இலங்கைச் செய்திகள்


மலையகத்தின் பல பாகங்களிலும் மண்சரிவு : போக்குவரத்து, மின்சாரம் தடை

சீரற்ற காலநிலையால் இருவர் பலி : மூவர் காணாமல் போயுள்ளார் : 422 பேர் இடம்பெயர்வு : 7090 பேர் பாதிப்பு.!

ஆமி சம்பத் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­விடம்

இலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : வெசாக் தினத்தன்று திறந்து வைப்பு.!

 70 வருடங்களுக்கு  பின் கிளிநொச்சியில் அதிக மழை வீழ்ச்சி

மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு

தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம் (இன்றைய நிலை 17/05/2016)

பதவி விலக்கக்கோருவது தொடர்பில் நான்  கவலையடைவில்லை; வடக்கு ஆளுநர் 

இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நினைவேந்தல் இன்று.!

மட்டுவில் 26400 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மாவை, சி.வி. அஞ்சலி

இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்.!

வித்தியா கொலை வழக்கு ; மரபணு பரிசோதனை அறிக்கை ‎நீதிமன்றில்‬ சமர்ப்பிப்பு

கொழும்பில் மப்பும்மந்தாரமுமான காலநிலை : களனியாறு சடுதியாக பெருக்கெடுப்பு பதற்றத்தில் வெளியேறிய மக்கள்

போர் வெற்றி மகிழ்ச்சியளித்தாலும் மரணங்கள் வேதனையளிக்கின்றன : தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி

பிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல்

இதுவரை 58 பேர் உயிரிழப்பு : 4 இலட்சம் பேர் பாதிப்பு: பல பகுதிகள் நீரில் மூழ்கின

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்திரேலியா உதவி.!










மலையகத்தின் பல பாகங்களிலும் மண்சரிவு : போக்குவரத்து, மின்சாரம் தடை



16/05/2016 நாடளாவிய ரீதியில் பெய்துவரும் அடைமழை காலநிலையினால் மலையகத்தின் பல பாகங்களிலும் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. 
சீரற்ற காலநிலையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கையும் பாதிப்படைந்துள்ளதுடன் நீரேந்தும் பகுதிகளிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
நோட்டன் கினிகத்தேன பிரதான பாதையிலும் கொழும்பு ஹட்டன் பிரதான பாதையில் வட்டவளை மற்றும் செனன் பகுதியிலும் இன்று அதிகாலை மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் செனன் பகுதியில் ஒருவழி போக்குவரத்து நடைபெறுவதுடன் வட்டவளையில் நேற்று இரவு வீசிய பலத்த காற்றினால் மின் கம்பம் உடைந்துள்ள நீலையில் பிரதேசத்திற்கான மின்சாரம் தடையேற்பட்டுள்ளது.
மேலும், ஹட்டன் தனியார் பஸ் தரிப்பிடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட மண்சரிவில் பஸ்தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொகவந்தலா ஹட்டன் மார்க்கத்தில் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டி சேத்திற்குள்ளானது .
தொடரும் கால நிலை சீர்கேட்டினால் வாகன சாரதிகள் அவதானதுடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் தெரிவிக்கின்றனர்.  நன்றி வீரகேசரி   









சீரற்ற காலநிலையால் இருவர் பலி : மூவர் காணாமல் போயுள்ளார் : 422 பேர் இடம்பெயர்வு : 7090 பேர் பாதிப்பு.!


16/05/2016 நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் மூவர் காணாமல் போயுள்ளார். இதேவேளை, 1871 குடும்பங்களைச் சேர்ந்த 7090 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மேலும், 97 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் மூன்று வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை 8.30 முதல் மாலை 5.30 வரையிலான காலப்பகுதிக்குள், அதிகூடிய மழைவீழ்ச்சியாக கட்டுநாயக்கவில் 137.7 மில்லிமீற்றரும், திருகோணமலையில், 125.7 மில்லிமீற்றரும், குருநாகலில் 117.2 மில்லிமீற்றரும் கொழும்பில் 106.9  மில்லிமீற்றரும் பதிவாகியுள்ளது. 
குறைந்தளவான மழைவீழ்ச்சி 1.7 மில்லிமீற்றராக யாழ்ப்பாணத்திலேயே பதிவாகியுள்ளது.   நன்றி வீரகேசரி   












ஆமி சம்பத் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­விடம்

16/05/2016 கொழும்பு வடக்கை அச்­சு­றுத்தி வந்த பிர­பல பாதாள உலகக் குழுவின் தலை­வ­னான ஆமி சம்பத் பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் கைது செய்­யப்பட்டு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­த­ரவின்உத்­த­ர­வுக்கு அமைய மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் முக­மாக ஆமி சம்பத் இவ்­வாறு
விஷேட அதி­ர­டிப்­ப­டையின் கட்­டளை தள­பதி பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.கே.ஆர்.ஏ.பெரே­ரேவின் ஆலோ­ச­னைக்கு அமைய பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ளார்.
ஆமி சம்பத் எனப்­படும் சாமர பொன்­சேகா (35 வயது), அவ­ருடன் கைது செய்­யப்­பட்ட அவ­ரது மனைவி சஞ்­ஜீ­வனீ ஜீவந்தி, ஆமி சம்­பத்தின் உத­வி­யா­ள­ரான 29 வய­து­டைய பிரதீப் குமார சுதர்­ஷன ஆகி­யோரே இவ்­வாறு விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரால் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ரிடம் ஒப்­ப­டைக்­கப்ப்ட்­ட­வர்­க­ளாவர்.
நேற்று முன் தினம் மாலை கொம்­பனி வீதியில் உள்ள பிர­பல தனியார் மருத்­துவ மனைக்கு தனது மனைவி, உத­வி­யாளர் சகிதம் ஆமி சம்பத் வருகை தந்­த­தை­ய­டுத்து விஷேட அதி­ர­டிப்­ப­டையின் உளவுப் பிரி­வுக்கு கிடைத்த ரக­சிய தக­வலின் படி ஆமி சம்பத் கைது செய்­யப்பட்­டி­ருந்தார்.
கடந்த 2015 பொதுத் தேர்­தலின் போது கொட்­டாஞ்ச்­சேனை பொலிஸ் பிரிவின் புளூ­மெண்டல் பகு­தியில் இடம்­பெற்ற துப்­பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் கொல்­லப்­பட்ட விவ­கா­ரத்­துடன் தொடர்பு உள்­ள­தாக ஆமி சம்பத் தொடர்பில் குற்றச் சாட்டு உள்­ளது. அத்­துடன் அவ­ரது எதிரி பாதாள உலகக் குழு­வான தெமட்­ட­கொட சமிந்­தவை மாளி­கா­வத்தை முஸ்லிம் மைய­வாடி பகு­தியில் வைத்து சிறைச்சாலை பஸ் வண்டி மீது தாக்­குதல் நடத்தி கொல்ல முற்­பட்­டமை தொட­ரிலும் ஆமி சம்­பத்தை பொலிஸார் தேடி வந்­தனர்.
இதனை விட பல்­வேறு கொள்ளை, கடத்தல், கொலை கப்பம் கோரல்­க­ளுடன் ஆமி சம்­பத்­துக்கு தொடர்­பி­ருப்­ப­தா­கவும் போதைப் பொருள் வர்த்­த­கத்­திலும் பங்­கி­ருப்­ப­த­கவும் கூறப்­படும் நிலை­யி­லேயே அவை தொடர்பில் பூர­ண­மாக விசா­ரணை செய்யும் பொறுப்பு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு அளிக்­கப்­பட்­டுள்ளது.
பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, அதன்­ப­ணிப்­பாளர் நாலக டி சில்வா ஆகி­யோரின் மேற்­பார்­வையில் சிறப்பு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.
இத­னி­டையே நேற்று முன் தினம் கைதான ஆமி சம்பத், அவ­ரது மனைவி மற்றும் உத­வி­யா­ள­ரிடம் தொடர்ச்­சி­யான விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன. நேற்று வரை முன்­னெ­டுக்­கப்பட்ட விசா­ர­ணை­களில் ஆமி சம்­பத்தின் கொட்­டு­கொட, ரஜ­வத்த பகு­தியில் உள்ள வீட்டில் இருந்து 9 மில்லி மீற்றர் கைத்­துப்­பாக்­கி­யொன்றும் 14 தோட்­டாக்­களும் 9 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் ஆமி சம்பத்திடம் தொடர் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அவனது தொலைபேசி, வங்கிக்கணக்கு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி   






இலங்கையில் 2 ஆவது அதி உயர் புத்தர் சிலை : வெசாக் தினத்தன்று திறந்து வைப்பு.!
16/05/2016 எல்பிடிய, வத்துவில புத்த விகாரையைச் சேர்ந்த புண்ணிய பூமியில் 42 அடி உயரமுடைய, இலங்கையின் 2 ஆவது மிக உயரமான புத்தர் சிலையொன்று நிர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த சிலையானது, இலங்கையைச் சேர்ந்த சிற்பியினால் நிர்மானிக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
எதிர்வரும் வெசாக் தினத்தை முன்னிட்டு 19 ஆம் திகதி மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன் பின்னர், மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி   







70 வருடங்களுக்கு  பின் கிளிநொச்சியில் அதிக மழை வீழ்ச்சி


17/05/2016 கிளிநொச்சியில் 70 வருடங்களுக்கு  பின் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 மேலும் மன்னார் மற்றும் பேசாலை மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் 40  மீன்பிடி படகுகள் முழுமையாக சேதமாகியுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.   நன்றி வீரகேசரி   







மழையால் யாழில் 5 ஆயிரம் பேர் பாதிப்பு


17/05/2016 யாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களாக நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையால் 5ஆயிரத்து எண்ணுற்றி நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் யாழ் மாவட்ட உதவிப்பணிப்பாளர் ச.ரவி தெரிவித்துள்ளார்.

அத்துடன் மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 17 வீடுகள் முற்றாகவும் 172 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி தெரிவித்துள்ளார்.
வங்காளவிரிகூடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தால்  நாட்டின் சகல இடங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.
இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு, யாழ்ப்பாணம், நல்லூர், சாவகச்சேரி, காரைநகர், பருத்தித்துறை, மருதங்கேணி, தெல்லிப்பழை, உடுவில், கோப்பாய், கரவெட்டி, ஊர்காவற்றுறை, சண்டிலிப்பாய், வேலனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மக்கள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை யாழ் நகரப் பகுதிகளில் மழை வெள்ள நீர் தேங்குவதற்கு பொதுமக்களின் பொறுப்பற்ற செயலே காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மழை வெள்ளம் வழிந்தோடக்கூடிய வகையில் அமைக்கப்பட்டிருந்த வாய்க்கால்கள் கால்வாய்களில் குப்பைகள், கழிவுப்பொருட்கள் மேலும்  அடைத்திருந்து மழை வெள்ளம் வழிந்தோட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவற்றை சீரமைத்து வெள்ள நீர் வழிந்தோடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதிபணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.  நன்றி வீரகேசரி   










தண்ணீரில் தத்தளிக்கும் தலைநகரம் (இன்றைய நிலை)


17/05/2016  கொழும்பில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வீதிகள், குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
கொழும்பில் மாத்திரம் இதுவரை 21ஆயிரத்து 111 குடும்பங்களைச் சேர்ந்த  ஒரு இலட்சத்து ஆயிரத்து 80 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 99 ஆயிரத்து 314 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் 36 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 22 இலட்சத்து 6 ஆயிரத்து 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று தலைநகர் கொழும்பில் சிலப் பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



















நன்றி வீரகேசரி   















பதவி விலக்கக்கோருவது தொடர்பில் நான்  கவலையடைவில்லை; வடக்கு ஆளுநர் 


17/05/2016 வடக்கு ஆளுநர் பதவியிலிருந்து என்னை விலக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில் நான் கவலையடையவில்லை.  அதனால் தளர்ந்துபோகவுமில்லை என்று வடக்கு  ஆளுநர்  ரெஜினோல்ட் குரே  தெரிவித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் பதவியிலிருந்து  ரெஜினோல்ட் குரேயை மீளப்பெறவேண்டும் என்று கோரி  தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின்  செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான   சிறிகாந்தா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளமை குறித்து  கேட்டபோதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  
இது தொடர்பில் ஆளுநர் ரெஜினோல்ட் குரே  மேலும் தெரிவிக்கையில்,
என்னை விலக்குமாறு கோருவதானது   இனவாதிகளுக்கு  தீனிபோடுவதாக அமைந்துவிடும் என்பது குறித்து நான் கவலையடைகின்றேன். 
மேலும் நான்கூறியதாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகள்  திரிபுபடுத்தப்பட்டுள்ளன. எனவே என்மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளவர்களை சந்தித்து விளக்கமளிப்பதற்கும் நான் எதிர்பார்க்கின்றேன்.   
தேசிய நல்லிணக்கத்தின்  பெறுமதியை உணர்ந்தாமையினாலேயே ஜனாதிபதி என்போன்ற ஒருவரை  வடக்கு ஆளுநராக நியமித்துள்ளார்.
கொழும்பில் நான் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் என்னிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு நான் பதிலளித்தேன். குறிப்பாக   புலிகளை  நினைவுகூர முடியாது என்றும்  இறந்தவர்களை  நினைவுகூர  அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் கூறினேன்.   
அத்துடன்  படுகொலை என்ற பெயரில்  வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட  பிரேரணை  தொடர்பாக  கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால்  மாகாண சபையில் அவ்வாறு  பிரேரணை நிறைவேற்றினாலும் அது    சட்டமாகாது என்றும்  பாராளுமன்றமே இறுதி தீர்மானம் எடுக்கும் இடம் என்றும் கூறினேன்.    ஆனால் ஊடகங்களில்  தவறான புரிதலுடன் செய்திகள் வெளிவந்தன. 
நான் எந்தவொரு இடத்திலும் இனவாதம் பேசவில்லை.  நான் இனவாதியல்ல.  ஒருபுறம் சரத் வீரசேகர  என்னை பதவிவிலக்கவேண்டும் என்று கூறுகின்றார். 

மறுபுறம்   முன்னாள் எம்.பி. சிறிகாந்தா  என்னை பதவி விலக்கவேண்டும் என்று கூறுகின்றார். இது தொடர்பில் நான் ஆச்சரியமடைகின்றேன் என தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி   











இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நினைவேந்தல் இன்று.!



18/05/2016 இறுதி யுத்தத்தின்போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று வடக்கில் பல இடங்களிலும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. உறவுகளை நினைவுகூர்ந்து விசேட பிரார்த்தனை வைபவங்கள் இடம்பெறவுள்ளன.
முள்ளிவாய்க்கால் பகுதியில் காலை 9 மணி முதல் 10 மணி வரை உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து விசேட பிரார்த்தனை, மலரஞ்சலி, தீபமேற்றல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாட்டினை வடமாகாண சபை மேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். பொதுமக்களையும் இந்நிகழ்வில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் அஞ்சலி நிகழ்வுகளையும் பிரார்த்தனை வைபவங்களையும் நடத்துமாறு அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிவில் சமூக அமையம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் என்பன நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துமாறு அழைப்பு விடுத்திருக்கின்றன.
வடமாகாண முதலமைச்சர் தலைமையில்
முள்ளிவாய்க்காலில் அஞ்சலி நிகழ்வு
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அருகில் நினைவேந்தல் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. இந்த நாள் எமது தமிழ் மக்கள் இரத்த சரித்திரம் எழுதிய துக்க தினம். வரலாறு உள்ளவரை இதனை நாம் அனுஷ்டிக்க வேண்டும். சர்வதேச யுத்த விதிகளை புறந்தள்ளிவிட்டு கொத்துக் கொத்தாக எமது உறவுகளை கொன்றொழித்த இறுதி நாளாகிய இன்று அனைவரையும் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொள்ளும்படி வடமாகாண சபை அழைப்பு விடுத்துள்ளது.
வடமாகாண சபையினால் முதலமைச்சர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டு அக்குழுவினர் முள்ளிவாய்க்காலில் நினைவஞ்சலி நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். அந்த வகையில் வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மத வழிபாட்டுத் தலங்களில் காலை 6 மணி முதல் 9 மணிவரையும் யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் காலை 9 மணி தொடக்கம் 10 மணிவரை முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலைக்கு அருகில் நடைபெறவுள்ள பிரார்த்தனை, மலரஞ்சலி செலுத்துதல், தீபமேற்றுதல் நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளும்படியும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களின் வசதி கருதி முல்லைத்தீவு பேருந்து நிலையத்திலிருந்து முள்ளிவாய்க்கால் வரை பேருந்து வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்.பல்கலை வளாகத்தில்
நினைவேந்தல் நிகழ்வு
இதேவேளை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று காலை பல்கலைக்கழக முன்றலில் அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. தமிழ்பேசும் ஒரே குற்றத்திற்காக வயது பேதமின்றி கருவுற்ற குழந்தை முதல் கட்டிலில் கிடந்த முதியோர் வரை ஈவிரக்கமின்றி பேரினவாதத்தினால் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்காகவும் உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்வோம் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அந்த வகையில் முற்பகல் 10 மணிக்கு பல்கலைக்கழக முன்றலில்அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது.
இன்றைய நாளை கறுப்பு
நாளாக அனுஷ்டிக்கவும்
இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரியுள்ளது. இனவழிப்பு நடைபெற்ற இன்றைய நாளில் மங்கள கரமான நிகழ்வுகளையும் கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து கறுப்பு நாளாக கடைப்பிடிக்கும் படி அந்த முன்னணி வலியுறுத்தியுள்ளது.
போர்க் காலத்தில் தமிழ் மக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடை காரணமாக பெருமளவான மக்கள் பட்டினிச் சாவுக்கு முகம் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. எமது இரத்த உறவுகள் சந்தித்த அந்த துயரத்தை நினைவு கூரும் வகையில் இன்றைய தினம் அறுசுவையற்ற கஞ்சியினை ஒருவேளை உணவாக அருந்துமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் கிழக்கில் பி.ப 3.30 மணிக்கு புனித சின்னப்பர் ஆலய சொரூபத்திற்கு முன்னால் நினைவேந்தல் நிகழ்வினை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மட்டக்களப்பு வாகரையில் மாணிக்கபுரம் ஆற்றங்கரையிலும் காலை 10 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுகளில் பங்கேற்குமாறும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைத்துள்ளது.
பிரார்த்தனையில் ஈடுபட
வணிகர்சங்கங்கள் அழைப்பு
எமக்காக உயிர் நீத்த அனைத்து தமிழ் உறவுகளை நினைவு கூரும் முகமாகவும் அவர்களது ஆத்மா சாந்திக்காகவும் முள்ளிவாய்க்காலில் இன்று மே 18 ஆம் நாள் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வில் நாம் ஒவ்வொருவரும் பங்குபற்றி பிரார்த்தனையிலும் ஈடுபடவேண்டும் என யாழ்.வணிகர் கழகமும் அழைப்பு வ விடுத்திருக்கிறது.
தமிழ் மக்களின் வரலாற்றில் இது ஒரு முக்கியமான நாளாகும். தங்கள் இன்னுயிரை துறந்த அனைத்து எம் உறவுகளை நாம் வணங்கவேண்டிய நாளாகும். எனவே இப் புனித கடமையை நிறைவேற்ற இயலுமானவரை உங்கள் வர்த்தக ஸ்தாபனம் சார்பாக குறைந்தது ஒருவராவது இந்நிழ்வில் பங்குபற்றி பிரார்த்தனையிலும் ஈடுபடுமாறும் அந்தச் சங்கம் கோரியுள்ளது.
விடுதலைக்காக உயிர் நீத்தோரை நினைவு கூர
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைப்பு
தமிழின விடுதலைக்காக உயிர்நீத்த அனைவரையும் மே 18 இல் நினைவு கூர்ந்து அவர்களின் ஆன்ம ஈடேற்றத்திற்கு பிரார்த்தனையில் ஈடுபடுமாற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
நாம் எந்த பேதமின்றி உயிரிழந்த உறவுகளை ஒற்றுமையாக ஒருபொது இடத்தில் நினைவுத்தூபி நிறுவி நினைவு கூரவேண்டும். இன்று ஒன்று கூடிப்பிரார்த்திக்க முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும். எனவே அனைவரும் விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும் இழந்த உயிர்களுக்கு ஆத்மா சாந்தி பெறவும் ஒன்றுகூடுமாறு அழைக்கிறோம் என்று கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராசா அழைப்பு விடுத்துள்ளார்.
மாலை 4 மணிக்கு ஒன்று கூடுமாறு
தமிழரசுக் கட்சி அழைப்பு
இதேவேளை தமிழரசுக் கட்சியினரால் நடத்தப்படும் அஞ்சலி நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலையைில் இன்று மாலை 4.30 மணிக்கு மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இவ் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு இறந்த உயிர்களுக்கு ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கும்படி தமிழரசுக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும் வவுனியா பிரஜைகள் குழு, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கங்கள் ஆகியவற்றின் நினைவேந்தல் நிகழ்வு காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெறும். அத்துடன் மன்னார் பொது அமைப்புக்கள் ஒன்றியத்தின் அஞ்சலி நிகழ்வு மன்னார் நகர மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி   











மட்டுவில் 26400 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.!


18/05/2016 மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் 26400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார். 
இடைப்போகத்திற்கென செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்களே நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மண்டூர் வெல்லாவெளி வாழைச்சேனை கண்டங்களில் அதிகப்படியான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீர் இருதினங்களுக்குள் வடியா விட்டால் செய்கை பண்ணப்பட்ட அத்தனை நெல் வயல்களும் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மாவட்டத்தின் அனைத்து வயல் நிலங்களும் வெள்ளக்க காடாகவே காட்சி தருகின்றன.   நன்றி வீரகேசரி   







முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் : மாவை, சி.வி. அஞ்சலி



18/05/2016 இறுதி யுத்தத்தின்போது, முள்ளிவாய்க்கால் பகுதியில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்ததுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், மத குருமார்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.   நன்றி வீரகேசரி   





இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்.!

18/05/2016 இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் டெல்லா வெடோவா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர், மின்வலு எரிசக்தி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் ஆகியோரை இத்தாலிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2006 ஆம் ஆண்டுக்கு பின்னர், இத்தாலிய உயர் மட்ட அதிகாரியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.  நன்றி வீரகேசரி   







வித்தியா கொலை வழக்கு ; மரபணு பரிசோதனை அறிக்கை ‎நீதிமன்றில்‬ சமர்ப்பிப்பு

18/05/2016 புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்தனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டார். 
இந்நிலையில் கடந்த ஒருவருடத்தின் பின் குறித்த வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதேவேளை, பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார் தப்பிச்சென்றமை உட்பட ஏனைய விசாரணை அறிக்கைகளை அடுத்த வழக்கு விசாரணைகளில் சமர்ப்பிப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் மாணவி வித்தியாவின் கொலை வழக்கு விசாரணைகள் 2 தடவைகளாக இடம்பெற்று வந்தன.
அதாவது முதலில் கைதுசெய்யப்பட்ட 10 சந்தேக நபர்களுக்கான விசாரணை ஒரு திகதியிலும் பின்னர் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேக நபர்களின் வழக்கு விசாரணை பிறிதொரு திகதியிலும் இடம்பெற்று வந்தநிலையில் எதிர்வரும் காலத்தில் இரு வழக்கு விசாரணைகளும் ஒரே தினத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் முதலாம் திகதி ஊர்காவற்றுறை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி   








கொழும்பில் மப்பும்மந்தாரமுமான காலநிலை : களனியாறு சடுதியாக பெருக்கெடுப்பு பதற்றத்தில் வெளியேறிய மக்கள்
18/05/2016 நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் தலைநகர் கொழும்பில் பல ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு வீடுகளை விட்டு வெளியேறிய வண்ணமுள்ளனர்.

குறிப்பாக கொழும்பு பகுதியில் மழை வீழ்ச்சி குறைந்து மப்பும்மந்தாரமுமான காலநிலை நிலவிய போதிலும் களனிகங்கையின் நீர் மட்டம் சடுதியாக பெருக்கெடுத்தமையால்  களனி, தொட்டலங்க மற்றும் ஒருகொடவத்தை பகுதியில் களனிகங்கையை அண்மித்த பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டு பதறியடித்து வெளியேறி வருகின்றனர்.
இதனால் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொருட்களையும் தமது குழந்தைகளையும் துக்கியவாறு குறித்த பகுதியிலுள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறுவதை காணமுடிகின்றது.

நன்றி வீரகேசரி   




போர் வெற்றி மகிழ்ச்சியளித்தாலும் மரணங்கள் வேதனையளிக்கின்றன : தேசிய படைவீரர்கள் தினத்தில் ஜனாதிபதி

18/05/2016 போர் வெற்றி ஒருபுறம் மகிழ்ச்சியை கொடுத்தாலும் மறுபுறம் மரணங்கள் கவலையளிப்பதாகவே உள்ளது. கல், மண், சீமெந்தைக் கொண்டு தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. தமிழ் சிங்கள மக்களின் இதயங்களை இணைப்பதன் மூலமே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 
எந்தச் சவால்கள் வந்தாலும் இனங்களுக்கிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படாத நிலைமையை அரசாங்கம் ஏற்படுத்தும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். 
தேசிய படைவீரர்கள் தினம் மற்றும் யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களை நினைவுகூறும் தினம் இன்று புதன்கிழமை பாராளுமன்ற மைதானத்திலுள்ள படையினர் நினைவு தூபிக்கு முன்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். 
ஜனாதிபதி இங்க தொடர்ந்தும் உரையாற்றுகையில், 
இன்று நேற்றல்ல வரலாற்றுக் காலம் தொடக்கம் சிங்கள, தமிழ் மக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகளும், மோதல்களும் இடம்பெற்றுள்ளன. இன்று யுத்தம் முடிந்து நாட்டில் சமாதானம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இனங்களுக்கிடையே அவசர அவசரமாக நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. 
அரசாங்கம் சர்வதேச உதவியுடன் இனங்களிடேயே நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மீண்டுமொரு யுத்தம் ஏற்படுவதை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. 
இது இலகுவானதல்ல. கடுமையான சவால் மிக்கது. அதனால் அரசாங்கம் இதனை ஒருபோதும் கைவிடமாட்டாது.   நன்றி வீரகேசரி   









பிள்ளையானின் பிணை மனு மறுப்பு ; மீண்டும் விளக்கமறியல்


19/05/2016 விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள  கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் அவரது பிணை மனுவை நிராகரித்து மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைக்காக இன்று வியாழக்கிழமை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவரது பிணை மனுவை நிராகரித்த நீதிபதி எதிர்வரும் 30.6.2016 வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடப்பாக கைது செய்யப்பட்டு சந்தேசகத்தின் பேரில் பிள்ளையான்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரி.எம்.வி.பி.கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தனையும் 30.6.2015 வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி   










இதுவரை 58 பேர் உயிரிழப்பு : 4 இலட்சம் பேர் பாதிப்பு: பல பகுதிகள் நீரில் மூழ்கின


19/05/2016 சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளினால் மக்களின் அவல நிலைமை தொடர்ந்து அதிகரித்த வண்ணமுள்ளது. மழை வீழச்சி குறைவாக பதிவான போதிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடங்களில் நீர் இன்னமும் வடிந்தோடவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் வரைக்கும்  ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 240 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 28 ஆயிரத்து 948 பேர் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் உயிரிழப்புகள் எண்ணிக்கை 58 பேர் வரை அதிகரித்துள்ளன.  மேலும்  134 க்கும் மேற்பட்டோரை  காணவில்லை.  3 இலட்சத்து 6 ஆயிரத்து 773 க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். 
இதன்பிரகாரம் இடம்பெயந்துள்ள 62 ஆயிரத்து 404 குடும்பங்கள் சுமார் 611 முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மண்சரிவு , வெள்ளப்பெருக்கு மற்றும் காற்றினால் 3200 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை  அரநாயக்க மற்றும் புலத் கொ{ஹபிட்டிய போன்ற பிரதேசங்களில் ஏற்பட்ட மண்சரிவினால் பாரிய சேதம் ஏற்பட்டிருந்தது.  மண்சரிவில் மூன்று கிராமங்கள் முழுமையாக புதையுண்டன. இதன்காரணமாக 150 பேர் காணவில்லை. 27 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்தின் அதிக மழை பொழிவின் காரணமாக மீட்பு பணிகள் மந்த நிலைமையில் காணப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது

இதேவேளை இன்றைய தினத்திலும்  களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்திருந்தது. குறிப்பாக மலையக பிரதேசங்களில் பெய்துவரும் மழை நீர் அனைத்தும் களனி கங்கைக்கே ஒன்று சேருவதன் விளைவாக களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தது. இதனால் களனி , நவகம்புர, வெல்லம்பிட்டி, அவிசாவளை, ஹங்வெல்ல மற்றும் பேலியகொட ஆகிய பகுதிகளுக்கே பாதிப்புகள் ஏற்பட்டன.   நன்றி வீரகேசரி   








பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவுஸ்திரேலியா உதவி.!





20/05/2016 இலங்கையில் நிலவி வரும் வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவவுள்ளதாக அவுஸ்திரேலியா வெளிவிவகார அமைச்சர் ஜீலி பிஷப் தெரிவித்துள்ளது.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்குமிடையே மிக நெருங்கிய தோழமை உள்ளது.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. பலர் வீடுகளை இழந்துள்ளனர் மீண்டும் அவர்கள் குடியேறுவதற்கான தேவையான சகல உதவிகளையும் செய்யவுள்ளதாக அவர் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி