மூடப்பட்டது திரையரங்கம்... 'சாந்தி'யை தொலைத்த சிவாஜி ரசிகர்கள்!

.

ணிக வளாகங்களாக மாறிவரும் தியேட்டர்களின் வரிசையில் நடிகர் திலகம் சிவாஜியின் 'சாந்தி'யும் இடம்பெற்றுவிட்டது. அதன்படி நடிகர் சிவாஜிகணேசன் குடும்பத்தினருக்கு சொந்தமான 'சாந்தி தியேட்டர்' நேற்றுடன் தன் பொழுதுபோக்கு பணியை நிறுத்திக்கொண்டது.

1952 ல் பகுத்தறிவு பேசிய பராசக்தி திரைப்படத்தில், 'சக்ஸஸ்... சக்ஸஸ்...' என கலைஞரின் வசனம் பேசி அறிமுகமான அந்த புதுமுக நடிகருக்கு, அன்றுமுதல் வாழ்வின் அத்தனை விஷயங்களும் சக்ஸஸ்தான். நடிக்கத்துவங்கிய சில படங்களிலேயே, வெற்றிகரமான நடிகராக பரிமளித்த அவரது ஆசைகளில் ஒன்று, தான் சம்பாதித்த பணத்தில் தியேட்டர் கட்டுவது.

நடிப்பின் அத்தனை பரிமாணங்களையும் வெளிப்படுத்தி, பின்னாளில் உலகப்புகழ்பெற்ற அந்த நடிகர் வேறு யாருமல்ல; நடிகர் திலகம் சிவாஜிகணேசன்தான். 


1961- ம் ஆண்டு, சென்னை அண்ணாசாலையில் தனது ஆசைப்படியே  ஒரு தியேட்டரை வாங்கினார் சிவாஜிகணேசன். இதன் கூட்டுப்பொறுப்பாளர்களில் ஒருவரான ஆனந்த் தியேட்டர் அதிபரான ஜி.உமாபதிதான், அந்த தியேட்டருக்கு 'சாந்தி' என பெயர் சூட்டியிருந்தார். இந்த தியேட்டரை வாங்கிய சிவாஜியின் மூத்த மகளின் பெயரும் சாந்திதான். எனவே அந்த பெயரை அப்படியே வைத்துக்கொண்டார் சிவாஜி. 1961 ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தியேட்டரை திறந்துவைத்தவர் அப்போதைய முதல்வர் காமராஜ். இங்கு திரையிடப்பட்ட முதல்படம், பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி நடித்து வெளியாகி அக்காலத்தில் சக்கைப் போடு போட்ட 'பாவ மன்னிப்பு'.
பின்னர் இந்த தியேட்டரின் மொத்தப் பங்குகளையும் சிவாஜிகணேசனே வாங்கி, முழு உரிமையாளரானார்.  அன்று முதல் சிவாஜிகணேசன் நடித்த படங்கள் அனைத்தும் சாந்தி திரையரங்கத்திலேயே திரையிடப்பட்டன.
திரையுலகில் எம்.ஜி.ஆர் -சிவாஜி போட்டி நிலவிய காலத்தில்,  சிவாஜி ரசிகர்களுக்கு சாந்தி தியேட்டர் ஒரு வரப்பிரசாதம். சிவாஜி படங்கள் எங்கு திரையிடப்பட்டாலும் சென்னையின் இந்த தியேட்டரில் படத்தை காணவே ரசிகர்கள் பெரிதும் விரும்புவர். சென்னையின் முக்கிய அடையாளமாகவும், சிவாஜிக்கு பெருமையளிக்கும் விஷயங்களில் ஒன்றாகவும் இந்த தியேட்டர் கடந்த காலங்களில் விளங்கியது.

தியேட்டரின் முழுநிர்வாகத்தையும்,  சிவாஜியின் மருமகன்களில் ஒருவரான நாராயணசாமி கவனித்துக் கொண்டார். பின்னாளில் சிவாஜியின் அறிவுறுத்தலின்படி தியேட்டரின் உள்ளே,  திரையுலகிற்கு பெருமை சேர்த்த பிரபலங்களின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.  அணிவகுத்து நிற்கும் இந்த புகைப்படங்களையும் ஒரு சினிமாவுக்குரிய ஆர்வத்துடன் நின்று ரசிகர்கள் பார்ப்பார்கள். தனது சகப் போட்டியாளரான எம்.ஜி.ஆரின் படத்தையும் இங்கு இடம்பெறச்செய்தவர் சிவாஜி கணேசன்.

இந்த புகைப்பட அணிவகுப்பில் தன் படம் வைக்கப்படவில்லையே என  பிரபல கதாநாயக நடிகர் ஒருவர் ஒருமேடையில் வெளிப்படையாகவே தெரிவித்தார். அங்கு படம் வைக்கப்பட்டால்தான்,  தான் பிரபல நடிகர் என்பதை ஒப்புக்கொள்வேன் எனக் கூறினார். சில ஆண்டுகளில் அவரது படம் அங்கு வைக்கப்பட்டது. இத்தகைய அங்கீகாரத்துக்குரிய இடமாகவும் சாந்தி தியேட்டர் விளங்கியது. 

சிவாஜி ரசிகர்களைப் பொறுத்தவரை இந்த தியேட்டர் அவர்களுக்கு வெறும் தியேட்டர் மட்டுமல்ல; அவர்கள் ஒன்று கூடும் திருவிழா ஸ்தலம். திரையுலக போட்டியை தவிர்த்து, எம்.ஜி.ஆருக்கும் பிடித்தமான தியேட்டர் சாந்தி தியேட்டர். சென்னையில் பிரபல தியேட்டர் ஒன்றின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசிய அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், " சாந்தி தியேட்டரைப்போல தான் பிறந்த ஊரிலும் தம்பி சிவாஜிகணேசன் ஒரு தியேட்டர் கட்டவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். " கண்டிப்பாக அண்ணனின் ஆசையை நிறைவேற்றுகிறேன்" என அந்த மேடையில் சிவாஜி தெரிவித்தார்.
2005 ம் ஆண்டு சாந்தி திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு சாந்தி, சாய்சாந்தி என இண்டு திரையரங்குகளாக மாற்றப்பட்டது. அங்கு சிவாஜி புரொடக் ஷன்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் 800 நாட்களை தாண்டி ஓடி சாதனை படைத்தது.

சிவாஜிக்கு சாந்தி அழியாத புகழை அவரது ரசிகர்கள் மத்தியில் வழங்கியது. சுமார் 55 வருடங்கள் சினிமா ரசிகர்களின் குறிப்பாக, சிவாஜி ரசிகர்களின் சொர்க்கபுரியாக விளங்கிய சாந்தி தியேட்டர், நேற்றுடன் தன் பணியை நிறுத்திக்கொண்டது.
சென்னையின் அடையாளங்களாக விளங்கி, தங்கள் பணியை நிறுத்திக்கொண்ட கெயிட்டி, கேசினோ, சஃபையர், மேகலா போன்ற தியேட்டர்களின் வரிசையில் சாந்தியும் இப்போது சிவாஜி ரசிகர்களின் 'சாந்தி'யை பறித்துக்கொண்டு தன் பணியை நிறுத்திக்கொண்டுவிட்டது,  சிவாஜி ரசிகர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முதலிடம் வகிப்பது சினிமா. இதன் ஆதார ஸ்ருதி தியேட்டர்கள்தான். அந்த வகையில் தமிழர்களின் மனதில் முக்கிய இடம்பெற்றிருப்பது தியேட்டர்கள். இன்றும் மலரும் நினைவுகளில் மூழ்கிப்போகும் அந்தக்கால இளைஞர்கள், தங்கள் நினைவுகளில் கண்டிப்பாக சில தியேட்டர்களை குறிப்பிடுவர். அந்தளவிற்கு சினிமா ஒவ்வொரு தமிழனின் தனிப்பட்ட விருப்பங்களில் தவிர்க்கமுடியாத ஒன்று. சினிமா என்பது முழுக்க முழுக்க வணிகரீதியான ஒரு கலையாக மாறிய பின், சினிமா என்பது பல சிக்கல்களுக்கிடையில் இயங்கவேண்டிய நிலை உருவானது.

அதிகபட்ச கட்டணம், திருட்டுவிசிடி,  தகவல் தொழில்நுட்ப வளரச்சி, வணிக ரீதியான தயாரிப்பாளர்கள் போன்ற காரணங்களால் இன்று சினிமா என்பது குற்றுயிரும் குலையுருமாகவே ரசிகர்களை மகிழ்வித்துவருகிறது. இந்த பிரச்னைகளால் திரையரங்குகளுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போய்,  இன்று தமிழத்தின் பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கே ரசிகர்கள் வருகிறார்கள்.

இதன் காரணமாக தமிழகத்தில் பல திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. சில திரையரங்குகள் இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாகவும், திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. ஸ்டுடியோக்கள் கூட இந்த சுனாமியில் தப்பவில்லை.
 அந்தவரிசையில் சென்னை நகரில் வெலிங்டன், சித்ரா, அலங்கார், ஆனந்த், சஃபையர், எமரால்டு, கெயிட்டி, பாரகன், புளூடைமண்ட்,  சன், ராஜகுமாரி உள்பட பல திரையரங்குகள் இடிக்கப்பட்டு, வணிக வளாகங்களாகவும், அடுக்கு மாடி குடியிருப்புகளாகவும் மாறி கால ஓட்டத்தில் கரைந்துபோன தியேட்டர்கள்.

இந்த காரணங்களால், கடந்த சில மாதங்களுக்கு முன் சாந்தி திரையரங்கமும் வணிக வளாகம்  கட்டும் நோக்கில் பிரபல நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின்படி நவீன திரையரங்குடன் கூடிய வணிக வளாகம் கட்டப்படுவதற்கான முதற்கட்டமா,க நேற்றுமுதல் சினிமா காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.
தியேட்டர் இடிப்பு அறிவிப்பு வெளியான தகவலால் மிகுந்த துயரமடைந்த சிவாஜி ரசிகர்கள், நடிகர் பிரபுவிடம் இதுகுறித்து பேசினர். 'சாந்தி தியேட்டர் எங்கள் வாழ்வின் முக்கிய அங்கம். அதை இடிப்பது எங்கள் தலைவனுக்கு ஏதோ அசம்பாவிதம் நேருவதுபோல் உணர்கிறோம்'  என அவர்கள் சிவாஜி குடும்பத்தினரிடம்  கவலையுடன் பேசினர்.
இருப்பினும் காலத்திற்கு தக்கபடி மாறவேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துக்கூறிய பிரபு, தியேட்டரை இடித்தபின் நிர்மாணிக்கப்படும் மல்டி ஃபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் உருவாகும் தியேட்டருக்கு சாந்தி என்ற பெயரே சூட்டப்படும் என்று உறுதியளித்ததையடுத்து ரசிகர்கள் சமாதானமடைந்தனர். அதன்படி தியேட்டர் மூடப்படும் அறிவிப்பு பலகையை தியேட்டர் நிர்வாகம் சார்பில் நேற்று வைக்கப்பட்டது. 

இருப்பினும் சாந்தி தியேட்டர் இடிப்பு என்பது தங்களைப்பொறுத்தவரை தங்கள் திரையுல பிதாமகனை இன்னொருமுறை இழந்தது போன்ற ஒரு துக்கத்தில்தான் உள்ளனர். சிவாஜியின் திரைப்பட வரலாற்றையும் அவரது நினைவுகளையும் சுமந்து நின்ற சாந்தி தியேட்டர்,  சிவாஜி ரசிகர்களின் சாந்தியை தற்காலிமாக இழக்கவைக்கிறது.
nantrihttp://www.vikatan.com/