இலங்கைச் செய்திகள்


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி யாழ்நகரில் கடையடைப்பு

அம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி...! 

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி வடமாகாண சபைக் கொடிஅரைக்கம்பத்தில் ; முதல்வர் சீ.வி. இரங்கல்

தமிழக முதல்வரின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி

ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு வாபஸ்

த.தே.கூ. வின் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு மரணத் தண்டனை

உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.

கருணா அம்மானுக்கு பிணை.!

யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல் ; வழக்கு விசாரணை முடிவு

வவுனியா தினச்சந்தையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு.!

வவுனியாவில் நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் அதிரடியாக கைது

வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்கள்  ஆர்ப்பாட்டம்

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சங்கிலி பேரணி

பெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி

 கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கவனயீர்ப்புக்கு போராட்டம்

கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்து வேட்டை







தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி யாழ்நகரில் கடையடைப்பு

06/12/2016 மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலுள்ள  அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு கடைகள் மூடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செழுத்தும் முகமாக  அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று மதியம்  2 மணியுடன் மூடி கறுப்பு கொடிகளை பறக்க விட்டு  அஞ்சலி செலுத்துமாறு  யாழ் வர்தக சங்கத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். 

அதற்கமைய இன்றைய தினம் யாழ்நகரில் பெரும்பாலான கடைகள் மதியம் 2 மணியளவுடன் பூட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 















அம்மாவின் மறைவுக்கு மலையகத்தில் அஞ்சலி...! 

06/12/2016 
தமிழ் நாட்டு முதல்வர் செல்வி. ஜெயலலிதாவின் மறைவுக்கு, மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். 
மலையகத்தின் தோட்டப்பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும், பொது இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
அந்தவகையில் அட்டன், கொட்டகலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட், தலவாக்கலை, அக்கரப்பத்தனை, டயகம போன்ற பகுதிகளிலும் மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அக்கரப்பத்தனை எல்பியன் மற்றும் பெரிய நாகவத்தை போன்ற தோட்டங்களில் வெள்ளைக்கொடி பறக்கவிட்டு மெழுகுவர்த்தி வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.
இதன்போது தோட்ட பொது மக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நன்றி வீரகேசரி 













முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையொட்டி வடமாகாண சபைக் கொடிஅரைக்கம்பத்தில் ; முதல்வர் சீ.வி. இரங்கல்

06/12/2016 வால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று பிரகாசமாகி நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டதென வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழக முதல்வரின் மறைவையொட்டி ஆற்றிய இரங்கலுரையில் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை 67 ஆவது அமர்வு வடக்கு மாகாணசபை பேரவைச் செயலக சபா மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவரது இரங்கலுரை வருமாறு,
இன்றைய தினம் எம் எல்லோரையும் துன்பத்தில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வு பற்றி இவ் உயரிய சபையில் பேசவேண்டியுள்ளது. தமிழ் நாட்டு அரசியலில் இரும்புப் பெண்மணி என்றழைக்கப்பட்ட செல்வி ஜெயலலிதா ஜெயராம் நேற்று காலமானது எம் எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 
வால் வெள்ளி ஒன்று அரசியல் வானில் பளிச்சென்று பிரகாசமாகி நின்று பின்னர் திடீரென மறைந்து விட்டது.
அண்மையிலே வட இந்திய பெண் ஊடகவியலாளர் சிமி ஃகரைவால் என்பவருக்கு செல்வி ஜெயலலிதா ஜெயராம், ஆங்கிலத்தில் அளித்த ஒரு பேட்டி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது. அதைக் கேட்கும் போதுதான் சூழலானது எவ்வாறு ஒரு மனிதரை முழுமையாக மாற்றக்கூடிய வலு உடையது என்பதை அறியக் கூடியதாக இருந்தது.
மிக மெல்லிய சுபாவங் கொண்ட, கல்வியில் அதிகம் சிரத்தை கொண்ட, செழிப்பான ஒரு மென்மையான சூழலில் வளர்ந்த ஒருவர் எவ்வாறு பலவிதமான முரட்டுச் சூழல்களை எதிர்நோக்க வேண்டி வந்ததால் சாது மிரண்டது போன்று மிகவும் திடமான இரும்புப் பெண்மணியாக அவர் மாற வேண்டி வந்தது என்பதை அறியக் கூடியதாக இருந்தது. 
எம்.ஜி.ஆர்  அரசியல் வானில் மின்னிய போது அது அவருக்குப் பெருமை சேர்த்தாலும் அவருக்குப் பாரிய இடர்களையும் இன்னல்களையும் அரசியலில் ஏற்படுத்தவில்லை. ஆனால் செல்வி ஜெயலலிதா ஒரு பெண்ணாக ஆணாதிக்க சூழலிலே தனித்து நின்று வெற்றி பெற்றார் என்பது அவரின் திடசங்கற்பத்தையும் உழைப்பையும் விடாமுயற்சியையும் கெட்டித்தனத்தையும் வெளிப்படுத்துகின்றது.
அண்மையில் அவரின் அழைப்பின் பேரில் அவரைச் சென்று சந்திப்பதற்காக நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். விரைவில் குணமடைந்து வருவார் என எதிர்பார்த்திருந்தோம். காலன் அவர் உயிரைப் பறித்துக் கொண்டு போய் விட்டான்.
“அம்மா” என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட அவர் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது பாரதநாட்டு அரசியலிலும் முக்கிய பங்கு வகித்தார். அவர் ஆட்சி காலத்தில் தமிழ் நாடு பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மேலும் பல துறைகளிலும் மிக உன்னத நிலையை அடைந்தது.
தமிழின் மீதும் தமிழ் மக்கள் வாழ்வின் மீதும் தமிழ் மக்கள் எதிர்காலம் மீதும் அவர் மிக்க பற்றுறுதி கொண்டிருந்தார். கரிசனையுடன் அவர் தனது அரசியல் நடவடிக்கைகளை எடுத்து வந்தார். பெண் குலத்திற்கு எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்பதை நான் கூறி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.
வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் பாதுகாப்பாக வாழவும் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக் கூடிய சூழலை ஏற்படுத்தவும் வேண்டும் எனக் கருதி அவர் முனைப்புடன் செயற்பட்டார்.
தமிழ்ச் சமுதாயம் தமக்காகக் குரல் கொடுத்த ஒரு பலம் மிக்க அரசியற் தலைவரை இழந்து விட்டது. அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதை விட எம்மால் அவர் சார்பாக வேறு எதையும் இத்தருணத்தில் செய்ய முடியாதிருக்கின்றது என்பது மனவருத்தத்தைத் தருகின்றது. 
எம் மக்களினது ஒன்றுபட்ட சோகத்தினையும் மனச் சுமையினையும் தமிழ் நாட்டு மக்களுடன் இத் தருணத்தில் பகிர்ந்து கொள்கின்றோம் என இரங்கலுரையில் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 














தமிழக முதல்வரின் மறைவுக்கு ஜனாதிபதி அனுதாபம்

06/12/2016 தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
“மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவராக இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா, அவரது அன்புக்குரியவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் ” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி













மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வடக்கு மாகாண சபையில் அஞ்சலி

06/12/2016மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு வடக்கு மாகாண சபையினர் சபையில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
குறித்த அஞ்சலியானது ஈழத்தமிழர்கள் சார்பாக அனுஷ்டிக்கப்பட்டது என வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.
நன்றி வீரகேசரி












ஊவா மாகாண பதில் முதலமைச்சராக செந்தில் தொண்டமான் பதவியேற்பு

06/12/2016 ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீதி  அபிவிருத்தி  அமைச்சர் செந்தில் தொண்டமான் மாகாணத்தின் பதில் முதலமைச்சராக பதவியேற்றார்.
ஆளுநர் அலுவலகத்தில் ஊவாமாகாண ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் செந்தில் தொண்டமான்  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஊவா மாகாண வரலாற்றில் தமிழரொருவர் பதில் முதலமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் தடவையென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி














பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு வாபஸ்

06/12/2016 முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ திவிநெகும நிதியை மோசடி செய்ததாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சட்டமா அதிபர் வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார்.
இதேவேளை பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கான தடையும் நீதிமன்றத்தால் இன்று நீக்கப்பட்டுள்ளது.
திவிநெகுமவுக்கு சொந்தமான 50 இலட்சம் ரூபா நிதியில் நாட்காட்டிகள் அச்சிட்டமை தொடர்பான வழக்கே இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி
















த.தே.கூ. வின் மீதான தாக்குதல் சம்பவம் : மூவருக்கு மரணத் தண்டனை

07/12/2016 யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை நாரந்தனைப் பகுதியில் 2001 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூன்று பேருக்கு இரட்டை மரணதண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி மா. இளஞ்செழியன் மேற்படி வழங்கினார்.
குற்றவாளிகள் மூவருக்கும் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஐவருக்கும் தலா ஒரு இலட்சம் தண்டப் பணம் விதிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பிரதேசத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டுதேர்தல் பிரசாரத்திற்காக சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி















உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்.


07/12/2016 கிளிநொச்சியில் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். 
காலை 9 மணிக்கு ஆனையிறவு உப்பளத்திற்கு முன்பாக ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் ஆனையிறவு உப்பளத்தின் அடையாளத்தை அளிக்காதே!, உப்புக்கூட்டுத்தாபனத்தை தனியார் மயமாக்க வேண்டாம், கூட்டாக உழைப்போம் - தனியார் மயமாக்கலை எதிர்ப்போம், எங்கள் வளத்தில் நாங்கள் வாழ்வோம், எங்கள் வளங்களைத் தனியாருக்கு விற்க அனுமதிக்கோம், பிரதேச வளங்களில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை.   இது எங்கள் உப்பளம், உப்பளத்தை விற்காதே! நம் உழைப்பை அழிக்காதே, போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளயும் ஏந்தியிருந்தனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் அமைப்புகளால் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜர்  ஒன்று ஜனாதிபதி, பிரதமர், எதிர்கட்சி தலைவர் இரா. சம்மந்தன், நிதி அமைச்சர்,  வடமாகாண முதலமைச்சர், அமைச்சர் றிசாட்பதியூதீன், வடக்கு மாகாண எதிர் கட்சி தலைவர்,  கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்  ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டதுடன்  கண்டாவளை உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ம.பிரதீப்   மற்றும் ஆனையிறவு  உப்பள  முகாமையார் ஏ.கிசோதரன்  ஆகியோருக்கு  மகஜர்  நேரடியாக கையளிக்கப்பட்டது. 
அந்த மகஜரில் குறிப்பிடபட்ட விடயமாவது,
ஆனையிறவு, குறிஞ்சாத்தீவு உப்பளங்களின் சுற்றயல் கிராம மக்கள் அமைப்புகளாகிய நாங்கள் சமர்ப்பிக்கும் மேன்முறையீட்டை தங்கள் மேலான கவனத்திற் கொண்டுவருகிறோம். எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரப் பாதிப்பிலிருந்து பாதுகாத்து, எமது பிரதேச பொருளாதார அபிவிருத்தியை பேணுவதற்கு உதவும்படியாக பின்வரும் எமது கோரிக்கைகளைப் பரிசீலிக்குமாறு இங்கே கேட்டுக்கொள்கிறோம்.
ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்கள் தனியாரிடம் கையளிக்கப்படுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நடைபெறுவதை அவதானிக்க முடிகிறது. 
1938 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த உப்பளங்கள் 1990 வரை மிகுந்த வினைத்திறனோடு அதிக வருமானத்தை ஈட்டியுள்ளன. ஆனையிறவு  உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 30 ஆயிரம் மெற்றிக்தொன்னாகவும் குறிஞ்சாத்தீவு உப்பளத்தின் ஆண்டுக்கான உற்பத்தி 40 ஆயிரம் மெற்றிக் தொன்னாகவும் இருந்துள்ளது. 
ஆனால், 2016 இல் 1100 மெற்றிக் தொன் உப்பு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. இவ்விரு உப்பளங்களின் புனரமைப்புக்கு போதுமான நிதி ஒதுக்கப்படாமையே இதற்கான காரணமாகும். 
2016 நிதி அமைச்சரின் பாதீட்டு உரையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார் 'எமது நாடு கடலால் சூழப்பட்டிருக்கிற போதும் உப்பினை இறக்குமதி செய்வது விந்தையான ஒன்றாகும்' எனவே, 1990 க்கு முன்பு நாட்டிற்குத் தேவையான உப்புக்கு மேலதிகமாக பிற நாடுகளுக்கும் ஆனையிறவு உப்பை ஏற்றுமதி செய்யப்பட்ட காலம் ஒன்றிருந்தது. 
அதேவேளை இந்த உப்பளங்களின் சுற்றயற் கிராமங்களின் மக்களுக்கான வாழ்வாதாரத்தை இந்த உப்பளங்களே பெரும்பாலும் வழங்கி வந்தது. எனவே இந்த உப்பளங்களைத் தொடர்ந்தும் அரச கூட்டுத்தாபனமாக இயக்குவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, அதிக உற்பத்தியினை மேற்கொள்ளக்கூடிய நிதி ஒதுக்கீட்டை ஏற்படுத்தி, இந்தப் பிரதேச மக்களின் வாழ்வாதாரத்திற்கும், அதிக உற்பத்திக்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்கித் தருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சமத்துவம், சமூகநீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கருத்து தெரிவிக்கும்போது
ஆனையிறவு மற்றும் குறிஞ்சாத்தீவு உப்பளங்களை தனியார் மயமாக்குவது என்பது இந்த பிரதேச மக்களுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் அதனை நாம்  ஏற்றுக்கொள்ள முடியாது.  யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த பிரதேச மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வகையில்  இந்த உப்பளங்கள் தனியார் மயமாக்கும் முயற்சி கண்டிக்கத்தக்க விடயம். எனவே இந்த விடயத்தில் அரசியலுக்கு அப்பால் மக்களின் நலன்சார்ந்து நாம் அனைவரும் உப்பளங்கள் தனியார் மயமாக்குவதற்கு எதிராக செயற்படவேண்டும். இது  மக்களின் வாழ்க்கையோடு சம்மந்தப்பட்ட விடயம் எனவே அரசின் தனியார் மயமாக்கல் விடயத்தை இந்த மக்களின் சார்பாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.    நன்றி வீரகேசரி













கருணா அம்மானுக்கு பிணை.!

07/12/2016 முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் பிணையில் செல்வதற்கு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளார்.   நன்றி வீரகேசரி











யாழ்.பல்கலை மாணவர்கள் மோதல் ; வழக்கு விசாரணை முடிவு

08/12/2016 யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் தமிழ் சிங்கள இரு தரப்பு மாணவர்களும் தாம் தற்போது பகைமையை மறந்து சமாதானமாக இருப்பதாக தெரிவித்து, தமது முறைப்பாட்டை மீள கைவாங்கியதன் அடிப்படையில் இவ் வழக்கு நடவடிக்கையானது முடிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜீலை மாதம் 16ஆம் திகதி யாழ்.பல்கலைகழகத்தில் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது சிங்கள மாணவர்கள் வழமைக்கு மாறாக வரவேற்பு நடனத்தில் வழமையாக இடம்பெறும் தமிழ் முறையை தவிர்த்து சிங்கள முறையிலான கண்டிய நடனத்தை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து இது தொடர்பாக ஆரம்பத்தில் கருத்து முரண்பாட்டில் ஆரம்பித்து இறுதியில் தமிழ் சிங்கள மாணவர்களுக்கு இடையிலான மோதல் கலவரமாக உருப்பெற்றிருந்தது.
அத்துடன் இவ் மோதல் கலவர சம்பவத்தில் சிங்கள மாணவன் ஒருவன் படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததுடன் குறித்த மாணவனது முறைப்பாட்டுக்கு அமைய தமிழ் மாணவர்கள் சிலருக்கு எதிராக யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது. இதேபோன்று தமிழ் மாணவர்கள் மேற்கொண்டிருந்த முறைப்பாட்டுக்கமைய சிங்கள மாணவர்களுக்கு எதிராகவும் யாழ்.நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அந்தவகையில் குறித்த இரு வழக்கு விசாரனைகளும் ஒரே சமயத்திலாக கடந்த நான்கு மாதங்களாக யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்திருந்தது. அத்துடன் கடந்த 2 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது குறித்த இருதரப்பு மாணவர்களும் மன்றில் சட்டத்தரணி ஊடாக தாம் தற்போது ஒற்றுமையாக இருப்பதாகவும் எனவே இவ் வழக்கை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இதனையடுத்து நீதிவான், குறித்த சம்பவம் தொடர்பில் காயமடைந்த நபர் தனது முறைபபாட்டை மீளப் பெறுவதாக அதே பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்து அது தொடர்பாக அப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தப்பட்டால் இவ் வழக்கை முடிவுக்கு கொண்டுவரலாம் என குறிப்பிட்டிருந்தார்.
அதற்கமைய இன்று வழக்கானது, யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதீஸ்கரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போது  மாணவர்கள் சார்பில் சட்டத்தரணி சயந்தன் முன்னிலையாகியிருந்தார். 
இதன்போது கோப்பாய் பொலிஸார் குறித்த மோதல் சம்பவம் தொடர்பாக இருதரப்பு மாணவர்களும் தாம் செய்திருந்த முறைப்பாட்டை மீள கைவாங்கியதாக மேலதிக அறிக்கையை மன்றில் சமர்பித்திருந்தனர். இதனடிப்படையில் குறித்த வழக்கானது முடிவுறுத்தப்படுவதாக நீதிவான் அறிவித்திருந்தார்.    நன்றி வீரகேசரி














வவுனியா தினச்சந்தையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி நிகழ்வு.!


08/12/2016 வவுனியாவில் இன்று காலை 9 மணியளவில் தினச்சந்தைப் பகுதியில் உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்கம் ஏற்பாடு செய்த மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. 
இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் திரு.ரி.கே. இராஜலிங்கம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ். சுந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், உள்ளுர் விளை பொருள் விற்பனையாளர் சங்கத் தலைவர், செயலாளர், உறுப்பினர்கள், தினச்சந்தை வியாபார நிலைய விற்பனையாளர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சுடரெற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.    நன்றி வீரகேசரி
















வவுனியாவில் நடு வீதியில் அமர்ந்த பெண் பொலிஸாரால் அதிரடியாக கைது


https://youtu.be/DT4NxsPQLb4

09/12/2016 வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு அருகில் பிரதான கண்டி வீதியில் நடுவே அமர்ந்து பெண் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தில் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,  கடந்த மூன்று ஆண்டுகளாக பழகிவந்த குறித்த பெண் பணம் கொடுக்கல் வாங்கல்கள் காரணமாகவும்  இருவருக்கிடையே இடம்பெற்ற முரண்பாடுகளை அடுத்து பணம்கொடுத்த பெண் பணம் வாங்கிய பெண்ணிற்கும் இடையே  வாக்குவாதங்கள் இடம்பெற்று இறுதியில் இவர்களது சண்டை தாண்டிக்குளம் பிரதான வீதியின் நடுவே குறித்த பெண் அமர்ந்து இருந்துள்ளார்.     பல மணி நேரங்கள்  வீதியை மறித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய பெண்னை பொலிஸார் அதிரடியாக கைது செய்தபோது வர மறுத்த பெண்னை வலுக்கட்டாயமாக தூக்கி வாகனத்தில் ஏற்றி வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.   சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு வவுனியா பொலிசார் சுமார் ஒருமணிநேரம் தாமதமாகச் சென்றது குறிப்பிடத்தக்கது. வீதியில் அமர்ந்த பெண்ணினால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி














வவுனியாவில் காணாமல்போனோரின் உறவினர்கள்  ஆர்ப்பாட்டம்

10/12/2016 காணாமல்போனோரின் உறவினர் ஒன்றிணைந்து வவுனியா கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள் பேரணியாக பசார் வீதி, மில் றோட் வழியாகச் சென்று வவுனியா சுவர்க்கா விருந்தினர் விடுதியை சென்றடைந்தனர்.
பன்னாட்டு மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு தமது காணாமற்போன உறவுகளுக்கு நீதி வேண்டியும், பக்கச்சார்பில்லாத விசாரணைகள் மேற்கொள்ள வேண்டியும், காணமல்போனோர் விடயத்தில்; நம்பிக்கையினைக் கட்டியெழுப்பக்கூடிய ஆக்கபூர்வமான நடவடிக்கையினை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியும் கூட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தனர். 
வட, கிழக்கு மாவட்டங்களிலிருந்து வந்த உறவுகள் தமது ஆதங்கங்களைத் தெரிவித்திருந்தனர். 
வவுனியா மாவட்ட காணாமலாக்கப்பட்ட சங்கத் தலைவி திருமதி.கே.ஜெயவனிதா தலைமையில் ஆரம்பமான கூட்டத்தில் வடகிழக்கு மாவட்டங்களிலிருந்து கையளிக்கப்பட்டு காணமலாக்கப்பட்ட சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், காணாமற்போனவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி













சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு சங்கிலி பேரணி

10/12/2016 மனித உரிமை தினத்தை முன்னிட்டு இன்று சங்கிலிப் பேரணி ஒன்று மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது.
மட்டக்களப்பு திருமலை வீதியில் உள்ள  தாண்டவன் வெளியில் இருந்து ஆரம்பித்த இந்த பேரணி மட்டக்களப்பு காந்தி பூங்கா வரைக்கும் நடைபவனியாக சென்றடைந்தது.
இதனை தொடர்ந்து 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்தும்  காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டியும்  மகஜர்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி















பெண்கள் மற்றும் சிறுவர் உரிமையை பாதுகாப்போம் ; ஹட்டனில் கவனயீர்ப்பு பேரணி

10/12/2016 உலக புலம்பெயர்வு மற்றும் மனித உரிமைகள் நினைவு தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு பேரணி ஹட்டன் நகரில் இன்று நடைபெற்றது.
 நீதி, சமாதானம் மனித அபிவிருத்தி உரிமைகள் பற்றிய ஆணைக்குழு, கரிட்டாஸ் கண்டி செட்டிக் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  குறித்த அமைதி ஊர்வலம் இடம்பெற்றது.
ஹட்டன் பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மணிக்கூண்டு சந்தியூடாக ஹட்டன் பிரதான வீதியில் அஜந்தா விடுதிவரை சென்று விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.
 பேரணியில்  செட்டிக் நிறுவன  இயக்குனர்  அருட்தந்தை டெஸ்பன் பெரேரா, நுவரெலியா மாவட்ட இணைப்பாளர்  அருட்தந்தை லெஸ்லிபெரேரா  மற்றும்   அருட்தந்தை மாக்கஸ் கொடிபிலி உட்பட பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 சிறுவர் மற்றும் பெண்கள் துஸ்பிரயோகம் பாலியல் ரீதியான உளரீதியான, பொருளதார ரீதியான, உடல் ரீதியான வன்முறைகளை இல்லாதொழிப்போம் என பதாதைகள் ஏந்தியவாறு குறித்த பேரணி இடம்பெற்றது.
நன்றி வீரகேசரி














கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்திற்கு கவனயீர்ப்புக்கு போராட்டம்

10/12/2016 கிளிநொச்சியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை அனுஷ்டிக்கும் பொருட்டு  கவனயீர்ப்பு நிகழ்வு  இன்று  காலை பத்து மணியளவில்  கிளிநொச்சி கந்தசாமி கோவிலடியில் நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன உறவுகளின் குடும்பங்களின் சங்கம்  மற்றும் தமிழ் சிவில் சமூக அமையம் இணைந்து   இவ்  கவனயீர்ப்பு  நிகழ்வினை  ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்  நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட காணாமல் போன உறவுகளின் உறவுகள் ,தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் , எனப் பலரும் கலந்துகொண்டனர்.
நன்றி வீரகேசரி














கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி கையெழுத்து வேட்டை


11/12/2016 கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக் கோரி, 50 ஆயிரம் கையொப்பங்களைத் திரட்டி ஜனாதிபதிக்கு அனுப்பும் நடவடிக்கையின் ஒரு கட்டம், நேற்று நுவரெலியா - இராகலை பகுதியில் இடம்பெற்றது. 
சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் பிராந்திய பொறுப்பாளர் எஸ்.மோகன்ராஜ் தலைமையில் குறித்த கையெழுத்து வேட்டை நடைபெற்றது. 
இதன் முன்னோடி நடவடிக்கையாக தோட்டங்கள் தோறும் தொழிலாளர்களின் கையொப்பங்களை திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.   நன்றி வீரகேசரி























No comments: