கவி விதை - 17 - --விழி மைந்தன் --

.
சதுரங்கம்.





அவளோ  அழகி.

சேலான  விழியும், நூலான இடையும், தேனான மொழியும் உடையவள்.


கிராமத்துப் பெருந்தனக்  காரர் மகள்.

கிராமத்து விவசாயி ஒருவன் அவளைக் காதலித்தான்.

ஏழையானாலும், கட்டுறுதி உள்ள உடல், கண்ணிலே நல்ல குணம், ஒப்புரவே நன்றாய் உரைத்திடும் சொல் உடையவன்.

அவளுக்கும் பொழுது போகவில்லை. முதலில் உதாசீனம் செய்வது போல் இருந்து விட்டுப்  பிறகு அவன் காதலை ஏற்றுக் கொண்டாள்.

வயல் வரப்புகளிலும், மாந்தோப்புகளிலும், தென்றல் காற்று கிச்சு கிச்சு மூட்டும் நாணல் புதர்கள் நிறைந்த ஆற்றங்கரைகளிலும் வளர்ந்தது அவர்கள் காதல்.

பெருந்தனக்  காரருக்கு விஷயம் வெளித்த போது  நெருப்பானார்.

"என் குலமென்ன? பணமென்ன? அந்தஸ்து என்ன? என் மகளான நீ அவனைக் கட்டிட ஒரு போதும் அனுமதியேன்!" என்று கத்தினார்.

பணமும் அந்தஸ்தும் படைத்த பக்கத்தூர் வேளாரின் மகனுக்கு அவளைப்  பேசி முடித்தார்.

அவள் முதலில் எதிர்த்தாள்.

அன்னையும் பிற உறவு மகளிரும் அவளுக்குப் பலவாறு புத்தி சொல்லினர்.

மாப்பிள்ளையையும் இரகசியமாகக் காட்டினர்.

அவளும் பார்த்தாள்.

வேளாரின் மகன் அழகன். திரண்ட சொத்துக்கு அதிபதி என்றும் தெரிந்தது. விவசாயியைக் கட்டுவதை விட இவனைக் கட்டினால்  நன்றாக இருக்கலாம் என்று அவளது மனம் கணக்கிட்டது.

கொஞ்சம் மூக்கால் சிணுங்கிய பிறகு திருமணத்திற்கு இசைந்து விட்டாள்.

நீல விதானமிட்டு, நித்திலப் பூம் பந்தர்க்கீழ், மா முது பார்ப்பான் மறை நெறி காட்டத் தீ வலம்  செய்து திருமணம் நடந்தது. கணவன் வீடு சென்றாள்.

சென்றபிறகு தான் தெரிந்தது, கணவன் கோவலன் என்பது.

மாதவிகள் பலர் இருந்தனர் அவனுக்கு.

கண்ணகியாக இருக்க இவளால் முடியவில்லை.

வெளியேறுவதாகச் சொன்னபோது, வேளத்தில்   அடைத்துப் பூட்டி விட்டான் அவன்.

வேளை  பார்த்து வெளியே ஓடினாள்.

வெகுதூரம் காட்டில் நடந்தாள்.

அந்த நேரம், அவளது நாட்டுக்கும் பக்கத்து நாட்டுக்கும் சண்டை நடந்து கொண்டிருந்தது.

காட்டு மரமொன்றின் கீழ் சுருண்டு கிடந்த பூங்கொடியை, மதம் பிடித்த யானைகளென வந்த பக்கத்து நாட்டு வீரர் சிலர் கண்டனர்.

அவர்களது மத வெறியும் மது வெறியும் மாதுவெறி ஆகி விட, மிதித்துத் துவைத்து விடும் வேட்கையோடு  சூழ்ந்து கொண்டனர்.

அந்நேரம் ஆண்  சிங்கமென வந்தான் முகமூடியணிந்த  வீரன் ஒருவன்.

வெறியர்களை வெட்டி வீழ்த்தினான். 

அழகி அவன் காலடியில் வீழ்ந்து கதறினாள்.

"பெண்ணே! இலக்குமியும் ரதிதேவியும் இணைந்து வந்ததென விளங்கும் நீ இக்காட்டு வழியில் தனியாக ஏன்  வந்தாய்?  உன்னைப் பார்த்தால் திருமணம் செய்தவளாகக் காண்கிறதே! உன் கணவன் எங்கே? " என்று அந்த வீரன் கேட்டான்.

அழகி தன்  கதையைச் சொன்னாள்.

"என் தந்தையின் வற்புறுத்தலால் உளமாரக்  காதலித்தவரைக் கை  விட்டேன்.  அதன் பலனை இன்று அனுபவிக்கிறேன். அவர் என்னை அரசியென வைத்திருந்திருப்பார். என் தந்தை என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கினார்." என்று அழுதாள்.

வீரன் சிரித்தான்.

"பெண்ணே! நீ இன்னும் சிறுமியல்ல. நீ செய்த துரோகங்களுக்கு நீயும் பொறுப்பல்லவா?" என்றான்.

'என் தந்தை குடும்பத்தின் தலைவர். ஊரின் தலைவர். மிகக்  கடுமையானவர். அவர் வற்புறுத்தலுக்கு எதிராக நான் என்ன செய்திருக்க முடியும்?" என்றாள் அழகி.

வீரன் சொன்னான்.

"பெண்ணே... என் கதையைக் கேள்.

என் வாழ்நாளில் ஒரு துக்கம் எனக்கு நேர்ந்தது. எனது நாட்டினர் சிலர்  என்னைப் புண் படுத்தினர்.

அதனால் நான் ஆத்திரம் கொண்டு எதிரி நாட்டின் படையில் சென்று சேர்ந்தேன்.

அந்நாட்டு மன்னன் எங்கள் நாட்டின் மீது படையெடுத்து வந்த போது, கையில் வாளுடன் நானும் கிளம்பி வந்தேன்.

எதிரி நாட்டு மன்னன் கொடுங்கோலன்.

கண்ணில் பட்ட வயல்களுக்கெல்லாம் நெருப்பு வைக்கச் சொன்னான்.

கண்ணில்  பட்ட ஆண்களையெல்லாம் கொன்று விடச் சொன்னான்.

கண்ணில்  பட்ட பெண்களையெல்லாம் கதற வைக்கச் சொன்னான்.

கண்ணில் பட்ட முதியோரின் கண்களைப்  பிடுங்கச் சொன்னான்.

கண்ணில்  பட்ட கால்நடைகளின் காலை வெட்டச் சொன்னான்.

அவன் உத்தரவைத்  தான் இதோ இங்கே வெட்டுப் பட்டுக் கிடக்கும் வீணர்கள் நிறைவேற்றப் பார்த்தார்கள்.

பல நாள்கள் நானும் நிறைவேற்றினேன்.

நிரபராதிகள் குருதியில் என் கைகள் நனைந்தன.

என் இதயமோ இந்தக் கொடுமைகளுக்கு இணங்கவில்லை.

அரசன் உத்தரவை நிறைவேற்றாதவர்களுக்கு மரண தண்டனை என் படையில். வெளியேற முடியாமல் அகப்பட்டுக் கொண்ட நான் விருப்பமின்றியே பல கொடுமைகளைச்  செய்தேன்.

ஒருநாள், இரத்தக் குளங்களில் தீச்சுவாலைகள் பிரதிபலித்த  கிராமம் ஒன்றைப் பின்னே விட்டு விட்டு, கனத்த இதயத்துடன் காட்டு வழியில் வந்து கொண்டிருந்தேன், என் சகாக்களோடு.
ஆல  மரமொன்றின் அடியில், மூலப் பொருளை நினைந்து மோனத் திருந்தார் ஒரு முனிவர்.

சக படை வீரர்களை முன்னே செல்ல விட்டு, நான் சற்று நின்று சாமியாருடன் பேச்சுக் கொடுத்தேன்.

" சுவாமி, என் அரசன் உத்தரவுகள் எனக்கு உகந்தவையாயில்லை.


தர்மம் தவறி நடக்கக் கட்டளை இடுகிறான் அரசன்.

அவன் கட்டளைகளை மீறினால் என் தலை உருளும்.

அவன் கட்டளைகளை நிறைவேற்றினாலோ பல நிரபராதிகள் தலைகள் உருளுகின்றன.

நான் என்ன செய்வேன்" என்று கேட்டேன்.

முனிவர், தான்  மான் தோல் இருக்கையின் அடியிலிருந்து ஒரு சதுரங்கப் பலகையை எடுத்தார். காய்களை அடுக்கினார்.

"விளையாடுவாயா?" என்று கேட்டார்.

"இல்லை" என்றேன்.

முனிவர் சிரித்தார்.

"நீ விளையாட வேண்டும்.  ஏனென்றால், மற்றவர்கள் உன்னை விளையாடுகிறார்கள்" என்றார்.

"புரியவில்லை" என்றேன்.

"மகனே, உன் அரசனுடைய சதுரங்க சேனையில்  ஒரு அங்கம் நீ.

சதுரங்கத்தில் உலகமே இருக்கிறது. சதுர்த்திசைகளால் சூழப் பட்டுச் சதுர் வேதங்களால் காக்கப் பட்ட உலகமே ஒரு சதுரங்கம்.

ஒரு அரசன் ஒரு மனிதனை நகர்த்தலாம்.

ஒரு தந்தை ஒரு பிள்ளைக்கு வழி காட்டலாம்.

ஆனால், ஒரு மனிதன் தன்னைத் தானே நகர்த்திக் கொள்ள முடியும்.

அப்போது தான், அவன் தனது சொந்த ஆட்டத்தை ஆரம்பிக்கிறான்.

உன்னை வைத்து யார் எப்படி  விளையாடினாலும், அவர்கள்  எவ்வளவு வல்லமையும் அதிகாரமும் உள்ள  மனிதர்கள் ஆனாலும், உனது மனச்சாட்சி உன் கைவசமே  இருக்கிறது.  அதை யாரும் அபகரிக்க முடியாது. எனவே, நீ இறுதியாக ஒரு நாள் ஆண்டவன் முன்னாள் நிற்கும் போது, " ஆனால் இறைவா, என்னை  இப்படிச் செய்யும் படி மற்றவர்கள்  பணித்தார்கள்" என்றோ, "நீதியின் படி நடப்பது அந்த நேரத்தில் சௌகரியமாக இருக்கவில்லை" என்றோ சொல்லி விட முடியாது. அது போதுமானதாக இருக்காது. புரிந்ததா?" என்றார்.

"புரிந்தது" என்றேன்.

இதற்கிடையில் சக வீரர்கள் திரும்பி வந்தார்கள்.

"வருகிறாயா?" என்றார்கள்.

வாளை  உருவிக் கொண்டேன்.

"சகோதரர்களே! உங்களுடன் எனக்குப் பகையில்லை. நான் என் வழியே போகிறேன். உங்கள் பெண்சாதி பிள்ளைகளை உயிரோடு பார்க்க விரும்பினால் என்னைத் தடுக்காதீர்கள்" என்றேன்.

ஒருவன் தடுத்தான்.

வெட்டி வீழ்த்தி விட்டுக் காட்டுக்குள் ஓடினேன்.

மற்றவர்கள் தொடரவில்லை.

அன்றிலிருந்து, முக மூடி  அணிந்து இந்தப் பிராந்தியத்தில் சஞ்சரிக்கிறேன். 

எங்கெல்லாம் அபலைகள் கொடுமைக்கு ஆளாகிறார்களோ, அங்கங்கு சென்று அவர்களைக் காப்பாற்றுகிறேன்.

இது பிராயச் சித்தம் அல்ல. நான் செய்த கொடுமைகளுக்குப் பிராயச்  சித்தம் இல்லை. 


இது இந்த நேரத்தில் என் தர்மம். அவ்வளவே!"

வீரன் நிறுத்தினான். விழி விரியக்  கேட்டுக் கொண்டிருந்தாள் அழகி.

"நீங்கள்  மிகவும் நல்லவர். உங்கள் திருமுகத்தை நான் பார்க்கலாமா? உங்கள் முக மூடியை அகற்றுங்களேன்!" என்று கேட்டாள்.

"பெண்ணே! உன் முக மூடியை நீ முதலில் கழற்றலாமே!" என்றான் வீரன்.

அவள் முதலில் திகைத்தாள். பிறகு புரிந்து கொண்டாள்.

"ஆமாம். நீங்கள் சொல்வது சரி.

அந்த ஏழை விவசாயியை நான் பொழுது போக்காகத் தான் காதலித்தேன்.

உண்மையாகவே மனம் இசைந்து தான் பக்கத்து ஊர் வேளாரின் மகனை மணந்து கொண்டேன். அவன் பணத்தோடும் அழகோடும் ஒப்பிட்ட போது, ஏழை விவசாயி சாதாரணமாகப் போய்  விட்டார் எனக்கு.

நான் உண்மையைச் சொல்லி அவரிடம்  மன்னிப்புக் கேட்டிருக்கலாம். ஆனால், என் தந்தையின் அதிகாரத்தைச் சாட்டு ஆக்கித்  தப்பித்துக்  கொண்டேன். இந்த உண்மையை இந்த நிமிஷம் வரை நானே உணர்ந்து கொள்ளவில்லை. நீங்கள் என் கண்களைத் திறந்தீர்கள்.

அவரை ஒரே ஒரு முறை பார்த்து மன்னிப்புக் கேட்டால் என் ஜென்மம் சாபல்யம் அடையும். அது என்று நடக்குமோ?" 

அவள் அழுதாள்.

"பெண்ணே!  ஆண்டவன் நாங்கள் நினைப்பதை விட மிகுந்த கருணையுள்ளவர்." என்றான் வீரன்.

தனது முக மூடியை விலக்கினான்.

போர்த் தழும்புகள் பல பூண்டு விகாரப்  பட்டிருந்தாலும், தான் ஏமாற்றிய ஏழை  விவசாயியின் முகம் அது என்பதைக் கண்டாள்  அவள்.

"என்னை மன்னித்து விடுங்கள்!" என்று காலில் விழுந்து கட்டிக் கொண்டாள்.

"பெண்ணே! உன்னை மன்னிக்க நான் அருகதையில்லாதவன். ஏனென்றால், நீ எனக்குச் செய்ததை விடப்  பெரும் பாவங்களை  நான் செய்து விட்டேன்.

ஆனாலும், செய்த தவறுகளை ஏற்றுக் கொள்ளக் கூடிய, மனச் சாட்சியின் படி நடக்கத்  தயங்காத, இறுதியாக ஒரு நாளில் இறைவன் கண்களை நேருக்கு நேர் பார்க்கக் கூடிய இரண்டு புது மனிதர்களாக நாம் இங்கே இணைந்திருக்கிறோம். தொடர்ந்து நடப்போம் வா!" என்று அவளை எழுப்பினான் அவன்.

நடந்தார்கள்.

============================================
M.Piraveenan B.Eng(Comp. Sys)Hons(Adelaide), Ph.D(Sydney)
Lecturer
Centre for Complex Systems Research &
Project Management Graduate Programme
Faculty of Engineering and IT
University of Sydney
Phone: (+612) 9351 2892
Fax: (+612) 9351 3343
Mobile:(+61)420 627 162
Email: mahendrarajah.piraveenan@sydney.edu.au



From: Mahendrarajah Piraveenan <mpiraveenan@yahoo.com>
To: Tamilmurasu Australia <murasuau@gmail.com>; Tamil Murasu <tamilmurasu1@gmail.com>
Cc: Mahendrarajah Piraveenan <mpiraveenan@yahoo.com>
Sent: Sunday, 4 September 2016, 10:54
Subject: Kavi vithai - 16

Dear Editors,

I now have time and inspiration to continue the 'Kavi Vithai' series, and write a few more. Therefore I am planning to send you a few more on a weekly basis. Please find one attached here and publish if suitable.


Thank you very much!

/Piraveenan


காலங்கள் 

கவி விதை  -  16

-- விழி மைந்தன் --

வெள்ளைக் கல்லில் கட்டிய அந்த அழகிய வீட்டின் முன்னால்  ஓங்கி வளர்ந்த மரம் ஒன்று நின்றது. மரத்தின் காலடியில் வளர்ந்து வந்தது சின்னஞ்சிறு  பூச்செடி.

பூமியின் மத்திய கோட்டை  விட்டு எட்டியே  நிற்கும் தேசம் அது. நான்கு பருவங்கள் மாறி மாறி வந்தன.


குளிர்காலத்தில் மரம் இலைகளை உதிர்த்து விட்டுத் தூங்கப் போய்விடும். தன்னுள் தானே ஒடுங்கி, பனிக்காற்றில் நடுங்கி நிற்கும் சின்னப் பூச்செடி. இவற்றைச் சுற்றி நிற்கும் மற்றத்  தாவரங்களும் ஆடையின்றி, வாடையில் மெலிந்து, நீண்ட இரவுகளில் மட்டுமின்றிப் பகலிலும் துயில்வன. வடக்கே இருக்கும் வானத்தின் வெளிகளில் விளையாடப்  போயிருக்கும் சூரியன் திரும்பி வருவது பற்றிக் கனவுகள் காணும்.


வசந்த காலம் வந்ததும் தாவரங்கள் விழித்துக் கொள்ளும். மரத்தில் இளம்பச்சை இலைகள் துளிர்விடும். பூச்செடியோ, இலைகளே தெரியாத அளவு மிளிர்கின்ற வெள்ளை நிறப்பூக்களால்  தன்னை மூடிக் கொள்ளும். பூக்களின் நறுமணம் நாசியை அள்ளுவதால் அந்த வீட்டு மனிதர்கள் அடிக்கடி பூச்செடியை வந்து பார்ப்பார்கள். இதனால், பூச்செடிக்கு வசந்த காலம் வருடத்தின் மிக விருப்பமான காலம்.


கோடை காலம் வருகிற போது மரத்துக்கு  அடிக்கடி தண்ணீர் விடுவார்கள். நல்ல வெப்பமும் தண்ணீரும் கிடைப்பதால் மரம் செழித்து வளரும். தனது உயரத்தை மரம் மிக வேகமாக அதிகரிக்கும் காலம் கோடை காலம். இதனால் மரத்துக்கு, கோடை என்பது ஆண்டில் மிக ஆனந்தமான காலம்.

அக்கம் பக்கமாக வளர்ந்த மரமும் செடியும், அடிக்கடி தமக்குள்ளே பேசிக் கொள்வது வழக்கம். இலைகளைச்  சரசரத்தும்  கிளைகளை ஆட்டியும் மனிதருக்குப் புரியாத மௌன பாஷையிலே அவை பேசும்.

அன்றொரு நாள் -  வழக்கத்தை விட அதிகமாகவே குளிர் நடுக்கிய  பின்பனிக் காலம் ஒன்றிலே, மரமும் செடியும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டிருந்தன.

"இம்முறை கூதிர் போகவே போகாது போலத்  தோன்றுகிறதே! குளிர் காலம் எப்போது முடியுமோ? வசந்தம் எப்போது வருமோ? வசந்தமன்றோ வருடத்தில் மிகச் சிறந்த காலம்!" என்றது பூச்செடி.

"கூதிரை  விட வசந்தம் நன்றே! ஆனால் வசந்தத்தை விட நன்று கோடை!" என்றது மரம்.

" இல்லவே இல்லை! வசந்த காலத்தில் அன்றோ அழகிய பூக்கள் ஆயிரம் மலர்ந்து, வர்ண ஜாலம் மிகுந்த ரத்தினக்  கம்பளத்தால் பூமி போர்த்தப் படுகிறது! பூக்கள் வாசம் வீசும் காலம், புன்னகைகள் பூக்கும் காலம், பாக்கள் நாக்கள்  பாடும் காலம் வசந்த காலமே! பாரில் யாரும் மகிழும் நேரம் வசந்த நேரமே" என்றது பூச்செடி.

"ஏற்றுக் கொள்ளவே மாட்டேன்! கோடையில் அன்றோ அறுவடை நடந்து, களஞ்சியங்கள் எங்கும் தானியம் நிறைகிறது! உழவன் மகிழ்கிறான். சந்தை கூடுகிறது. திருவிழா நடக்கிறது. விடுமுறை வருகிறது. பாலர் யாரும் களிக்கும்  காலம், பரவைக்  கடலில் குளிக்கும் காலம், நீளப்  பயணம் போகும் காலம் கோடை காலமே! நேரங்களுக்குள் சிறந்த நேரம் கோடை நேரமே!" என்றது மரம்.

"வசந்த காலம் வந்து விட்டால் முல்லை பூத்திடும். வயலில் வந்து வானம்பாடி பாட்டுப் பாடிடும். அசைந்து செல்லும் ஓடை நீரின் அழகைக் காணலாம்! ஆலங்கிளையில் தேனும் சொட்டும் ஓசை கேட்கலாம். இருளும் விலக  ஒளியும் பரவும் காலம் வசந்த காலமே! எனக்கு ஆண்டில் மிகவும் பிடித்த காலம் வசந்த காலமே!" என்றது சின்னப் பூச்செடி.

"இல்லை! இல்லை!! கோடைக் காலப் பகலில், இலைகள் கூரை வேய்ந்திட, கோழித்தூக்கம் போடும் மரங்கள் கனவு கண்டிடும். ஓடைக்  கரையில் வாடைக் காற்றில் இலைகள் அசைந்திடும். ஊரில் எங்கும் பழங்கள் பழுத்துக்  கிளைகள் வளைந்திடும்.  இரவு சிறிது, பகல்கள் நெடிது, இன்பம் பெரிது கோடையில். எனக்கு  மிகவும் பிடித்த காலம் கோடை, கோடை, கோடையே !" என்றது மரம்.


இப்படி மரமும் செடியும் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த பொழுது, சின்னஞ்சிறிய  பஞ்சவர்ணக்கிளி  ஒன்று பறந்து வந்தது அங்கே.

"கிளியே, கிளியே, இங்கே வா. எங்கள்  விவாதத்திற்குத் தீர்ப்புச் சொல். வருடத்தில் மிகவும் சிறந்த காலம், வசந்த காலமா? இல்லை கோடை காலமா?" என்று கேட்ட்து மரம்.

"வசந்தமே  சிறந்தது என்கிறேன் நான். கோடையே சிறந்தது என்கிறது மரம். உனக்குப் பிடித்த காலம் எது?" என்று கேட்டது  செடி.

"எனக்குப் பிடித்த காலம் இந்தக் காலம் தான். இப்போது நடைபெறும் குளிர் காலத்தின் பிற்பகுதி தான் " என்று கிளி சொன்னது, மரத்தையும் செடியையும் பெரு வியப்பில் ஆழ்த்தியது.

"இந்தக் குளிர் காலமா? குளிர் நடுக்கும், மரங்கள் ஆடையின்றி நிற்கும், செடிகள் பனியில் விறைத்து நிற்கும், எங்கெங்கு பார்ப்பினும் பசுமையோ பூக்களோ தெரியாத, இந்தப் பின் பனிக்காலமா? ஏன்?" என்று வியப்போடு கேட்டன  மரமும் செடியும்.

பச்சைக் கிளி புன்னகை செய்தது.

"வெளியிலே சந்தோசம் வீசும் காலங்களை விரும்புகிறீர்கள் நீங்கள். மனத்திலே நம்பிக்கையைக் கொண்டு வரும் காலம் மலர்த்துகிறது என்னை.

இலை உதிர் காலத்திலிருந்து, முன் பனிக்  காலம் வரை நாளுக்கு நாள் குளிர் அதிகமாகி வருகிறது. பகல் தேய்கிறது. இரவு நீள்கிறது. நம்பிக்கை சுருங்குகிறது. 

பிறகு ஒரு நாள், அதி உச்சக் குளிர் தாண்டிய பிறகு, காற்றில் ஒரு மாற்றத்தை உணர்கிறேன்.

நேற்றை விட இன்று குளிர் குறைந்திருக்கிறது.

சூரியன் என் காதலன். சிவப்புப் புரவிகள் பூட்டிய அவனது நெடுந்தேர் என் பக்கமாகத் திரும்பி விட்டதை என் மனம் எனக்கு உணர்த்தி விடுகிறது.

இன்னும் நெடுந்தூரத்திலேயே அவன் தேர் இருந்தாலும், அவன் என்னை நோக்கி வரத்  தொடங்கி விட்டான் என்பதே மனதுக்கு அதி மகிழ்வைத் தருகிறது.

நடுக்கும் குளிர் நிலவிய பல மாதங்களின் பின், மெல்லிய வெம்மை தாங்கிய காற்றொன்று முதன்முதலில் உடலில்  படும் சுகம் இருக்கிறதே! வசந்தத்தின் மெல்லிய வாசனை காற்றில் கலந்து நாசியில் படும்போது வரும் நம்பிக்கை இருக்கிறதே! அதற்கு அதுவும் ஈடாகாது. 

நீ இப்போது எங்கே இருக்கிறாய் என்பதல்ல முக்கியம். உன் பயணம் ஏறுமுகமாக இருக்கிறதா, இறங்குமுகமாக இருக்கிறதா என்பதே முக்கியம்.

இந்தப் பின் பனிக் காலம், பனி பின்வாங்கும் காலம். வருடத்தில் எனக்கு மிகப் பிடித்த நேரம். "

பச்சைக் கிளி பறந்து சென்றது. 

இன்னும் குளிர் இருந்த போதிலும், நிமிர்ந்து நின்றன செடியும் மரமும்.

No comments: