தித்திக்கும் தீவாவளி ! [ எம் . ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா ]

.
மனமெல்லாம் ஒன்றுபட்டு
     மகிழ்ச்சிவெள்ளம் பெருக்கெடுத்து
     தினமெங்கள் வாழ்வுவரின்
     தித்திக்கும் தீபாவளி !

    பட்டாசு மத்தாப்பு
    பட்சணங்கள் அத்தனையும்
    சுற்றிவந்து நின்றுவிடின்
    சுவைத்துவிடும் தீபாவளி !

    எத்திக்கும் உள்ளவெங்கள்
    இரத்தபந்தம் எல்லாரும்
    எங்களிடம் வந்துநின்றால்
    இனித்துவிடும் தீபாவளி !

   புத்தாடை தனையுடுத்தி
   புத்துணர்வு கொண்டவராய்
   புன்முறுவல் முகம்வந்தால்
   பூத்திடமே தீபாவளி !

   மதங்களால் மோதும் மனம் மாறிவிட்டால்
   இனங்களை சிதைக்கும் குணம் மாறிவிட்டால்
   மதுபோதை என்னும் வெறி மாறிவிட்டால்
   மண்மீது என்றும் நல்ல தீபாவளிதானே !

   பட்டாசு வெடிப்பதை பக்குவமாய் வெடித்தால்
   பட்சணங்கள் உண்பதையும் பக்குவமாய் செய்தால்
   பலபேரின் மனத்தினையும் மகிழ்ச்சிபெற வைத்தால்
   பலநாளும் எங்களுக்குத் தீபாவளி அன்றோ !

   நரகாசுரராக நாம்மாறி இருந்து கொண்டே
   லாபநட்டம் பேசுவதில் நியாயமென்ன இருக்கிறது
   நம்மனதில் அசுரகுணம் நமைவிட்டே அகன்றுவிடின்
   நமக்குநல்ல தீபாவளி நாளுமே வந்துநிற்கும் !

   மத்தாப்புக் கொளுத்துகின்றோம் மதவெறியும் ஊட்டுகின்றோம்
   சத்தியத்தை தர்மமதை தலைகுனியச் செய்கின்றோம்
   மாபாதகம் அனைத்தும் மனத்தைவிட்டு வெளியேற்றி
   தீயதெல்லாம் தீயிடுவோம் தீபாவளித் தினத்தில் !

     தீபாவளித் தினத்தில் சிறுவர்களைக்  காத்திடுங்கள்
     தீயினால் வருங்கேட்டை தினம்மனதில் எடுத்திடுங்கள்
     மத்தாப்பும்  பட்டாசும் மனமகிழ்ச்சி தந்திடினும்
     மனம்வருந்தச் செய்துவிடும் மகிழ்ச்சியையும் போக்கிவிடும் !

     ஆதலால் அனைவருமே அகமகிழ்ந்து நிற்பதற்கு
     அவசரத்தைக் கைவிட்டு அயர்வகற்றி நின்றிடுவோம்
     கோபமதை குறைத்திடுவோம் குணமுயர்வு பெற்றுநிற்போம்
     பூதலத்தில் தீபாவளி பொலிவுபெற நாமிணைவோம் !

     கோவில் சென்றுகும்பிடுவோம் குறைசொல்லல் தவிர்திடுவோம்
     பாவநிறை அத்தனையும் பறந்தோடச் செய்திடுவோம்
     தோழமையை வளர்த்திடுவோம் சுயநலத்தை விட்டிடுவோம்
     யார்மனமும் நோகாமல் நல்லதீபம் வைத்துநிற்போம் !

No comments: