இலங்கைப் பிரச்னை: தேவை தீவிர சிகிச்சை! - கே.எஸ். இராதாகிருஷ்ணன்

.

இலங்கையில் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் கூட்டாட்சி முறை இருந்தால்தான் தமிழர்கள் சம உரிமையோடு வாழ முடியும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுவே இலங்கையை ஒற்றுமைப்படுத்தும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை, தமிழர் பகுதிகள் மட்டுமல்லாமல் சிங்களர் வாழும் ஏழு மாகாணங்களிலும் கூட்டாட்சி முறை வேண்டும் என்று சிங்களர்களே வலியுறுத்துகின்றனர்.

 புதிய அரசியல் சாசனத்தில் கூட்டாட்சி முறை இடம்பெறக் கூடாது என்று ஆளும் சுதந்திரா கட்சி சமீபத்தில் வலியுறுத்தியுள்ளது. அந்தக் கட்சியைச் சார்ந்த இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
 தந்தை செல்வா தலைமையில் வட்டுக்கோட்டையில் கூடி "இனிமேல் சிங்களர்களோடு இணைந்து வாழ முடியாது; தனி வாழ்வுதான். சகவாழ்வுக்கான வாய்ப்புகள் சாத்தியமில்லை. தமிழினம் அழிந்துவிடும் என்ற நிலை. இனி தனி வாழ்வுதான்' என்று தனிநாடு தீர்மானத்தை நிறைவேற்றி கடந்த 14-ம் தேதியுடன் (14.5.2016) 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஈழ வரலாற்றில் வட்டுக்கோட்டையில் வடித்த அந்தத் தீர்மானம் ஈழம் என்ற சுதந்திர தாகத்துக்கு அடிப்படை விதையாகும்.

 இதற்கிடையே, முள்ளிவாய்க்கால் துயரங்கள் முடிந்து 7 ஆண்டுகள் ஆகின்றன. முள்ளிவாய்க்கால் நினைவுநாள் என்பது ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் நாள். இது இலங்கைத் தமிழர் மற்றும் உலகத் தமிழரால் ஆண்டுதோறும் மே 18-ஆம் நாள் நினைவுகூரப்படுகிறது. 2009-ஆம் ஆண்டில் இந்நாளிலேயே, இலங்கையின் வட-கிழக்குக் கரையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் எனும் கிராமத்தில் ஈழப் போர் முடிவுற்றது.
 ஆனால், இன்னும் தமிழர்களுக்குக் கூட்டாட்சி முறைக்கே வழியில்லாமல் திரும்பவும் ஒற்றையாட்சி என்ற கொழும்புவின் கிடுக்கிப்பிடியில்தான் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. சமஷ்டி, மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லையென்றால் எப்படி தமிழர்கள் நிம்மதியாக சம உரிமையோடு இலங்கையில் வாழ முடியும்?
 புதிய அரசியலமைப்பு மன்றம் அதாவது, அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் செயல்படுகிறது. இலங்கை அரசியலமைப்புச் சட்டம் முதல் முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் 1948-இல், சோல்பரி வடிவமைத்தார். அவர் அப்போது இலங்கை அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்தார்.
 இந்த அரசியல் சட்டத்தின்படி பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையும், இரு அவைகளான செனட், மக்களவை கொண்ட அமைப்பாக இருந்தது. எம்.ஜி.ஆர். தமிழக மேலவையை எப்படி ஒழித்தாரோ, அது மாதிரியே ஸ்ரீமாவோ பண்டாரநாயகா இலங்கை நாடாளுமன்றத்தின் மேலவையை ஒழித்தார். அதன்பின், பண்டாரநாயகா காலத்தில் முதல் குடியரசு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு சிலோன் என்பதை மாற்றி ஸ்ரீலங்கா என்று நாட்டுக்கு பெயரிடப்பட்டது.
 22.5.1972 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டம் கூட்டாட்சி மற்றும் சமஷ்டி அமைப்பு இல்லாமல் ஒற்றையாட்சி முறையை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இதில் தமிழர்களுடைய உரிமைகள் காவு வாங்கப்பட்டன. சிங்கள மொழியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.
 புத்த மதம் நாட்டின் மதமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டது. ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவுக்குப் பின் 1979-இல் ஜெயவர்த்தனே காலத்தில் இரண்டாவது அரசியலமைப்புச் சட்டத்தை பிரான்ஸ் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது. எல்லா அதிகாரங்களும் அதிபருக்கு உண்டு என்று அனைத்து அதிகாரங்களையும் ஜெயவர்த்தனே கபளீகரம் செய்துகொண்டார். ÷சர்வாதிகாரி போன்று தமிழினத்தை அழித்தார். லூயி 14 போன்று நான்தான் அனைத்தும் என்ற போக்கில் ஜெயவர்த்தனே நர்த்தனமாடினார். நீதித் துறை அதிகாரங்களிலும் கைவைக்கப்பட்டது. ஜெயவர்த்தனே வகுத்த இரண்டாவது குடியரசு அரசியல் சட்டம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. இப்படியான நிலையில் இலங்கை அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஜெயவர்த்தனே, ராஜபக்சே போன்ற அதிபர்களுக்கு தமிழர்களை ஒழிக்கப் பயன்பட்டது.
 இந்நிலையில், புதிய அதிபர் மைத்ரி சிறிசேனா தலைமையில் இயங்கும் இன்றைய இலங்கை அரசில் வகுக்கப்படும் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்தில், தமிழர்களுக்கு சம உரிமையோடு சக வாழ்வோடு வாழ வாய்ப்பு கிடைக்கவேண்டும் என்று அனைவரும் விரும்பினர். ஆனால், மைத்ரி சிறிசேனா சமஷ்டி அமைப்புக்கே வழி இல்லை என்று சொன்னது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகும்.
 ஓர் இனத்தை அழிக்க படுகொலைகள் மட்டுமல்லாமல், அவர்களுடைய வாழ்வாதாரங்களை அழித்து, மொழி, வாழ்விடம், தொழில், கல்வி, பண்பாடு போன்றவற்றை அழித்தாலே அந்த இனம் அழிந்துவிடும். இது படுகொலைகளைவிட ஆபத்தானது. படுகொலைகளையாவது தடுக்கப் போராடலாம். அரசு பயங்கரவாதம், கறுப்புச் சட்டங்களைக் கொண்டு மக்களின் அன்றாட வாழ்வாதார, பழக்க வழக்கங்களை அழிக்க நினைப்பது ஒருவகையில் ஒரு இன அழிப்பே. முள்ளிவாய்க்கால் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் தமிழர்களுக்குப் புனர்வாழ்வு கிடைக்கவில்லை. அரசு நியமனத்தில் வேலைவாய்ப்பில்லை.
 தமிழர்கள் வாழும் பகுதியான முல்லைத் தீவைக் கூட சிங்களர்களுடைய மாவட்டமாக ஆக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. 17,289 சிங்களர்களை முதல்கட்டமாக குடியேற்றியுள்ளார்கள். இப்படி ஒவ்வொரு பகுதியிலும் சிங்களர் குடியேற்றம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதை சிங்கள அரசு அமைதியாக செய்து வருகிறது.
 "இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாநிலங்களில் பீதியை உண்டாக்கும் ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும்; தமிழர்களிடம் அபகரித்த நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கவேண்டும்; மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் குறிப்பாக, காவல் துறையை நிர்வகிக்கும் உள்ளக நிர்வாக அதிகாரம், நில நிர்வாக அதிகாரம், மீன்பிடித் தொழில் போன்ற அதிகாரங்களைப் பிரித்து வழங்கவேண்டும்; "காணாமல் போன தமிழர்களைக் கண்டறியவேண்டும்; 2009 போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யவேண்டும்; வடக்குக் கிழக்கு தமிழர்வாழ் பகுதிகளில் சகஜமான நிலைமை திரும்ப வேண்டும்'.
 -இதையெல்லாம் நிறைவேற்றக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் இலங்கையில் வந்தால்தான் தமிழினம் உரிமைபெற்ற பிரஜையாகத் திகழ முடியும். ஆனால், இன்றைக்கும் நிச்சயமாக சிங்கள அரசு, தமிழர்களை ஒழித்தே தீரும் என்ற அச்சம்தான் பெருவாரியான தமிழ் சகோதரர்களிடம் இருக்கிறது.
 இந்த அச்சத்தைப் போக்கக் கூடிய வகையில் தமிழர்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கு சர்வதேச கண்காணிப்போடு பொது வாக்கெடுப்பும், போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச சுதந்திரமான, நம்பகமான விசாரணையும் வேண்டுமென்று தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
 இம்மாதிரியான தமிழர்களின் கோரிக்கைகள் ஈடேறி, புதிதாக ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்திலும் தமிழர்களும் சம உரிமையோடும் சுயமரியாதையோடும் வாழ வகை செய்தால்தான் புதிதாக வரும் அரசியல் சட்டத்தை அங்குள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.
 நசுக்கப்பட்ட இனத்திற்குப் புதிய அரசியலமைப்புச் சட்டம் வெறும் களிம்பு போடாமல் தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் இருந்தால்தான் பிரச்னைகளில் தீர்வு காண முடியும். இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா, புதிதாக இயற்றப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மைத்ரி பால சிறிசேனா இவ்வாறு கூறியிருப்பதை அறிந்து தமிழர்கள் வேதனைப்படுகின்றனர்.
 சமஷ்டி, மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லையென்றால் எப்படி தமிழர்கள் நிம்மதியாக, சம உரிமையோடு இலங்கையில் வாழ முடியும்?
 இலங்கை அரசில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியும், சுதந்திரா கட்சியும் திட்டவட்டமாக ஒற்றை ஆட்சி முறைதான் வேண்டும் என்று வலியுறுத்திவிட்டன. இவர்கள் சொல்வதைத்தான் மைத்ரி சிறிசேனாவும், ரணில் விக்கிரமசிங்கேவும் கேட்க வேண்டிய நிலைமையில் உள்ளனர். இவர்களைத் தூண்டிவிட்டு இவ்வாறு கேளுங்கள் என்று ரணில் சொல்லியிருப்பாரோ என்ற சந்தேகங்களும் எழுகின்றன.
 ரணில் விக்கிரமசிங்கேவின் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியும் இதே நிலைப்பாட்டைத்தான் கொண்டுள்ளது. இந்நிலையில், ராஜபக்சேயும் மாகாண அதிகாரங்கள் அதிகமாக வழங்கக் கூடாது என்ற பிரச்னையின் மூலமாக சிங்கள மக்களைக் குழப்பி பிரச்னையை உருவாக்கிவிடுவாரோ என்ற பயமும் மைத்ரிக்கு எழுந்துள்ளது.
 இது ஒருபுறம் இருக்க, நேபாளம் சீனா பக்கம் சாய்ந்து கடந்த நான்கு மாதங்களாக இந்தியாவுடன் ராஜாங்க உறவு சீர்குலைந்திருப்பதாகத் தெரிகிறது. இதன் அறிகுறிபோல், நேபாளப் பிரதமருடைய இந்தியப் பயணம் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
 பில்லியன் கணக்கான டாலர்கள் உதவியை நேபாளத்துக்குச் செய்துள்ளோம்; செய்தும் வருகின்றோம். இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுக்கு வந்திருந்த இலங்கை அதிபர் சிறிசேனாவிடம், "சமஷ்டி அமைப்பு, தமிழர்களுடைய நலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை' வலியுறுத்திப் பேச பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டார் என்பது வேதனையைத் தருகிறது.
 இதேபோல், வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இருந்து நகர்ந்துவிட்டோம் என்று இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதாக வந்துள்ள செய்தியையும் வருத்தத்துடன் கவனிக்க வேண்டியிருக்கிறது.
 இப்படிப்பட்ட குழப்பமான நிலையில் சமஷ்டி அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்! ÷
 இன்று முள்ளிவாய்க்கால்
 நினைவுதினம்.

 கட்டுரையாளர்:
 வழக்குரைஞர்.