ஒலிம்பிக் தங்கத்துக்குப் பின்னே அக்காவின் சைக்கிளும் அம்மாவின் அலைச்சலும்!

.

பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் போட்டி நேரடி ஒளிபரப்புக்காக நள்ளிரவு ஒரு மணியில் இருந்து பெரியவடகம்பட்டியில் உள்ள அந்த தெரு பரபரத்துக் கிடந்தது. மாரியப்பனின் நண்பர்கள், உடன்பிறந்தவர்களின் விழிகளிலோ உறக்கத்தை மீறிய உற்சாகம்.

அதே நேரம் ஒற்றை அறை கொண்ட வாடகை வீட்டில் தன்னந்தனியாக தன் மகன் பற்றிய நினைவுகளுடன் காத்துக் கொண்டிருந்தார் சரோஜா அம்மா. நிசப்தமான ஊரின் அதிகாலையை பட்டாசு ஒலிகள் நிரப்ப... சரோஜா அம்மாவின் ஆனந்தக் கண்ணீரோடு விடிந்தது அதிகாலை. ஊனமான பையன் என்று சிறுவயதில் இருந்து கேலி கிண்டல்களை அனுபவித்த சரோஜா அம்மாவின் மகன் மாரியப்பன்... பாராலிம்பிக் போட்டியில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்ற நாள் அன்று! சச்சின் டெண்டுல்கர், பிரதமர் மோடியில் ஆரம்பித்து ரஜினிகாந்த் வரை அத்தனை பேரும் மாரியப்பனை வாழ்த்துகளால் நிறைத்திருந்தனர். அந்தச் சுவடு எதையுமே தன்னில் கொண்டு வராமல் வழக்கம்போலவே அமைதியாக கிராமத்து மனுஷிக்கான வெள்ளந்தித்தனத்தோடு இருக்கிறார் சரோஜா அம்மா. அவரிடம் விரிவாகப் பேசினோம்.

``எங்க சொந்த ஊரு பெரியவடகம்பட்டி. என் கூடப் பொறந்தவங்க 7 பேரு. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். சின்ன வயசுலயே களைவெட்டவும் கொத்து வேலைக்கும் போயிட்டு இருந்தேன். காய்கறியும் விப்பேன். அப்பதான் பழக்கமானார் என் வீட்டுக்காரர் தங்கவேலு. ரெண்டு பேரும் வேற வேற சமூகம். வீட்டை எதிர்த்துக்கிட்டு கல்யாணம் பண்ணிகிட்டோம். என் பெரிய பொண்ணு சுதா பொறந்த நேரம்தான், அவர் ஏற்கெனவே கல்யாணமானவர்ங்கிற விஷயம் தெரிஞ்சு ஆடிப்போனேன். ஆனா, அவரு வேலைக்கும் போகாம, சதா குடியில மூழ்கி, என்னை அடிச்சே காலம் தள்ளிட்டு இருந்தாரு. அடுத்தடுத்து மாரியப்பன், குமார், கோபினு எனக்கு குழந்தைங்க பொறந்தும் அவர் மாறல. அவர் அடிச்ச அடியில என் முன்பல் ரெண்டும் உடைஞ்சிருச்சு. ஒரு கட்டத்துல அவர் என்னைவிட்டுப் போகவும், வேற நாதியில்லாம கோயில்ல குழந்தைங்களை வெச்சுட்டு தங்கினேன். நிலைமை இப்படியே போகக் கூடாது, வாழணும்னு முடிவெடுத்து செங்கச்சூளை வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். அதுல வந்த வருமானத்தை வெச்சு ஊருக்கு ஒதுக்குப்புறத்துல கூரை வேய்ஞ்சு குடியிருந்தோம். விதி அங்கயும் எங்களை வாழவிடலய்யா. காத்தும் மழையும் பாய்ஞ்சு வந்ததுல அந்த வீடும் விழுந்திருச்சு. நாலு புள்ளைகளை வெச்சுட்டு நடுத்தெருல நின்னு யாராவது வீடு வாடகைக்கு கொடுங்கனு கேட்டேன்" என்கிறவரின் கண்களில் அந்நாளின் வலி உறைந்திருக்கிறது.

''ஒரு நாளைக்கு 30 ரூபா கூலியில குழந்தைங்களை கவனிச்சேன்... கவனிச்சேனு சொல்றதைவிட வானம் பார்த்த பூமியா அவங்களா வளர்ந்தாங்கனு சொல்றதுதான் சரியா இருக்கும். நான் படுற கஷ்டத்தை பார்த்துட்டு வாடகை கொடுக்க மாட்டேன்னு நெனச்சு பலபேர் வீடே தர மாட்டாங்க. அங்க கெஞ்சி, இங்க கெஞ்சி இப்ப இருக்கிற வீட்டுக்கு 500 ரூவா வாடகை கொடுத்து வாழறோம்" என்கிறபடியே, புகைப்படம் எடுக்க வசதியாக வீட்டை ஒதுங்க வைக்க உள்ளே செல்கிறார்.
ஒரே ஒரு அறை... மதித்துக் கொண்டாடப்பட வேண்டிய மாரியப்பனின் ஷீல்டுகளும் மெடல்களும் வைக்கக்கூட இடம் இல்லாமல் ஓர் ஓரமாக தள்ளாடிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு புறமோ மறுநாள் விற்க வேண்டிய காய்கறிகளால் நிரம்பிக் கிடக்கிறது.'

''மாரியப்பனுக்கு 3 வயசு இருக்கும். பால்வாடியில படிச் சுட்டு இருந்தான். அன்னைக்கு ஸ்கூல் லீவு. நான் ஹைஸ்கூல் ஓரமா கட்டில் கடை போட்டு காய்கறி வித்துட்டு இருந்தேன். இன்டர்வெல் டயத்துல என்கிட்ட ஸ்கூல் பசங்க மாங்கா வாங்க கூட்டமா வந்தாங்க. அவங்களைக் கவனிச்சுட்டு இருந்ததுனால மாரியப்பனை பார்க்கல. புள்ள விளையாடிட்டே ரோட்டுல ஓட, வேகமா வந்த கவர்மென்ட் பஸ் சக்கரத்துல மாட்டிகிட்டான். அவன் அலறுன சத்தம் கேட்டு பதறி எழுந்தா, வலது கால் நசுங்கிப் போய் கிடந்தான் புள்ள.  உடனே காடையாம்பட்டி கவர்மென்ட் ஆஸ்பத்திரியில சேர்த்தேன். 150 நாள் பெட்ல இருந்தான். கண்ணு முன்னாடி பையன் ஊனமானதைப் பார்த்து மனசெல்லாம் ரணமாப் போச்சு. ஆனாலும், எப்படியாவது அவன் முன்னேறி வந்திருவான்னு நம்பினேன்.

அவன் ஆறாவது படிச்சுட்டு இருந்தப்ப `அம்மா... பசங்ககூட வெளையாடப் போனா என்னை நொண்டினு கேலி பண்றாங்க'னு சொல்லுவான். 'அவங்க வெளையாடாதப்ப நீ போய் வெளையாடு கண்ணு'னு தேத்தி அனுப்புவேன். `விளையாட்டு'னு சொல்லி அடிபட்ட கால்ல மறுபடியும் அடிபட்டு ரத்தத்தோட வருவான். `இதெல்லாம் நமக்கு வேண்டாம் கண்ணு... பேசாம படிச்சு வேலைக்கு போ'னு சொன்னாலும், `இல்லம்மா எனக்கு படிப்ப விட வெளையாட்டுலதான் ஆர்வம் அதிகமா இருக்கு'னு சொல்வான். `சரி'னு அவன் விருப்பத்துல நான் தலையிட்டதே இல்லீங்க. அப்ப இருந்து இப்ப வரைக்கும் அவனுக்கு சத்தான சாப்பாடுகூட கொடுத்ததில்ல. மாரியப்பனோட பி.டி. டீச்சர் ராஜேந்திரன் சார்தான் அவனுக்கு ஊக்கம் கொடுத்துட்டே இருப்பார். மாரியப்பன் இதுக்கு முன்னாடியும் வெளியூர், வெளிநாடு எல்லாம் போயிருக்கான். ஒவ்வொரு தடவ அவன் ஊர் கெளம்புறப்பவும் ஏதாவது ஒரு சாமானை வித்துதான் அனுப்புவோம். இந்தத் தடவ, தன்னோட தம்பிக்காக என் பொண்ணு சுதா அவளோட சைக்கிளை வித்து காசு கொடுத்தனுப்பினா. உண்மையைச் சொல்லணும்னா எம்மவனோட தெறம மட்டும்தான்ய்யா ஜெயிச்சிருக்கு. அவனுக்கு வேற எந்த சப்போர்ட்டும் கெடையாது. எங்களுக்கும் அவன் என்ன செய்றான், எதுல ஜெயிச்சாங்கிற அளவுக்கு வெவரமெல்லாம் தெரியாது'' என்கிறவரிடம், மாரியப்பனுக்கு தமிழக அரசு அறிவித்திருக்கும் ரூ.2 கோடி, மத்திய அரசின் ரூ.75 லட்சம், மஹிந்திரா கம்பெனியின் தோர் கார் போன்ற பரிசுகள்  பற்றித் தெரிவித்தோம்.
கண்களில் கண்ணீர் வழிய, ``வாழ்க்கையில மொதல் முறையா மனசு நிறைஞ்சு அழுதது மாரியப்பன் ஜெயிச்ச அன்னைக்குத்தான். இத்தனை கஷ்டத்துலேயும் என் புள்ளைங்க தப்பான வழிக்கு போனதேயில்ல. என் பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்திட்டேன். ரெண்டாவது பையன் குமார் பன்னென்டாவது படிச்சுட்டு மேல படிக்க காசில்லாம வீட்ல இருக்கான். கடைசி பையன் கோபி பன்னென்டாவது படிச்சுட்டு இருக்கான். மாரியப்பன் நல்லாவே முன்னுக்கு வந்துட்டான். இன்னும் மத்த ரெண்டு பசங்களை முன்னேத்தணுமில்லியா? ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் செங்கல் சொமக்கிற வேலைக்குதான் போயிட்டு இருந்தேன். நெஞ்சு வலி அதிகமாகவும், 'அம்மா நீ இனி காய்கறி விக்க போமா'னு மாரிதான் சொன்னான். அதனால காய்கறி விக்கிற வேலையை செய்யத்தான் எனக்கு விருப்பம். சின்ன வயசுல இருந்து வேலைக்குப் போயிட்டு இருக்கேன். இதுக்கப்புறம் சும்மா உக்கார முடியுமா சொல்லுங்க'' என்றபடியே, அடுக்கி வைத்த காய்கறிகளை பைகளில் எடுத்து சைக்கிளில் மாட்டி தள்ளிக்கொண்டே காய்கறி விற்க கிளம்புகிறார் சரோஜா அம்மா! 
nantri: Vikadan

No comments: