தேவன் (யாழ்ப்பாணம்) - வ.ந.கிரிதரன்

.
தேவன் (யாழ்ப்பாணம்




தேவன் (யாழ்ப்பாணம்) பற்றிய இக்கட்டுரையை  அவரைப் பற்றிய விரிவானதொரு ஆய்வுக்கு அடிகோலுமொரு ஆரம்பக் கட்டுரையாகக் குறிப்பிடமுடியும். இக்கட்டுரை எழுத்தாளர் முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளிவரவிருக்கும் 'இலக்கியப் பூக்கள் -2' நூலுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ஏற்கனவே முல்லை அமுதனால் தொகுக்கப்பட்டு வெளியான 'இலக்கியப் பூக்கள்' தொகுப்பு நூலின் தொடர்ச்சியாக வெளிவரவுள்ள நூலிது. - ..கி ] நான் யாழ் இந்துக் கல்லூரியிலும், வவுனியா மகாவித்தியாலயத்திலும் கல்வி பயின்றிருக்கின்றேன். இவற்றில் என் எழுத்தார்வம் தொடங்கியது வவுனியா மகா வித்தியாலய மாணவனாகவிருந்த சமயத்தில்தான். அப்பொழுதுதான் ஈழநாடு, சுதந்திரன் ஆகியவற்றில் என் ஆரம்பகால, சிறுவர் படைப்புகள் வெளிவந்தனஅப்பொழுதுதான் அகில இலங்கைரீதியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதலாவதாக வந்ததும் நிகழ்ந்தது. பின்னர் என் உயர்தரக் கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் தொடர்ந்தபொழுது அங்கே இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றில் கால் பதித்த எழுத்தாளர்கள் சிலர் ஆசிரியர்களாகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். சொக்கன் என அறியப்பட்ட சொக்கலிங்கம், தேவன் - யாழ்ப்பாணம் என்று அறியப்பட்ட மகாதேவன் ஆகியோர் அவர்களில் முக்கியமானவர்கள். எனக்கு எப்பொழுதுமே ஒரு வருத்தம். என் எழுத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்த எழுத்தாளர்கள் எவரிடமும் மாணவனாகக் கல்வி கற்கவில்லையே என்பதுதான் அந்த வருத்தம். என எழுத்தார்வதிற்கு முழுக்க முழுக்கக் காரணமாகவிருந்தது என் வீட்டுச் சூழலே. அப்பாவின் வாசிக்கும் பழக்கமும், வீடு முழுக்க அவர் வாங்கிக் குவித்த பத்திரிகைகள், சஞ்சிகைகளும்தாம் என் எழுத்தார்வத்தின் பிரதானமான காரணங்கள். இருந்தாலும் யாழ் இந்துக் கல்லூரியில் ஆசிரியர்களாக அப்பொழுது கடமையாற்றிக் கொண்டிருந்தவர்களில் ஒருவரான தேவன் - யாழ்ப்பாணம் அவர்களை அவ்வப்போது யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வுகளின் மூலம், அவரது படைப்புகளின் மூலம் அறிந்து கொண்டிருந்தேன். ஆச்சியின் வீட்டில் கிடந்த பரணைத் தேடியபொழுது பழைய தினத்தந்தி பத்திரிகைப் பிரதிகள், மறைமலையடிகளின் நாகநாட்டரசி குமுதவல்லி, கோகிலாம்பாள் கடிதங்கள், திப்புசுலதான் கோட்டைமற்றும் தேவன் -யாழ்ப்பாணம் அவர்களால்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு 'மணிபல்லவம்' என்னும் பெயரில் வெளியாகியிருந்த ' புகழ்பெற்ற ஆங்கில செவ்விலக்கியங்களிலொன்றான Treasure Island நாவல் என பல படைப்புகள் கிடைத்தன. மேற்படி மணிபல்லவம் நாவலை அன்றைய காலகட்டத்தில் விரும்பி வாசித்துள்ளேன்.


தேவன் - யாழ்ப்பாணம் மிகச் சிறந்த பேச்சாளர். ஆங்கிலத்திலும், தமிழிலும் நன்கு பேசும் ஆற்றல் வாய்த்தவர். இதனால் அன்றைய காலகட்டத்தில் யாழ்நகரில் நடைபெற்ற கலை, இலக்கிய நிகழ்வுகளில் , அந்நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கும் பிரதான தொகுப்பாளராக அப்பொழுது அவர் அனைவராலும் அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார். யாழ் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற நிகழ்வுகள் சிலவற்றில் தேவன் அவர்கள் ஆங்கிலத்திலும் , தமிழிலும் நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கியதைச் சிறுவயதில் கேட்டிருக்கின்றேன். அவரது குரல்வளம் அற்புதமானது. 6-10-1970 செவ்வாய்க் கிழமை மாலை 7 மணிக்குப் புதுவைத்தமிழிலக்கிய மன்றம் நடாத்திய இலக்கிய விழாவில் "தேவன்- யாழ்ப்பாணம்" அவர்கள்  "பாரதியின் எண்ணத்திலே" என்னுமுரை இடம்பெற்றுள்ளதை அறிய முடிகிறது.   

இது தவிர தேவன் - யாழ்ப்பாணம் என்றால் உடனே ஞாபகம் வருவது அவரது புகழ்பெற்ற 'ஸ்கோடா' (Skoda) மோட்டார் வாகனமாகும். அதன் காரணமாக அன்றைய காலகட்டத்து மாணவர்களால் அவர் 'ஸ்கோடா' என்னும் பட்டப்பெயரால் அழைக்கப்பட்டதும் நினைவுக்கு வருகின்றது. யாழ் இந்துக் கல்லூரியின் ஆசிரியர்கள் பலருக்கு மாணவர்கள் பல்வேறு பட்டப்பெயர்கள் வைத்திருந்தார்கள். அந்தப் பெயர்களாலேயே அவர்கள் அவ்வப்போது அழைக்கப்பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் கண்ணாடி அணிந்த முகமும், அந்த 'ஸ்கோடா' மோட்டார் வாகனமும் இப்பொழுதும் ஞாபகத்திலிருக்கின்றன. ஈழத்துத் தமிழ் இலக்கியவரலாற்றில் தேவன் - மகாதேவனின் - பங்களிப்பாகவிருப்பவை அவரது நாவலகள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் மற்றும் மொழிபெயர்ப்பு ஆக்கங்களே. இன்னுமொரு முக்கியமானதொரு விடயத்திற்காகவும் தேவன் - யாழ்ப்பாணம் நினைவு கூரப்படவேண்டும். பல முக்கியமான எழுத்தாளர்கள் உருவானதற்கு ஒருவிதத்தில் அவர் காரணமாகவிருந்திருக்கின்றார். 

யாழ்ப்பாணத்தில் 1924இல் பிறந்த இளையப்பா மகாதேவன் தன் புனைபெயராக தேவன் என்று வைத்துக் கொண்டார். அவரைத் தமிழ்நாட்டு எழுத்தாளரான தேவனிடமிருந்து வேறுபடுத்துவதற்காக அவரே தேவன் - யாழ்ப்பாணம் என்று அழைத்துக்கொண்டாரா அல்லது பிறரால் அவ்விதம் அழைக்கப்பட்டாரா? எழுத்தாளர் மகாதேவன் என்னும் தன் பெயரிலுள்ள தேவன் என்னும் பெயரைத் தனது புனைபெயராக வைத்தாரா அல்லது தமிழகத்துத் தேவன் மேல் கொண்ட பற்றுக் காரணமாக அப்பெயரை வைத்துக் கொண்டாரா? இது பற்றி எழுத்தாளர் தேவன் ஏதாவது கட்டுரைகளில் எழுதியிருக்கின்றாரா என்பது ஆய்வுக்குரிய விடயம். இவ்விதமாக தேவன் - யாழ்ப்பாணம் என்று அவர் அழைக்கப்படுவது பற்றி முனைவர் நா.சுப்பிரமணியம் தனது 'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் நூலில் (அப்பொழுது முனைவர் நா. சுப்பிரமணியம் யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் தமிழ்த்துறையில் உதவி விரிவுரையாளராகக் கடமையாற்றிக்கொண்டிருந்தார்.) பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

"
ஈழத்து எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுப் பிரபல நாவலாசிரியர்களை ஆதர்சமாகக் கருதினர் என்பதற்கு யாழ்ப்பாணம் 'தேவன்', ஆனந்தவிகடன் 'தேவன்' இருவருக்குமிடையில் நிலவிய 'ஏகலைவன்'-'துரோணர்' தொடர்பு எடுத்துக்காட்டாகும். ஈழத்தின் பிரபல நாவலாசிரியரான இளங்கீரன் தமிழ்நாட்டிலே சிலகாலம் வாழ்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் பகுத்தறிவுப் பாசறையைச் சார்ந்து நாவல்கள் படைத்தவர் என்பதும் மர்ம நாவல்களைப் படைத்த 'ரஜனி', எம். . அப்பாஸ் இருவரும் தமிழ்நாட்டினர் என்பதும் 'தமிழக-ஈழ' நாவலிலக்கியத் தொடர்பின் இயல்பை விளக்கப் பொருத்தமான சான்றுகளாகும். ஐம்பதுகளின் முடிவிலே ஈழத்துத் தமிழிலக்கியம் தனக்கெனத் தனிப்பண்புடையதாக அமைய வேண்டுமென்ற தேசிய உணர்வடிப்படையிலான கருத்து வளர்ச்சியடைந்த பின்னருங்கூட ஈழத்துத் தமிழ் நாவலாசிரியர்களும் திறனாய்வாளரும் தமிழ் நாட்டு நாவலாசிரியர்களுடன் நெருங்கிய இலக்கிய உறவு கொண்டிருந்தனர். 1960இல் 'தினகரன் தமிழ் விழா'வுக்குக் . கைலாசபதியும் செ. கணேசலிங்கனும் அகிலனை வரவழைத்துச் சிறப்பித்தனர்.1965இல் செ. கணேசலிங்கன் தனது நீண்ட பயணம் நாவலை அகிலனின் முன்னுரையுடனேயே வெளியிட்டார். அறுபதுகளில் வெளிவந்த ஈழத்தின் சிறந்த நாவல்களிற் பெரும்பாலானவை தமிழ் நாட்டுப் பிரசுரக் களங்களின் மூலம் வெளியானவையே என்பதும் ஈண்டு அவதானிக்கத் தக்கது."

தேவன் - யாழ்ப்பாணம் அவர்களொரு எழுத்தாளராக உருவாவதற்கு அவரது அம்மாவின் பங்களிப்பு முக்கியமானது. அதனை அவரே 'வானவெளியிலே' என்னும் அவரது  வானியல் பற்றிய கட்டுரைகளை உள்ளடக்கிய நூலுக்கான சமர்ப்பணத்தில் குறிப்பிட்டுள்ளார்.   ஶ்ரீ சண்முகநாதன் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டு வெளியான இந்நூலினை தேவன் அவர்கள் தனது தாயாருக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். அச்சமர்ப்பணத்தில் அவர் 'இளமையிலிருந்து நான் பாடசாலையில் கற்ற நாள் முதல் எனக்குத் தெரிந்த அனைத்தையும் ஒப்புவிக்கும்போது, தெரிந்த விஷயமானாலும், தெரியாத விஷயமானாலும், அலுத்துக் களைத்திருந்தாலும், கேட்டு ரசித்து, என் பிதற்றல் பிரசங்கங்களுக்கு சபையோராய் வாழ்ந்து, தலையாட்டி, பேருவகை கொண்டு அதன் மூலம் எனக்குத்தெரிந்ததை பிறருக்கு எடுத்துக் கூறும் வல்லமையையும், ஆவலையும், ஆர்வத்தையும் என்னிடத்தில் வளர்த்துவிட்ட என் அம்மாவுக்குஎன்று குறிப்பிட்டிருப்பார். அவரது ஆளுமையில் அவரது அம்மாவின் பங்கினை, பாதிப்பினை தேவனின் இக்கூற்று புலப்படுத்துகிறது. 

தேவன் (யாழ்ப்பாணம்) சிறுகதைகள்
எழுத்தாளர்  தேவன் (யாழ்ப்பாணம்) எழுதிய 'மனச்சாட்சியின் தண்டனை', 'நேர்வழி', 'மாமி', 'இருதார மணம்' போன்றஅவரது சிறுகதைகள் வெளிவந்த இதழ்கள், பத்திரிகைகள் பற்றி விரிவானதொரு தேடலைச் செய்ய வேண்டிய நிலையிலிருக்கின்றோம். அண்மையில் எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட காந்தீயக் கதைகள் சிறுகதைத் தொகுதியிலும் தேவன்-யாழ்ப்பாணம் அவர்களின் சிறுகதையும் பிரசுரமாகியுள்ளது. மேற்படி தொகுதியானது 1969இல் காந்தி நூற்றாண்டு விழாவையொட்டி இலங்கையில் அரசு பதிப்பகத்தால் வெளியான தொகுதியின் மீள்பதிப்பாகுமென்பது குறிப்பிடத்தக்கது. அமரர் திருமதி பூரணபாக்கியம் சங்கர் நினைவாக வெளியிடப்பட்ட சுதந்திரனில் பிரசுரமான பத்துச் சிறுகதைகளின் தொகுப்பு நூலில் தேவன் - யாழ்ப்பாணத்தின் கதையான 'மனச்சாட்சியின் தண்டனை' என்னும் சிறுகதையும் உள்ளடங்கியுள்ளது. இந்நூலில் தி.. வரதராசனின் மாதுளம்பழம், ..இராசரத்தினத்தின் சரிவு, எஸ்.பொ. வின் களரி, புதுமைலோலனின் அப்பேலங்காசிற்பியின் பிறந்த மண், அன்புமணியின் இதயக் குரல், செங்கை ஆழியானின் ஏதோ ஒன்று, செம்பியன் செல்வனின் கிழக்கும் மேற்கும், .நவசோதியின் அன்பின் அணைப்பில் ஆகிய சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன. 

தேவனின் நாவல்கள்:
தேவன் (யாழ்ப்பாணம்) நாவல் துறையிலும் தன் பங்களிப்பினைச் செய்திருக்கின்றார். 'கேட்டதும் நடந்ததும்', 'வாடிய மலர்கள்மற்றும் 'அவன் சுற்றவாளி' ஆகிய நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. 'கேட்டதும் நடந்ததும்' நாவல் 1956இலும் , 1965இலும் சண்முகநாதன் புத்தகசாலையினால் அவர்களது அச்சகத்திலேயே அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. 1958இல் வெளியான 'வானவெளியிலே' நூலிலும் இந்நாவல் பற்றியும், 'வாடிய மலர்கள்' நாவல் பற்றியும் , 'மணிபல்லவம்' நாவல் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. 'அவன் சுற்றவாளி' நாவல் 1968இல் அவன் சுற்றவாளி?:  . கிருஸ்ணசாமி புத்தகக் கடையினால் வெளியிடப்பட்டுள்ளது. .

தேவனின் நாடகங்கள்
தேவன் (யாழ்ப்பாணம்) தென்னவன் பிரமராயன், விதி, கூடப்பிறந்த குற்றம், பத்தினியா பாவையா, வீரபத்தினி ஆகிய நாடகங்களை எழுதியிருக்கின்றார். நாடகங்களை எழுதுவதோடு மட்டுமின்றி அவற்றின் இயக்குநராகவுமிருந்திருக்கின்றார். இப்சனின் பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயரில் தேவன் நாடகத்தை எழுதியிருப்பதாகவும் அறியப்படுகிறது. இது பற்றி அந்தனி ஜீவா அறிஞர் ..கந்தசாமி பற்றி 'சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்' என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைத்தொடரில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்:

'
தகவல்பகுதியினரால் வெளியிடப் பெற்ற 'ஸ்ரீலங்கா' சஞ்சிகையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சிகளையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார். வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சங்கள் தினகரனில் தொடராக வெளிவந்த பொழுது நாடகத்துறையிலீடுபட்டவர்கள் அதனைவிரும்பிப் படித்தார்கள். ஹென்றிக் ஹிப்சனின் அமர நாடகமான 'பொம்மை வீடு' (The Doll House) நாடகத்தைத் தழுவிப் 'பெண்பாவை' என்ற பெயர் (நாடகத்திற்குத் தமிழ் வடிவம் கொடுத்தவர் தேவன் - யாழ்ப்பாணம்) கொடுக்கப்பட்டதுவானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் ..கந்தசாமி செய்த நாடக விமர்சனம் 'பெண்பாவை'யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் 'பொம்மை வீட்டை'ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது'

தேவனின் கட்டுரைகள்:
தேவன் (யாழ்ப்பாணம்) கட்டுரைகள் பலவும் எழுதியிருக்கின்றார். அவை பற்றிய விரிவான தகவல்கள் கிடைக்கவில்லை. ஆனால் 'வானவெளியிலே' என்னும் அவரது விஞ்ஞானக்கட்டுரைகள் அடங்கிய தொகுதியினை 'நூலகம்' இணையத் தளத்தில் வாசிக்கலாம். ஈழகேசரியில் தேவன் -யாழ்ப்பாணம் எழுதிய 'வானவெளி' சம்பந்தமான விஞ்ஞானக் கட்டுரைகளின் தொகுப்பான இந்நூல் 1958இல் வெளிவந்துள்ளது. கட்டுரைகள் அனைத்துமே சுவையாக, வானியல் பற்றி நிறைய தகவல்களை உள்ளடக்கியதாக எழுதப்பட்டிருக்கின்றன. எழுத்தாளர் தேவனின் பரந்த வாசிப்பைப் புலப்படுத்தும் கட்டுரைகள் இவை.

தேவனின் மொழிபெயர்ப்புகள்:
முனைவர் நா. சுப்பிரமணியம் அன்று இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்தின் தமிழ்த்துறைப் பிரிவில் உதவி விரிவுரையாளராகவிருந்தபொழுது எழுதிய  'ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்' என்னும் ஆய்வு நூலில் தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் மொழிபெயர்ப்பு நாவலான 'மணிபல்லவம்' பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கின்றார்:

'
யாழ்ப்பாணம் 'தேவன்' ரொபேட் லூயி ஸ்டீவன்ஸனின் Treasure Island நாவலை மணிபல்லவம் (1949) என்ற தலைப்பிலே தமிழாக்கினாள். இது முதலில் கேரளத்திலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் நூலாகப் பிரசுரமாகியது. இந்தியாவின் பாஞ்சாலத்தைச் சேர்ந்த நாவலாசிரியர் முல்க் ராஜ் ஆனந்தின் Untouchable நாவலை கே. கணேஷ் தீண்டாதான் (1947) என்ற தலைப்பிலே தமிழாக்கினார். இந்நாவல் தமிழ் நாட்டிற் காரைக்குடிப் புதுமைப் பதிப்பகத்தாற் பதிப்பிக்கப்பட்டது. எமிலி ஜோலாவின் பிரெஞ்சு நாவலான நானா . . கந்தசாமியால் மொழிபெயர்க்கப்பட்டு 1951இல் சுதந்திரனில் வெளிவந்தது. பேராசிரியர் . கணபதிப்பிள்ளை ஜெர்மனிய மொழியில் தியோடர் சுதாம் எழுதிய இம் மென் சே நாவலைத் தழுவிப் பூஞ்சோலை (1953) நாவலையும் பிரெஞ்சு நாவலாசிரியர் சபூ எழுதிய இரட்டையர் நாவலைக் கற்ற கற்பனையில் வாழ்க்கையின் வினோதங்கள் (1954) நாவலையும் எழுதினார். இவை இரண்டும் நூல் வடிவில் வெளிவந்தன.'

எழுத்தாளர்களை ஊக்குவித்த  தேவன்...
எழுத்தாளர் தேவன் - யாழ்ப்பாணம் இன்னுமொரு விடயத்திற்காகவும் குறிப்பிடப்பட வேண்டியவராகின்றார். பல எழுத்தாளர்களது மாணவப் பிராயத்தில் அவர்களை எழுதுமாறு ஊக்குவித்தவர் தேவன். இது பற்றி எழுத்தாளர்களான செங்கை ஆழியான், சுதாராஜ் ஆகியோர் தமது நேர்காணல்களில் மறக்காமல் குறிப்பிட்டிருக்கின்றனர். 'யாழ்மண்' இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் செங்கை ஆழியான் 'யாழ். இந்துக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஆசிரியர்கள் தூண்டுதலாக இருந்தனர். ஏரம்பமூர்த்தி மாஸ்டர், தேவன் யாழ்ப்பாணம், மு.கார்த்திகேசன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.' என்று குறிப்பிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மானுடநேயமிக்க எழுத்தாளர் சுதாராஜ;   [எழுத்தையும் வாழ்வையும் சமாந்திரமாய் நகர்த்தும்மானுடநேயமிக்க எழுத்தாளர் சுதாராஜ; SUNDAY DECEMBER 11, 2011]' என்னும் .பரசுராமனின் கட்டுரையில் எழுத்தாளர் சுதாராஜ்  'கல்லூரி நாட்களில் பெற்ற அனுபவங்கள்தான் உங்களை ஓர் எழுத்தாளனாக்கியதா?' என்ற கேள்விக்குப் பின்வருமாறு பதிலிறுத்திருப்பார்: 'அப்படியும் கொள்ளலாம். சிறு பராயத்தில் படித்த நீதி போதனைக் கதைகள், அவை எவ்வளவு தூரம் சரியோ, பிழையோ என்ற ஆராய்ச்சிக்கும் அப்பால் மனதை செம்மைப்படுத்தி உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்வை எதிர்கொள்ளும் பக்குவத்தைத் தந்திருக்கின்றன. கார்த்திகேசன் மாஸ்டர், தேவன் - யாழ்ப்பாணம், சொக்கன் போன்ற ஆசிரியர்களிடம் இந்துக் கல்லூரியில் பாடம் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. கார்த்திகேசன் மாஸ்டர் ஒரு கம்யூனிஸ்ட்வாதி என்பது வெளியில் எல்லோருக்கும் தெரியும். தனது கலகலப்பான நகைச்சுவையூட்டல்கள் மூலம் சமூக நோக்குகள் சிந்தனைகளை போதித்து மாணவர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருந்தவர் கார்த்திகேசன் மாஸ்டர், இவையெல்லாம் ஒரு சமூக நோக்குள்ள மனிதனாகவோ எழுத்தாளனாகவோ ஆவதற்கு உதவியிருக்கின்றன.'

இவையெல்லாம் தேவன் - யாழ்ப்பாணம் அவர்களின் அன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் மீதான பாதிப்பினைதமிழ் எழுத்துலகின் மீதான அர்ப்பணிப்பினை எடுத்துக் காட்டுவன. இளம் எழுத்தாளர்களுக்கு முன்மாதிரியாக, உற்சாகமூட்டுபவராக விளங்கிய தேவனின் ஆளுமையானது ஆரோக்கியமான ஆளுமை. 

தேவன் - யாழ்ப்பாணம் யாழ்ப்பாண எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவராகவும் செயற்பட்டிருக்கின்றார். 

இவ்விதமாக ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தேவன் - யாழ்ப்பாணத்தின் பங்களிப்பு நாடகம், சிறுகதை, நாவல், கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடக இயக்கம், சொற்பொழிவு எனப் பரந்த அளவில் விரிந்து கிடக்கின்றது. அவர் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற படைப்புகள் பற்றிய விபரங்கள் மேலும் திரட்டப்பட்டு, அவை சேகரிக்கப்பட்டு வெளியிடப்பட வேண்டியதவசியம்.

No comments: