித்தும் காட்டினான்.
மிதவாதிகள் கூட்டிய சூரத் காங்கிரஸில் தீவிரவாதி திலகர் திடீரென்று மேடையேறுகிறார் கட்டிய கைகளைக் கவசமிட்டு நிமிர்ந்து நிற்கிறார். மிதவாதிகளின் அடியாட்கள் திலகர்மீது நாற்காலிகளை வீசுகிறார்கள். அவருக்கு ஊறு நேரும் என்று உணர்கிறது சபை. சில இளைஞர்கள் பரபரவென்று மேடையில் பரவி திலகருக்குத் தேகக் கவசம் கட்டுகிறார்கள். அப்படிக் கவசம் கட்டி, காலிகளையும் நாற்காலிகளையும் தாங்கத் தயாரான இளைஞர்களுள் ஒருவன் நம் கவியரசன் பாரதி. அதற்குக் கண்கண்ட சாட்சி கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி.

அந்த மகாகவியின் சிலையைக் காணும்போதெல்லாம் கைகூப்ப எனக்கொரு காரணமுண்டு. சுழித்துக்கொண்டோடிய தேசிய நீரோட்டத்தில் இனமொழி அடையாளங்களைக் கரைத்துவிடாதவன் என்பதே அந்தக் காரணம். தமிழ் மொழியின் பெருமையைக் கட்டுரைத்தவன் மட்டுமல்லன்; கட்டியும் நிறுத்தியவன்.

""எனக்கு நாலைந்து பாஷைகளிலே பழக்கமுண்டு. அதுபற்றியே தமிழைப்போல் வலிமையும் திறமையும் உள்ளத் தொடர்பும் உடைய பாஷை வேறொன்றுமே இல்லை என்கின்றேன்'' - இது பாரதியின் சந்தர்ப்பமொழியன்று; சத்திய மொழி.

1913-இல் நோபல் பரிசு பெற்ற மகாகவி தாகூர் 1919-இல் மதுரை வருகிறார். அப்போது பாரதிக்கும் அவர் சீடனுக்கும் நிகழ்ந்த உரையாடலொன்றை அந்தச் சத்தியத்திற்குச் சான்றுக்கழைக்கிறேன்.

பாரதி : ""ஓய் நாம் தாகூருக்கொன்று சொல்லுவோம். நீர் வங்கக்கவி நாம் தமிழ்க்கவி, விக்டோரியா ஹாலில் கூட்டம்போடுவோம். உமது நோபல் பரிசைச் சபைமுன் வையும். நாமும் பாடுவோம் நீரும் பாடும். சபையோர் யார் பாட்டுக்கு "அப்ளாஸ்' கொடுக்கிறார்கள் என்று பார்ப்போம். நமது பாட்டே நயம் என்று சபையோர் மெச்சுவார்கள். உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்ல வேண்டியது என்போம்''

சிஷ்யன் : ""அதெப்படி? வங்காளத்துக்குக் கிடைத்த நோபல் பரிசு உமது தமிழுக்கு எப்படிக் கிடைக்கும்?''

பாரதி : ""அட அட ஜடமே! சர்வேஸ்வரன் தமிழனுக்கு எல்லாம் வைத்தான்; புத்தி மட்டும் வைக்கவில்லை. நேற்றுப் பிறந்த வங்காளத்தான் நோபல் பரிசு வாங்க வேண்டும். கற்பகோடி காலம் வாழ்ந்த தமிழ் அந்தப் பரிசுக்கு லாயக்கில்லையோ?''

சிஷ்யனாகிய கவியோகி சுத்தானந்த பாரதியாரின் இந்தப் பதிவை ஒரு பித்தனின் நகைச்சுவை என்றோ வங்காளக் கவியை
வம்புக்கிழுக்கும் தமிழ்ப் புலவனின் செல்லச் செருக்கு அல்லது கள்ளக் கிறுக்கு என்றோ சில அறிவு ஜீவிகள் கருதக்கூடும். ஆனால் ஊன்றிப் பார்த்தால் பாரதி தன்னை முன்னிலைப் படுத்துவதைவிடத் தமிழையே முன்னிலைப்படுத்துகிறான் என்பது உணரப்படும்.

""தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடு சூழ்கலை வாணர்களும், } இவள் என்று பிறந்தவள் என்றுணராத
இயல்பினளாம் எங்கள்தாய்''
என்று பெருமிதம் பாடியவன், ""யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்'' என்று பெருமை
பேசியவன் ஒரு வங்காளக் கவியை ஞானச் சீண்டல் செய்ததில் எந்த வியப்புமில்லை.

இன்னொரு வழியிலும் பாரதி மாறுபட்டவன். அவன் சொல்லிச் சென்றவனில்லை; சொல்லிச் செய்தவன். ""ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்'' என்று தான் எழுதிய வரிகளுக்கு வாழ்க்கையிலேயே உரையெழுதினான்.

பிராமணர் - சத்ரியர் - வைசியர் - சூத்திரர் என்ற நான்கு வருணங்களைத் தாண்டிப் பஞ்சமர் என்ற ஐந்தாவது வருணத்தையும் உண்டாக்கி வைத்தது ஆதிக்க வர்க்கம்.

இந்த நாட்டில் மதமாற்றம் சாத்தியமாகும் பட்சத்தில் வருணமாற்றம் ஏன் சாத்தியமில்லை என்று வீரியமாகச் சிந்தித்த பாரதி வினைப்பட்டும் விட்டான். "ஆறில் ஒரு பங்கு' என்ற தனது இலக்கியப் படைப்பைப் பஞ்சமர்களுக்குக் காணிக்கை செய்தான். அதில் கவனிக்க வேண்டியது காணிக்கை செய்ததை அல்ல; பஞ்சமர்களை அவன் படிமாற்றம் செய்ததைத்தான்.

""இந்நூலைப் பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரட்சிப்பவர்களாகிய பள்ளர் - பறையர் முதலிய பரிசுத்தத் தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்''.
மனுதர்மத்தை உடைக்க வேண்டுமெனில் வருணங்களை இடம் மாற்றிப்போடு மற்றும் சாதி மாற்றத்தைச் சாத்தியப்படுத்து என்று சிந்தித்தவனும் அவனே.

"கனகலிங்கம்' என்ற தாழ்த்தப்பட்டவனுக்குப் பூணூல் அணிவித்து ""இன்று முதல் நீ பிராமணன்... பாரதி சொன்னானென்று சொல்'' என்று செயற்பட்டவனும் அவனே.

""காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றவன் கழுதையைக்கூட முத்தமிட்டான் கடையத்தில் கடைசிக்காலத்தில்.

""ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும்'' என்றவன் செல்லம்மாளின் தோளில் கையிட்டு ஊர்வலம் போய் ஊரையும் மனைவியையும் நாண வைத்தான்.

பாரதி ஒரு சத்தியக் கவிஞன். சமூகத்தில் சத்தியம் குறைந்துகொண்டே போகலாம். சத்தியம் குறையக் குறையத்தான் சத்தியத்தின் மதிப்பு கூடிக்கொண்டே போகிறது. சத்தியத்திற்குக் கொடுக்கும் விலைதான் சத்தியத்திற்கான சர்வதேச மதிப்பைக் கூட்டிக்கொண்டே போகிறது. சத்தியம் கடுமையான குணம் கொண்டது. சத்தியம் வறுமையை யாசித்துப் பெறும்;
அவமானங்களை ஆபரணங்களாக்கிக் கொள்ளும்; துன்பம் ஒரு தவமென்று செய்யும்; சுற்றம் சுருக்கும்; நட்பை விலக்கும்; நோய் செய்யும்; ஆயுள் குறைக்கும். இத்தனைக்கும் தயாராயிருப்பவன் மட்டுமே சத்தியம் காக்கலாம். தான் ஊருக்குச் சொன்ன சத்தியத்திற்கு உண்மையாய் இருந்ததுதான் பாரதியின் வாழ்வும் வாக்கும்.

ஒரு சம்பவம் இந்த உண்மை உணர்த்தும்.

வி.கிருஷ்ணசாமி அய்யர் ஒரு தேசபக்தர். பாரதி பாடல்களுக்கு 1907-இல் முதன் முதலில் நூல்வடிவம் தந்து அதைப் பள்ளிகளெங்கும் பரப்பியவர். அவரோடு நன்றியும் நட்பும் கொண்டவன் பாரதி.

திடீரென்று அய்யர் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவோடு உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாய் உயரம் பெற்றார். பொறுத்துக்கொள்ளவில்லை பாரதி. பழைய நன்றிக்காக வாழ்த்தவுமில்லை; புதிய சலுகைகளுக்காக வரவேற்கவுமில்லை. புதுவையிலிருந்து வெளிவந்த "விஜயா' பத்திரிகையில் அய்யர்மீது அக்கினிக்கங்குகளை அள்ளி வீசுகிறான் பாரதி.

""வி.கிருஷ்ணசாமி ஐயரே! காங்கிரஸ் சபையில் உயிரை வைத்ததுபோல் நீர் பேசிய கதையெல்லாம் இப்போது எப்படி ஆயிற்று? வஞ்சனை - நடிப்பு - ஏமாற்று - பாவனை - பொய்''.

நெருப்புக்குப் பிறந்தவன்தான் இப்படி விருப்புக்கு ஆளாகாமல் பேசமுடியும்.
பாரதியின் சமகால அரசியல் பாடல்களின் ஆயுள் எவ்வளவு என்பதை அளவிட முடியும். தேசியத்தின் தேவை தீர்ந்துபோனாலோ ரஷ்யாவைப்போல் இந்தியா சிதறிப்போனாலோ - அரசியலின் ஆவேச மொழியைக் கலை கழித்துவிட்டாலோ பாரதியின் தேசியப் பாடல்கள் வெறும் ஆவணங்களாகிவிடும். ஆனால் அதையும் தாண்டி அவன் அகிலப் பாடல்கள் செய்திருக்கிறான். அழியாத பேருண்மைகளைத் தாங்கி நடக்கும் அவனுடைய பல கவிதைகளுக்கு அழிவில்லை.

""சுட்டும் விழிச் சுடர் தான் - கண்ணம்மா சூரிய சந்திரரோவட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக்கருமை கொல்லோ
பட்டுக் கருநீலப் புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும்
நட்சத் திரங்களடி''

பிரபஞ்சத்திற்கும் மனிதகுலத்துக்குமான ஒத்திசைவின் இழையில் நெய்யப்பட்டிருக்கிறது இந்தக் கவிதை. வானத்தில் ஒரு
சந்திரனும் சூரியனும், பூமியில் ஓர் ஆணும் பெண்ணும், தமிழ்நாட்டில் காதலும் தமிழும் உள்ளவரை இதுபோன்ற கவிதை நிலைபெறும்.

அவன் கவிதைகள் மட்டுமல்ல அவன் வாழ்வின் இறுதியும் தமிழர்களுக்கு ஒரு பாடம்தான். தேசக் காப்பு போலவே தேகக்காப்பும் முக்கியம் என்பதைக் கன்னத்தில் அறைந்து சொல்கின்றன அவன் கடைசி வருடங்கள்.
ஒரு சாமியாரோடு தன் வீடு தேடிவந்த பாரதியின் சிலமணி நேரங்களைச் செக்கிழுத்த செம்மல் வ.உ.சியின் வார்த்தைகளிலேயே பதிவு செய்கிறேன்:

""மூவரும் (பாரதி - சாமியார் - வ.உ.சி)

மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டோம். சிரம பரிகாரத்தின் பொருட்டு மூவரும் படுத்துறங்கினோம். மாலை சுமார் மூன்று மணிக்கு அவர்களிருவரும் பேரிரைச்சலிட்டு வார்த்தையாடிக் கொண்டிருப்பதைக் கேட்டு நான் விழித்துக்கொண்டேன். ஒரு அமிருதாஞ்சன் டப்பாவிலிருந்து ஏதோ ஒரு லேகியத்தை எடுத்து ஒரு ஆளுக்கு ஒரு எலுமிச்சங்காயளவு வாயில் போட்டுக்கொண்டனர். அவர்கள் கொம்மாளம் அதிகமாயிற்று. "அது என்ன மாமா?' எனக் கேட்டேன். "அதுவா? மோட்சலோகத்துக்குக் கொண்டுபோகும் ஜீவாம்ருதம்' என்றார் மாமா. எனக்கு விளங்கி விட்டது''.

"உடலினை உறுதிசெய்' என்று ஆத்திசூடி எழுதியவனின் உயிரினை இறுதிசெய்த இழிபொருளே! மேதைகளையும் - மகா கவிகளையும் - அறிவுலக ஆசான்களையும் திருடிக்கொண்டோடும் தீப்பொருளே! உன்னை எரித்தாலென்ன? இந்த பூமியைப் பெரும்பள்ளமெடுத்து உன்னைப் புதைத்தாலென்ன? மனித நாகரிகத்தைவிட்டு நீ மறைந்தாலென்ன? போதையில் பெருக்கெடுத்துப் புலன்களுக்குப் பொய்யின்பமூட்டும் "டோப்பமின்' என்ற வேதிப்பொருளே! நீ மூளையில் தேவைக்கதிகமாய் ஒழுகிச் சுரக்காமல் ஒழிந்தாலென்ன? பாரதியைப் பறிகொடுத்த நெஞ்சு பதறுகிறது.

சூரியனின் துண்டு என்பது இந்த பூமி மட்டுமன்று; மகாகவிகளும்தாம். அவர்களின் உடல்வற்றிப் போகலாம்; ஆனால் அவர்கள் அருந்தக் கொடுத்த "உயிரெனும் முலையில் உணர்வெனும் பால்' வற்றுவதில்லை.
திருவல்லிக்கேணி மயானத்தில் பாரதியின் சதைக் கோளத்தைத் தின்று தீர்த்த தீ அணைந்திருக்கலாம். அவன் கொளுத்தி எறிந்துபோன அழியா நெருப்பு அணைவதேயில்லை. அது "யுகாக்கினி'.

நன்றி :- வைரமுத்து, தினமணி


No comments: