22/05/2016 பங்காளதேசத்தில் மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் தாக்கிய ’ரோனு’ புயலினால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலியாகியுள்ளனர்.
வங்கக்கடலில் உருவான ரோனு புயல் இலங்கையில் கடலோர பகுதிகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை மற்றும் நிலச்சரிவால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். இதன் தாக்கத்தால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா  ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சிட்டகாங் துறைமுகத்திற்கு தென்மேற்கில் 140 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள இந்த புயல் இன்று பிற்பகல் பரிசால்-சிட்டகாங் இடையே கரையை கடக்கலாம் என வானிலை மையம் கூறியிருந்தது. குறித்த புயலின் தாக்கம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் கடுமையான காற்று மற்றும் இடியுடன்கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. பாதைகளில் மரங்கள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதிப்பு உள்ள 13 கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 5 இலட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
சூறாவளிக் காற்றினால் சிட்டாகாங் பகுதியில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பட்டுவாக்கலி பகுதியில் வெள்ளப் பெருக்கால் ரங்காபாலி அணைக்கட்டு உடைந்ததில் இங்கு 300 இற்கும் அதிகமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 
சிட்டாகாங் கடலோரப் பகுதிகளில் மட்டும் புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுசார்ந்த விபத்துகளில் சிக்கி 10 இற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஒட்டுமொத்தமாக, ’ரோனு’ புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஏற்பட்ட விபத்துகளில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். 
சிட்டகாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளன.
பங்களாதேஷில் வீசிய “ரோனு ”சூாறாவளியினால் 5 இலட்சம் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 
எனினும் தற்போது புயல் காற்று சாதாரண நிலைக்கு திரும்பியிருந்தபோதும்    அடைமழை பெய்த வண்ணமிருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், நிலவி வரும் சீரற்ற காலநிலையால் அந்நாட்டு துறைமுகங்கள் மூடப்பட்டதுடன் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி