படித்தோம் சொல்கின்றோம் - முருகபூபதி

.
எளிமையும்  ஓசைநயமும்  மிக்க  பாடல்களுடன்
வித்துவான்   வேந்தனாரின்  ‘ குழந்தை மொழி '

 " நல்லவைகள்  யாவும்  குழந்தைகளுக்கே " என்று  மேதை  லெனின் சொன்னார்.   ஆனால்,  லெனினின்  கோட்பாடுகளில் நம்பிக்கைவைக்காமல்  - ஆத்மீகத்தில்  நம்பிக்கைகொண்ட   ஈழத்தின் மூத்த   எழுத்தாளரும்  ஆசானுமாகிய   வித்துவான்  வேந்தனார் அவர்களும்   ‘ குழந்தை மொழி '  நூலின்  வாயிலாக  குழந்தைகளுக்கு   நல்லதையே  சொன்னவர்.
 1964  ஆம்  ஆண்டு  வெளியான  அவரது  கவிதைப்பூம்பொழில் நூலிலிருந்து  35  பாடல்களை   தெரிவு  செய்து  'குழந்தை மொழி என்ற  இந்நூலை   அவரது  செல்வப்புதல்வி   திருமதி  கலையரசி சின்னையா     தொகுத்து  வழங்கியுள்ளார்.
வித்துவான்  வேந்தனார்  அவர்களை  அதே  1964  ஆம்  ஆண்டில்  நான் மேடையில்   பார்த்தபொழுது  எனக்கு 13  வயது.   யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக்கல்லூரியில்    நவராத்திரி    காலத்தில்  நடந்த  கலைமகள் விழாவில்   அவர்   உரையாற்றினார்.
அவர்   கல்வி, செல்வம், வீரம் பற்றி பேசியதாக   ஞாபகம். காலம் காலமாக   பாடசாலைகளில்   நவராத்திரி  விழாக்களில்  பேசப்படும் பேச்சு   பற்றி   விசேடமாக  சொல்வதற்கு  எதுவும் இல்லையென்றாலும்  வேந்தனாரின்  குழந்தைப்பாடல்களில் அக்காலத்திலே    பெரிதும்  பேசப்பட்ட  ‘ காலைத்தூக்கி  கண்ணில் ஒற்றிக்   கட்டிக்கொஞ்சும்  அம்மா என்ற   பாடல்    எமது  மனதை விட்டு   என்றைக்கும்  அகலாது.
நாம்  அனைவருமே  அந்த  அனுபவத்திற்கு   ஒரு  காலத்தில் ஆளானவர்கள்தான்.  பள்ளிக்கூடம்   விட்ட நேரம்  பாதிவழிக்கு  வந்து துள்ளிக்குதிக்கும்   என்னைத்தூக்கி   தோளிற்போடும்  அம்மா  மாரை புகலிட  நாடுகளில்  தற்பொழுது  Child  care  centre   களின் வாசல்களில்தான்   பார்க்க முடியும்.

அம்மா, பாட்டி,   இருவரும்  ஒரு  குடும்பத்தில்  மிகவும்  முக்கிய பாத்திரங்கள்.    இவர்களுக்குத்தான்  வீட்டுப்பாத்திரங்கள் -  பத்திரங்கள் பற்றியும்   அதிகம்  தெரியும்.   எங்கள்  தமிழ்ச்சமூகத்தில்  சமையலறை  என்பது  அம்மாமாருக்கும்  பாட்டிமாருக்கும்தான் என்பது    எழுதாத  விதிதான்   எங்கள்  தாயகத்தில்.    ஆனால் புகலிடநாட்டில்    சமையலறை   யாருடையது  என்பது  குறித்து  நான் எனது    அனுபவத்தில்  மாத்திரம்  சொல்ல  முடியாதுதான்.
வேந்தனாரின்   பாடல்களில்  வரும்  அம்மா  பாலைக்காய்ச்சி  சீனி போட்டு   பருகத் தருகிறார்.  பாட்டியோ   பேத்திக்கு  வாழைப்பழமும் இனிப்பும்   வாங்கித்தருகிறார்.
புகலிடத்தில்    மக்டொனல்ட்ஸ்,   ஹங்ரிஜக்ஸ் ,  பீட்சா வாங்கிக்கொடுக்கும்  அம்மாமாரையும்  பாட்டிமாரையும்  வேந்தனார் சந்திக்க   நேர்ந்திருந்தால்  மேலும்  சில  சுவையான  பாடல்களை தந்திருப்பார்.   ஆனால் -  அவர்  வாழ்ந்த  காலம்  மிகவும்  குறுகியது. 1918   இல்  பிறந்து  1966   இல்   அமரத்துவம்  எய்தியிருக்கிறார். அதாவது  48   ஆண்டுகள்தான்    வாழ்ந்திருக்கிறார்.   மகாகவி  பாரதி, புதுமைப்பித்தன்,   தளையசிங்கம்,   கைலாசபதி  ஆகியோரும் வேந்தனாரைப்போன்று  அற்பாயுளில்     மறைந்த   ஆளுமைகள்தான்.
கவிதைப்பூம் பொழில்   வெளிவந்த  1964   காலப்பகுதியில்   அந்த  நூல் வெள்ளீய  அச்சுக்களின்  கோர்வையில்  மலர்ந்துள்ளது.   ஆனால்  இந்த   குழந்தை  மொழி   கணினியில்  மலர்ந்துள்ளது.   வேந்தனார் என்ன   வள்ளுவர்,  கம்பர்,  இளங்கோ  அடிகள்  கூட  எதிர்காலத்தில் தங்கள்   படைப்பு  கணினியில்  பதிவாகும்  என்று  கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.    அந்தக்கால  அகராதிகளில்  கணினி, கம்பியூட்டர்  முதலான  சொற்கள்  இருந்திருப்பதற்கும் வாய்ப்பில்லை.
ஒரு  படைப்பாளியின்  கவிஞனின்  வெற்றி  அவனது  படைப்புகள் காலத்தையும்    வென்று  வாழ்வதில்  தங்கியிருக்கிறது.
திரைப்படத்தை  எடுத்துக்கொண்டால்,  எல்லோருமே  நினைப்பார்கள் அதில்   நகைச்சுவைப்பாத்திரம்தான்  சுலபமானது  என்று.   ஆனால் அந்தப்பாத்திரம்  ஏற்று  நடிப்பதுதான்  மிகவும்  சிரமமானது  என்று சார்லி சப்லினும்  மிஸ்டர்  பீனும்  கலைவாணரும்  நாகேசும்  சிவாஜி கணேசனும்   கமல்ஹாசனும்  சொல்லியிருக்கிறார்கள்.
அதுபோன்றதுதான்   குழந்தை  இலக்கியமும்.   குழந்தை  இலக்கியம் படைப்பதற்கு  குழந்தையின்  உளவியல்  தெரிந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டில்  அழ. வள்ளியப்பா  போன்று   இலங்கையில்  நவாலியூர்  சோமசுந்தரப்புலவர்  போன்று,  கவிஞர் அம்பியைப்போன்று  வித்துவான்   வேந்தனார்    போன்று    சமகாலத்தில்    குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய  குழந்தை இலக்கியப்படைப்பாளிகளை   காண்பது  அரிதாகியுள்ளது.
 பூனை,  நாய்,  கோழி,  காகம்,  பறவைக்குஞ்சு,  மயில்,  குயில்,  மான், அணில்,  ஆகிய  ஜீவராசிகளுடன்  குழந்தைகளுக்கு  ஈடுபாடு  உண்டு. வீட்டில்   வளரும்  பறவைகளை    காண்பித்து  குழந்தைகளுக்கு உணவூட்டும்   அம்மா,   அப்பாமரை  இலங்கையில்  பார்த்திருப்பீர்கள்.
எனக்கு   ஒரு   தம்பி  இருக்கிறான்.    அவன்  எனது  அக்காவின் குழந்தைகளுக்கு    உணவூட்டும்போது  கோழிகளை   அந்தா கொக்கா... இந்தா  கொக்கா   என்று  காண்பித்து  உணவூட்டுவான்.   அக்காவுக்கு தம்பி   இதுவிடயத்தில்  மிகவும்  உதவியாக  இருந்தான்.   கோழி கொக்கரக்கோ   என்று  சத்தம்  இடுவதனால்  கொக்கா... கொக்கா... என்று    சொல்லிச் சொல்லியே   எப்படியும்  குழந்தைகளுக்கு உணவூட்டிவிடுவதனால்  அவனுக்கு  குழந்தைகள்  கொக்கா  மாமா என்றே   பெயர்  சூட்டிவிட்டார்கள்.    தம்பிக்கு  இப்போது  60  வயது. அவனது   குழந்தைகளும்  வளர்ந்து  பெரியவர்களாகிவிட்டனர். பேரக்குழந்தையும்   கண்டுவிட்டான்.  ஆனால்,  இப்போதும்  தம்பியை எனது   மருமக்கள்  கொக்காமாமா  என்றுதான்  அழைக்கிறார்கள். இதனை   இங்கே  ஏன்  சொல்கிறேன்  என்றால்,  குழந்தைகளின் மனதில்  ஒரு  விடயம்  ஆழமாக  பதிந்துவிட்டால்,  அவர்கள் அதனை  எளிதில்  மறக்கமாட்டார்கள்.   அவர்களின்  ஞாபகசக்தி ஆற்றல்  மிக்கது.
அதனால்தான்    நல்லவைகள்  யாவும்  குழந்தைகளுக்கே.   நல்லதையே   சொல்லிக் கொடுத்தல் வேண்டும்.
ஜீவராசிகளை   காண்பித்து  அல்லது  நிலாவைக்காண்பித்து குழந்தைகளுக்கு   உணவூட்டும்  பழக்கம்  புகலிட  நாடுகளில் குறைந்துவிட்டது.    அவ்வாறு  ஊட்டி  வளர்த்தால்   அவர்களுக்கு தன்னம்பிக்கை    குறைந்துவிடும்  எனச்சொல்கிறார்கள்.    நவீன தொழில்நுட்பத்தில்    குழந்தைகளை   கவரும்  நிகழ்ச்சிகள் இறுவட்டுக்களில்   வந்துகொண்டிருக்கின்றன.    தொலைக்காட்சிகளில் Play School  முதலான   ஒளிபரப்புகள்  இடம்பெறுகின்றன.
குழந்தைகளை   அவர்களுக்குரிய  பிரத்தியேக  ஆசனத்தில்  இருத்தி பாதுகாப்பாக   பட்டியும்  அணிவித்து,  ஆசனத்துடன்  பிணைந்த  சிறு பலகையில்  உணவை   தட்டில்  வைத்து   கரண்டியுடன் கொடுத்துவிடுகிறார்கள்.
பாசம்    அந்நியப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்தக்குழந்தைகளிடம்  பாலைக்காய்ச்சி  சீனிபோட்டு  பருகத்தந்த அம்மாவுக்கு   வேலை   குறைந்துவிட்டது.
அவுஸ்திரேலியாவில்   ஒரு  குழந்தை  ஒரே   சமயத்தில்  ஆறு அல்லது   ஏழு  மொழிகளை  தெரிந்துகொள்ளும்  ஆற்றல்  மிக்கது என்று  ஆய்வுகள்  தெரிவிப்பதாக  நண்பர்  ஒருவர்  சொன்னார்.
வேந்தனாரின்  மகள்  கலையரசி  சின்னையா   அவர்கள்  மிகவும் பொருத்தமான  பெயரையே  இந்நூலுக்கு  சூட்டியிருக்கிறார்  என்று நினைக்கின்றேன்.
இலங்கையில்  வெளியானபொழுது  சூட்டப்பட்ட  கவிதைப்பூம்பொழில்  என்ற  பெயரைப்பார்த்தால்  தமிழை படிப்படியாக    மறந்துகொண்டிருக்கும்  எம்மவரில்  மூத்த  தலைமுறை  " அது  என்ன  பூம்பொழில்...?"  என்று  கேட்கவும் கூடும்.
குழந்தை  மொழி  குழந்தைக்கும்  புரியும்,  பெரியவர்களுக்கும்  புரியும்.
எதிர்பாரதவிதமாக   எங்கள்  அனைவரதும்  புலப்பெயர்வு நிகழ்ந்துவிட்டது.   எங்களுக்குப்பின்னர்  புகலிட  நாட்டில்  தமிழ் உயிர்ப்புடன்  வாழுமா...?   சில   ஆய்வாளர்கள்  சொல்வது போன்று இனிவரும்  நூற்றாண்டுகளில்  அழியும்  மொழிகளில்  தமிழும்  ஒன்று  என்பது  உண்மையாகிவிடுமா...? என்ற  பதட்டம்  எங்கள் அனைவருக்கும்    இருக்கிறது.   அதனால்  தமிழர்  புகலிட  நாடுகளில் இயங்கும்    தமிழ்ச்சங்கங்கள்,   மற்றும்   தமிழ்ப்பாடசாலைகள்   எமது குழந்தைகளின்   நாவில்  தமிழ்  தவழவேண்டும்  என்பதற்காக கடுமையாக  உழைத்துக்கொண்டிருப் பதைப்பார்க்கின்றோம்.
இப்படி   ஒரு  நிலை  வரும்  என்று  வித்துவான்  வேந்தனார்  1964  இல்    கனவிலும்  நினைத்திருக்கமாட்டார்.   நாமும் நினைத்திருக்கமாட்டோம்.   வேந்தனாரின்   மகள் அவுஸ்திரேலியாவில்     தமது  தந்தையுடைய  குழந்தை இலக்கியத்தை    எங்களுக்கு  அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
இந்நூலில்    இடம்பெற்றுள்ள  சில  பாடல்கள்  மனிதநேயத்தை வளர்க்கின்றன.   சில  பாடல்கள்  கதை   சொல்கின்றன.  குயில்  பாட்டில் -  காகத்தின்  கூட்டில்  முட்டை   இடுகிறது  குயில்.  காகம் கரையும்.   குயில்  கூவும்.   காகத்தின்  கூட்டிலிருக்கும்  குயில் முட்டையிலிருந்து  வெளிவரும்  குஞ்சு  கா.. கா... என்று  கரையாது. கூவும்.    காகம்  இனம் கண்டு   கூட்டை  விட்டு  கலைத்துவிடும்.
காகக்கூட்டில்  முட்டை  இட்ட
கள்ளக்  குயிலோ  நானும்
கல்லும்   கனியக்  கூவும்   குரலைக்
காது  கொடுத்துக்கேளும்   என்று  அந்தக்குயில்  பாட்டை   முடிக்கிறார் வேந்தனார்.
இன்றும்   இலங்கையில்  மானைக்கொல்வது  சட்டப்படி  குற்றம்.
மான்  மீது  பாசம்கொள்ளுங்கள்,   அணில்களை   கூட்டில் அடைக்காதீர்கள்  -  பறவைகளை   சுதந்திரமாக  அலையவிடுங்கள் என்றெல்லாம்   குழந்தைகளுக்கு  மாத்திரமல்ல  பெரியவர்களுக்கும் சொல்கிறார்.
இதில்   இடம்பெற்றிருக்கும்  பாடல்கள்  அனைத்திற்கும்  வண்ண வண்ணப்படங்கள்    மெருகூட்டுகின்றன.   அதனால்  குழந்தைகளின் கண்ணையும்    கருத்தையும்  கவர்ந்துகொள்கின்றன.   ஓவியர்  ஷியாம் குழந்தைகளுக்காகவே   பொருத்தமான  ஓவியங்களை  வரைந்துள்ளார்.
சென்னை  மித்ர  ஆர்ட்ஸ்  கிரியேஷன்ஸ்  நேர்த்தியாக  குழந்தை மொழியை   பதிப்பித்திருக்கிறது.
கலையரசி   சின்னையா   தமது  முன்னுரையில்,   வேந்தனாரின் குழந்தைப்பாடல்கள்   எதுவித  மாற்றமும்  இன்றி  ஈழத்திலும்  மற்றும்   உலகின்  பல  நாடுகளிலும்  வாழும்  தமிழ்க்குழந்தைகளை சென்றடையவேண்டும்  என்ற  பெருவிருப்புடன்  குழந்தை   மொழியை  வெளியிட்டுள்ளார்.
எளிமையும்   ஓசைநயமும்  இப்பாடல்களில்  சிறப்பாக  அமைந்துள்ளன.
மொத்தம்  35  பாடல்கள்   இந்நூலில்  இடம்பெற்றுள்ளன.   அவற்றில்  13    பாடல்களுக்கு  இசையமைத்து  பாடப்பட்டு  குறுவிட்டில்    (Compact  Disc)     பதிவுசெய்து    அதனையும்  இந்நூலுடன் வழங்கியிருக்கிறார்.
  எனினும்   இதில்  இடம்பெற்றுள்ள  சில  பாடல்கள்  குறித்த பிரக்ஞையை  புகலிட  நாட்டில்  வளரும்  எமது தமிழ்க்குழந்தைகளுக்கு  எவ்வாறு  வழங்கப்போகின்றோம்  என்ற கேள்வியும்   நூலை   வாசிக்கும்பொழுது  எழுவது  தவிர்க்க முடியாதது. 
எமது  குழந்தைகளுக்கு  இதில்  இடம்பெற்றுள்ள   நல்லூரையும் கீரிமலையையும்    ( முக்கிய  குறிப்பு:   இப்போதுதான்  ஆமிக்காரர்கள் கீரிமலைக்கும்  மாவிட்டபுரத்துக்கும்  எம்மவர்களை அனுமதித்துள்ளார்கள்)    பண்ணைப்பாலம்,   மற்றும்  ஆறுமுகநாவலர், சேர். பொன். இராமநாதன்,    நவாலியூர்  சோமசுந்தரப்புலவர், ஆகியோரை    எவ்வாறு  அறிமுகப்படுத்தப்போகின்றோம்....?
சேர். பொன்.  இராமநாதன்  சிலை   காலிமுகத்திடலில்  சில  நாட்கள்  காகங்களின்  சரணாலயமாகி -  கறுப்புச்சிலை   எச்சங்களினால் வெள்ளையாகும்  முன்பே  அவரது    நினைவு  தினம்  வரும்போது சுத்தமாக்கி   மாலை   அணிவித்து  விடுவார்கள்.   நல்லூர்  நாவலர் மண்டபத்திற்குச் சென்றால்    அவரது  சிலையை   காண்பிக்கலாம். அவர்   வாழ்ந்த  இல்லத்தின்  ஒரு  சுவரை  தரிசிக்கலாம்.   அவர் தண்ணீர்   அள்ளிய  துலாக்கிணற்றை  காண்பிக்கலாம். சோமசுந்தரப்புலவரை     ஓவியர்  செல்லத்துரை  ஐயாவின் ஒளிப்படத்திலிருந்தும்   அதன்  சாயலில்  இந்நூலில்  வரையப்பட்டுள்ள   புலவரின்  ஓவியத்திலும்  காண்பிக்கலாம்.
 எனது   நண்பரின்   குழந்தை   யாழ்ப்பாணம்  சென்று துலாக்கிணற்றைப்பார்த்துவிட்டு   வந்து,  ஆழமான Swimming pool   என்று  சொன்னாள்.   ஆனால்    அதில்  நீந்துவதற்கு    அனுமதியில்லை என்றும்    கவலைப்பட்டாள்.
 இப்படியாக  நாம்  இந்த  நூலின்  ஊடாக  பலவற்றை   சுவாரஸ்யமாக பேசமுடியும்.   நாம்   எப்போதும்  சீரியசாகவே பேசிப் பேசிப்பழக்கப்பட்டுவிட்டோம்.    அதனால்  நாம்  இன்றும்  பதட்டத்துடன்    வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.    எமது  குழந்தைகள் குறிப்பாக   புகலிடத்தில்   பிறந்து  வளரும்  குழந்தைகள்  பதட்டம் ஏதும்    இன்றி  பரவசத்துடன்தான்  வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை   நீங்கள்  அவதானிப்பீர்கள்.
 அமரர் வேந்தனார்   தமிழ்க்குழந்தைகளுக்காக  இயற்றியுள்ள இந்தப்பாடல்களை    எந்தக்காலத்திலும்  நாம்  பாட  முடியும்.   அவர் அமரரானதுபோன்று    அவரது   பாடல்களும்    அமரத்துவமானவை.
1950  களிலிருந்து  இன்று  வரையில்  அங்கே (இலங்கையில்) குழந்தைகளின்  நாவில்  இந்நூலில்  இடம்பெற்றுள்ள  சில  பாடல்கள்  தவழ்கின்றன. என்று   கலையரசி  சின்னையா   இந்நூலின்  முன்னுரையில்  குறிப்பிட்டுள்ளார்.    அது  முற்றிலும்  உண்மை.   இனிவரும்  காலத்திலும்  இலங்கையில்   எமது   குழந்தைகளின்   நாவில்  இப்பாடல்கள்  ஆட்சி  செய்யும்  என்று   திடமாக  நம்ப முடியும். இந்நூலில்  என்னைக்கவர்ந்த  மற்றுமொரு  இனிய  அம்சம்.
எனது  இனிய  நண்பர்  இரசிகமணி  கனகசெந்திநாதன்  அவர்களது குறிப்புகளும்  இந்நூலில்  இடம்பெற்றுள்ளன.
 இந்நூல்  குழந்தைகளுக்கு  உரியதுதான்.   ஆனால்,  இதனுடன் இணைக்கப்பட்டுள்ள    இறுவட்டு  அதாவது   குறுவட்டு  அனைவரும் கேட்டு   மகிழக்கூடியது.   வீட்டிலே    கேட்க நேரம்  இல்லையென்றால் நீங்கள்    பயணிக்கும்  காரில்  போட்டு  கேட்டு  ரசித்துக்கொண்டே போகலாம்.   அருமையான  இசை.    பாடகர்களும்  சிறப்பாக பாடியிருக்கிறார்கள்.
ஆனால் -  இதனையெல்லாம்  கேட்டு  ரசிக்க  வேந்தனார் எம்மத்தியில்    இல்லை.   அவர்  எமது  தமிழ்  சந்ததிக்கு  விட்டுச்சென்ற   குழந்தை  இலக்கியம்  சாகாவரம்  பெற்றது.
                         ---0---
letchumananm@gmail.comNo comments: