உலகச் செய்திகள்


முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் : அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது : தமிழகத்தில் பெரும் பதற்றம்

ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி

ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு மோடி அஞ்சலி

பச்சைப் பட்டு சேலையணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை ஜெயலலிதா : 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - மொளனித்தது ஒரு சகாப்தத்தின் குரல்

நியூஸிலாந்து பிரதமர் திடீரென பதவி விலகல்

இத்தாலியின் பிரதமர் பதவி விலகினார்

இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி

 47 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது

மறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம் : தொடரும் மர்மம்

48 பேர் பலியான பாகிஸ்தான் விமானம் விபத்திற்கான காரணம் வெளியானது

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்

கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி

சென்னை முழுதும் திடீர் மாற்றம் : காரணம் என்ன.?







முதலமைச்சர் ஜெயலலிதா மரணமடைந்தார் : அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது : தமிழகத்தில் பெரும் பதற்றம்

06/12/2016 தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக அப்பலோ வைத்தியசாலையில்  சிகிச்சை பலனின்றி தனது 68ஆவது வயதில் காலமானதாக அப்பலோ வைத்தியசாலை உறுதி செய்தது.
இவருடைய இறப்பால் வைத்தியசாலை வளாகத்தில் பதற்றமான சூழ்நிலை காணப்படுவதோடு தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 
அவரது உடல் சென்னை திருவல்லிகேணியில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
முன்னதாக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பலோ வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டது. 
இதனையடுத்து ஜெயலலிதாவிற்கு இதய நோய் வைத்தியர்கள், சுவாசயியல் நிபுணர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். 
தீவிர சிகிச்சை நிபுணர்களும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையளித்தனர். அது மாத்திரமல்லாமல் டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்களும் சென்னை அப்பலோவிற்கு சென்று சிகிச்சையளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் வைத்தியசாலையில் பிரிந்தது.
முன்னதாக முதல்வர் ஜெயலலிதா  நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்டம்பர் 22 ஆம் திகதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
முதலில் சாதாரண காய்ச்சல் மற்றும் நீர்சத்து குறைவு காரணமாக ஜெயலலிதா அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
 அனுமதிக்கப்பட்ட மறுநாள் 12 மணியளவில் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார் என அறிவக்கப்பட்டது.
   ஆனால் அதன் பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம், அவருக்கு ஓய்வு தேவையிருப்பதால் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று தெரிவித்தது.
 
பின் நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம் என ஜெயலலிதாவிற்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு பிரச்சனை மற்றும் சிகிச்சையை பற்றிய அறிக்கைகளை அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. 
வைத்தியர் சிவக்குமார் தலைமையில், கார்டியோலஜி, நுரையீரல் தொடர்பான சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சையளித்தனர். மேலும் அவருக்கு லண்டன் வைத்தியர்  ரிச்சர்டு பியால் சென்னைக்கு சென்று சிறப்பு சிகிச்சையளித்தார். 
டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்களும் முதல்வருக்கு சிகிச்சையளித்தனர் என பல்வேறு அறிக்கைகளை அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டது. 
இதில் லண்டன் வைத்தியர் ரிச்சர்ட் சென்னை சென்று சிகிச்சையளித்தது, நுரையீரல் தொற்று, செயற்கை சுவாசம், எய்ம்ஸ் வைத்தியர்கள்   சிகிச்சையளித்தது ஆகியவை மிக முக்கியமானது. 
பின்னர் வைத்தியர்களின் தீவிர சிகிச்சை காரணமாக ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 
இதையடுத்து லண்டன் வைத்தியர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் வைத்திய குழுவினர் திரும்பிச் சென்றனர். 
அதன் பின்னர், சிங்கப்பூர் பிசியோதெரபி மருத்துவ நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோர் சென்னைக்கு சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் தான் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
அதிர்ச்சி அளித்த அப்பல்லோவின் 12-வது அறிக்கை 
முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நீண்ட நாட்களாக அப்பல்லோ வைத்தியசாலை நிர்வாகம் அறிக்கை எதனையும் வெளியிடாமல் இருந்த நிலையில், 11ஆவது அறிக்கையை கடந்த நவம்பர் 21ஆம் திகதி வெளியிட்டது. இந்த அறிக்கையில் ஜெயலலிதாவின் உடல்நிலை படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அவர் வைத்தியர்களுடன் பேசி வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. 
இந்த அறிக்கை அ.தி.மு.க-வினரிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்தது. இந்நிலையில் ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் குழுவினர் சனிக்கிழமையன்று மீண்டும் சென்னை சென்றனர். 
அப்பலோ வைத்தியசாலைக்கு சென்ற டெல்லி எய்ம்ஸ் வைத்தியர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்பலோ வைத்திய குழுவினருடன் கலந்தாலோசித்தனர். 
அவரது உடல்நிலை முன்னேற்றமடைந்துள்ளதாகவும், விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், ஞாயிற்றுக் கிழமை(4)  மாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் 12-ஆவது அறிக்கையை இரவு வெளியிட்டது. இந்த அறிக்கையால் தமிழகத்தில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
மரணம் குறித்த அறிவிப்பு
விரைவில் குணமாகி அரசு பணிகளை தொடருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்   திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஜெயலலிதாவின் உயிர் பிரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை குறிப்பு:
ஜெயலலிதா கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுரா தாலுகாவில் 1948ம் ஆண்டு பிப்.24ஆம் திகதி பிறந்தார்.
ஜெயலலிதாவின் இரண்டு வயதில் அவரது தந்தை ஜெயராம் காலமானார்.
10ஆம் தர தேர்வில் தமிழகத்திலல் ஜெயலலிதா முதலிடம் பிடித்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என 140 படங்கள் நடித்துள்ளார்.
தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளையும் சரளமாக பேசுவார்.
 1972ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது வழங்கப்பட்டது
தமிழக முதல்வராக ஜெயலலிதா ஆறு முறை பதவி வகித்துள்ளார்.
 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சர் ஆனார்.
  2001ஆம் ஆண்டு 2ஆவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
   2005ஆம் ஆண்டு 3வது முறையாக முதலமைச்சர் ஆனார்.
  2011ஆம் ஆண்டு 4வது முறையாக முதலமைச்சர் ஆனார்.
  2015ஆம் ஆண்டு 4ஆவது முறையாக முதலமைச்சர் ஆனார்.
அரை கம்பத்தில் அதிமுக கொடி
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தது அடுத்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரி 












ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கதறி அழுது அஞ்சலி

06/12/2016 அப்பல்லோ வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 
ஜெயலலிதா உடலுக்கு தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். அப்போது தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். 
அவரை தொடர்ந்து, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல், அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அரசின் உயர் அதிகாரிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 
அஞ்சலி செலுத்துவதற்காக மக்கள் ராஜாஜி அரங்கத்திற்குள் வரிசையாக வந்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி 















ஜெயலலிதாவின் பூதவுடலுக்கு மோடி அஞ்சலி

06/12/2016 மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் பூதவுடலுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்.
டில்லியிலிருந்து விசேட ஹெலிக்கொப்டர் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சென்னை ராஜாஜி அரங்கிற்கு சென்று தனது அஞ்சலியை செலுத்தினார்.
நன்றி வீரகேசரி 
















பச்சைப் பட்டு சேலையணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை ஜெயலலிதா : 'மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - மொளனித்தது ஒரு சகாப்தத்தின் குரல்

06/12/2016 தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த முதல்வர் ஜெயலலிதா மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். 
போயஸ் தோட்டத்தை விட்டு ஜெயலலிதா வெளியேறுகிறார் என்றாலே அவரை தரிசிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்காங்கே நின்று கொண்டு இருப்பார்கள்.
 தெய்வத்தைக் கண்ட பக்தர்களைப் போல் காலில் விழுந்து மலர் தூவி வணங்குவார்கள். 
ஒரு நொடி தரிசித்தால் போதும் ஓராண்டுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் என தமிழக மக்கள் கூறுவதுண்டு.
 இன்றைய தினம் ஜெயலலிதாவின் இறுதி யாத்திரையின் போதும் அலைகடலென திரண்டு கொண்டிருந்த மக்கள், கண்ணீர் மல்க மலர்கள் தூவி பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர்.
முதலமைச்சராக இருந்த காலத்தில் ஜெயலலிதா காரில் வரும் போது, தொண்டர்கள் தூவும் மலர்கள் நிரம்பி வழியும். இதுபோன்றே ஜெயலலிதாவின் இறுதிப் பயணத்திலும்  வழியெங்கும் மக்கள் மலர்கள் தூவி வழியனுப்பி வைத்தனர்.
'பெற்றால்தான் பிள்ளையா நாங்கள் இருக்கிறோம் அம்மா.." என்று கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். 
பச்சை நிற புடவை, பச்சைக்கல் மோதிரம், நெற்றியில் சின்னதாக ஒரு மெருன் நிற பொட்டு, லேசாய் இழுத்து விடப்பட்ட நாமம் என தரிசமாய் தோற்றமளித்த ஜெயலலிதா, இறுதி துயில் கொள்ளும் போதும் அதே பச்சை நிற பட்டுப்புடவையுடன் புன்னகை ஓய்ந்த  முகத்துடன், மெரீனா கடற்கரையில் சந்தன பேழைக்குள் பட்டுத்தலையணையில் படுத்துறங்குகிறார்.
75 நாட்களுக்கு முன்புவரை போயஸ் தோட்டத்து பட்டு மெத்தையில் துயில் கொண்ட ஜெயலலிதா, செப்டம்பர் 22ஆம் திகதி இறுதியாக போயஸ் தோட்டத்தை விட்டுச் சென்றார்.
  நேற்று வரை அப்பலோவில் 2008ஆம் இலக்க அறையில் வைத்தியசாலை படுக்கையில் உறங்கியவர் இன்று முதல் மெரீனா கடற்கரையில் சந்தனபேழையில் தன் அரசியல் ஆசான் நினைவிடத்தின் அருகில் மீளாத் துயில் கொண்டு விட்டார். 
ஜெயலலிதா இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் மறையாது என்பது நிச்சயம்.
60 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்.. கண்ணீரில் மூழ்கியது தமிழகம்
 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இன்று மாலை, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் முழு இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.
ராஜாஜி அரங்கில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலை முப்படை வீரர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்குக் கொண்டு வந்து வீர வணக்கம் செலுத்தினர்.
ஜெயலலிதாவின் உடல், 'புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெயலலிதா' என தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட சந்தனப் பேழையில் வைக்கப்பட்டது.
அங்கு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் இறுதி அஞ்சலி செலுத்தினார்.  ராஜாஜி மண்டபத்துக்கு வந்திருந்த பெரும்பாலான அரசியல் தலைவர்கள், எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்பும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் ஆளுநர் ரோசய்யா, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதாவின் உடல் மீது போர்த்தியிருந்த தேசியக் கொடியை அவரது தோழி சசிகலா பெற்றுக் கொண்டார். 
பிறகு, ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டிருந்த சந்தனப்பேழையைச் சுற்றி வந்து பால் தெளித்தார். ஜெயலலிதாவின் உடலுக்கு சசிகலா இறுதிச் சடங்குகளை செய்தார்.
பின்னர், 12 வீர்கள் 5 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். 60 குண்டுகள் முழங்க முழு ராணுவ மற்றும் அரசு மரியாதையுடன் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
உடல் நலக் குறைவால் சென்னை அப்பலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த  முதல்வர் ஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணிய ளவில் காலமானார்.
முதல்வர் மறைவையடுத்து தமிழகத்தில் ஏழு நாள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. 
அவரது உடல் சென்னை ராஜாஜி மண்டபத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதே போன்று, மாநில முதல்வர்கள் நாராயணசாமி, சித்தராமையா, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், அகிலேஷ் யாதவ், சிவ்ராஜ் சிங் சௌஹான், பினராயி விஜயன், தேவேந்திர ஃபட்னவிஸ் உள்ளிட்டோரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
ஏராளமான கலைத் துறையினரும், பல முக்கியப் பிரபலங்களும் ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இலட்சக்கணக்கான தமிழக மக்கள் அலைகடல் என திரண்டு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
சரியாக மாலை 4.20 மணிக்கு ஜெயலலிதாவின் உடல் முப்படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இராணுவ பீரங்கி வாகனத்தில் தங்கப் பேழையில் வைக்கப்பட்டது.
ராஜாஜி அரங்கில் இருந்து மாலை 4.30 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள  எம்.ஜி.ஆர். நினைவிடத்தை நோக்கி ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
மாலை சரியாக 6 மணியளவில், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் இராணுவ மற்றும் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மக்களின் முதல்வருக்கு, இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
நன்றி வீரகேசரி 














நியூஸிலாந்து பிரதமர் திடீரென பதவி விலகல்

06/12/2016 நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ திடீரென பதவி விலகியுள்ளார்.
இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த அறிவித்தலை விடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி 
















இத்தாலியின் பிரதமர் பதவி விலகினார்

06/12/2016 இத்தாலியின் பிரதமர் மேட்டியோ ரென்சி இன்று பதவி விலகியுள்ளார். 
இத்தாலி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகவும் மற்றும் தற்போதைய அரசியலமைப்பில் மேம்பாடுகளை கொண்டுவரும் நோக்கில் செய்யப்படும் மாற்றங்கள் குறித்த திட்டம் தொடர்பில் நடந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரதமர் மேட்டியோ ரென்சி பெரும் தோல்வியடைந்ததால்  இம்முடிவினை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மேட்டியோ ரென்சி பரிந்துரைத்த மாற்றங்களில் மத்திய அரசை வலுப்படுத்தி, செனட் சபையின் பலத்தினை குறைக்கும் விதமாக அமைந்திருந்தமையால் இந்த திட்டத்திற்கு பலரும் தங்களின் எதிர்ப்பினை வெளிகாட்டியமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 













இந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம் : 25 பேர் பலி


07/12/2016 இந்தோனேசியா நாட்டின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள அச்சே பகுதியை இன்று அதிகாலை தாக்கிய நிலநடுக்கத்துக்கு 25 பேர் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. 
குறித்த நிலநடுக்கமானது 6.5 அலகு ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது. 
பெரும்பாலும் இஸ்லாமிய மக்கள் வாழும் நாடான இந்தோனேசியாவில் இன்று அதிகாலை தொழுகைக்காக பலர் தயாராகிக் கொண்டிருந்தபோது இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பலர் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் ஓடி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
சுனாமி தாக்கலாம் என்ற அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு திரும்பிச் செல்ல பலர் தயக்கம்காட்டி வருகின்றனர்.
அடுத்தடுத்து, 5 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதால் வீடுகள் மட்டுமின்றி கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் மண்மேடாகிப் போனது. இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிக்கும் பலரை மீட்கும் பணி மூழுவீச்சில் நடைபெறுகிறது.
காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.   நன்றி வீரகேசரி 














 47 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியது

07/12/2016 47 பயணிகளுடன் சென்ற பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. 
இஸ்லாமாபாத்தில் இருந்து கிளம்பிய விமானம் அபோட்டாபாத் அருகே  மலையில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் அரசு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி 


























மறைந்த ஜெயலலிதா முகத்தில் 4 கரும்புள்ளிகள்: வைரலாகும் புகைப்படம் : தொடரும் மர்மம்



08/12/2016 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முகத்தில் நான்கு புள்ளிகள் காணப்படுகிறன. இது எதற்காக என்று கேள்வியுடன் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இறந்தவர்களின் உடல் பல நாட்கள் கெடாமல் இருக்கச் செய்யும் பதனிடும் முறை. எம்பால்மிங் என்ற வேதியியல் முறையில் சிகிச்சை அளிக்கப்படும். 
உடல் கெடாமல் இருக்கும். அதற்கான அடையாளம் தானா இது அல்லது அவர்களது குடும்ப வழக்கப்படி முதல்வர் இறந்த பின்னர் அவருக்கு ஏதாவது சடங்கு செய்யும்போது, முகத்தில் கரும்புள்ளிகள் ஏதாவது வைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வர் கடந்த திங்கள் கிழமை இரவு 11.30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் காலமானார் என்று அந்த மருத்துவமனை அறிவித்தது. ...
நீண்ட சிகிச்சைக்குப் பின்னர், பலனின்றி இறந்தார் என்று கூறப்பட்டது. இதையடுத்து, அவரது உடம்பு போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டது. 
இந்த சடங்கின்போது, ஜெயலலிதாவுக்கு நெருங்கியவர்கள் யாரும் இல்லை என்ற செய்தி வெளியானது. பின்னர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்தான் சடங்குகள் செய்தார் என்று கூறப்பட்டது....
இந்த சடங்கின்போது அவரது முகத்தில் நான்கு புள்ளிகள் வைக்கப்பட்டதா? அல்லது உடல் கெடாமல் இருக்க எம்பால்மிங் செய்யப்பட்டதா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 
இந்தப் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உடல் கெடாமல் இருக்க என்றால் இறந்த 24 மணி நேரத்திற்குள் அடக்கம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. பிறகு ஏன் அந்த நான்கு புள்ளிகள் என்ற கேள்வி எழுந்துள்ளது.   நன்றி வீரகேசரி 















48 பேர் பலியான பாகிஸ்தான் விமானம் விபத்திற்கான காரணம் வெளியானது

08/12/2016 பாகிஸ்தான்  விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறினாலே குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியதாக கண்டறியப்பட்டுள்ளது. 
இஸ்லாமாபாத் நகரில் இருந்து சிட்ரல் நோக்கி 48 பேருடன்  பயணித்த விமானம் அபோட்டாபாத் அருகே  மலையில் ஒன்றில் நேற்று விழுந்து நொறுங்கியது .
குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் விமானியினால் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு தொடர்பாக பிரதான கட்டுப்பாட்டு அறைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் குறித்த விமானத்தில் இருந்த 48 பேரும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்காகம் அறிவித்துள்ளது.






நன்றி வீரகேசரி 













மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி காலமானார்

பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமசாமி
07/12/2016 பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைchoகளில் பன்முகத் தன்மை கொண்ட பண்பாளர் சோ ராமாசாமி (82) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று அதிகாலை 3.58 மணிக்கு காலமானார்.
மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோ-விற்கு இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் இருந்தவர் சோ ராமசாமி. ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே சோ ராமசாமியும் சென்னை அப்போலோ மருத்துவமனையில் காலமானார்.
எம்ஆர்சி நகரில் உள்ள இல்லத்தில் சோ உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் சோ உடல் தகனம் செய்யப்படுகிறது. சோ-விற்கு மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
சோ ராமசாமி பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்குரைஞர் போன்ற பல துறைகளில் ஈடுபாடு கொண்டவர். "சோ" என அழைக்கப்படுகிறார். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துக்கள் இவருக்கு 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் பெற்று தந்தது.
பிறப்பு: அக்டோபர் 5, 1934 அன்று சென்னையில் பிறந்தவர்.
பெற்றோர்: தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள்.
கல்வி: தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர் நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார்.
வழக்குரைஞர்: 1957 - 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே  கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 -ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயர்.
நாடகமும்-இதழும்: 1957-ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970-ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976-ஆம் ஆண்டில் பிக்விக் ((PickWick) என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார். 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
திரையுலக வாழ்க்கை: 14 திரைப்படங்களுக்கு கதை எழுதிய சோ, 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.
விருதுகள்: இவர் தனது ஏட்டுத்துறைச் (பத்திரிக்கைத்துறைச்) சேவைக்காக 1985-இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986-இல் வீரகேசரி விருதும், 1994-ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998-இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றுள்ளார்.
அரசியல்: முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயால் மாநிலங்களவை உறுப்பின‎ராக நியமனம் செய்யப்பட்டு 1999 - 2005 வரை பணியாற்றினார்.
இந்நிலையில், மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானது. மூச்சுத் திணறல் அதிகம் ஏற்பட்டு இன்று அதிகாலை 3.58 மணிக்கு சோ ராமசாமி காலமானார்.   நன்றி தேனீ















கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் தீவிரவாத தாக்குதல் 29 பேர் பலி

11/12/2016 இஸ்தான்புல் நகரின் மையப்பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்திற்கு அருகாமையில் இன்று இடம்பெற்ற குண்டு தாக்குதலில் 29 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தாக்குதலில் 166 பேர் காயமடைந்ததாகவும் துருக்கியின் உள்துறை அமைச்சர் சுலைமான் சோய்லு தெரிவித்துள்ளார். 
காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளமையால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நன்றி வீரகேசரி 















சென்னை முழுதும் திடீர் மாற்றம் : காரணம் என்ன.?





11/12/2016 ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் பொதுசெயலாளராக சசிகலா பதவியேற்று கொள்ள வேண்டும் என அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தாலும் ஓபிஎஸ், மூத்த அமைச்சர்கள், தம்பிதுரை உள்ளிட்டோர் சசிகலா தான் கழகத்தையும் மக்களையும் காக்க வேண்டியவர் என பத்திரிக்கைகளிடம் கூறி வருகின்றனர். 
தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா, கடந்த 5 ம் திகதி உடல்நலக் குறைவால், அப்போலோ வைத்தியசாலையில் காலமானார். 
அப்போதே, கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் பொது செயலாளர் பதவி, கட்சியில் அங்கீகாரம் போன்றவற்றை மையப்படுத்தி சில பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக  தகவல்கள் வெளியாகின. 
கடந்த 28 ஆண்டுகளாக, அதிமுகவின் பொது செயலாளராக இருந்தவர் செல்வி ஜெ ஜெயலலிதா. எந்தவித போட்டியோ, சிக்கலோ இல்லாமல், ஒரு மனதாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, பொது செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் ஜெயலலிதா. அதே போல், சசிகலாவும் போட்டியின்றி தேர்வாவதையே விரும்புகிறார் என்கின்றனர் அதிமுக வட்டாரங்கள். அதற்கேற்றாற் போல், காய்களை நகர்த்தி வருகிறார்கள் மன்னார்குடி குடும்பத்தினர்.
இந்நிலையில் சென்னையில் சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர்களும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன.
“போற்றி வளர்த்த இந்த இயக்கத்தை அம்மா வழியில் தலைமையேற்க வாருங்கள் எங்க சின்னம்மாவே”
“அம்மாவுக்கே தாயை தந்தையாய் சகோதரியாய் யாதுமாகி நின்று தாயை காத்திட்ட எங்களின் இளைய தாயே.. கழகத்தை காத்தருள வேண்டும்”
ஒரு பொழுதும் உண்ணாமல் ஒரு நொடியும் உறங்காமல் புரட்சி தலைவி அம்மாவிற்கு அரணாய் உறுதுணையாய் இருந்து தியாகம் செய்த சின்னம்மாவே வருக” என்று பல்லாயிரகணக்கான போஸ்டர்கள் சென்னை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கழகத்தின் பொது செயலாளராக தலைமை ஏற்க தலைமகளே வாரீர் வாரீர் என மிகபெரிய பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   நன்றி வீரகேசரி 












No comments: