சுட்ட பழம், சுடாத பழம். - சிறுகதை - கே.எஸ்.சுதாகர்

.

ஜெகதீசன் அவுஸ்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தப்பதினைந்து வருடத்தில் அவர் கண்ட 'தேட்டம்' - இதோ உங்கள் முன்னாலே வானளாவி நிற்கும் இந்த 'வசந்தமாளிகை'தான்.

வசந்தமாளிகை மூன்றுமாடிகள் கொண்டது. அடித்தளம் நிலமட்டத்திற்கும் கீழே இருப்பதால் சிலர் அதை, "உது இரண்டு மாடிகள்தான்" என்று சீண்டுவார்கள். அவரது காணித்துண்டை 'சரிவு நிலம்' என்று யாராவது சொன்னால் ஜெகதீசனுக்குக் கோபம் வரும். 'சிலோப் லான்ட்' (slope) என்று திருத்திச் சொல்லுவான். பேஸ்மன்றில் (basement) றம்பஸ் றூமும்(rhombus room) ஸ்ரோர் றூமும்(store room) உண்டு. அவரது வீடு பெயருக்குத் தக்கமாதிரி வசந்தமாளிகைதான்.


வேலையால் வந்த ஜெகதீசனுக்கு பிளேட்டில் உணவைக் கொடுத்துவிட்டு, அறைக்குள் சென்று உடுப்பு மாற்றத் தொடங்கினாள் மனைவி வனிதாமணி. பெண்பிள்ளைகள் இருவரும் ஏற்கனவே ஆடை அணிந்து மணம் கமிழும் சென்ற் வாசனைகளுடன் ரி.விக்கு முன்னால் இருந்தார்கள்.

ஜெகதீசனின் பள்ளி நண்பன் ரவிச்சந்திரன் புற்ஸ்கிறே (footscray) என்னுமிடத்தில் தொடர்மாடி(flat) ஒன்றில் வாடகைக்கு இருக்கின்றான். அவன் சமீபத்தில்தான் நாட்டிற்கு வந்திருந்தான். அவனது தாயாருக்கு சுகமில்லை என்று தகவல் அறிந்ததும் மனைவி பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்குப் போய்விட்டான். அவனது வீட்டிற்குச் சென்று, லெட்டர்பொக்ஸ்ஷிற்கு வரும் கடிதங்கள் மற்றும் இதர துண்டுப்பிரசுரங்களை எடுத்து வைக்கும் பொறுப்பு இவனிடம் வந்தது. அவனது வீடு அந்தக்கட்டத்தில் இரண்டாவது மாடியில் இருந்தது. வீட்டின் குறுகிய நிலாமுற்றத்தில் சில பூச்சாடிகள் வைத்திருந்தான். அதற்கு நீரும் விடவேண்டும். வாரத்தில் வியாழக்கிழமையும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையும் சென்று வருவான்.

சாப்பாட்டு மேசையிலிருந்து ருசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெகதீசனை திடீரென்று அந்த எறும்புக்கூட்டம் திசை திருப்பியது. அதிர்ந்துவிட்டான் ஜெகதீசன். அவனது நெற்றிக்கண் பார்வையை அசட்டை செய்தபடி, பளபளக்கும் மொசைக்தரை மீது ஊர்கோலம் போயின அந்தக் கூத்தாடி எறும்புகள். நாலாபுறத்திலிமிருந்து புறப்படும் வீதிகள் ஒரு சந்தியை அடைவது போல அவை குசினியை முற்றுகையிட்டன.
உணவுத்தட்டை மேசைமீது அதிரும்படி வைத்துவிட்டு, குசினிக்குள்ளிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தான். உள்ளே ஒரு பிஸ்கெற்பெட்டியை சம்ஹாரம் செய்து கொண்டிருந்தன அவை.

"வீடு மணக்கப்படாது எண்டுதான் செப்பறேற்ரா இன்னொரு குசினி கட்டித் தந்தனான். இப்ப இந்த எறும்புக்கூட்டம் என்னண்டு வீட்டுக்குள்ளை நுழைஞ்சது?" கத்தியபடியே பிஸ்கெற்பெட்டியைத் தூக்கி எறிந்தான். அது ரி.வி பார்த்துக் கொண்டிருந்த பெண்களின் தலைக்கு மேலால் பறந்து சென்று பேகோலாவிற்குள் (pergola) விழுந்தது. பிஸ்கெற்பெட்டி பறப்பை மேற்கொண்டிருக்கும்போதே எறும்புகள் பொலபொலவென்று உதிர்ந்து விழுந்தன.

"உது சிட்னியிலையிருந்து போனகிழமை விஜயன் வரேக்கை கொண்டு வந்தது. எக்ஸ்பென்ஷிவ் பிஸ்கெற் பெட்டியப்பா! இன்னும் உடைக்கேல்லை. அப்பிடியே புதுசாக்கிடந்தது" மாஸ்டர் பெட்றூமிற்குள் இருந்து குரல் வந்தது. எக்ஸ்பென்ஷிவ் என்ற சொல்லுக்கு எதிர்குரலாக, "வீட்டை விடவா?" என்ற கேள்வி வந்தது.
"நான் போய்க் காருக்கை இருக்கிறன். வெளிக்கிட்டு முடிய வாங்கோ."
"உந்தாளுக்கு இனி கொதி கிழம்பி விட்டுது."

காரிற்குள் ஏறிய வனிதாமணி நுனி சீற்றில் இருந்தாள். இனி வனிதாமணிக்கு கொஞ்ச நேரம் ரென்ஷன். கார் சிலவேளைகளில் ரெட் லைற்றில் நிற்காது. வேகம் கூடிக் குறையும். எல்லாவற்றையும் வனிதாமணிதான் பார்க்க வேண்டும். காரிற்குள் பாட்டு ஒலிக்கும்போதுதான் அவனது கொதி அடங்கிவிட்டது என்பதைப் அறிவார்கள்.

'முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே' என்று தொடங்க, "அப்பா ஹைப்பொயின்ற் ஷொப்பிங்சென்ரர்" என்று பின்னால் இருந்து ஒரு பெண் குரல் கொடுத்தாள். இரண்டு பெண்களும் ஒருபோதும் ரவிச்சந்திரனின் வீட்டிற்குப் போனதில்லை. ரவிச்சந்திரனது வீட்டு மணம் அவர்களுக்கு அலர்ஜி. மணம் மாத்திரம் ஒவ்வாமையைக் கொடுக்கும் என்பதல்ல. சில நேரங்களில் சில மனிதர்களும். அதனால் அவர்கள் இருவரையும் Highpoint shopping cetre இல் இறக்கிவிட்டுப் போவார்கள். திரும்ப வரும்போது ஏற்றி வருவார்கள்.

ஹைப்பொயின்ற் வந்தது. பெண்கள் இருவரும் இறங்கிக் கொண்டார்கள். இனி ரவிச்சந்திரனுடைய வீடுதான். தூரத்தே வரும்போதே அழகானகாட்சி தெரிகிறது. தொடர்மாடியிலுள்ள பன்னிரண்டு தபால்பெட்டிகளில் ஒன்றைத்தவிர மிகுதி எல்லாவற்றிலும் வழித்துத் துடைத்துவிடப்பட்டிருந்தன. ரவிச்சந்திரனது லெட்டர்பொக்ஸ் தெருவில் சின்னாபின்னமாக இறந்துகிடக்கும் மிருகமொன்றை நினைவூட்டியது.
"காரை ஸ்லோ பண்ணுங்கோ. நான் எல்லாத்தையும் எடுத்துவாறன்" இறங்கிக் கொண்ட வனிதாமணி, பறந்தது போக இருந்ததில் முக்கியமான கடிதங்களை பத்திரப்படுத்திக் கொண்டாள். இரண்டாவது மாடிக்குச் செல்லும் வாசலில் பழைய பிரிஜ் ஒன்று வாய் திறந்தபடி இருந்தது. இரண்டொரு தலையணைகளும் வெளிறிய குசன்களும் சிதறிக் கிடந்தன.
"நீங்கள் வேலையாலை களைச்சுப்போய் வந்தனியள். உந்த ஈசிச்செயரிலை படுத்திருங்கோ. நான் பூச்சாடிகளுக்கு தண்ணி விட்டிட்டு வாறன்" துரிதகதியில் காரியத்தில் இறங்கினாள் வனிதாமணி.

ஈசிச்செயரிற்குள் சரிந்த ஜெகதீசன் அதன் துணியை இழுத்துப் பார்த்து அதன் பலத்தை பரீட்சித்துக் கொண்டான். பலம் பார்க்கக் குனிந்தவனுக்கு அதிர்ச்சி எறும்பு ரூபத்தில் காத்திருந்தது. ஒன்றையுமே காணாதவன் போல தனது இரண்டுகால்களையும் தூக்கி ஈசிச்செயரின் சட்டகத்தில் தூக்கிப் போட்டுக் கொண்டான். வனிதாமணி தனது கடைக்கண் பார்வையை அவனை நோக்கி எறிந்துவிட்டு தனது வேலையைத் தொடர்ந்தாள்.

வேலை முடிந்ததும் எறும்புகள் செல்லும் தடத்தின் வழியே நடந்து சென்றாள். ஆதி எங்கே என்று தெரியாவிட்டாலும், அதன் அந்தம் பெரும்பாலும் குசினிதான் என்று குழந்தைப்பிள்ளைக்கும் தெரியும். அந்தம் இருந்த இடம் ஒரு மலிபன் மாறி பிஸ்கெற் ரின். அதை எடுத்து தூர எறியும் நோக்கில் ஒரு ஷொப்பிங்பாக்கிற்குள் போட்டு இறுகக் கட்டினாள். வீட்டிற்கு முன்னால் உள்ள வேஸ்ற்பின்னிற்குள் போடுவதற்காக படிகளில் இறங்கினாள்.
"மணி! எங்கை போகின்றீர்?"
"பிஸ்கெற் எல்லாம் எறும்பு. தூர எறிஞ்சு போட்டு வாறன்."

"இஞ்சை கொண்டு வாரும். ஊதிப்போட்டு சாப்பிடலாம்!"
"நிறைய எறும்பாக் கிடக்கு!"

"அதனாலென்ன? எறும்பு சாப்பிட்டா கண் பார்வை நல்லா வரும் எண்டு விஞ்ஞானிகளும் சொல்லுறான்கள்!"

"........."

No comments: