கிழக்கிலங்கையின் மூத்த மகா கலைஞன் நீலாவணன் - பாக்கியராஜா மோகனதாஸ்

.


கிழக்கிலங்கையின் கல்முனையின் அருகேயுள்ள பெரியநீலாவணை எனும் பழம்பதியில் 1931.06.31 அன்று கேசகப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளுக்கு மூத்த மகனாகப் பிறந்த கே.சின்னத்துரை தனது நாற்பத்தைந்து வருட காலத்திற்குள் தமிழ் இலக்கியவுலகில் தனக்கென ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளார் என்பதை அவரது படைப்புகளுக்கூடாகவும் இலக்கிய ஆர்வலர்களுக்கூடாகவும்,நண்பர்களுக்கூடாகவும் அறியமுடியும்.கவிஞர் இ.முருகையனுக்கு(1935.04.23)முற்பட்டவராகவும்,து.உருத்திரமூர்த்திக்கு(1927) காலத்தால் பிற்பட்டவராகவும் விளங்குகின்றார். 
இருபது வருட கால இலக்கிய வாழ்வில் நூற்றுக்கணக்கான கவிதைகளும் பல கட்டுரைகளும் புனைகதைகளும் மூன்று பா நாடகங்களும் வேளாண்மை எனும் குறுங் காவியமும் நீலாவணனின் இலக்கியஇ கவித்துவ ஆளுமையை வெளிப்படுத்துவதாகவுள்ளது.நீலாவணன் தான் வாழ்ந்த காலத்திற்குள் ஒரு நூலையேனும் வெளிக்கொணர்வதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கவில்லை என்பதை உறவினர்களாலும் இலக்கிய ஆர்வலர்களாலும்  அறியக்கூடியதாகவுள்ளது.எனினும் நீலாவணனின் இலக்கிய ஆர்வல நண்பர்களான கவிஞர் எம்.ஏ.நுஃமான் அவர்களாலும் பிரபல சிறுகதை எழுத்தாளர் வ.அ.இரசரெத்தினத்தின் முயற்சியாலும் நூலுருப்பெற்றன.




நீலாவணன் வாழ்ந்த காலத்தில் கைப்படத் தொகுத்திருந்த 56 கவிதைகளை அவர் இறந்து ஒரு வருட காலத்திற்குள் “வழி எனும் முதல் கவிதைத் தொகுப்பாக” கவிஞர் எம்.ஏ.நுஃமான் வெளிக்கொணர்ந்ததோடு ஏழு ஆண்டுகளின் பின்னர் வேளாண்மை எனும் காவியமானது வ.அ.இரசரெத்தினத்தினத்தாலும் நூலுருவாகியது.
1953 முதல் 1974 வரையுள்ள இருபது ஆண்டு காலத்திற்குள் எழுதப்பட்ட கவிதைகளை குறிப்பாக வழி தொகுப்பினுள் உள்ளடங்காத கவிதைகளாக இவையுள்ளதுடன் இக் கவிதைத் தொகுப்பானது நீலாவணனின் மகனான எஸ்.எழில்வேந்தனின் முயற்சியால் “ஒத்திகை எனும் நாமத்துடன் 2001 இல் பதிப்புரிமையாக்கப்பட்டுள்ளது” என்பதும் குறிப்பிடத்தக்கது.நீலாவணனின் கவித்துவ ஆளுமையினை முழுமையாக புரிந்து கொள்ள விரும்புபவர்கள் நீலாவணன் கைப்பட எழுதி பிறரால் தொகுக்கப்பட்ட “வழி” ,“ஒத்திகை”,“வேளாண்மை” போன்றவற்றை படிப்பதன் ஊடாக அறிய முடியும்.
வாழ்வின் பன்முகத் தன்மையினையும் கவிதையின் பன்முகத் தன்மையினையும் வெளிக்கொணர்ந்த தமிழின் முக்கியமான கவிஞர்களுள் நீலாவணனும் ஒருவர் என நீலாவணனின் பிரதேச இலக்கிய நண்பரான கவிஞர் எம்.ஏ.நுஃமான் குறிப்பிடுகிறார்.
தான் வாழ்ந்த காலத்தினதும் தான் வந்த பாரம்பரியத்தினதும் தனது சொந்த ஆளுமையினதும் உருவாக்கமாகவுள்ளதுடன் அவையே அவரது கவிதைகளாகவுமுள்ளன.

சி.மௌனகுரு நீலாவணன் பற்றி எழுதிய “கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன்” எனும் நூலில் ஒரே கால கட்டத்தில் நீலாவணனிடம் பல கவிதைப் போக்குகளையும் கால ஓட்டத்தினூடே அவரது கவித்துவ முதிர்ச்சியையும் வௌ;வேறுபட்ட உணர்வுத் தூண்டல்களுக்கு மரபுநிலைப்பட்டும் ஆளுமை சார்ந்தும் அவர் துலங்கினார் என குறிப்பிடுகின்றார்.
நீலாவணன் கவிதை எழுதத் தொடங்கிய காலத்திலிருந்து அவரது இறுதிக் கால கட்டம் வரை அவரது கவிதைகளில் காதலும் ஒரு கருப்பொருளாக இருந்துள்ளது.நீலாவணனின் ஆரம்ப கால காதல் கவிதைகள் உடல் சார்ந்த விரக உணர்வின் வெளிப்பாடக அமைந்தது.நீலாவணனின் முதல் கவிதையான “ஓடி வருவதென்னேரமா” இவ் வகைக்கு எடுத்துக் காட்டாகவுள்ளது.
நீலாவணனின் கவிதைகள் சமூக விமர்சனக் கவிதைகளாகவும் ஆன்மிக கவிதைகளாகவும் காதல் கவிதைகளாகவும் என பன்முகத் தன்மையுடைய கவிதைகளாக விளங்குவதுடன் மொழி, உணர்வு, காதல், சமூக விமர்சனம், ஆன்மீகத் தேடல் என்பன அவரது கவிதையின் பன்முகங்களாகும்.
இலங்கையில் இடதுசாரி இயக்கம் மட்டுமின்றி இனத்துவ முரண்பாடும் இனவாத அரசியலும் கூர்மையடையத் தொடங்கிய 1950 ஆம் ஆண்டு கால கட்டத்தில் சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என்ற சிங்கள தேசிய வாதத்தின் நிலைப்பாடு தமிழ் உணர்ச்சியையும் தமிழ்மொழி உரிமைப் போராட்டத்தையும் தமிழ்த் தேசிய வாதத்தையும் கிளர்ந்தெழச் செய்தது.
1955 முதல் ஈழத்து தமிழ்க் கவிதையில் இது தீவிரமாக வெளிப்பட்டது.உண்மையில் ஈழத்து இலக்கிய வரலாற்றில் இக்கால கட்டத்தை அரசியல் எதிர்ப்புக் கவிதையின் தொடக்க காலம் எனலாம் என கவிஞர் எம்.ஏ.நுஃமான் குறிப்பிடுகின்றார்.

இலங்கையின் அன்றைய முன்னனிக் கவிஞர்கள் பலரும் தமிழ் உரிமைப் போராட்டத்தை ஊக்கப்படுத்திக் கவிதைகள் எழுதினர்.அந்த வகையில் மாபாடி என்ற புனைபெயரில் து.உருத்திரமூர்த்தி ,இ.முருகையன் இவர்களை விட அதிகமான மொழி உரிமைப் போராட்டக் கவிதைகளை நீலாவணன் எழுதியுள்ளார் என்றால் மிகையாகாது.
1959 இல் கலித்தொகை பாடல் ஒன்றைத் தழுவி எழுதிய “இனிக்கும் அன்பு” சங்க கால மரபின் தொடர்ச்சியாக அமைகிறது.சொல்லாட்சி, கற்பனைத்திறன், கவித்துவ ஆளுமையினை நீலாவணனின் காதல் கவிதைகளுக்கூடாக காணமுடிகின்றது.
நீலாவணனின் இரண்டாவது வகையான காதல் கவிதைகள் வெறும் உடல்சார் விரகத்தைத் தாண்டிய சூழ்ந்த உள்ளக்கிளர்ச்சி தரும் காதல் உணர்வை வெளிப்படுத்துவனவாகவுள்ளன. “போகவிடு” ,“ஓவியம் ஒன்று”,“போகின்றேன் என்றோ சொன்னாய்”,“மங்கள நாயகன்”,“வேடன்” “சீவனைத்தான் வேண்டுமடி” போன்ற கவிதைகளிலும் உடல் சார் பாலியல் பொருந்தியிருப்பினும் உள்ளக் கிளர்ச்சி அனுபவமே இவற்றின் அடிப்படைத் தொனியாகும்.இத்தகைய கவிதைகள் தமிழ்ப் பக்தி மரபின் செல்வாக்கினையும் நீலாவணனின் தனித்துவத்தையும் நிலைநாட்டின என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
நீலாவணன் கவிதை எழுதத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே சமூக யதார்த்தத்தில் காலூன்றி நின்றதோடு சமுதாய உணர்வு மிக்க மனிதராகவும் வாழ்ந்தவராவார்.சமூக சமத்துவமின்மை, பொய்மைகள், போலித்தனங்கள், ஊழல்கள் ,வறுமை, சாதிப்பாகுபாடு, சீதன முறை, நிறவெறி போன்றவற்றுக்கு எதிராக தன் உணர்வுகளை கவிதையில் வெளிப்படுத்தினார்.பாவம் வாத்தியார், உறவு, போதியோ பொன்னியம்மா, வெளுத்துக்கட்டு போன்றவற்றில் சமூகச் சார்பு முனைப்பாகத் தெரிகிறது.
கிழக்கிலங்கையின் பண்பாட்டு ஆவணமாகவே வேளாண்மை எனும் விவரணச் சித்திரிப்பு அமைந்துள்ளது.காவியத்துக்குரிய வலுவான மையம் இல்லையென்றாலும் மானிடவியல் சார்ந்த இலக்கிய முக்கியத்துவம் உண்டெனலாம்.


1964 இல் எழுதிய துயில் எனும் கவிதை மரணத்தில் நிறைவு காணும் பக்குவம் பற்றி பேசுகிறது.பனிப்பாலை, தீ, பயணகாவியம், போகவிடு, ஓ வண்டிக்கார, ஒத்திகை, விளக்கு முதலிய கவிதைகள் நீலாவணனின் ஆன்மிகத் தேடல் சார்ந்த கவிதைகளாக கருதப்படக்கூடியவை.இவற்றில் கையாளப்படும் மொழி குறியீடு அல்லது உருவகப் பாங்கானது.அதனால் பல தளப் பொருண்மையுடையது.இவற்றுட் பனிப்பாலை, போகவிடு என்பன பாலியல் படிமங்களால் பின்னப்பட்டவையாகவுள்ளன.
சுமை, புற்று, விடை தாருங்கள், அஞ்சலோட்டம், பலூன், பட்டம், முத்தக்காச்சு போன்ற கவிதைகள் சாதாரண சம்பங்களை குறியீ;ட்டுப் பாங்கில் கையாண்ட ஆன்மிக உட்பொருளைக் காணும் கவிதைகளாகவுள்ளன.உண்மை, சத்தியம், பற்றறுத்தல், தீவினை களைதல் போன்ற அரூபமான எண்ணங்கள் இக்கவிதைகளில் அழுத்தப்படுகின்றன.
நீலாவணனின் கவிதைகளில் மரபுவழிச் சிந்தனையையும் புதுமை நாட்டமும் ஒருமித்து இருப்பதையும் அதாவது சமூக மாற்றத்தை வேண்டி நிற்கும் புத்துலக நோக்கினையும் பாரம்பரியமான ஆன்மிக விழுமியங்களையும் உள்வாங்கிய கவிதைகளாகவுள்ளன.
யாப்பே கவிதையின் ஊடகமாக இருக்க வேண்டும் எனவும் கொள்கை ரீதியாக புதுக்கவிதை அல்லது வசன கவிதைக்கு எதிராகவே செயற்பட்டார். கவிதைகள் பழைமையில் காலூன்றி நிற்க வேண்டும் என்பதுடன் பழைமையின் வழியிலேயே புதுமை முகிழ்க்க வேண்டும் எனவும் கருதினார்.
கவிதை பற்றிய நீலாவணனின் கவிதை ஒன்று பின்வருமாறு
பழைமை கிடந்த மனதுள் விழுந்து பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து விளைவாகி
அழகும் பொலிந்து அறமும் புதைந்து கலையாகி
இளமைக் கயிற்றில் கனவைத் தொடுத்தல் கவியாகும்.



இளமைக் கயிற்றில் கனவைத் தொடுக்கும் கவிதை பழைமையின் அடித்தளத்திலேயே பயிராகின்றது என்பதை இக் கவிதை வெளிப்படுத்துவதாகவுள்ளது.தமிழ்க் கவிதையின் மரபுத் தொடர்ச்சியை இனங்காட்டும் ஒரு கவிதை முயற்சியே அவரது வழி.யாப்பு மரபை வலியுறுத்தி யாப்பை மீறிய புதுக்கவிதை மரபைச்சாடும் இக்கவிதையில் “யாப்பும் முந்தைய வழியும் சேர்ந்த மொழியறி புலவர்களே” போற்றப்படுகின்றனர்.இவர்களே அறவழிப் புலவர்கள்.
யாப்பை மீறும் புதுமை வாணர்கள் தமிழின் கவிதைக் கலையின் மகிமை அறியாதவர்களாய் அதன் அமிர்தப் பொருளைக் கொலை செய்பர்களாக சித்திரிக்கப்படுகின்றனர்.நீலாவணன் உட்பட நமது முன்னோடிக் கவிஞர்களைப் பொறுத்த வரை யாப்பு ஒரு புனிதப் பொருளாகவே இருந்து வந்துள்ளது.

நீலாவணனின் பாவம் வாத்தியார், உறவு, வேளாண்மை போன்றவை சுத்தமான யாப்பிலுள்ளதுடன் வரியமைப்பு மாத்திரம்  புதுக்கவிதையின் தோற்றத்தை தருவதாகவுள்ளது.

இலங்கையில் தமிழ் செய்யுள் நடையை செழுமைப்படுத்திய முன்னோடிகளுள் நீலாவணனும் ஒருவராவார்.பொதுவாக இலங்கையின் பிற பாகங்களை விட கல்முனைப் பிரதேசக் கவிஞர்கள் செழுமையான செய்யுள் நடை வல்லவர்களாக இருப்பதற்கு நீலாவணனின் உடனிருப்பும் செல்வாக்கும் ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளது என்றால் மிகையாகாது.

கவியரங்குகளில் அவரது கவிதைகள் எடுபட்டமைக்கு, பாராட்டுப் பெற்றமைக்கு அலாதியான முறையில் தன் கவிதைகளை இனிமையாகப் பாடும் ஆற்றலுடனும் வாசிக்கும் ஆற்றலுடனும் விளங்கியமையும் ஒரு காரணமாகும்.காதல் கவிதைகள், சமூக விமர்சனக் கவிதைகள், ஆன்மிகக் கவிதைகள், பாலியல் கவிதைகள் என்று பன்முகத் தன்மையுடன் கவிதை இயற்றிய பெருமை நீலாவணனையே சாரும்.

நீலாவணனின் பா நாடகங்களாக மழைக்கை, சிலம்பு, மணக்கண், துணை என்பன விளங்குகின்றன.மழைக்கை, சிலம்பு, மணக்கண் இவ் மூன்றுமே அகவற் பாவிலமைந்த கவிதை நாடகங்களாகவுள்ளன.கொங்கண முனிவர் பற்றிய மரபுக் கதையொன்றை அடிப்படையாகக் கொண்டதே துணை நாடகமாகும்.மணக்கண் காதலைப் கருப்பொருளாக கொண்டமைய மகாபாரதத்தின் கர்ணனின் கடைசி நாட்களே மழைக்கையின் கருவாகவுள்ளது.கர்ணனை கதாநாயகனாக கொண்ட மழைக்கையில் நீலாவணன் குந்திதேவி பாத்திரம் ஏற்று நடித்ததுடன் எம்.ஏ.நுஃமான் இந்திரனாகவும் மருதூர்க் கொத்தன் கிருஸ்ணராகவும் நடித்திருந்தார்.

நவீன வாழ்வின் கதையை யதார்த்தமாகவோ குறியீடாகவோ செய்யுளில் வடித்துக்காட்டியவர்களுள் நீலாவணனும் முதன்மையானவராவார்.வழியும் ஒரு விதமான கதைகூறும் காவியப் பொலிவுடைய நெடும்பாடலாக அமைவதால் கதைப்பாடல் என்றும் கூறலாம்.1956 இல் பட்ட மரம் என்ற காவியத்தினையும் 1961 இல் வடமீன் என்ற காவியத்தினையும் வேளாண்மை என்ற காவியத்தினையும்(1960- 1970) எழுதிய பெருமை மாத்திரம் நீலாவணனையே சாரும்.பட்டமரம் காவியமானது ஈழ கேசரி இதழில் இரு வாரங்கள் தொடர்ச்சியாக 1950 களின் நடுப்பகுதியில் வெளிவந்ததுடன் வடமீன் காவியமனது எந்த இதழ்களிலும் பிரசுரமாகத காவியமாகும்.

நீலாவணனின் காவியக் கன்னி முயற்சியாக பட்டமரம் அமைகிறது.பத்மாவின் காதலைக் கண்டு பயப்படும் பரந்தாமன்.பண்னையார் மகளை அவருடைய ஊழியன் காதலிப்பதா என்ற வழமையான கட்டமைப்பு பிரச்சினைதான் கதை.சிக்கல் பரந்தாமன் பத்மாவின் மரணத்தில் தீர பட்டமரம் அனைத்துக்கும் சாட்சியமாக அமைகிறது.பட்டமரம் கதை சொல்லியாகவும் கதையின் ஒரு பாத்திரமாகவும் பகுத்தறிவுவாதியாகவும் அன்பில் உயர் ஆளுமையாகவும் இருப்பது காவியத்துக்கு ஒரு வலுவான பரிமாணத்தைக் கொடுக்கிறது என சண்முகம் சிவலிங்கம் குறிப்பிடுகிறார்.

வெண்பாவின் ஊடகத்தில் ஒரு காவியத்தை நடத்துவது புகழேந்திக்கே உரிய புகழ் அந்த வெண்பாவிலேயே பட்டமரம் காவியத்தை வடித்தமையினால் வெண்பாவுக்கு நீலாவணன் என்ற பெருமையும் பெற்றிருந்தார்.

வடமீன் காவியமானது கொழும்பு வாழ் மத்தியதர வர்க்கத்தின் கோணங்களை பிரதிபலிப்பதுடன் கணவன், மனைவி மீது கொள்ளும் சந்தேகத்தில் எழுகிறது.கொழும்பு வாழ்க்கைச் சூழலும் இரட்டை அர்த்த வாக்கியங்களும் சேர்ந்து கதைச் சிக்கலுக்கு காரணமாக அமைகிறது.
அருந்ததியில் அவளுடைய கணவனான மூர்த்தி சந்தேகப்படும் முன்பே இரட்டை வாக்கிய அர்த்தங்களால் வாசகன் அவள் மீது சந்தேகம் கொள்கின்றான்.இத்தன்மையானது நீலாவணனின் தனித்துவ படைப்பு ஆளுமையாக அமைகிறது.

அண்ணாந்து பார்த்தான் வெள்ளை
ஆடையில்லாத பல்லி
பெண் ஒன்றை மருவல் கண்டு
பேசாமல் கதவடைத்தான்

“அடுக்களை யிருந்த பூனை
ஆனந்தன் அறைக்குள் ஓட
அடுப்பிலே நெருப்புப் பொங்கி அணைந்தது”

திருந்திழை மார்பின் சேலை
திருத்தினாள் திறவா வாயில்
பொருந்தினாள் நகையே உள்ளம்
பூரித்தான் புசித்தான் போனான்

வாசகன் மனதில் ஒரு பாலியல் சந்தேகத்தை வளர்த்த பின்னரே கணவனான மூர்த்திக்கு சந்தேகத்தை ஏற்படுத்த வைக்கிறார்.மூர்த்தி தன் செவியேறலில் அல்லது தன் சிந்தனையில் கொண்ட சந்தேகத்தை வடமீன் காவியம் ஊடாக தீர்க்கும் விதமே சுவாரஸ்யமானது.அருந்ததியை உண்மைக்கு உண்மையாய் பேச விடுவதோடு மூர்த்தியே தன்னைத்தானே பணியச் செய்து பிரச்சினைக்கான தீர்வைக் காண வைக்கும் நீலாவணனின் உத்தி அளப்பெரியது.

வாசகர் மனதில் தூவிய சந்தேக முகிலை பாத்திரத்திற்கூடாகவே தெளிவு பெற வைத்தமை நீலாவணனின் வடமீன் காவிய ஆளுமையினை வெளிப்படுத்துகின்றது.அருந்ததியை கற்புடைய பெண்ணாக காட்ட முனைந்ததும் வடமீன் என்ற காவியத் தலைப்பை பாவித்த நுட்பமும் நீலாவணனை மகா கலைஞனாக உயர்த்துகிறது.

பூலோகம் எங்கும் கற்பைப் புதுப்பிக்கும் வடமீன் நங்கை என்ற அடி அருந்ததி நட்சத்திரத்துக்கு தமிழில் கிடைத்த மிக அழகிய கவித்துவப் புகழ் மொழியாகும்.கற்பின் திறமும் தெய்வீகமும் உடைய வடமீன் நங்கை “ஆலாலம் உண்ட கண்டன் அணைப்பில் கிடந்தாள்” அந்நியனின் படுக்கையில் அல்ல என்ற வரிகளில் மூர்த்தியின் தெளிவு வாசகனின் தெளிவு போல முற்றுப்பெறுகிறது.நீலாவணன் வடமீன் காவியம் மூலமாக பெண்ணியச் சிந்தனைகளை புடம் போட்டுக் காட்டும் படைப்பாளியுமாகிறார்.

வேளாண்மைக் காவியமானது முற்றுப்பெறாத காவியமாகவே இலக்கிய விமர்சகர்களுக்கு அறிமுகமாகிறது.நீலாவணனே 1965 காலப்பகுதியில் அதை எழுதிக்கொண்டிருக்கும் போதே அரைவாசிக்குத் தான், எழுதியுள்ளேன் எனக் கூறியுமுள்ளார்.

நீலாவணனின் வேளாண்மை காவியமானது குடலை - பூப்பருவம், கதிர் - காய்ப்பருவம் எனும் இரு பாகங்களைக் கொண்டுள்ளது.வேளாண்மை காவியத்துக்கு முயற்சி என்ற மறைமுகப் பெயரே நீலாவணன் வைத்துக்கொண்டார்.குடலையில் கதையின் ஊடாக விரிபவை பண்பாட்டுக்கோலத்தை வெளிப்படுத்துவதாகவுள்ளது.காவியத்தின் கதிர் என்ற இரண்;;டாம் பாகம் முழுவதிலும் வசந்தத்தில் வருகைக்குரியவை விபரிப்பாகவும் ஏனையவை கதையாடல்களாகவும் அமைந்து மண்ணின் சடங்குகள் சம்பிரதாயங்கள் நடப்புகள் நாகரீகங்கள் மனப்பாங்குகள் வரன்முறைகள் பழக்கவழக்கங்கள் அனுஸ்டானங்கள் என்பன ஓசைநயத்துடனும் கவிதை நயத்துடனும் உணர்வு பூர்வமாயும் அமைந்துள்ளது.

வேளாண்மை காவியத்தின் ஊடாக மண்ணின் சடங்கு சம்பிரதாயத்தை சதையும் ரத்தமுமாக காட்ட வந்த நீலாவணன் காலனின் பிடியில் அகப்பட்டமையின் காரணமாக கல்யாண விழாவை கோலாகலமாகக் காட்டாமல் இருந்ததும் மாப்பிள்ளை பெண் பார்க்கப் போவதை மவுசுபடுத்தாமல் இருந்ததும் மற்றும் சம்பிரதாயங்களை மிகவும் சிறப்பாக மகோன்னதப்படுத்தாமல் இருந்ததும் என்றெல்லாம் தன் உள்ளக்குமுறலை அங்கலாய்பை இலக்கிய நண்பரான சசி வெளிப்படுத்துகின்றார். “இன்னும் இருக்கிறதண்ணே எவ்வளவோ உன் இனிய காவியம்.எப்போது இனி பிறந்து எழுதப்போகிறாய் என்று நீலாவணனின் காவியங்கள் எனும் நூலின் முன்னுரையில் தன் உள்ளக்கிளர்ச்சியை வாசகர்களுக்கு குறிப்பிடுகிறார்”.

விவசாய இயந்திரங்களைப் பற்றி எள்ளளவும் தெரிந்திராத தென்கிழக்கின் விவசாயக் குடும்பமொன்று கதைக் களமாக அமைகிறது.ஒரு விவசாயக் குடும்பத்தை மையமாகக் கொண்ட வேளாண்மை காவியத்தின் மூலம் கிழக்கின் சடங்குகள், நடப்புகள், நாகரீகங்கள், மனப்பாங்குகள், வரன்முறைகள், பழக்கவழக்கங்கள் என்பவற்றை ஆவணப்படுத்தவே முயன்றுள்ளார்.எனினும் அவரின் மரணம் அதற்கு இடமளிக்கவில்லை.
வேளாண்மை சர்ச்சைக்குரிய காவியமல்ல ஆனால் நீலாவணனால் முற்றுப்பெறாத ஒரு காவியமாகும் என்றால் மிகையாகாது.

முற்றுப்பெறாத வேளாண்மை காவியத்தை நீலாவணனின் எழுத்தாள நண்பரான வ.அ.இராசரெத்தினம் படித்து பார்த்து அதை முடிவுற்ற ஒரு காவியமாகக் கருதி தனியொரு நூலாக வெளியிட்டு நீலாவணனை இலக்கிய உலகிற்கு காவியப் படைப்பாளியாக அறிமுகப்படுத்தினார்.

வழி எனும் கவிதைத் தொகுப்பும்(1976), வேளாண்மை எனும் காவியமும்(1982), ஒட்டுறவு(நீலாவணன் கதைகள் -2003), நீலாவணன் காவியங்கள்(2010), ஒத்திகை எனும் நீலாவணன் கவிதைகள் தொகுப்பும்(2001), நீலாவணன் பா நாடகங்கள்(2005) ,கால ஒட்டத்திÇடே ஒரு கவிஞன்(1994) ,நீலாவணன்(எஸ்.பொ.நினைவுகள்-1994) ,ஒலை(சஞ்சிகை-2003), மல்லிகை(1970) ,பாடுமீன் போன்ற நூல்களுக்கூடாக நீலாவணனின் இலக்கிய பல்பரிமாண ஆளுமையை அறியக்கூடியதாகவுள்ளது.

பாடும்மீன் என்ற இதழானது மாசி 1967 இல் வெளியானது.பாடுமீன் சஞ்சிகையானது பண் -01 பண் -02 எனும் இரு இதழ்களே வெளிவந்துள்ள நிலையில் நிதிப்பற்றாக்குறை போன்ற இன்னோன்னரன்ன காரணங்களால் பாடும்மீன் வெளிவருவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கவில்லை. “கிழக்கிலங்ககையிலே முதன் முதலாக வெளிவந்த சஞ்சிகை எனும் பரிமாணத்தை பாடும்மீன் பெறுவதாகவுள்ளது”.
பாடும்மீன் - 01 இல் வ.அ.இராசரத்தினத்தின் அவசரம் என்ற கதையும் மு.சடாட்சரனின் பிடிப்பு எனும் கதையும் சண்முகம் சிவலிங்கத்தின்(சசி)  உறவு எனும் கதையும் நீலாவணனின்(வேதாந்தன்) நெருஞ்சி முள் என்ற கதையும் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் இலக்கியத்தில் சமநிலை என்ற கட்டுரையும் கே.ஆர்.அருளையாவின் மேலும் கீழும் எனும் கட்டுரையும் ஏ.ஜே.கனகரட்னாவின் மார்க்சீயமும் இலக்கியமும் என்ற கட்டுரையும் கல்லூர்ப்பித்தனின் உதயம் எனும் கவிதையும் நீலாவணனின் கைதி எனும் கட்டுரையும் மருதூர்க்கனியின் அழகிய மனிதன் என்ற கவிதையும் ஜீவா ஜீவரத்தினத்தின் பிரதியுபகாரம் என்ற கவிதையும் பாண்டியூரானின் பேறு எனும் கவிதையும் சிறப்பு அம்சம் எனும் பகுதியினுள் காமம் செப்பாது எனும் தலைப்பின் கீழ் குறும்பா தமிழுக்கு புதிய வடிவமா? என்பதை தெளிவுபடுத்தும் விளக்கமும் வி.ஸி.மெம்பர் காசிநாதர் எனும் நீலாவணனின் விருத்தாந்த சித்திரமும் கருத்தும் பொருத்தும் எனும் கே.ஆர். அருளையாவின் சிறு கட்டுரையும் இடம்பிடித்ததுள்ளது.பாடும்மீன் சஞ்சிகையின் அட்டைப்படமானது ஒரு பெண் கதிர் பொறுக்கும் காட்சியை வடிவமைத்ததுடன் கதிர் பொறுக்குகின்றாள் எனும் கவிதையும் முகப்புப் படத்தில் இடம்பிடித்துள்ளது.
பாடும்மீன் என்ற இதழானது 1967 பங்குனியில் பண்-02 ஐ பிரசுரித்தது.பண் -02 சஞ்சிகையில் மருதூர்க் கொத்தனின் மூக்குத்தி எனும் கதையும் சி.பி.சத்தியநாதனின் சீட்டுக்காசு எனும் கதையும் நோவன்னாவின் பழி எனும் கதையும் சா.தருமலிங்கத்தின் கூத்து எனும் கதையும் நீலாவணனின் வெளுத்துக்கட்டு என்ற கவிதையும் அரு.கணேஸின் நினைவின் அலைகளிலே எனும் கதையும் புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் இலக்கியத்தில் சமநிலை எனும் கட்டுரையும் மேலும் கீழும் எனும் பகுதியில் கே.ஆர் அருளையாவின் மகாகவி உமர்கையாம் எனும் சிறு கட்டுரையும் எழுத்தாளர்களின் இறுதிக்காலம் எனும் பகுதியில் டால்ஸ்டாய் பற்றியும் அம்மாச்சி ஆறுமுகம் எனும் புனைபெயரில் போடி மகள் பொன்னம்மா எனும் விருத்தாந்த சித்திரமும் காமம் செப்பாது எனும் பகுதியில் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் கரவெட்டி தந்த கவிஞர் கவி இருட்டடிக்கப்பட்டது ஏன் என்ற சங்கு சக்கரனின் கட்டுரையும் வளம் சேர்த்தது.
மு.பொன்னம்பலத்தின் யதார்த்தமும் ஆத்மார்த்தமும்(1991) என்ற கட்டுரையில் நீலாவணையும் மகாகவியையும் ஒப்பிட்டு  வேறுபடுத்துவதுடன் மகாகவியை ஒரு சாதாரண யதார்த்த வாதியாகக் கீழ் இறக்கி நீலாவணனை ஒரு ஆத்மார்த்தியாக மேல்  உயர்த்துகிறார்.நீலாவணனின் “தீ” ,“ஓ வண்டிக்கார”,“போகிறேன் என்றோ சொன்னாய்” ஆகிய மூன்று கவிதைகளே இலக்கியவுலகில் நிலையான இடத்தை கொடுத்தது என்ற “வெளி ஒதுக்கற் கொள்கையினை” வலியுறுத்த முனைகிறார்.இது கலையிலக்கியம் பற்றிய ஒற்றைப் பரிமாணப் பார்வையே என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவிஞர் நீலாவணன் இலங்கையின் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர்.கவிதை மட்டுமின்றி சிறுகதை, பாநாடகம், காவியம், உருவகக் கதை, விருந்தாந்த சித்திரம் என பல்வேறு இலக்கிய வடிவங்கள் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன.நீலாவணனின் கவிதைகள் பல கவியரங்கக் கவிதைகள் மேடைகளோடு மட்டுப்பட்டதுடன் சில ஆக்கங்கள் கையெழுத்துப் பிரதியாகவே நூலுருப்பெறாமல் இருந்துள்ளது.
நீலாவணனின் மரணத்தின் பின்னரே நீலாவணனால் தொகுக்கப்பட்ட வழி எனும் கவிதைத் தொகுப்பானது கவிஞர் எம்.ஏ.நுஃ மான் அவர்களாலும் வேளாண்மை என்ற காவியமானது பிரபல சிறுகதை எழுத்தாளர் வ.அ.இரசரெத்தினத்தாலும் நூலுருப்பெற்றுள்ளன.
பேரா.சி.மௌகுருவின் கால ஓட்டத்திÇமே ஒரு கவிஞன் என்ற நூலும் எஸ் பொ.அவர்களின் நீலாவணன் நினைவுகள் எனும் நூலும் நீலாவணனின் வாழ்க்கை வரலாற்றை இலக்கிய ஆர்வத்தை ரசிகர்களிடேயே ஏற்படுத்தும் நூல்களாகவுள்ளன.
மென் உணர்வு மிக்கவரும் எளிதில் உணர்ச்சி வசப்படுபவருமான நீலாவணன் தன் இறுதிக்காலத்தில் எஸ்.பொன்னுத்துரை ,மஹாகவி போன்ற உண்மையான தோழர்கள் பலரின் நட்பை சரியாகப் புரிந்து கொள்ளாததன் காரணமாக பலரின் உறவையும் துண்டித்த துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை எஸ்.பொன்னுத்துரையின் “நீலாவணனின் நினைவுகள்” என்ற நூலின் ஊடாக அறிய முடிகிறது.

நீலாவணன் ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் முக்கிய இடம்பெறுபவர்.ஈழத்து நவீன கவிதை பற்றி உரையாடும் போது மகாகவி, முருகையன், நீலாவணன் இவர்களைப் பற்றி குறிப்பிடாமல் வேறு யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது.இம் மூவரும் தனித் தன்மைகளும் பொதுப்பண்புகளும் உடையவர்கள்.து.உருத்திரமூர்த்தி,இ.முருகையன் போன்றவர்கள் யாழ்ப்பாணத்தை மையமாக்கொண்டு கவிதை படைக்க நீலாவணன் கிழக்கிலங்கையின் தனிப்பெரும் கவித்துவ ஆளுமைப் பிரதிநிதியாக விளங்கி சமூகத்தின் யதார்த்தப் பிரச்சினைகளை கவிதைகள் ஊடாக வெளிக்கொணர்ந்தார்.
கிழக்கிலங்கியில் குறிப்பாக கல்முனை மட்டக்களப்பு பிரதேசங்களில் பல முக்கியமான கவிஞர்கள் உருவாகுவதற்கு நீலாவணனின் செல்வாக்கே கணிசமானதாக இருந்துள்ளது என்றால் இதை எந்தக் கவிஞரும் மறுப்பதற்கு இடமில்லை.நீலாவணனின் சமகாலத்தவர்களான புரட்சிக்கமால், அண்ணல் ஆகிய இருவரும் கவிதைத் தரத்தாலும் அளவாலும் நீலாவணனுக்கு அடுத்த இடத்திலேயே தங்கள் இடத்தை தக்க வைத்துக்கொண்டனர்.
நீலாவணனின் மூலமாகவே எம்.ஏ.நுஃமான் இலக்கியவுலகில் புகுந்தார் என்றால் மிகையாகாது.நீலாவணனின் வழியாகவே மருதூர்க்கொத்தன், மருதூர்க்கனி, மு.சடாட்சரன், பாண்டியூரான், ஜீவா ஜீவரத்தினம், கனக சூரியம், மகாகவி, எஸ்.பொன்னுத்துரை, எம்.ஏ.ரகுமான் போன்றவர்கள் அறிமுகமானார்கள் என்றால் மிகையாகாது.உலகின் தமிழ்மொழி மூல சிறந்த படைப்பாளிகளையும் குறிப்பாக பரந்த இலக்கியவுலகிற்கு வழியமைத்துக் கொடுத்த பெருமை கவிஞர் நீலாவணனையே சாரும். 
நீலாவணன் 1931.05.31 இல் பிறந்து திடீரெனத் தாக்கிய இதய நோயின் காரணமாக 1975.11.01 அன்று தனது நாற்பத்திநான்கு வயதில் காலமானார்.பாரதி, புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபால், து.உருத்திரமூர்த்தி போல் அதிக சாதனைகள் செய்து அற்ப ஆயுளில் மறைந்தவராவார்.தன் ஆயுளில் அரைவாசிக் காலம் வரை இலக்கிய உலகில் தீவிரமாக உழைத்தவராவார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் நீலாவணன் கவிதை நாடகங்கள் என்ற நூலுக்கு “அரச இலக்கிய விருது 2006” இலும் வடக்கு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட இலக்கிய நூல் பரிசுத் தெரிவில் நீலாவணனின் “கவிதை நாடகங்கள் நூலுக்கு நாடகத்துறைப் பரிசும் சான்றிதழும்” வழங்கப்பட்டிருந்தது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட இலக்கிய நூல் பரிசுத் தேர்வில் “நீலாவணனின் காவியங்கள் எனும் நூலுக்கு 16.10.2011 அன்று இலக்கிய நூல் பரிசு சான்றிதழும்” கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாக்கியராஜா மோகனதாஸ்(நுண்கலைமாணி)

துறைநீலாவணை

No comments: