இலங்கையில் பாரதி (அங்கம் 02) - முருகபூபதி

.
பாரதியின்  ஈழத்து  ஞானகுரு !  -  யார்  இந்த  யாழ்ப்பாணத்துச்சாமி ...?
அருளம்பலம்  சாமியா...? ஆறுமுகம் சாமியா...?பிரிட்டிஷாரின்  அடக்கு முறையினால்         புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்த பாரதிக்கு,  இங்கும்   பல நண்பர்கள் கிடைத்தார்கள்.
அவர்களில் கிருஷ்ணமாச்சாரியார்  என்னும்   இயற்பெயர்கொண்ட குவளைக்கண்ணன்  முக்கியமானவர்.  இவர்தான் பின்னாளில் 1921 செப்டெம்பர்  மாதம்  பாரதியை  திருவல்லிக்கேணி  பார்த்தசாரதி கோயிலில்  இருந்த  மதம்  பிடித்த  யானையிடமிருந்து காப்பாற்றியவர்.
மனைவி  செல்லம்மா  அயல்வீட்டிலிருந்து  கடனாக  வாங்கிவந்த அரிசியையும் " காக்கை  குருவி  எங்கள் ஜாதி "  என்று  பாடி காகங்களுக்கு  அள்ளித்தூவிய  இரக்கமுள்ள  பாரதி,  கோயில் யானைக்கு  வாழைப்பழமும் தேங்காயும் கொடுத்தது  ஆச்சரியமில்லை.
காகம்  குருவிகளுக்கு  மதம்  பிடிக்காது.  பாரதியை  அவை கொத்தவில்லை.  அந்தக்கோயில்  யானைக்கு  மதம் பிடித்திருந்தது பாரதிக்குத்  தெரிய நியாயம்  இல்லை.
குவளைக்கண்ணன்  கண்ணிமைக்கும்  நேரத்தில்  அங்கு  குதித்து அவரை  காப்பாற்றினாலும், அதன்  பின்னர்  அந்த  அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே வயிற்றுவலி  கண்டு  அதே  செப்டம்பர்  மாதம்  பாரதி  மறைந்தார்.
 இறுதியாத்திரையில்  சென்ற  விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்களில்  தேம்பித் தேம்பி  அழுதுகொண்டு  வந்த  குவளைக்கண்ணன்,  புதுவையிலிருந்து   சென்னை வரையில் பாரதியின்  நெருக்கமான  நண்பராகவிருந்தார்.
இவர்தான்  புதுவையில்  பாரதிக்கு  எங்கள்  யாழ்ப்பாணத்துச்சாமியை அறிமுகப்படுத்தியவர்.
பாரதி  தமது  சுயசரிதையில்  இந்தச்சாமி  பற்றி இவ்வாறு சொல்கிறார்:
     "  குவலயத்தின் விழி போன்ற யாழ்ப்பாணத்தான்,  தேவிபதம் மறவாத  தீர  ஞானி   சிதம்பரத்து  நடராஜ  மூர்த்தியாவான்    பாவியரைக்  கரையேற்றும்  ஞானத்தோணி,   பரமபத வாயிலெனும் பார்வையாளன்,  காவி வளர் தடங்களிலே  மீன்கள்  பாயும்  கழனிகள் சூழ்  புதுவையிலே  அவனைக்கண்டேன் "


இவ்வாறு  பாரதி  தனது  சுயசரிதை  எழுதுவதற்கும்  தூண்டுகோளாக இருந்தவர்தான்  குவளைக்கண்ணன்.
பாரதி  புதுவைக்கு  வந்ததும்  முதலில்  வீடுகொடுத்து  அடைக்கலம் தந்த  குப்புசாமி  அய்யங்காரின்  உறவினர்தான்  குவளைக்கண்ணன். புதுவையில்  பாரதி  வெளியிட்ட  இந்தியா  பத்திரிகையின் வாசகரான  குவளைக்கண்ணன்,  பாரதியின்  அந்த வாடகைக்குடியிருப்புக்கு  வரும்போதெல்லாம்,  நாலாயிர  திவ்விய பிரபந்தத்தை  பாடுவது  வழக்கம்.
"பத்து  ஆழ்வார்கள்  பாடிய  பாடல்களின்  தொகுப்புத்தான் நாலாயிரம்"  என்று  குவளைக்கண்ணன்  சொன்னதும், பாரதிக்கு உற்சாகம்  பிறந்துவிட்டது.
" அவர்கள்  பத்துப்பேர்  சேர்ந்து  பாடினார்கள்.  இதோ பார்... நான் தனிஒருவனாக   ஆறாயிரம்   பாடிக்காட்டுகின்றேன்." எனச்சவால் விட்டு, பாரதி பாடியதுதான் பின்னாளில்  பாரதி அறுபத்தாறு  என்ற தலைப்பில்  வெளியாகின்றன.


இதில்  என்ன  வித்தியாசம்...? ஆழ்வார்கள்  தங்கள் இறைவனைப்புகழ்ந்து   பாடினார்கள்.  ஆனால், பாரதி தான் சந்தித்த நண்பர்களையும்  சித்தர்களையும்   புகழ்ந்து  பாடினார்.
இவ்வாறு  பாரதியிடம்  புதிய  படைப்பை  உருவாக்குவதற்கு காரணமாக  இருந்த  குவளைக்கண்ணனால்  அறிமுகப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணத்துச்சாமி  அருளம்பலம்  அவர்கள், பாரதி திருநெல்வேலி   எட்டயரத்தில்  பிறப்பதற்கு  இரண்டு  வருடங்களுக்கு முன்னர்  அதாவது  1880   இல்  இலங்கையில்  வடபுலத்தில்  அல்வாயில் பிறந்துள்ளார்.
பாரதி  மறைந்து  சுமார் 21  ஆண்டுகளின்  பின்னரே வியாபாரி மூலையில்  சமாதியானார்.
இவர்  பற்றி  பாரதி  மேலும்  இவ்வாறு  சொல்லியிருக்கிறார்:
.... மங்களஞ்சேர்  திருவிழியால்  அருளைப்பெய்யும் வானவர்கோன்,  யாழ்ப்பாணத்தீசன்  தன்னைச்சங்கரனென் றெப்போதும்  முன்னே  கொண்டு  சரணடைந்தால்  அது  கண்டீர்  சர்வசித்தி.
பாரதி  வர்ணித்துப்போற்றியிருக்கும்  இந்த  யாழ்ப்பாணத்தீசன்,  பாரதி  சென்னையில்  1921  இல்  மறையும்போதும்  புதுவையில்தான் வாழ்ந்திருக்கிறார்.
அதன்பின்னர்,  அவர்  இலங்கை  திரும்பி,   மீண்டும்  தமிழகம்  சென்று 1942  ஆம்  ஆண்டளவில்   ஊர்  வந்து  மறைந்தார்.
"பாரதி  பாடிய யாழ்ப்பாணத்துச்சுவாமி " என்னும் தலைப்பில் ச. அம்பிகைபாகன் 06-02-1982 ஆம் திகதி வீரகேசரியில் விரிவான கட்டுரை  எழுதியிருக்கிறார்.
இதில்  கவனிக்கவேண்டியது :  இக்கட்டுரை  பாரதி  நூற்றாண்டு தொடக்க  காலத்தில்  வெளியாகியிருக்கிறது.
பாரதியின்  ஞானகுரு  எமது  இலங்கையர்  என்ற  பெருமை மட்டுமல்ல,  பாரதியின்  பார்வைக்கு  ஒரு  ஞானியாக  தோற்றமளித்த அருளம்பலம்  சாமி  மட்டுமே  பாரதியை  நேரில்  சந்தித்த  ஒரே  ஒரு இலங்கையர்  என்ற  தகவலும்  எமக்கு   கிட்டியிருக்கிறது.


 இவரைப்பற்றிய  மேலும் பல  தகவல்களை பேராசிரியர் பொன் பூலோகசிங்கம்  தனது இந்துக் கலைக்களஞ்சியத்தில் தருகிறார்.
         ( இச்சந்தர்ப்பத்தில்  பேராசிரியர்  பூலோகசிங்கம்  பற்றிய  சமகால தகவல்:   அவர்  தற்பொழுது  முதியவயதில்  நோய்  உபாதைகளுடன்  அவுஸ்திரேலியா  சிட்னியில்  ஒரு  முதியோர்  இல்லத்தில்  இருக்கிறார். )

"  மோனம் அருளம்பலம் வியாபாரிமூலை வேலுப்பிள்ளையின் புதல்வர்.  மேலைப்புலோலி  சைவவித்தியாசாலையிலே  கல்வி கற்றிருக்கிறார். இலங்கையின் பல இடங்களில், குறிப்பாக கம்பளை, மட்டக்களப்பு, வியாபாரிமூலை என்று பல இடங்களில் கடை வேலையாளராக  வேலை பார்த்துத் தோல்வியுற்றவராக, வாழ்க்கையில் விரக்தியடைந்து, ஊரூராகத் திரிந்து, சொந்தவூர் மீண்டார். அங்கும் நிலைக்காது நாகைப்பட்டினம் சென்றார்.
நாகைப்பட்டினத்தில்   நீலலோசனி சந்நிதானத்தில் நிஷ்டை செய்தார். "
பூலோகசிங்கத்தின்  இந்தப்பதிவுடன்  மற்றும்  ஒரு தகவல்:
யாழ்ப்பாணத்துச்சாமி  குறித்து  ஈழத்து  இலக்கிய  உலகின்  மூத்த எழுத்தாளர் அ.ந. கந்தசாமி  ஆராய்ந்து,  அவர்  சமாதியான வியாபாரிமூலையில்  பெருவிழாவுக்கும்  கால் கோள்  நாட்டினார்.
அ.ந. கந்தசாமி  இலங்கை  முற்போக்கு  எழுத்தாளர்  சங்கத்தின்  மூத்த உறுப்பினர்.   அத்துடன்  சங்கத்தின்  கீதமும்  இயற்றியவர்.
இவ்வூரைச்சேர்ந்த  ந. சோமகாந்தன்  ஈழத்தின்  மற்றும்  ஒரு  மூத்த  எழுத்தாளர்.  இவர்  முன்னின்று  அந்த  விழாவை  நடத்தியிருக்கிறார்.
இவ்வாறு  பாரதியின்  ஞானகுரு  ஈழத்து  இலக்கிய  வரலாற்றில்  பல இடங்களில்  பதிவுசெய்யப்பட்டுள்ளார்.
இத்தகைய  வரலாற்றுச்செய்திகளுக்கும்   ஒரு  வில்லங்கம் பின்னாளில்  வந்திருக்கிறது.
"  சுவாமிகள்  07.05.1880  இல் பிறந்ததாக கொள்ள முடிகிறது. சுவாமிகளது  தாயார்  வதிரியை  சேர்ந்த  இலட்சுமி அம்மாள், தந்தையார்  வியாபாரிமூலையை  சேர்ந்த  சின்னையா. வேலுப்பிள்ளை.
வியாபாரிமூலை யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் சமாதி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு சுவாமி அருளானந்தா அவர்கள் தலைமையில் 25.11.2004  இல்  குடமுழுக்கு  செய்யப்பட்டது.  அன்று சுவாமி அருளானந்தா  எமுதிய “யாழ்ப்பாணத்து மௌன குருவின் சரித சுருக்கம் – மீண்டும் அருள்தர வந்தேன்” என்னும் நூலும் வெளியிடப்பட்டது. திரு.பொ.சபாபதிப்பிள்ளை அவர்கள் குலத்தோன்றல்களான டாக்டர் சதானந்தன், திருவாளர்கள் சி.முத்துக்கிருஷ்ணன்,  சா.நவரத்தினராசா போன்றவர்கள் சமாதி ஆலயப் புனருத்தாரணப் பணிக்கு பொருளுதவி புரிந்ததோடு நித்திய பூசைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.
இவ்வளவு  தகவல்களும்  இன்று  இணையத்தின்  வழி  எமக்கு கிடைக்கின்றன.
செங்கை ஆழியானின் நூல் ??? !!!
இவை  இவ்விதமிருக்கையில்,  இலங்கையின்  மூத்த  எழுத்தாளர்  என அறியப்பட்டவரும்  சமூக  மற்றும்  வரலாற்று  நாவல்களும்  ஆய்வுகளும்-  நூறுக்கும் மேற்பட்ட  சிறுகதைகளும்  பல பாட நூல்களும்  எழுதியிருக்கும்  பிரபல  படைப்பாளி  செங்கைஆழியான் கலாநிதி  கந்தையா  குணராசா (  1941 -2016)  தனது தந்தை வழித்தோன்றல்  ஆறுமுகசாமிதான்  பாரதியின்  ஞானகுரு  என்று நிறுவ முயன்றுள்ளார்.
ஈழத்தின்  வரலாற்று  தகவல்களை  தொடர்ந்து பதிவுசெய்த செங்கைஆழியான்,  ஏன் இவ்வாறு   ஒரு  வரலாற்று  திரிபுக்கும் வழிவகுத்தார்   என்பதுதான்  புரியவில்லை.
பாரதி நூற்றாண்டு (1982 - 1983 )  கால கட்டத்தில்  அவர் தமது மூதாதையர் ஆறுமுகசாமிதான் பாரதியின் ஞானகுரு என்று ஆதாரங்களுடன்  நிரூபித்திருந்தால்  அதற்கு  எதிர்வினையாற்ற  பல பாரதி இயல் ஆய்வாளர்கள்  அப்போது  இலங்கையில்  இருந்தார்கள்.
முக்கியமாக பேராசிரியர் க. கைலாசபதி.
காலம் கடந்து  2006  ஆம்  ஆண்டில்  பாரதியின் ஞானகுரு யாழ்ப்பாணத்து  ஆறுமுகசாமி  என்னும்  நூலை  வெளியிட்டு சலசலப்பை   ஏற்படுத்தியிருக்கிறார்.
புனைகதை  எழுதுவதில்  ஆற்றல்  மிக்க  செங்கைஆழியான்,  இந்த ஞானகுரு  விவகாரத்திலும்  புனைகதை  படைத்துவிட்டு விடைபெற்றுவிட்டார்.
பாரதி  வாழ்ந்த  அக்காலப்பகுதியில்  இலங்கையிலும்  இந்தியாவிலும் பல  சாமியார்கள்  வாழ்ந்திருக்கிறார்கள்.    இன்றும்  பல  சாமியார்கள் பணக்கார  சாமியார்களாகியிருக்கின்றனர்.  லீலைகளில்  ஈடுபட்டு அம்பலமானவர்கள்  பற்றி  சொல்லவேண்டியதில்லை.
சிவலிங்கம்  வாயில்  எடுத்து  சித்துவிளையாட்டுக்காட்டி,  இறுதியில் கொலை  உட்பட  பாலியல்  குற்றங்களும்  புரிந்து  சிறைசென்ற சாமிகளும்  இருக்கிறார்கள்.
பாரதி  புதுவையில்  சந்தித்த  சாமி  யாழ்ப்பாணம்  அல்வாய் அருளம்பலம்  சாமி  என்ற  வரலாற்று  தகவலும்,  அந்தச்சாமிக்கு வடமராட்சி  வியாபாரிமூலையில்  ஒரு  சமாதியும்  கோயிலும் இருக்கையில்,   செங்கைஆழியான்,  எதற்காக   பாரதியின்  ஞானகுரு ஆறுமுகசாமி  என்று   நிருவ  முயன்றார்.
செங்கை ஆழியானின்  குறிப்பிட்ட  நூல் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்  கொழும்பில்  யூனி ஆர்ட்ஸ்  அச்சகத்தில்  அச்சாகி வெளியாகியிருக்கிறது.
செங்கைஆழியான்,  குறிப்பிடும்  ஆறுமுகசாமி,  யாழ்ப்பாணம் வண்ணார்  பண்ணை  கிழக்கில்  கலட்டி  அம்மன்கோயிலடியில் வசித்த  கதிரவேலு  - தையலாச்சி  தம்பதியருக்கு 1863  ஆம்  ஆண்டு ஒரு  மழைக்கால  அதிகாலை  வேளையில்  பிறந்திருக்கிறார்.
    தமிழ்நாடு  ஶ்ரீவில்லிபுத்தூர் - சாத்தூர் சாலையில்  வரும்  புளியந்தோப்பு  என்னும்  இடத்தில்  செங்கை ஆழியான் சொல்லும்  அந்த  ஆறுமுகசாமியின்  சமாதிக்கோயில்  இருக்கிறது  என்பதற்கு ஆதாரமான  தகவல்களுடனும்  அவர்  தனது  முந்தாதையர்  என்றும் நிரூபித்து,  எட்டயபுரத்தில்  தமிழ்நாடு  கலை  இலக்கியப்பெருமன்றம் நடத்திய  பாரதி விழாவில்  பங்கேற்று  பகிரங்கமாக  தான்தான்  பாரதியின்  ஞானகுரு  யாழ்ப்பாணம்  ஆறுமுகசாமியின் பேரன்   எனவும்  தெரிவித்திருக்கிறார்.
செங்கைஆழியான்,   இலங்கையில் 1956 ஆம்  ஆண்டில்  நாடுதழுவிய ரீதியில்  பாரதி  நினைவு  கூரப்பட்டபோதும்,   அதன்பின்னர் 1982 - 1983 பாரதி  நூற்றாண்டு  காலப்பகுதியிலும்  இந்தத்தகவல்களை வெளியிடாமலிருந்தமைக்கு  காரணம்  என்ன..? என்பது தெரியவில்லை.
                             பேராசிரியர்கள் பொன். பூலோகசிங்கம், கைலாசபதி , சி. தில்லைநாதன், மற்றும் ச. அம்பிகை பாகன், அ.ந.கந்தசாமி, சோமகாந்தன்  ஆகியோர்  " பாரதியின் ஞானகுரு அல்வாய் அருளம்பலம் சாமியார்தான்"   என்று  நிரூபித்திருக்கையில் - அவருக்கு   வியாபாரிமூலையில்  ஒரு  சமாதிக்கோயில்  இருக்கையில் -  செங்கைஆழியான்  எதற்காக  மற்றும்  ஒரு  சாமியாரை பாரதியின் ஞானகுருவாக  நிரூபிக்க   முயன்றார்...?
அவர்  சொல்வதுபோன்று  ஒரு  சாமியார்  யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில்  அவருடைய  வம்சத்தில் தோன்றியிருக்கலாம்.
அதனை  அவர்  வரலாற்றின்  பதிவாக  எழுதுவதிலும்  தவறில்லை.
ஆனால், ஏன்  உண்மைக்குப்புறம்பான   ஒரு  செய்தியை புனைவாக்கினார்...?
புனைகதையாளரின் மற்றும் ஒரு புனைவு என்றே  இதுபற்றி இணையத்தில்  எழுதப்பட்டிருக்கிறது.
ஆதாரத்திற்கு  சில  இணைப்புகளை  இங்கு  தருகின்றோம்.
www.ourjaffna.com
www.srinoolakam.blogspot.com
www.noolaham.org
செங்கைஆழியான்  நாடறிந்த  எழுத்தாளர். அவரை குறைகூறும் எண்ணத்தில்  இதனை  இங்கு  எழுதவில்லை.  இலங்கையில் பாரதியின்  தாக்கத்தை  ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளும்பொழுது மேற்குறிப்பிட்ட  தகவல்களையும்  கடந்து  செல்ல முடியவில்லை.
இலங்கையில்  பாரதி இயல்  ஆய்வாளர்கள்  இதுகுறித்து  எதிர்வினையாற்றலாம்.
------------------
( நன்றி: யாழ்ப்பாணம் காலைக்கதிர் )

No comments: