.
அமைதியான அந்த ஊரிலே அமைதியான மனிதர்களுக்குள்ளும் அமைதியானவளாக அவள் இருந்தாள்.
அவளுடைய பிறப்பு உலகத்தில் என்ன, அந்த ஊரிலேயே, ஏன் அவள் வீட்டிலேயே ஒரு சம்பவமாகக் கருதப் படவில்லை. ஆறு பெண்கள் மற்றும் ஐந்து ஆண் சகோதரர்களில் நட்ட நடுவில் பிறந்தவள் அவள். அவளுடைய பிறந்த நாளை யாரும் கொண்டாடவில்லை. அவளுடைய ஆத்தையோ அப்புவோ அவளுக்குச் செல்வத்தையோ கல்வியையோ இம்மியளவும் வைத்து விட்டுப் போகவில்லை.
அந்த நாட்டை வெளியிலிருந்து தாக்கிய வியாதிகளுக்கோ, அல்லது உள்ளிருந்து அரித்த புற்று நோய்களுக்கோ அந்த ஊரும் விதிவிலக்கல்ல. அந்த ஊருக்குத் தலைவரென இருந்த சிதம்பரம்பிள்ளை வாத்தியார் வெட்டுக்கொத்துகளுக்குப் போகாதவர். நல்ல மனிதர் என்று கூடச் சொல்லலாம். ஆனால் அவர் பழைமை வாதி. தனிப்பட்ட ரீதியில் யாருக்கும் துன்பம் செய்யாதவர் ஆனாலும், பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து வருகின்ற வழக்கங்கள் யாருக்கும் துன்பம் தருகின்றனவா என்று யோசிப்பதற்கும் அவர் போகவில்லை.
எனவே அவளுடைய குடும்பம் இன்னும் இன்னொருவர் காணியின் ஓலைக் கொட்டிலிலேயே இருந்தது. அவள் வியர்வை ஊதியத்துக்கு இன்றி, நெல்லுக்கும், மிஞ்சிய உணவுக்கும், காய்கறிகளுக்கும், கிடைக்கிற புதிய அல்லது பாவித்த கைத்தறிச் சேலைகளுக்குமாகவே இன்னும் இருந்தது. அவளுடைய மக்கள் இன்னும் கோயில்களுக்கு வெளியே நிற்கவும், சிரட்டைகளில் தேநீர் அருந்தவும், தோள் சால்வையைக் கமக்கட்டில் இடுக்கிக் கூனிக் குறுகவும் வேண்டி இருந்தது.
அவளுக்குப் பதினாறு வயதானபோது, அவளுடைய மாமன் பக்கத்து ஊரிலிருந்து ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்து சோறு குடுப்பித்து விட்டான். இப்படிப் பரிமாறலால் வந்த பந்தம் அதிக காலம் நீடிக்கவில்லை. அவளுடைய முதல் குழந்தை வயிற்றில் இருக்கும் போதே அவளது புருஷன் இறந்து போனான். பிறந்த குழந்தையும் சில வருடங்களில் இறந்து விட்டது.
இதையெல்லாம் கூட அவள் அவ்வளவு பெரிதாக எடுக்கவில்லை. கொஞ்சம் அழுது விட்டு, 'ஊர் உலகத்திலை நடக்கிறது தானை' என்று அமைதிப் பட்டு விட்டாள். மெய்யாகவுமே, அவள் ஊர்ப் பெண்கள் பலரின் வாழ்க்கைக் கதைகள் அப்படித் தான் இருந்தன. எனவே, அவளுக்குப் பெரிய அனுதாபமும் யாரும் காட்டவில்லை. ஆனால், சின்னக் குழந்தைகள் என்றால் அவளுக்கு அப்படி ஒரு பாசம். தன் சகோதரங்களுக்குப் பிள்ளைகள் பிறந்த போது, அவர்களை வளர்த்து அவர்களின் மழலையில் அவள் அமைதி கண்டாள். மீதி நேரத்தில் சிதம்பரப் பிள்ளை உபாத்தியாயரின் மனைவிக்குத் தொண்டு செய்து, அவள் கொடுப்பதை (ஏச்சுகள் வசவுகள் உட்பட) வாங்கிக் கொண்டு வருவாள். நாளடைவில் அவள் பெயர் கூட எல்லாருக்கும் மறந்து போயிற்று. அவளது தம்பி கதிரன் கொஞ்சம் கடின உழைப்பாளி ஆனதால், "கதிரன்ரை தமக்கை" என்றே அவள் பரவலாக அறியப் பட்டாள்.
சிதம்பரப் பிள்ளை உபாத்தியாயருக்குப், பல காலம் தவமிருந்த பின்னர், இராஜகுலேந்திரன் என்ற மகன் பிறந்தான். உபாத்தியாயரின் குலக் கொழுந்தைச் சீராட்டித் தாலாட்ட இவளை யாரும் கூப்பிடவில்லை. தூரத்தில் நின்று பார்த்து மகிழ்வாள். குழந்தையும் இவளைக் கவனமாகப் பார்க்கும்.
ஒருமுறை, இவள் உபாத்தியாயர் வீட்டு முற்றத்திற்குப் போன போது குழந்தை திண்ணையிலே விளையாடிக் கொண்டிருந்தது. உபாத்தியாயர் மனைவி அப்போது தான் உள்ளே போயிருக்க வேண்டும். குழந்தை இவளைக் கண்டதும் சிரித்துக் கொண்டே இரண்டு கைகளையும் நீட்டிற்று. இவளும் உள்ளே சுரந்த அன்பினால் கைகளை நீட்டிக் கொண்டே "தம்பி, அக்கையிட்டை வரவாக்கும்" என்று கூப்பிட்டு விட்டாள். சோற்றுக் கிண்ணத்தோடு வெளியே வந்த உபாத்தியாயர் மனைவி காதில் இது வீழ்ந்து விட்டது.
"என்னடி? அவன் உனக்குத் தம்பியோ? நீ அவனுக்கு அக்காவாகி விட்டியோ? வர வர உங்களுக்குக் கண் கடை தெரியேல்லை. தொடப்பிடாது நீ அவன் மேலை" என்று எரிந்து விழுந்தாள் 'நயினாத்தி'.
இவள் ஒன்றும் பதில் பேசவில்லை. தலையைக் குனிந்து கொண்டு வந்து விட்டாள். அதன் பிறகும் இவள் உபாத்தியாயர் மனைவிக்குத் தொண்டு செய்யப் போவதை நிறுத்தவில்லை. ஆனால், குழந்தையோடு விளையாடவோ, பேச்சுக் கொடுக்கவோ போவதில்லை.
பாறைகளைப் புரட்டிக் கொண்டும் பள்ளங்களை நிரப்பிக் கொண்டும் கால நதி வேகமாக ஓடியது. சிதம்பரப் பிள்ளை உபாத்தியாயரின் புதல்வர் இராஜகுலேந்திரன் மருத்துவப் படிப்பு முடித்து, மேற்படிப்புக்காக அமெரிக்கா போய் விட்டார். பக்கத்தூர்களில் நடந்த மாற்றங்களின் பாதிப்புகள் அந்த ஊரிலும் வந்து எட்டின. அவளது மக்களும் வேலைக்கேற்ற ஊதியமும், மனிதருக்குரிய மதிப்பும் கேட்க ஆரம்பித்தார்கள். நாலு எழுத்துப் படித்தார்கள். தமக்கென்று கோயில் கட்டினார்கள். எதுக்குச் சால்வையை எடுக்க வேணும்? ஏன் சிரட்டையிலை குடிக்க வேணும்?" என்று கோபப்பட்டார்கள்.
அவர்களின் கோபம் நியாயமானது என்று அவளுக்குப் புரிந்தது. ஆனால், அவளுடைய மனத்தில் அந்தக் கோபம் இருக்கவில்லை. அமைதி இருந்தது. அவளுக்கு எதுவும் தேவையாயிருக்கவில்லை. ஆகவே, யாரையும் தூக்கி எறிந்து பேச வேண்டும் என்றோ, யாருக்கும் தான் சமானம் என்று நிரூபிக்க வேண்டும் என்றோ அவளுக்குத் தோன்றவில்லை. இருந்த படியே இருந்தாள். எப்போதும் பேசியது போலவே பேசினாள். என்றும் நடந்தது போலவே நடந்தாள்.
டொக்டர் இராஜகுலேந்திரன் அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாநிலத்தில் செட்டில் ஆனார். 'டாக். ராஜா குலென்றன்' என்று பெயரைப் பிரித்து எழுதப் பழகிக் கொண்டார். 'லிசா நியூமன்' என்ற வெள்ளையினப் பெண்மணியை மணந்து 'லிசா குலென்றன்' ஆக்கி வைத்தார். கான்சர் மருத்துவ நிபுணராகவும் வந்தார்.
பத்து வருட மண வாழ்வின் பின் டாக்டரின் வாழ்க்கையில் விரிசல் கண்டது. டொக்டர் அதிக நேரம் தொழிலில் செலவழிப்பதாகவும், தன்னைக் கவனிப்பதில்லையென்றும் லிசா குற்றம் சொல்லத் தொடங்கினாள். உண்மையில், கொஞ்சம் வயதாகி வழுக்கை விழத் தொடங்கியிருந்த டொக்டரில் அவளுக்குள் கொஞ்சம் அலுப்புத் தட்டி இருந்தது. தங்கள் ரோஜாத் தோட்டத்தைப் பராமரிக்க வந்து கொண்டிருந்த மார்ட்டின் இளமையாகவும் கட்டுமஸ்தாகவும் அவளுக்குத் தோன்றினான். சும்மா சொல்லக் கூடாது, லிசா எதையும் முறைப்படி செய்பவள். சொல்லாமல் கொள்ளாமல் மார்டினுடன் அவள் ஓடி டாக்டரின் மானத்தை வாங்கி விடவில்லை. முறைப்படி விவாகரத்து நோட்டிஸ் அனுப்பி விட்டாள்.
டாக்டர் கொஞ்ச நாள் குடித்தார். மேலே என்ன செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை. ஊர் ஞாபகம் வந்தது. ஒரு 'சேஞ்சுக்கு' தன் பிறந்த ஊர் போய் வர முடிவு செய்தார்.
டாக்டர் ஊர் வந்து சேர்ந்த போது, அவருடைய தோட்டக் காணிகளில் ஒன்றில் வெங்காய விதைப்பு நடந்து கொண்டிருந்தது. கொஞ்சம் காற்று வாங்குவோம் என்று டொக்டர் அந்தக் காணிக்குள் போய் நின்றார். கிணற்றில் இருந்து இறைக்கப்பட்டு ஓடி வந்த குளிர்ந்த நீர் டாக்டரின் கால்களை நனைத்தது.
விதைப்பு வேலை செய்ய வந்த பெண்கள் மதியச் சாப்பாட்டின் பின் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களில் இருந்து சற்று விலகி, ஒரு புளிய மர நிழலில் ஒரு 'குறுக்குக் கட்டிய' தொண்டு கிழவி இருந்தாள். 'எணெய், வாத்தியாற்றை மகன் வெளி நாட்டாலை வந்திருக்கிறார், பாரணை!" என்று யாரோ சொல்லவும், அவள் எழுந்து, சுருக்கம் விழுந்த கைகளால் வெயிலை மறைத்துக் கொண்டு கூர்ந்து பார்த்தாள்.
டாக்டர் கொஞ்சம் கிட்டச் சென்றார் - மரத்தடி நிழலில் தானும் நிற்கலாமே என்பதற்காகவும்.
அவள் கும்பிட்டாள்.
"இது கதிரன்ரை தமக்கை. சின்னனிலை கண்டிருப்பியளே.." யாரோ அறிமுகப் படுத்தினார்கள்.
டாக்டருக்குக் கதிரனையோ அவன் தமக்கையையோ ஞாபகம் இல்லை. இருந்தாலும், உயர்ந்த கல்வியும் மேல்நாட்டு வாழ்வும் தந்த நாகரீகத்தால், 'லெட் மீ பீ நைஸ்' என்று நினைத்தார். "ஓம், ஓம், கொஞ்சம் ஞாபகம் இருக்கு. எப்பிடி, சுகமா இருக்கிறீங்களா?" என்று கேட்டு வைத்தார்.
"தாங்கள் எங்கையோ பெரிய நாட்டிலை இருக்கிறதெண்டு கேள்விப் பட்டனான் ஆக்கும். இனிமேல் காணுவன் எண்டு நினைக்கேல்லை யாக்கும். தங்களை ஒருக்காக் கண்டிட்டன். இனி நான் செத்தாலும் பறவாயில்லை!"
கிழவி சிரித்துக் கொண்டு தான் இதைச் சொன்னாள்.
டாக்டர் அழுதுவிட்டார்.
No comments:
Post a Comment