செல்வி வைஷாலி யோகராஜாவின் இசைக் கச்சேரிகள் - திருமதி மாலதி சிவசீலன்

.


அண்மையில் இலங்கையிலிருந்து வருகைதந்த செல்வி வைஷாலி யோகராஜா அவர்கள் சிட்னியில் இரண்டு கர்நாடக இசை கச்சேரிகளை வழங்கினார்.
செல்வி வைஷாலி சிறுவயதிலிருந்தே கர்நாடக இசையை பயின்று வருகிறார். இவர் இலங்கையில் பல விருதுகளையும், பாரட்டுக்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக 2014ம் ஆண்டுககான 'ஜீனியா சுப்பர் ஸ்டார்' விருதினையும், 2015ம், 2016ம் ஆண்டுக்கான 'Best Solo Singer' என்ற ஜனாதிபதி விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (4/12/2016) அன்று திரு திருமதி கேதீஸ்வரனின் யோகராஜனின் இல்லத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட செல்வி வைஷாலி யோகராஜனின்  கர்நாடக இசைக் கச்சேரிக்கு சங்கீத ஆசிரியையான என்னையும் அழைத்திருந்ததின் பேரில் அங்கு சென்றிருந்தேன். அங்கு சங்கீத ஆர்வலர்களும், பிரியர்களும், ஆசிரியர்களும் வந்திருந்தார்கள். ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமியின் இசைக் கச்சேரியா? என்ற கேள்வுடன் தான் நான் அங்கு சென்றிருந்தேன். இரண்டு வீணைகளும், ஒரு தம்புராவும் அலங்கரித்த ஒரு மேடை ஒழுங்கில் பக்கவாத்தியக் கலைஞர்களான திரு கிராந்தி கிரன் முடிகொண்டா அவர்கள் வயலினுடனும், திரு  சந்தானக்கிருஷ்ணன் சிவசங்கரி அவர்கள் மிருதங்கத்துடனும் அமர்திருக்க, பாவாடை சட்டையுடன் அவைக்கு வணக்கம் சொல்லி வைஷாலி அவர்கள் 'ஹம் கணபதே' என்ற ஹரிகேச நல்லூர் முத்தையா கிருதியை அந்தச் சிறுமி அவைக்காற்றிய முறையில் இது இந்த வயதுக்குரிய ஆற்றல் அல்ல என்பதையும், அதற்கு மேலாக தெய்வத்தின் ஆசி பெற்ற ஒரு 'ஞானக்குழந்தை' இவர் என்பதை புரிந்து கொண்டேன். அதன் பின் 'கற்பக மனோகரா' என்ற பாபநாசம் சிவனின் மலையமாருத கிருதியைப் பாடி முழு சபையையும் தன் இனிய குரலினால் கட்டிப் போட்டார்.


இவற்றை தொடர்ந்து சிறிய இராக ஆலாயனையுடன் 'உனை அல்லால் வேறே கதி இல்லை அம்மா' என்ற பாசநாசம் சிவனின் கல்யாணி இராகத்தில் அமைந்த கிருதியை பாடி, சிட்டை ஸ்வரத்தை திஸ்ரப் படுத்தி பாடியது அந்தச் சிறுமியின் தாளலயத்தின் நேர்த்தியை மிகவும் துல்லியமாக எடுத்துக் காட்டியது. தொடர்ந்து பிலகரி இராகத்தில் அமைந்த 'கண்ணனைத் திறந்து பார் மனமே' என்ற ஊத்துக்காடு வெங்கடகவியின் கிருதியை பாடி சபையோரின் உள்ளக் கண்களை திறந்துவிட்டார் சிறுமி வைஷாலி.

கச்சேரியின் பிரதான உருப்படியாக 'வரமுலசகி' என்ற பட்டணம் சுப்பிரமணி ஐயரின் கீரவாணி இராகத்தில் அமைந்த கிருதியை விஸ்தாரமான இராக ஆலாபனையுடன் ஆரம்பித்து அவ்விராகத்துக்குரிய சகல அம்சங்களையும் வெளிப்படுத்தி திரிகாலத்தில் அவ்விராகத்தை கையாண்ட முறை மிகவும் அபரிமிதமானது. அவரது சாரீர அமைப்பு எதையும் இலகுவாக பாட உகந்ததாக  அமைந்திருப்பது அவருக்கு இறைவனால் கிடைத்த ஒரு கொடை என்றே சொல்லலாம். ஜண்டை பிரயோகங்களைiயும் பிருக்கா பிரயோகங்களையும் தேவையான இடங்களில் மிகவும் நேர்த்தியா இவர் கையாண்ட முறை சங்கீதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற பாடகர் பாடுவதைப் போன்றே செவிகளுக்கு மிகவும் இன்பமாக இருந்தது. சரணத்தில் நிரவல் செய்து கற்பனை ஸ்வவீகளை சரளமாகப் பாடி அப் உருப்படியை முழுமையாகப் பாடி நினவு செய்தார்.


தொடர்ந்து இவர் பாடிய 'தாயிற் சிறந்த' என்ற விருத்தம் இராகமாலிகையா அமைந்திருந்தது. சிம்மேந்திர மத்தியம் சாவேரி, ஜோன்புரி ஆகிய இராகங்களை இவர் மிகவும் கச்சிதமாகவும், சுத்தமாகவும், இனிமையாகவும் பாடி 'எப்போ வருவாரோ' என்ற கோபால கிருஷ்ண பாரதியின் ஜோன் புரி  இராகத்தில் அமைந்த பாடலைப் பாடி கரஒலிகளையும், பாராட்டுதல்களையும் பெற்றது குறிப்பிடப்படவேண்டிய தொன்றாகும்.
அதைத்தொடர்ந்து 'மண்ணாகி விண்ணாகி' என்ற விருத்தத்தை சிந்து பைரவி இராகத்தில் பாடி அவ்விராகத்திலேயே மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 'தேடி உன்னை சரணடைந்னே;' எனும் பாடலை நெஞ்சுருகப் பாடி சபையோரின் ஏகோபித்த கரகோஷத்தை அள்ளி வாரிக் கொண்டார். கண்களை மூடி இப்பாடலைக் கேட்டு ரசித்த போது இது சுதா ரகுநாதனாகவோ, சின்மாயா சகோதரிகளாகவோ பாடுவதாகத்தான் தோன்றியது.
அதனை தொடர்ந்து திரு லால்குடி அவர்கள் இயற்றிய மதுவந்தி இராகத் தில்லானாவை மிகவும் விறுவிறுப்பாக பாடி அதன் பின் சுரட்டி இராகத்தில் மங்களம் பாடி அன்றைய கச்சேரியை நிறைவு செய்தார். இவர் பக்கவாத்தியங்களை அனுசரித்து பாடியது மிகவும் பாராட்டத்தக்கது.
திரு கிராந்தி கிரண் அவர்களின் வயலினும் திரு சிவசங்கரின் மிருதங்கமும் மிகவும் நேர்ததியாக  வைசாலியுடன் இணைந்து போனது மிகவும் இரசிக்கத் தக்கதாகஇருந்தது.இதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை  09 12 2016 அன்று  சிட்னி முருகன் சைவ மன்றத்தினால் கலாசார மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட " முருகன் பாமாலை " என்ற தலைப்புடன் இவரது இரண்டாவது கச்சேரி கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சைவ மன்றத் தலைவர் திரு கேதீஸ்வரனும் அவரது பாரியாரும் குத்து விளக்கேற்றி இன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். இச் சிறுமியின் இசைக் கச்சேரியை செவிகுளிர கேட்க  அரங்கம் முழுவதுமே அணி திரண்ட காட்சி வைசாலி ஜோகராஜாவின் எதிர் காலம் எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டியது .

ஸரஸ்ஹிருக்ஹ என்ற நாட்டை ரகத்தில் அமைந்த புலியூர் துரைசுவாமி ஐயரது கிருதியுடன் இவர் கச்சேரியை ஆரம்பித்தார் .இதனைத் தொடர்ந்து " வேளை அறிந்தே சொல்லுவாய் " என்ற கல்யாணி இராகக் கிருதியை மிகவும் அழகாகப் பாடி சபையினை மெய் மறக்கச் செய்தார். பின் பாபநாசம் சிவனின் " நெக்குருகி "" என்ற ஆபோகி இராக கிருதியையும் , அதனைத் தொடர்ந்து "தாமதம் தகாதையா "  என்ற மோகன கல்யாணி இராகத்தில் முருகன் பேரில் அமைந்த கிருதியை இராக பாவத்துடன் பாடினார் .


இக் கச்சேரியின் பிரதான உருப்படியாக சுவாமி அருணகிரிநாதர்  இயற்றிய "கனகசபை" என்ற திருப்புகழைத் தேர்ந்தெடுத்து "மத்திய மாவதி " இராகத்தில் விஸ்தாரமான இராக ஆலாபனை செய்து திருப்புகழின் இறுதியில் கற்பனை ஸ்வரம் பாடி தமிழிசை விரும்பிகளை மிகவும் உற்சாகப் படுத்தினார். எதுவித சபைக் கூச்சமும் இன்றி அவைக்காற்றிய இசை  இன்னும் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டு இருக்கிறது. பக்க வாத்தியத்தில் கிரண் முடிகொண்டா வயலினிலும் பவானந் சிவகரன் மிருதங்கத்திலும் மிகவும் அனுசரணையுடன் வாசித்தமை குறிப்பிடத் தக்கது.
 தொடர்ந்து "ஒருதரம் சரவணா பவ " என்ற விருத்தத்தை " ஹரஹரப்பிரியா , பூர்வ கல்யாணி , மதுவந்தி ஆகிய ராகங்களில் பாடி கண்ட நாள் முதல் என்ற மதுவந்தி இராக கிருதியைப் பாடி எல்லோரது கரகோசத்தையும் பெற்றார் .அதனைத் தொடர்ந்து அனைவரது வேண்டுகோளுக்கு இணங்க விசாலியின் தாயார் திருமதி நீதிமதி யோகராஜா அனைவருக்கும் பரீட்சயமான " என்ன கவி பாடினாலும் " என்ற நீலமணி இராக பாடலைப் பாடி எல்லோரது கரகோசத்தையும் பெற்றார் .

கச்சேரியில் நிறைவாக வைசாலி அவர்கள் லால்குடி ஜெயராமனின் தேஷ் இராக தில்லானாவை பாடி பின் மத்திய மாவதி இராகத்தில் புராணம் பாடி இசைக் கச்சேரியை நிறைவு செய்தார்.

வைசாலி ஜோகராஜனின் இசையின் பிபுலத்தை குறிப்பிட விரும்புகிறேன் . இவரது தாய் திருமதி நீதிமதி யோகராஜா இசையை முறையாக பயின்று தனது மகளுக்கு தானே குருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் யாழ்ப்பாணத்தில் அளவெட்டி என்ற ஊரில் ஓர் இசை குடும்பத்தில் பிறந்தவர் தந்தை யோகராஜா அவர்கள் சங்கீதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. வைசாலி தாயின் கருவிலேயே சங்கீதத்தைக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறார் என்பது இவர் பாடும்போது தெரிகிறது .

இலங்கையைச் சேர்ந்த ஒரு சிறுமியின் இசைத் திறமை ஒவ்வொரு ஈழத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கிறது. வைசாலி அவர்கள் இசையில் மேலும் தேர்ச்சி பெற்று பல இசைக் கச்சேரிகளை செய்ய வேண்டும் என வாழ்த்துகிறேன். அவரது இரண்டு கச்சேரிகளும் ஒரு இனிய தென்றல் எம்மை வருடிச் செல்வது போன்று அமைந்திருந்தது. இக் கச்சேரிகளை கேட்டு ரசிக்க சந்தர்ப்பம் அளித்த இறைவனுக்கு கோடி நன்றிகள்.
No comments: