தமிழுக்கு ஓர் அரியணை - அ.முத்துலிங்கம்:-‏


தமிழுக்கு ஓர் அரியணை - அ.முத்துலிங்கம்:-

.

சமீபத்தில் பொஸ்டனில் ஒரு பேராசிரியரைச் சந்தித்தேன்.  அவருடன் தேநீர் அருந்தப் போன போது அவர் பரிசாரகருடன் ஏதோ மொழியில் பேசினார். அவரும்அதே மொழியில் பதில் சொன்னார். ‘என்ன மொழி?” என்று கேட்டேன். அவர் ‘நேப்பாளமொழி’ என்றார்.

‘எப்படி  அவர் நேப்பாளி என்பதைக் கண்டுபிடித்தீர்கள்?’‘அவருடைய உடை, முகச்சாயல், உடல்மொழி’ என்றார். நான் ஆச்சரியப்பட்டேன். அந்தப் பேராசிரியருக்கு 18 மொழிகள் தெரியும்.  அவர் இன்னொரு விசயமும் சொன்னார். அது என்னை இரண்டாவது தடவையாக ஆச்சரியப்பட வைத்தது.

‘என் இளவயதிலேயே எனக்கு வேற்று மொழிகள் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகிவிட்டது. இன்று எனக்கு தமிழ் மொழி பற்றி இருக்கும் அறிவு அன்று இருந்திருந்தால் நான் தமிழை முதல் மொழியாகப் பயின்று இருப்பேன். தமிழ் உலகத்தின் ஆதி மொழிகளில் மிகச்சிறந்த ஒன்று’ என்றார்.

இதையே இன்னொரு விதமாக சமீபத்தில் இறந்து போனபேராசிரியர் பேர்னார்ட்பேட் சொன்னார். இவர் சிகாகோபல் கலைக் கழகத்திலும் யேல் பல்கலைக் கழகத்திலும் பலவருடங்களாக தமிழ் கற்பித்தவர். ’தமிழை அறிந்து கொள்வது உங்கள் கடமைஅல்ல.  அதைப் பேசிப் புரிந்து இன்புறுவதற்காகப் படியுங்கள். ஓர் ஓவியத்தை அதன் அழகிற்காக ரசிப்பதில்லையா? ஓர் இசையை அனுபவிப்பதில்லையா? அதுபோல தமிழை அது தரும் இன்பத்திற்காக நுகருங்கள்.’


சில மாதங்களுக்கு முன் இன்னுமொரு வெள்ளைக்காரரைச் சந்தித்தேன். இவர் தமிழ் நாட்டில் பல வருடங்கள் தமிழ்பயின்றவர். இப்பொழுது அமெரிக்காவில் தமிழ் கற்பித்துவருகிறார். பெயர் ஜொனாதன்ரிப்ளே. ஆனால் தமிழ்நாட்டில் இவரைஎல்லோரும் ‘வெள்ளைக்காரன்’ என்றே அழைக்கிறார்கள்.  இவர் தமிழ்கற்றுக் கொண்ட அனுபவம் இன்னும்சுவையானது. 19 வயதுவரைக்கும் இவருக்கு தமிழ் என்று ஒருமொழி இருப்பதே தெரியாது. மீதியை அவரே சொல்கிறார்.

’நான் ஒஹாயாவிலுள்ள ஒபர்லின் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன்.ஒருநாள்போலாரிச்மன்  (Paula Richman) படிப்பித்த வகுப்பில் போய் அமர்ந்தேன். அவர் தென்னாசிய பிராந்திய இலக்கியங்களில் தனித்துறை வல்லுநர். அவருடைய சிறப்புக்கல் விராமாயணம் மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள். சும்மா பார்க்கலாம் என்று தான் போனேன். என்வாழ்கையே அடியோடு மாறப் போகிறது என்பது எனக்குத் தெரியாது. நான் அவர்பேசியதை உன்னிப்பாகக் கவனிக்கவில்லை. அவர் ஒருபாடலைச் சொல்லிக்கொண்டு போனார். "நாமவனிவனுவன், அவளிவளுவளெவள் தாமவரிவருவர், அதுவிதுவுதுவெது வீமவையிவையுவை, யவை நலந்தீங்கவை ஆமவையாயவை, யாய்நின்ற அவரே."
அந்தப்பாடலின் ஓசை நயமும் இனிமையும் காதுகளில் விழுந்தன. தொடர்ந்து வந்த பலநாட்கள் அந்த கீதம் காதுகளில் ஒலித்தவண்ணமே இருந்தது. பல மாதங்களுக்குப் பின்னர் தான் அது நம்மாழ்வார் திருவாய்மொழி 1.1.4 என்றுஅ றிந்தேன். ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோசெய்தது.  அந்தக்கணமே முடிவுசெய்தேன், நான் தமிழ்தான் படிக்கவேண்டும் என்று.’

இந்த வெள்ளைக்காரர்கள் எல்லோரும் வியப்படைவது ஒருவிசயத்துக்குத்தான். இத்தனை தொன்மையான, பெருமையான தமிழை தமிழர்கள் ஏன் போற்றுவதில்லை? தமிழ் மொழியை உதாசீனப் படுத்துகிறார்கள். தங்கள் பிள்ளைகள் வேற்று மொழிகளில் புலமை அடைவதையே விரும்புகிறார்கள். இந்தப் புதிரை விடுவிக்க முடியாமல் என்னிடம் கேட்ட போது என்னாலும் தக்கபதில் தரமுடியவில்லை.

யோசித்துப் பார்த்தால் சிலவிசயங்கள் தெளிவாகின்றன. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் உலக அங்கீகாரம் பெற்ற பிற இலக்கியங்களுக்கு நிகராகப் புதிய, வெவ்வேறு நோக்குகளிலிருந்து ஆராயப்பட வேண்டியுள்ளன. அவற்றின் விளைவுகளைப் பிற பண்பாட்டினருடன் பகிர்ந்துகொள்ள வேண்டியதும் முக்கியமானது. முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்போது இந்தப் போதாமைகள் சரி செய்யப்படலாம். தமிழின் முக்கியத்துவத்தை பிறர் அறியவும், முக்கியமாகத் தமிழர்கள் அறியவும். ஹார்வார்ட் போன்ற  பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவுவது அவசியமாகிறது. ..

உலகத் தரவரிசையில் முதல் இடத்தில்இருக்கும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழைக் கற்கவும்,  ஆய்வுகளை மேற்கொள்ளவும் வசதியாக ஓர் இருக்கை அமையவேண்டும். தமிழ் இருக்கைக்கு ஆரம்பவித்திட்டது 18 சங்க நூல்களையும் ஆங்கிலத்தில் தனியொருவராக மொழி பெயர்த்து உலகப்புகழ் எய்திய திருமதி வைதேகிஹெர்பெர்ட் அவர்கள். அவரது உந்துசக்தியால் அமெரிக்காவில் வதியும் இருவள்ளல் பெருந்தகைகள், மருத்துவர் விஜய் ஜானகிராமனும், மருத்துவர் திருஞானசம்பந்தமும், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவரைச் சந்தித்து தமிழின் பெருமையையும் தொன்மையையும் விளக்கி தமிழ் இருக்கை அமைப்பதற்கான ஒப்புதலைப் பெற்றனர்.  

இதற்குதேவையான அறக்கொடை ஆறுமில்லியன் டொலர்கள். இருமருத்துவர்களும் ஆளுக்கு அரைமில்லியன் டொலர்களை வழங்கியுள்ளனர். மீதிஐந்து மில்லியன் டொலர்களை உலகெங்கும் வாழும் தமிழர்களிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் திரட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான  இலக்கியங்களைக் கொண்ட  தமிழ்,உலகின் ஆதி மொழிகளுள் ஒன்றாகும். ஏறத்தாழ எட்டுக் கோடி மக்களால் பேசப்படும் இம்மொழி உலகில் உள்ள 20 பெரிய மொழிகளுள் அடங்கும். அண்மையில் தமிழ் செம்மொழியாகவும் இந்திய அரசினால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் போதிய அளவில் இல்லை. பன்னாட்டு அளவில் ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களாக இருக்கலாம்.

ஹார்வார்ட் பல்கலைக்கழகம்  அமெரிக்காவின் மிக மூத்த பல்கலைக்கழகம்; 380 வருட பாரம்பரியம் கொண்டது.
  நோபல் பரிசு போன்ற மதிப்பு வாய்ந்த பரிசுகளைப் பெற்ற பல அறிஞர்களையும், பல்வேறு நாட்டுத் தலைவர்களையும் உருவாக்கிய பெருமை இதற்கு உண்டு. இங்கே மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உலக அளவில் பெரிய மதிப்பும், அங்கீகாரமும் உண்டு. இத்தகைய ஒரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை என்பது மதிப்புக்குரிய ஒன்றாக இருப்பதுடன், தமிழ் ஆய்வின் தரத்தையும், வீச்செல்லையையும் உலக மட்டத்துக்கு உயர்த்துவதற்கு உதவும்.

’நாங்கள் தமிழை ஆழமான படிப்புக்கும் தீவிரமான ஆராய்ச்சிக்கும் உட்படுத்த வேண்டுமானால் தமிழ் இருக்கை முக்கியமானதாக இருக்கிறது. இப்பொழுது காணப்படும் தமிழ் ஆர்வத்தையும் ஊக்கத்தையும் நாங்கள் மேலும் விரிவாக்கி பயன்படுத்த வேண்டும். பொருள் செறிவான இயங்கியல் தன்மையான ஆராய்ச்சிகளுக்கும் மாணவர்களின் ஊக்கமான வெளிப்பாடுகளுக்கும் ஹார்வார்ட் தமிழ்  இருக்கை வடிகாலாக அமையும்.

அது மாத்திரமன்றி இங்கே நடக்கும் ஆராய்ச்சிகளும் முன்னெடுத்தல்களும் தமிழின் முக்கியத்துவத்தை உலகப்பரப்பில் நிலைநிறுத்தும். உண்மை என்ன வென்றால் தமிழின் பெருமை பாதியளவு கூட வெளியேவரவில்லை.

மற்றைய மொழிகளில் பதிவு செய்யப்பட்ட ஆராய்ச்சிகளின் பெறுபேறுகளை அலசும் போது இது தெரியவருகிறது. தமிழின் எதிர்காலத்துக்கு இங்கே ஓர் இருக்கை அமைவது முக்கியமானது’ இப்படி கூறுகிறர் ஜொனாதன்ரிப்ளே.

ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு தமிழ்நாட்டில் ஆதரவு பெருகிவருவது மகிழ்ச்சியான செய்தி. தி இந்துபத்திரிகை தொடர்ந்து இதுபற்றி கட்டுரை எழுதி வருவதுடன் கொடையாளர்களின் பெயர்களை பத்திரிகையில் பிரசுரித்து அவர்களை ஊக்குவிக்கிறது. நடிகர் சிவக்குமார் காணொளி மூலம் செய்தி பரப்பிவருகிறார். பிரப லவானொலி ஒலிபரப்பாளரும், தொகுப்பாளரும், நடிகருமான அப்துல்ஹமீத் காணொளி மூலம் பரப்புரை செய்கிறார். கவிஞர் பழநி பாரதி இயற்றிய ஹார்வார்ட் தமிழ் இருக்கை வாழ்த்துப் பாடலுக்கு, ஏ.ஆர்,ரஹ்மானின் உதவியாளர் தாஜ்நூர் இசையமைத்திருக்கிறார். பாடலை சீர்காழி சிவசிதம்பரமும், நித்தியஸ்ரீயும் பாடியிருக்கிறார்கள். கவிஞர் தாமரை வாழ்த்துக் கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒருலட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர்எழுதியமடல் இதுதான்.

’அன்புள்ள  அ.முத்துலிங்கம்ஐயா அவர்களுக்கு,

வணக்கம்.  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் 'தமிழ் இருக்கை' பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப்பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். முதன் முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ' தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித்திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ்இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை ? ' என்பதுதான்……..

என் தந்தையார் இப்போது இருந்திருந்தால் இந்தப்பணியை சிரமேற்கொண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை. எங்கள் குடும்பத்தின் பெயரால்நாங்கள் அளிக்கும்
சிறுதொகையான ரூபா ஒரு இலட்சத்தைப் ( 1,00,000/- ) பெற்றுக்கொள்ள வேண்டுகிறேன். நீங்கள் கேட்டுக் கொண்டபடி என்ரசிகர்களுக்கும் நான்வேண்டுகோள் விடுக்கிறேன்.

இந்த செய்தியை நீங்கள் எந்தவிதத்திலும் உலகத்தமிழர்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கலாம். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை மலர்ந்தது என்ற செய்திவிரைவில் வந்து காதில் தேன்பாய்ச்சக் காத்திருக்கிறேன்.’

கவிஞர் தாமரை ஒருவிததயக்கமும் இன்றி பொருளுதவி புரிந்தார். ஆனால் நிதிசேர்க்கும் போது அநேகர்கேட்கும் கேள்வி இதுதான். “அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்கு இங்கேயிருந்து நாம் ஏன்பணம் கொடுக்கவேண்டும்? ’உண்மையில் அமெரிக்காவில் வாழும் சில வள்ளல்கள் ஒன்று சேர்ந்து தமிழ் இருக்கையை உருவாக்கமுடியும். அதில் என்ன பெருமை இருக்கிறது? உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டது.

இந்த இருக்கை உலகத்தமிழர்களுக்கு சொந்தமாக இருப்பதில்தான் அதன் பெருமை வெளிப்படும்.

சிலமாதங்களுக்கு முன்பு ஹார்வார்ட் பல்கலைக்கழக நுழைவாயிலில் சற்று நேரம் நின்று அங்கே வருகைதந்த மாணவமாணவியரைப் பார்த்தேன். எல்லா நிறங்களிலும், எல்லா தோற்றங்களிலும் அங்கே மாணவமாணவிகள் கல்விகற்றார்கள். உலகத்து மாணவர்களை அங்கேகாணக் கூடியதாக இருந்தது.  இது ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்ற எண்ணம் எனக்கு எழவே இல்லை. உலகப் பல்கலைக்கழகமாகவே  அதைஉணர்ந்தேன்.

 இங்கேதமிழுக்கு ஓர் அரியனை  அமைவதைவிட வேறு பெருமைஎன்ன இருக்கமுடியும்?

தமிழ்நாட்டில் இருந்து ஒரு பெண்மணி ரூபா 250 ( 5 டொலர்) ஹார்வார்ட்நிதிக்கு அனுப்பியிருந்தார். அவருக்கு கணவர் இல்லை. இரண்டு பிள்ளைகளுடன் தனியாக வாழ்கிறார். அவருடைய மாதச்சம்பளம் ரூ 10,000  ஆகவோ அதற்குகுறைவாகவோ இருக்கலாம். ஆனால் இந்தப்பணத்தை எப்படியும் அனுப்பிவிட வேண்டும் என்று சொல்ல முடியாத ஆர்வத்துடன் செயல்பட்டார். இன்னொருவரைப் பிடித்து அந்த பணத்தை அவர் மூலம் அனுப்பிவைத்தார். இவர்களால் தான்ஹார்வார்ட் தமிழ் இருக்கை உருவாகிறது. இவருடைய 5 டொலர் ஐந்து லட்சம் டொலர்களுக்குசமானம்.

இந்தப் பெண்மணி பணம் அனுப்புவதற்கு சிரமப்பட்டதாகக் கூறினார். ஆனால் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு நிதிவழங்குவது எளிமையாக்கப்பட்டிருக்கிறது. Harvardtamilchair.com எனும் இணையதளத்திற்குச் சென்று அதில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளில் பணத்தை அனுப்பலாம். வங்கிமூலமாகவோ,  பேபால்,  மின்காசு, கடன் அட்டை வழியாகவோ பணம் அனுப்புவதற்கு வசதிகளுண்டு.  காசோலையாகவும் நேரடியாக பணத்தை செலுத்தலாம். Crowd funding எனும் இலகு வழியும் தொடங்கப்பட்டிருக்கிறது. அனைத்துலக தமிழ்மக்களின் நன்கொடையை நம்பி ஆரம்பிக்கப்பட்ட தமிழ் இருக்கை கூடியவிரைவில் செயல்படும்என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. .  

இந்தக் கட்டுரையை முடிக்கும் போது கவிஞர்தாமரையின் பாடல்வரிகளைக் கடன்வாங்கி நிறைவு செய்யலாம் என எண்ணுகிறேன்.
"தமிழர்களே வருக,
தமிழ் இருக்கைதருக".

நன்கொடை அளிப்பதற்குச் செல்ல வேண்டிய இணையம்:


Appadurai Muttulingam
76, Legacy Drive
Markham, ON
L3S4B5
Canada