கவிதை 19 கவிதாயினி நிலா, புத்தளம்,இலங்கை


தமிழ் எழுத்தாளர் இணைய அகம்

வீணாகிப்போகும் எம்வாழ்வும் எம்சாவும்..
காணாமல் போன எம் சந்தோசப் பொழுதுகளும்
தானாகச் சேர்ந்த உறவுகளின் பொய்மையும்
வேணாம் இந்த வாழ்வென்று விரட்டியே கொல்லுதிங்கு

தேனாக இனிக்கும் தெவிட்டாத அன்பொன்றைத் தேடி
தானாக தேடிவிழும் விட்டில் பூச்சிகளாய்
மானாக வாழும் பெண்ணினமும் காயமாகி
மீனாகத் துடித்து சாகும் வாழ்க்கை கொடிது

புலரும் பொழுதில் புல்லினத்தின் பனித் துளியாய்
வளரும் ஆசைகள் மனதோடு மடிந்திட
மலரும ;முகம் பார்க்கும் காலம் மலராதோ என்று
உளறும் வார்த்தைகள் ஊமையாகிப் போகிறது

உருகும் மனதுக்கு ஒத்தடமாய் எதுவுமில்லை
அருகிருந்து தோள்சாய அன்பாக எவருமில்லை
நகர்கின்ற காலங்கள் வல்லமையைத் தரவேண்டும்
வருகின்ற காலங்கள் நாம் சிரித்து வாழ்ந்திடவே

இளந்தென்றல் காற்றோடு கதை பேசும் மலராக
வளங்  கொஞ்சும் மண வாழ்க்கை தரவேண்டும் சந்தோசம்
தளராத வாழ்வுக்காய் போராடும் பெண்ணினம் 
வளர் பிறையாய் வாழ்ந்திடவே வரவேண்டும் பொற்காலம்..!


மலரும் முகம் பார்க்கும் காலம் கவிதையின் பத்தொன்பதாவது கவிதையை எழுதியவர் இலங்கை புத்தளத்தைச் சேர்ந்த கவிதாயினி நிலா அவர்கள்.
இவர் புத்தளத்திலிருந்து ஒலிபரப்பாகி வரும் வானொலியொன்றிலும் பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவரின் கவிதையையும் படத்தையும் இம்முகநூலிலும் தமிழ் எழுத்தாளர் இணைய அக முகநூலிலும் பதிவு செய்வதுடன்,வழமையான இணையத்தளங்களில் 04.11.2015 அன்று அல்லது 05.11.2015 வெளிவரும் என்பதை அறியத்தருகின்றோம்.


வானொலிப் பணிக்கு மத்தியிலும் எமது வேண்டுகோளை ஏற்று இக்கவிதைத் திட்டத்தில் பங்கு கொண்ட அவருக்கு எமது பணிவன்பான நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.



No comments: