இலங்கைச் செய்திகள்

.
மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க நடவடிக்கை

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

9 சந்­தேக நபர்­க­ளுக்கும் ஒரு­மாதம் தடுப்­புக்­கா­வல்

4ஆம் மாடியில் சந்­தேக நபர்கள்

அரசின் அழைப்பை ஏற்று இலங்கை வருகிறார் ஒபாமா : கிரியெல்ல

ஜனாதிபதியை சந்தித்த விமானப்படை தளபதி

வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்து : 5 பேர் காயம்

மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க நடவடிக்கை

15/06/2015 மத்திய கிழக்கு நாடுகளிலும் தென்கொரியாவிலும் பரவிவரும் மேர்ஸ் வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருகை தரும் நோயாளர்களை அடையாளம் காண்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சின் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார். 
நோய்வாய்ப்பட்டு திரும்புவோருக்கு ஐ.டி.எச் போன்ற சில வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 
மேர்ஸ் கொரோனா வைரஸ் தொற்று இலங்கையில் பரவாமலிருக்கும் வண்ணம் முன்னாயத்த பாதுகாப்பு திட்டங்களை வகுக்க தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. 

தென்கொரியாவில் மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் 07 புதிய நோயாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . 16 பேர் இந்த வைரஸினால் உயிரிழந்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 121 பேரில் 10 பேர் உடல் நலனுடன் மீள திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈட்டுக்காக விண்ணப்பிக்கலாம்

15/06/2015 யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நஷ்டஈடு பெறுவதற்காக விண்ணப்பங்களை புனர்வாழ்வு அதிகார சபைக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள நிறைவேற்று சபை தயாராகவுள்ளதாகவும் சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் என்.புவனேந்திரன் தெரிவித்தார்.

 களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் புனர்வாழ்வு அதிகார சபையினால் நடத்தப்பட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்ட பணிப்பாளரிடம் அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் சம்மந்தமாக வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
பல ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் தேக்க  நிலையில் உள்ளதுடன் அதில் பலகுறைபாடுகளும் காணப்படுகின்றன. இவற்றினை நிவர்த்தி செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.  எனவே உடனடியாக இதுவரை  விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பங்களை 49, டீ.எஸ். சேனாநாயக்க மாவத்த, பொறளை, கொழும்பு. எனும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
புதிய அரசின் கீழ் புனர்வாழ்வு அதிகார சபை புதிய நிருவாகத்துடன் செயற்பட்டு வருகின்றது. இறந்தவர்களுக்கு நஷ்டஈடு கொடுக்கும் நிறுவனமாக இயங்கிய புனர்வாழ்வு அதிகார சபையானது தற்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதற்காக பல கோணங்களில் உதவிகளை வழங்குவதற்கு முன் வந்துள்ளது. 
அந்த வகையில் சுயதொழில் வாய்ப்புக்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு விசேட உதவிகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அனாதைச் சிறுவர்களுக்கான உதவிகள், புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகளுக்கு மறுவாழ்வு அழிப்பதற்கான உதவிகள்,யுத்தத்தின்போது காயமடைந்தவர்களுக்கான உதவி தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டிருந்தால் அவற்றை புனரமைப்புச் செய்வதற்கான வங்கிக் கடன் வசதி, பாதிக்கப்பட்ட அரசாங்க உத்தியோகத்தருக்கு இரண்டரை இலட்சம் ரூபா வழங்கல் போன்ற உதவிகளை வழங்கும் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்காக எமது அமைச்சர் சுவாமி நாதன், அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜா ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.  
பாதிக்கப்பட்ட மக்கள் அனுப்பி வைத்துள்ள விண்ணப்பங்களில் பல குறைபாடுகள் காணப்படுகின்றன. இதனால் அவர்களுக்கு நஷ்டஈட்டுக் கொடுப்பனவுகள் வழங்குவதில் பலத்த சிக்கல்கள் நிலவுகின்றது. எனவே தான் குறைபாடுள்ள கோவைகளை நிவர்த்தி செய்வதற்காக கோவைகளை தலைமை காரியாலயத்தில் இருந்து விண்ணப்பதாரிகளின் காலடிக்கு கொண்டு வந்துள்ளோம். இதற்காகவே நடமாடும் சேவைகளை நடாத்தி வருகின்றோம். இதனூடாகவே பாதிக்கப்பட்டவர்களுக்குரிய நஷ்டஈடுகளை துரிதமாக வழங்கமுடியும். 
விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் பல ஆண்டுகளாகியும் விண்ணப்பதாரிகள் இன்னமும் நஷ்டஈடுகளை பெற்றுக் கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக விண்ணப்பித்தவர்களின் தொடர்புகள் இன்றி விண்ணப்பங்கள் தேக்க நிலையில் இருக்கின்றது. 
எனவே  அனைவருக்கும் எதிர்காலத்தில் அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க அதிகார சபை நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 

9 சந்­தேக நபர்­க­ளுக்கும் ஒரு­மாதம் தடுப்­புக்­கா­வல்

16/06/2015 யாழ்ப்­பா­ணம் - புங்குடுதீவு பகுதியில் பாடசாலை மாணவி வித்தியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதி மன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத் திட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் தடுப்புக் காவல் உத்தரவுக்கு அமைய இது வரை விளக்கமறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கும்படி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர் பான பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா மற்றும் வழக்குத் தொடுனர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பிலான மரணவிசாரணைகள் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன் போது கைது செய்யப்பட்ட பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (வயது 40), பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் (வயது 34), பூபா­ல­சிங்கம் தவ­குமார் (வயது 32) ,மகா­லிங்கம் சஷேந்­திரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாஷன், சிவ­தேவன் குஷாந்தன், பழனி ரூப­சிங்கம் குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன் மற்றும் சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமார் ஆகிய ஒன்பது சந்தேக நபர்களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்கள் சார்பில் எந்தவொரு சட்டத்தரணியும் பிரசன்னமாகாத நிலையில் மனுதாரரான சட்டமா அதிபர் சார்பில் சிரேஷ்ட சட்டவாதி குமார் ரத்னம் மன்றில் ஆஜரானார். அத்துடன் பாதிக்கப்பட்ட வித்தியாவின் குடும்பத்தவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவின் தலைமையில் சட்டத்தரணிகளான விஜயராணி, சுதா உள்ளிட்ட 7 பேர் ஆஜராகியிருந்தனர்.
இந் நிலையில் நேற்று வழக்கானது விசாரணைக்கு வந்த போது மரண விசாரணையில் 7 பேர் தமது சாட்சியங்களை நீதிவான் முன்னிலையில் முன்வைத்தனர்.
இதன் போது வித்தியாவின் தாயார் சரஸ்வதி, வித்தியாவின் அண்ணன் நிஸாந்தன் , உறவினரான கார்திக் , சட்ட வைத்திய அதிகாரி மயூரன் , ஊர்காவல்த்துறை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கியூ.ஆர்.பெரேரா , ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி காமினி ஜயவர்தன மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி நிஸாந்த டீ சில்வா ஆகியோரே இவ்வாறு சாட்சியமளித்தனர்.

சாட்சியங்களை சட்ட மா அதிபர் சார்பில் பிரசன்னமாகியிருந்த சட்ட வாதி குமார் ரட்னம் நெறிப்படுத்திய நிலையில், சாட்சியங்கள் நிறைவில் மேலதிக விசாரணை அறிக்கை நீதிவானுக்கு சமர்பிக்கப்பட்டது.
இதனையடுத்து வழக்குத் தொடுனர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டவாதி குமார் ரத்னம், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் சந்தேக நபர்களை விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் அதற்காக ஜனாதிபதி பாதுகப்பு அமைச்சர் என்ற ரீதியில் தடுப்புக் காவல் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கவேண்டும் எனவும் கோரினார்.
குறித்த சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் செய்துள்ள படுபாதக செயலானது இன நல்லுறவை வேண்டுமென்றே சீர்குலைக்கும் வகையிலானது எனவும் வாய் மொழி மூலம், சைகைகள், காட்சிகள் அல்லது வேறு முறைகளில் வன்முறைகளை தூண்டுவோர் தொடர்பில் இந்த சட்டப் பிரிவின் கீழ் விசாரிக்க முடியும் என்­ற நிலையில் இந்த சந்தேக நபர்கள் செய்துள்ள செயலானது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரிக்கத் தக்கதெனவும் அரச சட்ட வாதி வாததினை முன்வைத்தார்.
இந் நிலையில் நீதிவானிடம் கருத்து தெரிவித்த பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வாவும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவும் அரச சட்டவாதியின் கருத்துக்களை ஆமோதித்து கருத்து வெளிட்யிட்டனர்.
இந் நிலையிலேயே நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 30 நாட்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்துவைத்து சந்­தே­க நபர்களை விசாரிக்க நீதிவான் உத்தரவிட்டத்துடன் விசாரணை நிறைவில் அவர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி தம்முன்னால் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.
இதனைவிட குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா முன் வைத்த 5 கேள்விகள் அடங்கிய விஷேட கோரிக்கைக்கு அமைவாக இதுவரை பொலிஸார், சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் நிபுணர்கள் என அனைவரிடமும் உள்ள இந்த வழக்குடன் தொடர்பு பட்ட அனைத்து சாட்சியங்களையும் அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பிவைக்குமாறும் அங்கு வைத்து சந்தேக நபர்களுடை­ய டீ.என்.ஏ.க்களுடன் அவற்றை ஒப்பிட்டு நடவடிக்கை எடுக்கவும் நீதிவான் உத்தரவிட்டார்.
விஷேடமாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா தயார் செய்துள்ள ஐந்து கேள்விகளுக்கும் அரச இரசாய பகுப்பாய்வாளர் இந்த பரிசோதனையின் போது பதிலை பெற்றுக்கொடுக்குமாறும் நீதிவான் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந் நிலையில் ஒன்பதாவது சந்தேக நபர் சுவிஸ் குமார் தொடர்பில் கடந்த தவணை வழக்கு விசாரணையின் போது சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி.தவராசாவால் முன்வைக்கப்பட்ட விஷேட கோரிக்கைக்கு அமைவாக விசரணைகள் முன்னெடுக்கப்பட்டதா? என சட்டத்தரணி தவராசாவால் நேற்று மீண்­டும் மன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. இதனையடுத்து நீதிவானும் அது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரை வினவிய­போ­து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து செல்வதாகவும் அது தொடர்பிலான அறிக்கையை எதிர்வரும் தாவணையில் சமர்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந் நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விஷேட கோரிக்கை ஒன்றை பரிசீலித்த நீதிமன்றம் சந்தேக நபர்கள் சிலரின் வங்கிக்கணக்குகளையும் அவர்களின் உறவினர்களது என சந்தேகிக்கப்படும் மேலும் சில வங்கிக்கணக்குகளையும் சோதனைக்கு உட்படுத்துவ­தற்­கும் அனுமதியளித்தது.
சந்தேக நபர்களை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்ட நீதிமன்றம் அடுத்த கட்ட விசாரணைகளை ஜூலை மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.    நன்றி வீரகேசரி 

4ஆம் மாடியில் சந்­தேக நபர்கள்

16/06/2015 மாணவி வித்­தியா படு­கொலை சந்­தேக நபர்கள் ஒன்­ப­து­பே­ரை­யும் 30 நாள் தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசா­ரிக்க ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நேற்று அனு­மதி வழங்­கிய நிலையில் அவர்கள் ஒன்­பது பேரும் நேற்று மாலை 4.00 மணி­ய­ளவில் கொழும்­புக்கு அழைத்துச் செல்­லப்­பட்­ட­னர்.
கொழும்பு கோட்­டையில் உள்ள குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­ய­கத்­திற்கு (நான்காம் மாடி)டபிள்யூ.பீ. என்.ஏ.9960 என்ற பஸ் வண்­டி­யூ­டாக இவர்கள் கொண்டுசெல்­லப்­பட்­ட­னர். குற்றப் புல­னாய்வுப் பிரிவின் கூட்டுக்கொள்ளை மற்றும் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் பொலி­ஸாரின் பலத்த பாது­காப்­புக்கு மத்­தி­யி­லேயே இவர்கள் இவ்­வாறு கொழும்­புக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டனர்.
பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் (வயது 40), பூபா­ல­சிங்கம் ஜெய­குமார் (வயது 34), பூபா­ல­சிங்கம் தவ­குமார் (வயது 32) ,மகா­லிங்கம் சஷேந்­திரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாஷன், சிவ­தேவன் குஷாந்தன், பழனி ரூப­சிங்கம் குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன் மற்றும் சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசி­குமார் ஆகிய ஒன்­பது சந்­தேக நபர்­க­ளுமே ன்பது சந்தேக நபர்களுமே நேற்று இர­வோ­டி­ர­வா­க மன்றிலிருந்து நேராக நான்காம் மாடிக்கு மாற்றப்பட்டனர்.    நன்றி வீரகேசரி 

அரசின் அழைப்பை ஏற்று இலங்கை வருகிறார் ஒபாமா : கிரியெல்ல

16/06/2015 அமெரிக்க  ஜனாதிபதி ஒபாமா இலங்கை வருகின்றார், இதற்கான அரசாங்கத்தின் அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டுள்ளாரென தெரிவித்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அரசாங்கத்தின் நல்லாட்சியை சர்வதேச சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பிட்டகோட்டையிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 

அரசாங்கம் சர்வதேச நாடுகளுடன் நல்லுறவை பேணவில்லையென்றும், பல நாடுகள் அரசாங்கத்துடன் எந்த விதமான தொடர்பாடுகளையும் கொண்டிருக்கவில்லையென்றும் எதிர்க்கட்சி அரசின் மீது குற்றம் சுமத்துகிறது.
ஆனால் இக்குற்றச் சாட்டுக்களில் எவ்விதமான உண்மையும் கிடையாது. கடந்த ஆட்சியாளர்கள்தான் சர்வதேச சமூகத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டு இலங்கையை தனிமைப்படுத்தியிருந்தனர்.
ஆனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் வெளிநாடுகளுடனான நட்புறவு மேம்பட்டுள்ளது. 
அமெரிக்கா ஜனாதிபதி  பராக் ஒபாமா இவ்வருட இறுதியில் இலங்கை வருகின்றார். இதற்கான இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஒபாமா ஏற்றுக் கொண்டுள்ளார்.
இது அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும். ஒபாமா மட்டுமல்ல பல சர்வதேச தலைவர்கள் இலங்கை வருவதற்காக வரிசையில் நிற்கின்றனர்.
எமது அரசாங்கத்தையும் நல்லாட்சியையும் சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் காரணமாகவே உலகின் மத்தியில் எமது நாடு இன்று தலை நிமிர்ந்துள்ளது என்றும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல  மேலும் தெரிவித்தார்.   நன்றி வீரகேசரி 


ஜனாதிபதியை சந்தித்த விமானப்படை தளபதி

17/06/2015 புதிய விமானப்படை தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்ற ஏயார்  மார்ஷல் ககன் புளத்சிங்கள  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு இன்று ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளது.
ஏயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள இலங்கையின் 15 ஆவது விமானப்படைத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்று கொண்டதை  நினைவூட்டும் வகையில் ஜனாதிபதிக்கு ஞாபகசின்னமொன்றை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.நன்றி வீரகேசரி

வேலையில்லா பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம்

17/06/2015 வேலையில்லா பட்டதாரிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
பின்னர் ஆர்ப்பாட்ட பேரணி  கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நிதி அமைச்சை நோக்கி சென்றமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 


ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்க்கு சொந்தமான விமானம் விபத்து : 5 பேர் காயம்

18/06/2015 பாரிஸிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்க்கு  
சொந்தமான UL 564 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 5 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானத்தில் 193 பயணிகளும் 16 விமான ஊழியர்களும் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 

No comments: