.
திரு.திருமதி முருகேசு கனகம்மா
தம்பதியினரின் புதல்வரான சடாட்சரன்(1940.05.06) கல்முனையை
பிறப்பிடமாகக் கொண்டவர்.1959 இல் சுதந்திரன் பத்திரிகையில் வெளியான
பாரதி யார் எனும் கவிதையுடன் தனது கவிதைப் பயணத்தை ஆரம்பித்து 1960 களில் கவிஞர் நீலாவணன்,மருதூர்க்கொத்தன்,நூஃமான் ஆகியோரோடு கைகோர்த்து கல்முனைப் பிரதேச தழிழ் இலக்கிய
வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார்
ஈழத்து நவீன கவிதை முன்னோடிகளுள்
முக்கியமானவரும் தம்மைத் தொடர்ந்து வந்த கவிஞர் குழாத்தினை இனங்கண்டு
ஊக்கப்படுத்திய கவிஞர் நீலாவணனின் பண்ணையிலே உருவானவரே கவிஞர் மு.சாடாட்சரன்
ஆவார்.கிழக்கிலங்கை தமிழ் மக்கள் மத்தியில் 1960
களில் இருந்து எழுத்தாளராகவும்,கவிஞராகவும்,சிறுகதையாசிரியராகவும்
அறியப்படுகிறார்.பாதை புதிது எனும் கவிதைத் தொகுதியையும் மேட்டுநிலம் எனும்
சிறுகதைத் தொகுதியையும் நூலுருவாக்கியுள்ளார் என்றால் மிகையாகாது.
அறுபதுகளிலே கவிதை உலகில் பிரவேசித்த
மு.சடாட்சரன் 1970 கள் வரை எழுதியவற்றுள் பாதை புதிது
எனும் தொகுப்பில் உள்ள எழுபது கவிதைகளுள் ஏறத்தாழ பதினைந்து கவிதைகள் நீலாவணனின்
கவிதைகள் போன்றே இயற்கை,மனித உறவுகள்,சமூகப்
பிரச்சினைகள் சார்ந்தனவாகவுள்ளன.
நீவாவணனின் காதல் கவிதை போன்று அணிப்
பிரயோகம்,சந்தம் ,ஓசைப்பாங்கு,வர்ணனை போன்றனவற்றை கொண்டிராது வெகு இயல்பான முறையிலான உணர்ச்சி
வெளிப்பாடு,மொழிப் பிரயோகம் முதலானவற்றை
மு.சடாட்சரனின் காதல் கவிதைகளில் காண முடியும்.எடுத்துக் காட்டாக
தூங்காதிருக்கின்றேன்,உதவி செய்க உத்தமி முதலியனவற்றைக்
கூறலாம்.சமூகத்திற் காணப்படும் காதல் போலிகள்,சீதனம்
சார்ந்த விடயங்களை இவரது கவிதைகளில் காண முடிந்தது.
இயற்கை சார்ந்த ஆரம்பகால கவிதைக்கு
எடுத்துக் காட்டாக அரசு எனும் கவிதையையும் சமூக ஏற்றத்தாழ்வுகள் சார்ந்த கவிதைகளாக
வென்றிடுவோம்,மண்ணிலே சொர்க்கம் வளர போன்ற கவிதைகளை
உதாரணமாகக் குறிப்பிடலாம்.அரசு எனும் கவிதையானது 1966
இல் தினகரனில் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
போர்க்கால பேரினவாத ஒடுக்குமுறைகளை,வாழ்வியல்
அன்றாட-நாளாந்த வாழ்க்கை அனுபவங்களை விடியும் வேளை எனும் கவிதைக்கூடாக
வெளிப்படுத்துகின்றார்.
இயற்கையின் இயல்பினை மட்டுமின்றி சமகால
வாழ்வியற் சூழலையும் மாற்றமுற்ற மனித நாகரீகத்தின் மாட்சியையும் வெள்ளக்காடு எனும்
கவிதைக்கூடாக எடுத்துக் காட்டுகிறார்.
மிக அண்மைக்கால வாழ்வியலை வசந்தம்
நிலைத்திட எனும் கவிதை பூடகமாக வெளிப்படுத்துவதாகவுள்ளது.
அகவற் பா வடிவத்தினை அதிகம் கையாண்டு
உணர்ச்சி அழுத்தங்களுக்கேற்ப பேச்சோசைப் பாங்கில் கவிதை யாத்த பெருமையும்
மு.சடாட்சரன் அவர்களையே சாரும்.மரபுரீதியான வெளிப்பாட்டு முறையினை மேன்மேலும்
நெகிழ்வடையைச் செய்து புதுக்கவிதையை அண்மித்துச் செல்கின்ற வெளிப்பாட்டு முறையினை
இவரது கவிதைகளுக்கூடாக காண முடிகின்றது.
நீலாவணன் தடம் அமைத்த பாதையில் நடை
பயில தொடங்கிய அதே வேளை கால ஓட்டத்திற்கேற்ப புதிய பாதையை வடிவமைத்து
சென்றிருப்பதை இவரது கவிதைகளுக்கூடாகவும் கதைகளுக்கூடாகவும் காணக்கூடியதாகவுள்ளது.
பாதை புதிது எனும் கவிதையானது
மு.சடாட்சரனின் கவிதைகளுள் மிகச்சிறந்த கவிதையாகும்.1965
இல் கி.வா.ஜகநாதன் ஆசிரியராக இருந்த கலைமகள் இதழில் வெளிவந்தது என்பதும்
குறிப்பிடத்தக்கது.பாதை புதிது கவிதையின் கவி வரிகள் பின்வருமாறு அமைந்திருக்கும்.
போகின்றேன் பாதை புதிது
வழியெங்கும் வாகை மலர்கள்
வளைந்த கதிர் வயல்கள்
தாகம் அகற்றி
தனி இன்பத் தேன்கனிகள்
வேகம் ………
இக்கவிதை முழுவதையும் ஒரு குறியீடாகவே
நாம் கொள்ள முடியும்.புதிய பாதை,வாகை மலர்கள்,கதிர்
வயல்கள்,தேன் கனிகள்,மயிலின்
துயர் தீர் நடனம் எல்லாமே குறியீடுகளாகவுள்ளன.வாகை மலர்கள் வெற்றியின்
குறியீடாகவும் கதிர் வயல்கள் வளத்தின் குறியீடாகவும் ஏனையவை இன்பத்தின்
குறியீடாகவும் உள்ளன.
மகிழ்ச்சியும் இன்பமும் மனநிறைவுமே
பாதை புதிது கவிதையின் சாரமாகவும் தனக்கென்று ஒரு புதிய பாதையை வேண்டும் யாரும்
இக்கவிதையை படித்து புத்துயிர்ப்பு பெறலாம் என கவிஞர் குறிப்பிடுகிறார்
பாதை புதிது கவிதை தொகுப்பிலுள்ள
பெரும்பாலான கவிதைகள் யதார்த்த உலகின் அநுபவப் பதிவுகளாகவுள்ளன.அதாவது தான் கடந்து
வந்த பாதையில் ஏற்பட்ட வலிகளையே கவிதைகளாக படைத்துள்ளார்.குறிப்பாக சடாட்சரன் 1990 க்கு பிறகு எழுதிய கவிதைகளே நமது மனங்களை பிசைவதாகவுள்ளது.
குழந்தை முகம் காட்டி
குதூகலித்த வானம்
திடீரென மப்புக் கட்டிற்று!
புன்னகைப் பொலிவில்லை!
என்று தொடங்கும் வதந்தி எனும்
கவிதையில் முதல் அடிகளிலேயே இருள் கவிழ்ந்த வாழ்வு படிமமாகிவிட்டது.தனது சூழலில்
நிகழ்ந்த விடயங்களையும் குறிப்பாக போர்ச் சூழலையும் பயங்கரத்தையும் துயரத்தையும்
இக்கவிதையின் ஊடாக வெளிப்படுத்துகிறார்.
1960 களில் உபாயம் என்ன,பற்றுக்கோல் தாhராயோ,வாராயோ
நெடு ரெயிலே,வாழ்க்கை இனிக்கிறது,தூங்காதிருக்கிறேன்,உதவி செய்க உத்தமி என்பன ஆரம்ப கால
காதல் கவிதைகளாகவுள்ளன.காதலில் உழலும் மென் உணர்வின் வலி இக்கவிதைகளுக்கூடாக
புலப்படுகின்றது.
தூங்காதிருக்கிறேன் கவிதையிலிருந்து ……
காதலி உனது கருணை மழையில்
குளித்திடல் வேண்டிக்
குமைந்து கிடக்கிறேன்
ஆசைக்குரிய அரசி
உன்னுடைய மாசிலா உருவம்
மனத்திரைக்குள்ளே வந்து
என்னை வாட்டி வருத்துதல் அறிவாய்
1970 களில் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில்
இடதுசாரி சிந்தனை மேலோங்கி இருந்தது.இனப் பிளவும் சுரண்டலும் அற்ற ஒரு சமதர்ம
சமூகத்தை கவிதையிலும் படைக்கலாயினர்.இலங்கைத் தமிழ்க் கவிஞர்களது கவிதையிலும்
அதுவே பிரதான போக்காக காணப்பட்டது.சடாட்சரனின் கறுத்த மாடுகளே,வென்றிடுவோம்,மண்ணிலே சொர்க்கம் மலர போன்ற கவிதைகள்
இத்தகையதே.
கறுத்த மாடுகள் கவிதையில் கறுத்த
மாடுகள் அடிமைப்பட்ட மக்களின் குறியீடாகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியின்
குரலாகவும் உள்ளது.
போடியார் சுரண்டலின் சின்னமாகவும்
அவரது வயற்காரன் சித்தன் சுரண்டப்படுபவனாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.இனப்பிளவை
மேவிய வர்க்க ஐக்கியமே சுரண்டப்படும் மக்களின் விடுதலைக்கான பாதை என்பது அன்றைய
இடதுசாரி சிந்தனையின் மையக் கருத்தாக இருந்தது.
சமூகப் புன்மைகள் ஒழிந்து இன மோதலும்
முரண்பாடும் மறைந்து அன்பும் இன்பமும் வளமும் நிறைந்து பொலியும் ஒரு சொர்க்கத்தை
இம்மண்ணில் காண விழைபவராகவே சடாட்சரன் இருந்துள்ளார் என்றும் அந்த மனதின்
உணர்வுகள் தான் அவரது கவிதைகளாகவுள்ளன.அவை மானுடம் பாடும் கவிதைகளாகவுள்ளன.பாதை
புதிது கவிதையின் தொனிதான் அவரது முழுக்கவிதைகளின் தொனியாகவுள்ளது என்பதை
மு.சடாட்சரனின் நண்பரான எம்.ஏ.நுஃமான்
குறிப்பிடுகிறார்.
ஆழக்கடலும் அழகு வயல்வெளியும்
வாழத்துணை புரியும் எங்கள் வற்றாக் கிழக்கிலங்கை எங்கும் இயல்பாகவே கவிதை
ஊற்றெடுத்துப் பொலியும்.அவ்விதம் என் நெஞ்சில் சுரந்து நிறைந்த கவிதைகளில்
நாற்பத்திரெண்டை தெரிந்தெடுத்து பாதை புதிது எனும் நூலினுள் சேர்த்துள்ளேன் என
பாதை புதிது என்னுரையில் மு.சாடாட்சரன் குறிப்பிடுகிறார்.
அரசு,வதந்திகள்,சீவியம் சிறியது,எழுதுகிறேன்,பாதை
புதிது,மீண்டு வருவாயா, வீரம்,விடியும் வேளை,பேரிழப்பு.அகவிம்பம்,கடமையை மறந்தால்,கிணற்றடி வாழை,காய்மனம்,மாரி பொழியட்டும்,வெள்ளக்காடு,மண்
தந்த பிள்ளை,வசந்தம் நிலைத்திட,நேசி,கறுத்த மாடுகளே,புதிய
பிறப்பெடு,வென்றிடுவோம்,மண்ணிலே
சொர்க்கம் மலர,தூங்காதிருக்கின்றேன்,உதவி செய்க உத்தமி,வெற்றிகள் மலியும்,தவிப்பும் தேடலும்,உயிர் பிழைக்க,உபாயம்
என்ன,பற்றுக்கோல் தாராயோ,வாராயோ
நெடு ரெயிலே,வாழ்க்கை இனிக்கிறது,முகமூடி கிழிகிறது,கொல்லா இல்லாத தோணிகள்,வளம் சேர்ப்போம்,சிறகு முளைத்த பறவை,மடிகிறது உயிர்,ஆசிரியர் இல்லை எனில் ,காட்டுத்தீ,ஒரு மழை நாள்,சுழல்வட்டம்,பங்கமில்லாது வாழ்வோம்,ஓயாத எரிமலை
போன்ற கவிதைகள் பாதை புதிது(2012) எனும் கவிதைத் தொகுதியில் உள்ளடங்கும்
கவிதைகளாகும்.அழகையும் ஆவேசத்தையும் கற்பனையோடு உணர்ச்சி பூர்வமாக வெளியிடும்
உன்னத வரிகளே கவிதை எனக் குறிப்பிடுகின்றார்.
தினகரன்,வீரகேசரி,தினக்குரல்,சரிநிகர்,களம்,சுதந்திரன்,கலைமகள்,களம்,கணையாளி,வயல்,மல்லிகை,செங்கதிர்,யாத்திரா,ஆசிரியம்,கவிஞன்,மூன்றாவது மனிதன் போன்ற
செய்தித்தாள்களிலும் இதழ்களிலும் மு.சடாட்சரனின் கவிதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன
என்பதும் குறிப்பிடத்தக்கது.
மு.சடாட்சரனின் மேட்டுநிலம் சிறுகதைத்
தொகுதியானது புரவலர் புத்தக பூங்கா வெளியீடாக 2009
இல் வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது ,கிழக்கு
மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் இலக்கிய நூலுக்கான பரிசையும் பெற்றுள்ளது
என்பதும் குறிப்பிடத்தக்கது. மேட்டு நிலம் எனும் சிறுகதைத் தொகுதியில் அழியாத
ஓவியம்,பிடிப்பு,கடல்
பொய்க்கிறது,பச்சமண்,மேட்டுநிலம்,அழைப்பு,மாற்றம்,சுமை,ஒற்றைப் பனை,விழிப்பு,வெளிச்சம்
போன்ற பதினொரு கதைகளை தரிசிக்க முடியும்.இவற்றுள் பச்சமண்,சுமை
போன்ற கதைகள், மருதமுனை ஏ.எம்.பாறுக் என்பவரால்
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலப் பத்திரிகையில் (டெய்லி நியூஸ்)
பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கிராமத்து பாடசாலை ஒன்றிற்கு ஆசையோடு
இடம்மாறி வந்த ஆசிரியர் ஒருவரை முதன்மைப்படுத்தி ,ஈழத்தில்
எங்கோ ஒரு சிறு கிராமத்திலிருந்த பாடசாலையையும் அதனைச் சூழவுள்ள மக்கள் சிலரையும்
தத்ரூபமாக படம்பிடித்துக்காட்டுகிறது.ஈழத்தில் தமிழ்க் கிராமங்களில் இப்படியும்
பாடசாலைகள் இருந்தனவா என்று வியப்பை ஏற்படுத்தும் வண்ணம் மேட்டுநிலம் கதை
அமைந்திருந்தது.
குழந்தைகளை முதன்மைப் பாத்திரமாக்கி
அவர்களது உளவியல் அறிவையும் பேச்சு மொழியையும் புடம்போட்டுக் காட்டும் வகையில்
குழந்தை உலகம் சார்ந்ததாக பச்சமண் என்ற கதை அமைந்துள்ளது.
மாட்டுவண்டிக்காரன் என்ற பாத்திரத்தின்
குணாதிசயங்களை உளவியல் நோக்கிலும் உலகியல் நோக்கிலும் அணுகப்படுவதாக பிடிப்பு
எனும் கதை அமைந்துள்ளது.அன்றாட குடும்ப வாழ்வினை களமாகக் கொண்டதாக ஒற்றைப் பனை
எனும் கதை அமைகிறது.கடல் பொய்க்கிறது எனும் கதையின் ஊடாக புதியதொரு கிராமியப்
பெண்ணை அறிமுகப்படுத்தி வாசகருக்கு வியப்பூட்டி அதிர்ச்சியளிக்க வைக்கிறார்.
சாதாரண சம்பங்கள் கூட தத்துவத்தை
ஆதாரமாகக் கொண்டு அமைந்து கிடத்தல் அதிசயந்தான் என்ற இ.முருகையனின் வரிகளுக்கு
சான்று பகிர்வது போல் மு.சாடாட்சரனின் விழிப்பு சிறுகதையானது நாம் அவதானிக்கத்
தவறிய வாழ்வியல் உண்மையொன்றை தரிசிக்க வைப்பதாகவுள்ளது.காதல் பற்றிய கதையாகவே
அழியாத ஒவியம் எனும் கதையுள்ளது.வெளிச்சம்,சுமைகள்,அழைப்பு,மாற்றம் போன்ற சிறுகதைகள் நிதானமான
வாசிப்புக்குரிய கதைகளாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்ச்சிறுகதையின் மூலவர்களாக பலர்
இருந்தாலும் புதுமைப்பித்தனும்,கு.ப.ராஜகோபாலுமே எமது சிறுகதை
இலக்கியத்துக்கு புதிய பரிமாணத்தையும் செழுமையையும் நிலை நிறுத்தி வளம் சேர்த்தனர்
என்றால் மிகையாகாது.அந்த வகையில் மு.சாடாட்சரனின் மேட்டு நிலம் தொகுப்பிலுள்ள
சிறுகதைகள் வௌ;வேறுபட்டனவாக அமைந்து புதிய அனுபவ
உலகத்திற்கு எம்மை அழைத்துச் செல்லும் சிறுகதைகளாகவுள்ளன.ஈழத்துச் சிறுகதையுலக
வரலாற்றில் தனக்கென ஒரு பாணியினையும் நிலையான இடத்தினையும் மு.சாடாட்சரனின்
சிறுகதைகள் பெறுபனவாகவுள்ளன.
நீலாவணனின் தலைமையிலான எழுத்தாளர்கள் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கல்முனையிலிருந்து தரமான இலக்கிய
சஞ்சிகையொன்று வெளிவரவேண்டும் என்று கனவு கண்டனர்.அக்கனவு 1967 இல் பாடும் மீன் சஞ்சிகை மூலமாக பலித்தது என்பதை கிழக்கிலங்கைச்
சமூகமே அறியும்.
கல்முனை தமிழ் இலக்கியக் கழகத் தலைவராக
சண்முகம் சிவலிங்கமும் செயலாளராக மு.சடாட்சரனும் பத்திரிகையாசிரியராக நீலாவணனும்
செயற்பட்டு கிழக்கிலங்கையிலே முதன் முதலாக பாடும்மீன் சஞ்சிகையை வெளியிட்ட பெருமை
தமிழ் இலக்கியக் கழக செயற் குழு அங்கத்தவர்களையே சாரும்.
பாடும்மீன் என்ற இதழானது மாசி 1967 இல் வெளியானது.பாடுமீன் சஞ்சிகையானது பண் -01, பண் -02 எனும் இரு இதழ்களே வெளிவந்துள்ள
நிலையில் நிதிப்பற்றாக்குறை போன்ற இன்னோன்னரன்ன சூழ்நிலையில் பாடும்மீன்
வெளிவருவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கவில்லை. “கிழக்கிலங்கையிலே முதன் முதலாக
வெளிவந்த சஞ்சிகை எனும் பரிமாணத்தை பாடும்மீன் பெறுவதாகவுள்ளது”.
பாடும்மீன் - 01
இல் வ.அ.இராசரத்தினத்தின் அவசரம் என்ற கதையும் மு.சடாட்சரனின் பிடிப்பு எனும்
கதையும் சண்முகம் சிவலிங்கத்தின்(சசி)
உறவு எனும் கதையும் நீலாவணனின்(வேதாந்தன்) நெருஞ்சி முள் என்ற கதையும்
உள்ளடங்குகின்றது.
மு.சாடாட்சரனின் கதைகள் பெரும்பாலும்
மனித சமூதாயத்தை பேசுவதாகவுள்ளது.அதாவது வாழ்ந்த பிரதேசத்திலும் சேவையாற்றிய
காலத்திலும் தான் கண்டதையும் தனக்கு தாக்கியதையும் வாழ்க்கை கற்றுக்கொடுத்தவற்றையுமே
கதையாகவும் கவிதையாகவும் படைத்துள்ளார்.
சிறந்த மரபுக் கவிதைகளையும் தரமான
புதுக் கவிதைகளையும் எழுதியுள்ள மு.சடாட்சரன் அவர்கள் நாடகஆக்கம்,நடிப்பு,மேடைப்பேச்சு,சஞ்சிகை
வெளியீடு எனப் பன்முக ஆற்றல் கொண்டு விளங்கினார் என்றால் மிகையாகாது.நீலாவணனின்
மழைக்கை என்ற பா நாடகத்தில் நடித்துமுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை அரசின் கலாபூஸண விருது,அரச சாகித்திய விருது,கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்
திணைக்கள விருது,கொடகே சாஹித்ய விருது போன்ற பல
விருதுகளை தன்வயப்படுத்தியுள்ளார்.
தன் கவிதைகளோடு அனைவரும் மகிழ்ந்து
வாழ்கின்ற ஒரு புத்துலகை ஆக்க முனைந்து வரும் மு.சடாட்சரனின் ஆயுட்கால கவிதைப்
பணியைப் பாராட்டி,கம்பன் புகழ் விருதாளர் கவிக்கோ
அப்துல் ரகுமான்(தமிழ்நாடு) அவர்களால் நிறுவப்பட்ட “மகரந்தச சிறகு விருதினை” 2016.03.24 அன்று கொழும்பு கம்பன் கழக பெருந்தலைவர் நீதியரசர் மாண்புமிகு
ஜெ.விஸ்வநாதன் அவர்களால் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மகான்களை,மகாத்மாக்களை,மேதைகளை மற்றும் கலைஞர்களை அவர்கள் இறந்த பின், அவர்களை மகான்கள்,மேதைகள் என்று நினைவு கூர்வதை விடுத்து
அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் போதே,இவ்வுலகத்துக்காக
அவர்கள் செய்த அளப்பரிய சேவைகளை உலகறிய பாராட்டிப் போற்றுவது, அவர்களது கலையிலக்கிய வாழ்வுக்கு நாம் கொடுக்கும் உள ஆறுதலாகவும்
ஊக்கப்படுத்தலாகவும் அமையும் என்றால் மிகையாகாது.
பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி)
துறைநீலாவணை
தொடர்புகளுக்கு :- 0756365663
No comments:
Post a Comment