படித்தோம் சொல்கின்றோம் - ரஸஞானி - மெல்பன்

.

 பொற்கரையில்  ஊற்றெடுத்த  தமிழ் நதி
                                                 

"துளியாய்,  துளித்துளியாய்,  துளி  மழையாய், சிறுமழையாய், பெருமழையாய்,  விண்நீங்கி  மண் நனைக்கும் விசும்பின் துளிகள்போல்,  இங்கும்  வீழ்ந்தன  சில  துளிகள்"
இந்த கவித்துவ வரிகளை பதிவுசெய்தவர் அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்து மாநிலத்தில் பொற்கரை என்று சொல்லப்படும் GOLD COAST இல் மருத்துவராகப்பணியாற்றும்  திருமதி வாசுகி சித்திரசேனன்.
இவர் இலங்கையில் கண்டி மாநகரில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அசோக்கா வித்தியாலயம்  என்ற கல்விச்சாலையை தொடக்கிய நடராஜா மற்றும் கலை, இலக்கியவாதி லலிதா ஆகியோரின் புதல்வி.
" கடல்  நமக்கே  சொந்தமென  எந்தக்கரையுமே உரிமை கொண்டாட முடியாது. கடல் இருக்கும் வரைதான் கரைகளும் இருக்கும். அதேபோல் தமிழ் தமக்கு மட்டுமே சொந்தமென யாரும் நினைக்க முடியாது. தமிழ் தழைக்கும்வரைதான் தமிழர்களும்  தழைக்கலாம்.  தலைமுறைகளும் செழிக்கலாம்.  ஊற்றெடுத்து வேறிடமெனினும் தமிழ் நதியெனும் மகா நதியில்  சங்கமித்து  இன்று  இங்கே   இணைந்துள்ளோம்.  அனைத்துத் தமிழர்களையும்   அணைத்து   இணைத்து  பிணைத்துச்செல்லும் பெருநதியாக  என்றும்  வற்றாது  பிரவாகிக்கவேண்டும். "  இவ்வாறு அண்மையில்  அவுஸ்திரேலியா  தமிழ்  இலக்கிய




கலைச்சங்கமும் குவின்ஸ்லாந்து  வாழ்  கலை,  இலக்கிய  அன்பர்களும்  இணைந்து நடத்திய 16 ஆவது தமிழ் எழுத்தாளர்  விழாவில் வெளியிடப்பட்ட தமிழ்நதி  சிறப்பு  மலரில்  குறிப்பிட்டுள்ளார்  வாசுகி.
இம்மலரை  விழாவன்று  வெளியிட்டுவைத்தவர்  இலங்கையிலிருந்து வருகைதந்திருந்த   படைப்பாளி  தாமரைச்செல்வி.
"GOLD COAST"  இதன் அழகான தமிழ்வடிவம் பொற்கரை.

பறவைகள்  எடுத்துச்சென்று தம் பசிபோக்கிய பின்னர்  தூவிவிட்டுச்செல்லும்  கனிகளின் விதைகள்  தாவரங்களை உயிர்ப்பிப்பது  போன்றுதான்  எங்கெங்கோ பிறந்தவர்கள் அந்நியம் பறந்து சென்ற பின்னர் தம்முடன் எடுத்துவந்த கலை  இலக்கிய வித்துக்களை  தாம் வாழும் புகலிடத்தில் விதைத்து மொழிக்கு உயிர்ப்பளிக்கிறார்கள்.


"இலக்கியம்  என்பது  வாழ்வின்  பதிவு. இசையிலும் அசைவிலும் எதிரொலிப்பது.  ஏட்டிலும்  எழுத்திலும்  விட்டுச்செல்வது. வாழும் வாழ்வைக்காட்டிச்செல்வது.  வாழ்ந்தோர்  வாழ்வை  மீட்டிப்பார்ப்பது. தரமான  தமிழ்   இலக்கியத்தை  வரமாகக்கருதி  இதமான மாலைகளில்  இன்புற்று  மகிழ்ந்திட   உருவான  ஒரு நதியே நம் தமிழ் நதி " என்று  வாசுகி  சித்திரசேனன்   இம்மலரின்  நோக்கத்தை பதிவுசெய்கிறார்.
அண்மையில்  அவுஸ்திரேலியாவுக்கு  வருகை  தந்திருந்த தமிழகக்கவிஞர்  சல்மாவும்   இம்மலருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
கலை இலக்கியச்சங்கத்தின்  தலைவர்  பேராசிரியர் ஆசி. கந்தராஜாவின்  செய்தியில், " கலை  இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சிக்கு   எல்லையில்லை.  இது  காலம் காலமாகவும் சந்ததி சந்ததியாகவும்  பெருக்கெடுத்துப் பாயும்  ஒரு  ஊற்று. இந்த ஊற்றின் கண்  அடைபடாமல்   தொடர்ந்தும்   ஓடிக்கொண்டிருப்பதற்கு அவுஸ்திரேலியா   தமிழ்  இலக்கியக் கலை ச்சங்கம்   தனது பங்களிப்பினை   என்றும்  செய்துகொண்டிருக்கும் " எனத்தெரிவித்துள்ளார்.
கலை  இலக்கிய  ஊடகத்துறையில்  கருத்தியலை  முன்னெடுப்பதற்கு மேற்கொள்ளவேண்டிய  பணிகளை  முருகபூபதியின்  குறிப்புகள் பதிவுசெய்கின்றன.
" நன்மையும்  அறிவும்  எத்திசைத்தெனினும்  யாவரே  காட்டினும் மற்றவை  தழுவி  வாழ்வீராயின்  அச்சமொன்றில்லை " என்று  மகாகவி  பாரதி  அன்று  பாடியதை  நினைத்தால்  நம்  நெஞ்சம் நெகிழ்கிறது.   தம்  வரலாற்றுச்செய்திகளை  ஆவணப்படுத்துவதில் ஆங்கிலேயருக்கு  இருக்கும்  பேராவல்  ஏனோ  நம்மினத்தில்  சரியாக பொருந்தவில்லை.   சங்க  இலக்கியங்களை  பல  தொலைத்தோம். ஓலைச்சுவடிகளை  எரித்தோம்.   பகையினால்  பல  இழந்தோம். இதனால்   நம்  வரலாற்றுக்கதிர்களை  அறுவடைக்கு  முன் தொலைத்தோம்   இனிமேலாவது  விழிப்போமா? " என்று எமக்குப்பொதுவான  ஆதங்கத்தை  தமிழ் நதி  மலரில்    முன்வைக்கிறார்   மருத்துவர் கண்ணன் நடராசன்.   இவர் அவ்வை நடராசனின்  புதல்வர்.
குவின்ஸ்லாந்தில்  தமிழர்கள்  என்னும்  அவருடைய  கட்டுரை பல வரலாறறுத்தகவல்களுடனும்  இம்மாநிலத்தில்  இயங்கும்  தமிழ் அமைப்புகளின்  ரிஷிமூலத்தையும் அமைப்புகள்   செய்ததையும் செய்யவேண்டியதையும்  பேசுகிறது.
இலங்கையில்   மேற்கொள்ளப்பட்ட  தமிழ்த்திரைப்பட  முயற்சிகள் குறித்தும்   அவுஸ்திரேலியாவில்  ஈழத்தமிழர்களினால் தயாரிக்கப்பட்ட  திரைப்படங்கள்  தொடர்பாகவும்  விரிவான கட்டுரை தந்துள்ளார்   ஈழன் இளங்கோ.   நேசித்த  சினிமாவும்  அதன் விசாலமும்   என்னும்   தலைப்பில்   குவின்ஸ்லாந்து  திரைப்பட இயக்குநர்  இளந்திரையன் ஆறுமுகம்     கட்டுரை எழுதியிருக்கிறார். இவர்  இங்கு   வெளியான  சில  ஆங்கிலப்படங்களில் பணியாற்றியிருப்பவர்.
"யாயும் ஞாயும் யாரா கியரோ,
எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளீர்,
யானும் நீயும் எவ்வழி யறிதும்,
செம்புலப்பெயனீர் போல,
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே"
குறுந்தொகையில்  வரும்  இப்பாடலை  நான் உட்பட  எம்மில்  எத்தனைபேர்  புரிந்துகொண்டிருக்கிறார்கள்.  ஆனால்,  இந்தவரிகள் இடம்பெற்ற   புதிய  திரைப்படத்தினைப்பார்த்த,  குவின்ஸ்லாந்தில் வதியும்  பொற்கரையோன் ( புனைபெயர்) அவர்களின்  புதல்வி அர்த்தம்   கேட்கிறாள்.   புத்திரியின்  கேள்விக்கு  பதில் தேடி விரிவாக எழுதுகிறார்   பொற்கரையோன்.
விளக்கம்  இதோ:  என்னுடைய  தாயும்  உன்னுடைய  தாயும் உறவினர்களல்லர்.   என்னுடைய  தந்தையும்  உன்னுடைய  தந்தையும் எவ்வகையிலும்   உறவினரல்லர்.  நானும்  நீயும்  கூட ஒருவரையொருவர்   முன்னர்  அறிந்ததில்லை.  என்றாலும்கூட  நம் நெஞ்சம்  செம்புலத்திற்  பெய்த  நீர்  போலக்கலந்து விட்டது.  எனவே நான்   உன்னைப்பிரிவேன்  என  வருந்தவேண்டாம்   எனத்  தலைவன் தலைவியைத்  தேற்றுகின்றான்.
புகலிடத்தில்   பேசுபொருளான   தலைமுறை  இடைவெளியில்   தமிழ் சினிமாப்பாடல்  உருவாக்கும்  பெற்றோர்   குழந்தைகள்   உறவாடல் நெருக்கத்தை   இக்கட்டுரை   அழகாக   பதிவுசெய்துள்ளது.
தமிழின் பயணம் இசையுடன் கூடும் என்ற ஆக்கத்தில் பழந்தமிழ் இலக்கியப்பாடல்களிலிருந்து  இன்றைய திரைப்பாடல்கள் வரையில் நீடிக்கும் அழகியலைப்பற்றிப்பேசுகிறது சோழன் ராமலிங்கத்தின் வரிகள்.
கவிதைகள், கட்டுரைகள், மற்றும் குவின்ஸ்லாந்து தமிழ் அமைப்புகள், தமிழ்க்கல்வி நிலையங்கள், இசை மற்றும் நடன கலாலயங்கள், வானொலி ஊடகம்  பற்றிய செய்திகள் யாவும்     தமிழ்நதியில்  மிதந்து தவழ்ந்து வருகின்றன.
பொற்கரையில் தமிழர் வாழ்வின்கோலங்களை கலை, இலக்கிய, கலாசார கண்கொண்டு ஆவணப்படுத்தியிருக்கிறார் வாசுகி சித்திரசேனன்.
குவின்ஸ்லாந்தின் பொற்கரையில் நடந்த  தமிழ்  எழுத்தாளர் விழாவும் அதனை முன்னிட்டு வெளியிடப்பட்ட தமிழ்நதியும் இம்மாநிலத்தின்  கலை, இலக்கியச்சுவைஞர்களுக்கு  ஒரு மைல் கல். இதனையும்  கடந்து  அவர்கள்  செல்வார்கள்   என்பதற்கு  தமிழ்நதியின்  உள்ளடக்கம்  நம்பிக்கை  அளிக்கிறது. 

No comments: