இலங்கைச் செய்திகள்


இலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்.!

முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவையில் பாரிய ஆர்ப்பாட்டம்

தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு

 “இழுவைப் படகிற்கு அனுமதியுங்கள் அல்லது சவப்பெட்டியை தாருங்கள்”

 இந்தியாவின் மத்திய அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு : கொழும்பு நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல்

எட்கா உடன்படிக்கை : அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம் : ஒன்றாக இருப்பதா ? இல்லையா ? என தீர்மானியுங்கள்: இந்தியா

ஜயந்த சமரவீர  நிதி மோசடி விசாரணை பிரிவில்

யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

 ரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம் : கெமராவை தாக்கிய ரஞ்சன் : அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார் (காணொளி இணைப்பு)

ஹட்டன் - பொகவந்தலாவ  வீதியை மறித்து   மக்கள் ஆர்ப்பாட்டம்  ; வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க கோரி தோட்டத் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த சமரவீர கைது

இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.!

நாய் தோண்டிய குழியிலிருந்து  3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்

நீஷா பிஷ்வாலை சந்தித்தார் கடற்படை தளபதி





இலங்கையை வந்தடைந்தார் நிர்மலா சீத்தாராமன்.!



26/09/2016 இந்­தி­யாவின் மத்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமன் சற்றுமுன்னர்  இலங்­கையை வந்தடைந்தார்.
இதன்­போது இரு நாடு­க­ளுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார ஒத்­து­ழைப்­புக்கள் தொடர்பில் அர­சாங்­கத்தின் முக்­கி­யஸ்­தர்கள் உட­னான சந்­திப்பில் கலந்­து­ரை­யா­டுவார்.   நன்றி வீரகேசரி 
















முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவையில் பாரிய ஆர்ப்பாட்டம்

26/09/2016 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை வழங்குமாறு கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இன்று காலை முதல் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை வழி மறித்து பொகவந்தலாவ பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் முடிவடையும் தருவாயில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு தெரிவித்து வருவதாக தெரிவிக்கபடுகிறது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் 09 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொழிலாளர்களுக்கான வேதனத்தினை நாள் ஒன்றுக்கு 700 ரூபா சம்பளமும் வாரத்திற்கு 03 நாள் வேலை தருவதாக  முதலாளிமார் சம்மேளம் அறிவித்ததையடுத்தே இந்த பாரிய அர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டு வருவதாக ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாடத்தில் போது தோட்ட தொழிலாளர்கள் வீதியை மறித்து வீதியல் படுத்த நிலையில் ஆர்பாடத்தில் ஈடுபட்டனர் .
இதனால் சில மனித்தியாளங்கள் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் போக்குவரத்தும் பாதிக்கபட்டிருந்தது,
இந்த ஆர்ப்பாட்டத்தில் பொகவந்தலாவ கிழ்பிரிவு,மேற்பிரிவு,டின்சன்,கொட்டியாகலை, கெம்பியன் ஆகிய தோட்டமக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 














தெல்லிப்பளையில் குண்டுகள் மீட்பு

26/09/2016 யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பசிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கிணற்றினை புனரமைப்பு செய்ய கிராமவாசிகள் சென்ற வேளையில் குண்டுகளை கண்டு பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி 








 “இழுவைப் படகிற்கு அனுமதியுங்கள் அல்லது சவப்பெட்டியை தாருங்கள்”
27/09/2016 கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில்  மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது எங்களுக்கு சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்று  இடம்பெற்றது. இதன்போது  அங்கு அமர்ந்திருந்த இணைத் தலைவர்களை நோக்கி கோரிக்கை விடுக்கும்  போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் உள்ளுர் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
யாழ்ப்பாணத்திலிருந்தும் மன்னாரிலிருந்தும் பூநகரியில் நாம் தொழில் செய்யும் கடற்கரைக்கு வரும் இழுவைப் படகுகளால் எங்களது பெறுமதிவாய்ந்த கடற்றொழில் உபகரணங்கள்  அழிக்கப்பட்டும் சேதமாக்கப்பட்டும் வருகிறது. 
இது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் பலருக்கும் தெரியப்படுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனத்தெரிவித்த ஜோசப் பிரான்சிஸிடம், ஐயா சில காலங்கள் பொறுத்திருங்கள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்  இது தொடர்பில் சட்டவரைபு ஒன்றை கொண்டுவந்திருக்கின்றார். அதற்கு இழுவைப் படகு தொழில் மேற்கொள்கின்றவர்களிடம் இருந்து எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
எனவே சில தாமதங்கள் ஏற்படும் அதுவரை பொறுத்திருங்கள் என்றார்.
இதற்கு மறுப்புத்  தெரிவித்த சமாசத் தலைவர் சுமார்  ஆயிரத்து ஆறுநூறு பேர்  தொழில் செய்கின்ற இழுவை படகுகளை  பற்றி  கவனத்தில் எடுக்கின்ற நீங்கள், அறுபதாயிரம் சாதாரண கடற்றொழிலாளர்களை  பற்றி அக்கறை எடுக்கவில்லை.  நாங்கள் எழை கடற்றொழிலாளர்கள்  இழுவைப் படகு தொழிலாளர்கள் போன்று கொழும்பு வரை சென்று எதிர்ப்புத் தெரிவிக்க இயலாது. உயர்ந்தபட்சம் இவ்வாறான கூட்டங்களில் மாத்திரமே எங்களது  உணர்வை வெளிப்படுத்த முடியும் எனவும் தெரிவித்த அவர், இந்திய இழுவைப் படகுகளாலும் நாம் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றோம், ஆனாலும் இந்திய இழுவைப் படகு கடற்றொழிலாளார்கள் கைது செய்யப்படுகின்றார். ஆனால் எமது உள்ளுர் இழுவைப் படகுகளை  உரிய தரப்புக்கள் எவரும் கட்டுப்படுத்துகின்றார்கள் இல்லை.
எனவே இனியும் எங்களால் பொறுத்திருக்க முடியாது. உங்களால் உள்ளுர்  இழுவைப் படகுகளை கட்டுப்படுத்த முடியாது என்றால் எங்களுக்கும் இழவைப் படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது எங்கள் கடற்றொழிலாளர்களுக்கு சவப்பெட்டிகளை தாருங்கள் என விசனத்துடன்  தெரிவித்தார்.
இதன் போது இணைத் தலைவா்களான வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மற்றும் அங்கஜன் இராமநாதன் மற்றும் மாவை சேனாதிராஜா, வட மாகாண அமைச்சர்களான டெனீஸ்வரன், ஐங்கரநேசன்,சத்தியலிங்கம், குருகுலராஜா மாகாண சபை உறுப்பினர்களான தவநாதன், அரியரட்ணம் மற்றும் திணைக்களங்களின் தமைலவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








இந்தியாவின் மத்திய அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு : கொழும்பு நகரில் பெரும் போக்குவரத்து நெரிசல்

27/09/2016 உத்­தி­யோகபூர்வ விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்டு இலங்கை வந்துள்ள இந்­தி­யாவின் மத்­திய வர்த்­தக அமைச்சர் நிர்­மலா சீத்­தா­ராமனின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து புறகோட்டையில் சற்று முன்னர் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன் காரணமாக கொழும்பு நகரில் பெரும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.    நன்றி வீரகேசரி










எட்கா உடன்படிக்கை : அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம் : ஒன்றாக இருப்பதா ? இல்லையா ? என தீர்மானியுங்கள்: இந்தியா

27/09/2016 இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எட்கா உடன்படிக்கையானது இரண்டு நாடுகளும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கும் ஒன்றாகும்.  இலங்கைக்கு இது வேண்டாம் எனின் நாங்கள் எந்த வகையிலும் இதில் அழுத்தம் பிரயோகிக்க மாட்டோம். எதனையும் திணிக்க மாட்டோம். இரு தரப்பு பரஸ்பர புரிந்துணர்வுடனேயே உடன்படிக்கை கைச்சாத்திடப்படும்  என்று இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
ஒன்றாக இருப்பதா ? இல்லையா ? என்பதை இரண்டு தரப்புக்களுமே தீர்மானிக்க வேண்டும். ஒரு வழிப்பாதையில் எந்த செயற்பாடும் முன்னெடுக்கப்படாது. இரு தரப்பு இணக்கப்பாட்டு  உடன்படிக்கையே முன்னெடுக்கப்படும்  என்றும் அவர் குறிப்பிட்டார். 
எட்கா கைச்சத்திடப்பட்டால் 120 கோடி மக்களை கொண்ட சந்தை ஒன்று உங்கள் நாட்டில் கிடைக்கும். உங்களது அனைத்து பொருட்களும் சேவைகளும் இந்தியாவிற்கு திறந்துவிடப்படும். உங்களது விவசாயப் பொருட்கள் இந்தியாவிற்கு வரும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 
சம்பூர் விடயத்தில் இலங்கையின் தேசிய முக்கியத்துவம் கவனத்திற் கொள்ளப்பட்டது. இலங்கை அனல்மின் உற்பத்தியிலிருந்து வெ ளியே செல்வதற்கான தேசிய முக்கியத்துவம் வெ ளிக்காட்டப்பட்டது. அதனை நாங்கள் ஏற்றுக் கொண்டோம்.  எனினும் இது இலகுவான விடயம் அல்ல. கடினமாக இருந்தாலும் இந்த விடயத்தில் இலங்கையுடன்  ஈடுபாட்டுடன்  செயற்பட வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருக்கின்றது.  ஐயோ இப்படியாகிவிட்டதே என்று இந்தியா கருதவில்லை. நாம் இந்த விடயத்தில் தேசிய முக்கியத்துவ விடயத்தை பாராட்டுகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.  
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் கொழும்பில்    சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடான இருதரப்பு சந்திப்பை நடத்தினார். அதன்  பின்னர் தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிகையிலேயே இந்திய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.    நன்றி வீரகேசரி









ஜயந்த சமரவீர  நிதி மோசடி விசாரணை பிரிவில்

28/09/2016 தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர  பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில்  இன்று (28) ஆஜராகியுள்ளார்.
அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில்  விசாரணை செய்வதற்காகவே இவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.    நன்றி வீரகேசரி










யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி

28/09/2016 யோசித ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28)  பிறப்பித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் வைத்திய பரிசோதனை செய்யவுள்ளதாக  கோரி குறித்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றில் யோசித ராஜபக்ஷ நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யோசித ராஜபக்ஷ மீது நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு நடைபெற்று வருவதால் அவர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து கடுவலை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், மேல் நீதிமன்றம் வெளிநாடு செல்ல அனுமதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.    நன்றி வீரகேசரி









 ரஞ்சனுக்கும் ஊடகவியலாளருக்கும் கடுமையான வாக்குவாதம் : கெமராவை தாக்கிய ரஞ்சன் : அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார் (காணொளி இணைப்பு)

28/09/2016 பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் ஊடகவியலாளர் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதோடு அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீடியோ கமராவை தாக்கியுள்ளார்.
சிறப்பு பரிசோதனைகளுக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் விடயம் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக நேற்று மாலை தனது வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பை ரஞ்சன் ராமநாயக்க ஆயத்தப்படுத்தியிருந்தார்.
ஊடகவியலாளர் மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் ஊடகவியலாளர்கள் சிலர்,
'லசந்த ஆயுதம் ஒன்றாக பலமாக தாக்கப்பட்டே உயிரிழந்திருந்தார். இது யாவரும் அறிந்த விடயம். எனினும் தற்போது அவருடைய சடலத்தை தோண்டியெடுப்பது தேவையற்ற விடயமாகும்' என்றனர்.
இதனையடுத்து சற்று கோபமடைந்த அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க,
'லசந்த என்பவர் யார். அவர் ஒரு ஊடகவியலாளர். நீங்கள் ஊடகவியலாளர்களாக இருந்துகொண்டு இப்படி கதைக்கின்றீர்களே. நீங்கள் எல்லோரும் நல்ல ஊடகவியலாளர்கள். இந்த விடயத்தை மறந்து விடுங்கள்,

'ஏன் லசந்தவை பற்றி எந்தநேரமும் கதைத்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் ஒரு டெப்லொயிட் ஊடகவியலாளர் தானே. அவரை மறந்து விடுங்கள் என கோத்தபாய ராஜபக்ஷ சொன்னது போன்று நாமும் மறந்து விடுவோம். இலங்கையில் உள்ள ஊடகவியலாளர்களின் தன்மை இதுதான் என்றார்.
இதனையடுத்து ஊடகவியலாளர் ஒருவர், அமைச்சரே நாங்கள் யாராவது லசந்த தாக்கப்பட்டு கொலை செய்யவில்லை என்று கூறினோமா? என்றார்.
அதற்கு அமைச்சர், 'லசந்த என்னுடைய நெருக்கமான நண்பராவார். அவரை எட்டு தடவைகளுக்கு மேல் சந்தித்துள்ளேன். அவர் எனக்கு பல தகவல்களை வழங்கியுள்ளார். அதேபோன்று நானும் அவருக்கு நாட்டில் நடந்த முக்கியமான ஊழல் செய்திகளை வழங்கியிருந்தேன்.
பத்திரிகை ஆசிரியர் ஒருவரின் திருமண நிகழ்வொன்று கொழும்பில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் மொத்த செலவையும் மஹிந்த ராஜபக்ஷவே ஏற்றுகொண்டார்.
இதேபோன்று மற்றுமொரு பத்திரிகையின் ஆசிரியர் தனது மகன் மற்றும் மகளை ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் அருகில் அமைந்திருக்கும் மற்றுமொரு பிரபல பலக்கலைக்கழகத்தில் சேர்த்தார்.
அவர்களின் பிள்ளைகளை பிரித்தானியாவில் உள்ள அனுர ஹே கொடவின் வீட்டில் தங்க வைத்தார். வீட்டு வாடகை பணமான பல இலட்ச பணத்தை வழங்கினார்.
இந்த விடயத்தை நான் லசந்தவுக்கு வழங்கினேன். பின்னர் அனுர ஹேகொட எனக்கு தொலைபேசி மூலம், பிள்ளைகளின் கல்வி சம்பந்தமான விடயம் என்பதால் இதனை பிரசுரிக்க வேண்டாம் என்றார். ஆனால் லசந்த இந்த விடயத்தை பத்திரிகையில் பிரசுரித்தார். இதனையடுத்து குறித்த ஆசிரியர் இன்றுவரை என்னோடு கதைக்கமாட்டார்.
தற்போது லசந்தவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இவ்விடயம் தொடர்பில் சரியான முறையில் செய்திகளை வெளியிட்டு உந்துல் அளிக்கும் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உயர்மட்டத்தில் உள்ள நபர்களை கைது செய்ய முடியும்.
நாம் எல்லோரும் கசிப்பு விற்பனை செய்யும் நபரை கைது செய்ய வந்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தும் சமூகமாக உள்ளோம்.
இதன்போது குறுக்கிட்ட ஊடகவியலாளர்' பொலிஸ் அதிகாரி இலஞ்சம் வாங்குவதால் தாக்குதல் நடத்துகின்றார்களோ தெரியவில்லை' என்றார்.
இதற்கு அமைச்சர் 'உங்களை போன்ற ஊடகவியலாளர்கள் இலஞ்சம் பெறுவது போன்றுதான் என்றார்.
இதற்கு ஊடகவியலாளர் என்னை காட்டி அவ்வாறு கூறாதீர்கள். நான் ஒருபோதும் இலஞ்சம் வாங்கியதில்லை.
அமைச்சர் : நீங்கள் இலஞ்சம் வாங்கவில்லை. ஆனால் பலரின் பெயர் பட்டியல் எங்களிடம் உள்ளது.
ஊடகவியலாளர்: இதேபோன்று இலஞ்சம் வாங்கிய பல அரசியல்வாதிகளின் பெயர்கள் எங்களிடம் உள்ளது.
கடும் கோபமடைந்த அமைச்சர் : 'தம்பி என்னை திருடன் என்று சொல்கின்றீர்கள். எனக்கென்று சொந்த வீடு வாகனம் இல்லை. இன்னமும் வாடகை வீட்டில் தான் உள்ளேன். அரசாங்க வாகனத்தையே பாவிக்கின்றேன்.
கெமராவை தாக்குகின்றார்...
நான் ஒருபோதும் திருட்டு வேலைகளை செய்ததும் இல்லை. கொள்ளையடித்ததும் இல்லை. எத்தனோல், போதைப்பொருள் கொண்டு வரவில்லை. தவறு எதனையும் செய்யாமையினால் தான் இவ்வளவு உறுதியாக நான் கதைக்கின்றேன்.
இதனால்தான் பயம் இல்லாமல் கதைக்கின்றேன். எனவே எனக்கு மரியாதை செலுத்த வேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ எனக்கு 50 கோடி ரூபா தருவதாக கூறி அவருக்கு ஆதரவு வழங்க கூறினார். ஆனால் பணத்துக்கு அடிப்பணிந்து அங்கு செல்லவில்லை. பல தியாகங்களை செய்து தான் இந்த நிலைமையில் உள்ளேன்.
லசந்த என்னுடைய நண்பர் என்பதாலே நான் இந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஆயத்தம் செய்தேன்.
திருட்டு வேலைகளை செய்த ஏனைய அரசியல்வாதிகளுக்கு நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் கூறும். எனக்கு அம்மா அப்பா பிள்ளைகள் என யாரும் இல்லை. யாருக்கும் கடன் இல்லை. நான் எனக்கு விருப்பமான வகையில் தனிமையில் வாழ்ந்து வருகின்றேன்.   நன்றி வீரகேசரி








ஹட்டன் - பொகவந்தலாவ  வீதியை மறித்து   மக்கள் ஆர்ப்பாட்டம்  ; வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

28/09/2016 நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து நோர்வூட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு கிவ் தோட்ட மக்கள் மற்றும் முச்சக்ர வண்டி சாரதிகள் ஆகியோர் இணைந்து ஆர்பாட்டமொன்றை இன்று (28) முன்னெடுத்திருந்தனர்.
ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் இருந்து கிவ் தோட்டத்திற்கு செல்லும் சுமார் 4 கிலோ மீற்றர் வீதி நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  டயர்களை எறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வரும் மலையக அரசியல்வாதிகள் வெறுமனே வாக்குறுதிகளை மாத்திரம் வழங்கி விட்டு செல்கிறார்கள் ஆனால் இந்த வீதி குறித்து எவரும் கவனம் செலுத்துவதில்லையென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
எனவே குறித்த வீதியை உடனடியாக செப்பனிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.
நன்றி வீரகேசரி









நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க கோரி தோட்டத் தொழிலாளர்கள்  ஆர்ப்பாட்டம்

28/09/2016 டிக்கோயா வனராஜா தோட்டத் தொழிலாளர்கள்  நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டுமென கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வனராஜா தோட்ட  பிரதான வீதியில் பேரணியாக வருகை தந்து தொழிற்சாலைக்கு முன்பாக  குறித்த போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
“நியாயமான சம்பளத்தை சம்பளத்தை பெற்றுகொடுக்க தோட்டக் கம்பனிகள் முன்வரவேண்டும்'   'அரசாங்கம் சம்பள பேச்சுவார்த்தையில் தலையிட்டு உடனடியாக தீர்வை பெற்றுத்தர வேண்டும்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது பாதாதைகளை ஏந்தியவாறு கோஷமெழுப்பினர்.
இதேவேளை வனராஜா தோட்டத் தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளரிடம் மகஜரொன்றை கையளித்ததுடன் உரிய தீர்வை பெற்றுத் தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நன்றி வீரகேசரி









பாராளுமன்ற உறுப்பினர்  ஜயந்த சமரவீர கைது

28/09/2016 தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீரவை  பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர்  கைதுசெய்துள்ளனர்.
அரச வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில்  விசாரணை செய்வதற்காகவே இவர் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு இன்று (28)அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி










இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.!

29/09/2016 யாழ்ப்பாணம் மாதகல்லை சேர்ந்த இளம் ஊடகவியலாளர் அஸ்வின் காலமானார்.
உக்ரேன் நாட்டின் காட்டுப் பகுதியூடாகப் பயணிக்கும் போது வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், போதிய சிகிச்சையின்றி அவர் உயிரிழந்ததாகவும் அறியமுடிகின்றது.  
சடலத்தை இலங்கைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
அரசியல் மாற்றங்களை கேலிச்சித்திரங்களில் வெளிப்படுத்திய அஸ்வின் இலங்கை ஊடக அமைச்சினால் விருதினை பெற்றிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது கேலிச்சித்திரங்களினால் ஊடகப்பரப்பில் அண்மை காலங்களில் பிரபல்யம் பெற்றிருந்த அஸ்வின் முன்னதாக சுடரொளி மற்றும் வீரகேசரியில் பணியாற்றியிருந்ததுடன் இறுதி காலங்களினில் தினக்குரல் பத்திரிகையில் கேலிச்சித்திரவியளாலராக பணியாற்றியிருந்தார்.   நன்றி வீரகேசரி








நாய் தோண்டிய குழியிலிருந்து  3 கைக்குண்டுகள் மீட்பு ; யாழில் சம்பவம்

29/09/2016 யாழ்ப்பாணம், பிறவுண் வீதி நான்காம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள களஞ்சிய நிலையமொன்றின் காணியில் இருந்து கைக்குண்டுகள் மூன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்றையதினம் காலை குறித்த களஞ்சியசாலை பகுதியின் காணியில் அங்கிருந்த நாயொன்று குட்டி ஈனுவதற்காக நிலத்தில் குழி தோண்டியுள்ளது.
இதன்போது மண்ணினுள் புதையுண்ட நிலையில் கைக்குண்டுகள் தென்பட்டதை அவதானித்த களஞ்சிய பொறுப்பாளர், இது தொடர்பாக உடனடியாக யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து  பொலிஸார்  விசாரணைகளை மேற்கண்ட போது குறித்த பகுதியில் நாய் குழி  தோண்டிய இடங்களில் மேலும் இரு கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்திருந்தனர்.
இதனையடுத்து இப் பகுதியில் மேலும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தினடிப்படையில் மேலதிக  தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினருக்கு தெரியப்படுத்தியிருந்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகளையும் ஆரம்பித்திருந்தனர்.
இதேவேளை,  யாழ்ப்பாணத்தில் கடந்த யுத்த காலத்தின் போது குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவ முகாம் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.   நன்றி வீரகேசரி








நீஷா பிஷ்வாலை சந்தித்தார் கடற்படை தளபதி

29/09/2016 இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்  தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் நீஷா பிஷ்வாலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பு அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில்  இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள கடற்படைத் தளபதி அங்கு ஏனைய முக்கியஸ்தர்கள் பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


No comments: