தமிழ் சினிமா


பாயும் புலி


சுசீந்திரன் -விஷால் ஏற்கனவே பாண்டியநாடு படத்தில் ஹிட் கொடுத்து ரசிகர்களை கவர்ந்த கூட்டணி. இதை தொடர்ந்து இன்னும் ஒரு படி மேலே பாக்ஸ் ஆபிஸை வேட்டையாட பாயும் புலியாக களம் இறங்கியிருக்கிறார்கள்.

அதே மதுரைக் களம், சுசீந்திரனுக்கு உண்டான கட்டப்பஞ்சாயத்து, கடத்தல், சேஸிங் காட்சிகள் என அனைத்து ஆக்‌ஷன் பார்முலாவும் பாயும் புலியிலும் உண்டு.
கதைக்களம்
மதுரையில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறது ஒரு பெரிய கும்பல், அதில் யாருக்கும் தெரியாமல் ஊரில் இருக்கும் பெரிய பணக்காரர்களாக பார்த்து மிரட்டி பணம் பறிக்கிறது. பணம் கொடுத்தால் உயிர், இல்லையெனில் சின்ன பாலத்திற்கு அடியில் பிணமாக கிடப்பார்கள்.
அனைவரும் உயிருக்கு பயந்து பணத்தை கொடுக்க, அதே ஊரில் இவர்களை திட்டமிட்டு பிடிக்கும் போலிஸ்காரர் ஒருவரை நடுரோட்டில் கொல்கிறார்கள். இத்தனை அராஜகம் நடக்கும் ஊரில் விஷால் போலிஸாக பதவி ஏற்கிறார்.
ஆனால், 10 நாட்களுக்கு முன்பே ஊருக்கு வந்து காஜலை சந்தித்து காதலில் விழுகிறார். காதலித்து டூயட் பாடுவார் என்று பார்த்தால், திடிரென்று யாருக்கும் தெரியாமல், பணம் பறிக்கும் கும்பலை என்கவுண்டர் செய்து டுவிஸ்ட் வைத்து ‘இது ஒரு ரகசிய ஆப்ரேஷன்’ என்கிறார்.
இந்த டுவிஸ்ட் முடிவதற்குள், இவர் கொன்றது தலைவன் இல்லை, இந்த கும்பலுக்கு தலைவன் இவரா? என்று கேட்க வைத்து, அடுத்தடுத்து அந்த கும்பலை எப்படி அழித்தார்? என மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக சுசீந்திரன் கூறியிருப்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
ஆறடி உயரம், கம்பீரமான தோற்றம் என போலிஸுக்கே உண்டான மிடுக்குடன் விஷால் முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். இவருக்கு அடுத்து படத்தில் நல்ல ஸ்கோர் செய்வது விஷாலின் அண்ணனாக வரும் சமுத்திரக்கனி தான். இவரின் திரைவாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு படமாக இந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.
படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் இழுத்து செல்வது இவர் கதாபாத்திரமே. காஜலுக்கு நான் மகான் அல்ல படத்தை விட குறைந்த கதாபாத்திரம் தான், அதிலாவது காதல் காட்சிகளில் நம்மை கவர்ந்தார். இதில் அதில் கூட கவரவில்லை. கதைக்குள் இவரை கொண்டு வரவேண்டும் என்பதற்காக சில காட்சிகள் இருக்கின்றது. சூரி தன் மனைவியிடம் சிக்கி தவிப்பதை விஷாலிடம் கூறும் காட்சிகளில் எல்லாம் தியேட்டரில் சிரிப்பு சத்தம் அடங்க சில நேரம் ஆகிறது.
படத்தின் கடைசி 45 நிமிடம் ஜெட் வேகத்தில் செல்கின்றது. குறிப்பாக காஜலின் அப்பாவை பின் தொடர்ந்து அந்த கும்பலை விஷால் துரத்தும் காட்சி சீட்டின் நுனிக்கு வரவைக்கின்றது. வழக்கம் போல் சுசீந்திரன் தனக்கே உண்டான நெகிழவைக்கும் கிளைமேக்ஸுடன் நம்மை கலங்க வைக்கிறார்.
க்ளாப்ஸ்
படத்தின் இரண்டாம் பாதி, குறிப்பாக அந்த சேஸிங் காட்சி, டி.இமானின் பின்னணி இசை, வேல்ராஜ் அந்த இருட்டிலும் மிக துல்லியமாக படம் பிடித்துள்ளார். சுசீந்திரனுக்கே உண்டான வேகமான திரைக்கதை.
பல்ப்ஸ்
படத்தின் முதல் பாதி கிட்டத்தட்ட படம் ஆரம்பித்து 40 நிமிடம் வரை கதைக்குள் செல்லாமல் இருப்பது, காஜல் அகர்வால் படத்தில் எந்த இடத்திலும் ஒன்றவே இல்லை. பாடல்கள் பாண்டியநாடு அளவிற்கு ரசிக்கும்படி இல்லை.
மொத்தத்தில் ஆரம்பத்தில் புலி தடுமாறினாலும் இரண்டாம் பாதியில் தான் நினைத்த இடத்தை (பாக்ஸ் ஆபிஸ்) குறி வைத்து பாய்ந்துள்ளது இந்த (பாயும்) புலி.

ரேட்டிங்- 2.75/5  நன்றி   cineulagam
No comments: