நெற்கொழுதாசனின் 'ரகசியத்தின் நாக்குகள்'

.
இந்த வாழ்விற்குள் எத்தனை இரகசியங்கள் மறைந்து கிடக்கின்றன. எத்தனை நினைவுகள் தாளிடப்பட்டு மறைக்க வைக்கப்பட்டுள்ளன. வாழ்வே ஒரு வகையில் பூடகமானதுதான். இருந்தபோதும் நினைவின் வலிகளை ஆற்றுவதற்கு பகிர்தல் ஒரு வழிவகையாகும்.


நெற்கொழுதாசன் 2006ல் இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தவர். வாழ்வின் வசந்தங்களையும் கார்காலங்களையும் தாய் மண்ணில் மற்றெல்லோரையும் போலவே அனுபவித்துத் திளைத்தவர். இப்பொழுது பாதுகாப்பான கூட்டைத் தேடிக் கண்டடைந்து அதில் நிம்மதியாக வாழக் கிடைத்தபோதும் உணர்வுபூர்வமாக அல்லாடுகிறார்.

தனது பிறந்த வீட்டை, துள்ளித்திரிந்த தனது ஊரை, தான் நேசித்த பிறந்த தேசத்தை மறக்க முடியாது உள்ளார ஏங்குகிறார். அவை பற்றிய நினைவுகளுடனேயே வாழ்ந்து அவை பற்றிப் பேசி நினைவாற்றுகிறார்.

அவரது தாயக அனுபவங்களில் அவரால் வெளிப்படையாகப் பேசக் கூடியவை உள்ளன.

".... கரிய மேகங்கள் திரண்டு கலையும் அந்த
நிழல் படிந்து மறையும்
வெயில் பட்டு தேகம் சிலிர்க்கும்
மெல்லிய கூதல் காற்றில் பரவும்
மாலை சரிகையில் அந்தரத்தில்
மழைப் பூச்சிகள் உலாவும்.
பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும்.."

பேச முடியாத அவலங்களைச் சுமப்பவையும் உள்ளன.

"....உப்புக் கரிக்கும் அதன் ஓரங்களில்
உறங்கிக் கிடக்கும் விசும்பல்களை
ஆதங்கப் பெருமூச்சுகளை
ஓரந்தள்ளி
வக்கிர நிழல்களைப் பூசினார்கள்...."

அத்தகைய தனது உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு அவருக்குக் கைகொடுப்பது கவிதை ஊடகம்தான். அதன் ஊடாக தனது வலிகளை மற்றவர்களுடன் பகிர்கிறார். பகிர்தலில் தேறுதல் பெற முனைகிறார்.

"இது எனக்கான பாடல்
எனக்கான இந்தப் பாடல்
உங்களுக்கான அடையாளங்களைச் சுமந்திருக்கலாம்.
ஆனாலும் இது
எனக்கான பாடல்தான்.."

என்று கவிதையில் சொல்வதிலிருந்து அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
தாயக நினைவுகளில் மிதக்கும் இவர் புலம் பெயர் வாழ்வை தனது துர்ப்பாக்கியம் போலக் கருதவதாகப் படைப்புகள் பேசுகின்றன. அதைத் தனது நிரந்தர வீடாகக் கருவதாகவும் தெரியவில்லை.  அங்குள்ளவர்களின் மனோபாவம் அவரது மனத்தை அலைக்கழிக்கவும் செய்கிறது

"..புகழ் கேட்டு வரவுமில்லை - இங்கு"
நிலைகொள்ளும் நினைப்பதுமில்லை
புன்னகை தாருங்கள் - கொஞ்சம்
பூவிதழ் திறந்திந்த பாவிதழ்..."

என்ற வரிகள் அந்த மண்ணின் மீதான ஒட்டுறவற்ற வாழ்வைச் சொல்கின்றன.

மற்றொரு புறத்தில் இவரது பல கவிதைகள் மறைந்து போகும் வாழ்வு, நிலையாமை போன்றவற்றையும் பேசுவதைக் காணலாம். அவை ஒரு வித விரக்தியின் வெளிப்பாடா அல்லது நிர்க்கதியைப் பகிரங்கப்படுத்தி ஆறுதலை அவாவும் முகமூடி வரிகளா தெரியவில்லை.

"..நாளை
காலமும் சொற்களும் ஒன்று கூடும்
நான்
பேசுபொருளாவேன்.'"
மற்றொரு இடத்தில்

".. எப்படி அழைக்கப்படும் 
நான் இல்லாத எனது வீடு
யாருமில்லாத இன்றில்.."

இன்னொன்று

'..யாருக்கும் தெரியாது
நூனில்லாத அந்த அறையில்
என் கனவுகளும்
நிராகரிக்கப்பட்ட பிரியங்களும்
கண்ணீரின் உவரப்பு வீச்சும்
பெருமூச்சுக்களும்
ஒரு காலடிக்காக் காத்திருப்பது..' 

மற்றொன்று

'....மறந்துமென் 
கல்லறை மீதில்பூக்களையே 
உங்கள் கண்ணீர்த் துளிகளையோ
தூவாதீர்கள் ...'

இப்படியாக பல கவிதைகள் மனத்துயர் சிந்துகின்றன.

சரி அவரது படைப்புகள் பற்றி மற்றவர்கள் சொல்வது என்ன?

"...'அவரது உண்மையும் தன்னுணற்சி வெளிப்பாடும் அவரது அனுபவச் செழுமையும், விட்டு வந்த மீதான ஏக்கமும் அவரை எனக்கு நெருக்கமாகியது... "  இவ்வாறு சொல்வது கவிஞர் வ.அய்.ச.ஜெயபாலன பின் அட்டையில்.


"..இணையப் பரப்பில் அண்மைக் காலங்களில் துருத்திக் கொண்டு மேலெழும் இளம் படைப்பாளிகளில் அவரும் ஒருவர்..... ஒரு இளம் புலம்பெயர் படைப்பாளி என்பதால் அவர் அவருக்கேயான 'போகாத நினைவுகளை' கடந்து வரக் காலம் எடுக்கும்." என்று நிலாந்தன் தனது கணிப்பை நூலுக்கான முன்னுரையில் சொல்கிறார்;.

ஆம் இது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பு. பெரும்பாலான கவிதைகள் அவரது பழைய நினைவுகளையே பேசுகின்றன.

தனது தாய் நாட்டுப் பிரிவின் துயரிலிருந்து மேலெழுந்து, புலம் பெயர் வாழ்வின் சிக்கல்களையும் சவால்களையும் அங்கு நிகழும் கலாசார கலப்பின் பண்பாட்டுத் தளும்பல்களையும் பேச முயலும்போது அவரது படைப்புகள் மற்றொரு தளத்திற்கு நகரும். அதையே தாய் நாட்டில் வாழும் நாம் எதிர்பார்க்கிறோம்.

நூல் :- இரகசியத்தின் நாக்குகள்
நூலசிரியர் :- நெற்கொழுதாசன்
வெளியீடு ;:- கறுப்பு பதிப்பகம்
விலை :- இந்திய ரூபா 60.00
Mobile :-  94442 72500


எம்.கே.முருகானந்தன்

No comments: