கர்மயோகம் - ச.அனுக்ரஹா

.
தாத்தா திரும்பிப் படுத்துக்கொண்டார். பழைய இரும்பு கட்டில் தடதடத்தது. கட்டில் அருகில் ஜன்னல் வெளுத்துக்கொண்டிருந்தது. மணி ஏழாகியிருக்க வேண்டும். சரியான நேரத்தில்தான் விழித்துக்கொண்டார். படுக்கையறையிலிருந்து நேராக வீட்டுவாசல் தெரிந்தது. கதவு சற்று திறந்திருந்தது. கமலம்தான் வெளியே சென்றிருப்பாள். எப்போதும் கதவைத் திறந்தபடியே எங்கேயாவது சென்றுவிடுவாள். ஒரு கணம் அவருக்கு பயமாக இருந்தது. எங்கே போயிருப்பாள். அபார்ட்டுமெண்டு வாசலில் குப்பைகொட்ட சென்றிருக்கலாம். இல்லை, வாட்ச்மேன் பெண்டாட்டியோடு ஏதாவது பேசிக்கொண்டிருப்பாளாக இருக்கும். படுக்கைக்கெதிரே நின்றுகொண்டிருந்த பழைய விசிறிக்கு மேல் புது காலண்டர் தொங்கிக்கொண்டிருந்தது. நேற்று படுக்க செல்லும் முன்னேயே தேதி கிழித்துவிட்டார். இன்று அவரது பிறந்தநாள். எண்பத்தொன்பது ஆகிறது. எண்பத்தொன்பது, அவர் குழந்தையாக இருந்தபோது, மதுரை அக்ரஹாரத்தில் அவரது பாட்டியின் வயது. முக்காடு போட்டுக்கொண்டு தெருவை வேடிக்கைப்பார்த்தபடி திண்ணையில் அமர்ந்திருப்பாள். எப்போதும் அவள் அங்கேதான் இருந்தாள். யார் அவளுடன் பேசினார்கள்? எப்போது சாப்பிட்டாள்? ஆனால், அவள் காலை நீட்டிக்கொண்டு முழங்காலை நீவியபடி அமர்ந்திருந்தது மட்டும் நினைவிலிருந்தது.


வயது எண்பத்தொன்பது ஆகும் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. சிறுவனாக இருந்தபோதே சொத்து பாகம் பிரிந்து, கிட்டதட்ட அனாதையாகதான் வளர்ந்தார். அம்மா இளம் விதவை. முக்காடு போட்டதும் ஒரு வகையில் துறவு கொண்டதுபோல தேசாந்திரியாகிவிட்டாள். வளர்ந்த அண்ணன்கள். கல்லூரி நூலகம்தான் வீடுபோல அமைந்தது. எப்போதும் புத்தகங்களுக்கு நடுவில். உலக சண்டைகளும் அரசியல்களும் நிதர்சனத்தை எவ்வளவு மறைத்துவிட்டன! நூலகத்தில் பணிபுரிந்த காலம்தான் அவர் வாழ்வில் மிகவும் சுதந்திரமான காலம். கதைகளுக்குள் ஒளிந்துகொண்டுவிடலாம். திரும்பிப் பார்க்கையில் அவர் வாழ்க்கையே ஒரு பெரிய நாவலாக வளர்ந்துவிட்டிருந்தது. முதல் திருமணம், குழந்தை, குழந்தை பெற்றெடுத்ததும் மனைவி இறந்துவிட்டாள். இன்னொரு மணம், இன்னும் மூன்று பிள்ளைகள். மதராஸுக்கு வந்தது, இந்த அபார்ட்மெண்டு ஃபிளாட்டு வாங்கியது, குழந்தைகளெல்லாம் படித்து திருமணமாகி சென்றது. தான் எழுதிய நாவலின் கதாபாத்திரங்கள் தன் நாவலைவிட்டு தாமாக சென்றுவிட்டதுபோன்ற வெறுமை.
ஒருக்களித்து படுத்ததில், கை அசைக்கமுடியாமல் போனது. மெதுவாக தூக்க முயன்றார். நகரவில்லை. உணர்ச்சியேயில்லை. திடீரென ஒரு பயம். “கமலம்..ஏ..கமலம்.. எங்கே போயிட்ட…”. பாட்டி எதுவுமே நடக்காததுபோல, ஏதோ சுலோகத்தை முணுமுணுத்தவாறே உள்ளே நுழைந்தாள். அவர் மீண்டும், “எங்கே போனே நீ…சொல்லிக்காம கொள்ளிக்காம எங்கயாவது போக வேண்டியது..எத்தன நேரமா கூப்டுண்டு இருக்கேன்”. பாட்டி, சட்டென்று சுலோகத்தை நிறுத்தி, ‘அய்யய்யய..இங்கேத்தான போனேன்..ஏன் இப்படி பிராணன வாங்கறேள்..எழுந்து மொகத்த அலம்பிண்டு வாங்கோ..காபி போட்டு வச்சிருக்கேன்..”.சட்டென கையை ஒரே வீசாக வீசி எழுந்து உட்கார்ந்து வேஷ்டியை சரி செய்துகொண்டார். ஃபேன் காற்றில் காலண்டர் தேதி காகிதம் பறந்தது. அதையே சில நிமிடம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். “ஏ கமலம்..இங்க வா இந்த ஃபேனக் கொஞ்சம் அணை..நான் பாத்ரூம் போய்ட்டு வந்திடறேன்..”
பாட்டி, கையில் ஒரு பாத்திரத்துடன், அமைதியாக வந்து ஃபேனை அணைத்துவிட்டு சென்றாள். “போய்ட்டு வாங்கோ..எண்ண காச்சி வச்சிருக்கேன்”. கட்டிலைத் தழுவியபடி எழுந்து பக்கத்திலிருந்து பாத்ரூமுக்கு சென்றார். மீண்டும் எண்ணங்கள்தான், சுழன்று சுழன்று வந்தபடியிருந்தன. தான் வருந்தி உழைத்தது. மௌண்டு ரொடிலிருந்து பஸ்ஸில் தொங்கிக்கொண்டு வீடு வந்துசேருவார். பெரியவள் கல்லூரியிலிருந்து வர சிறிது தாமதமானாலும், தெருக்கோடி பிள்ளையாருக்கு ஒரு தேங்காய் உடைப்பு. இரு பெண்களைத் திருமணம் செய்துகொடுத்திருக்கிறார். யாரும் வந்து அவரைப் பார்ப்பதில்லை. பிள்ளைகளோ வெளி நாடு சென்றாகிவிட்டது. பேரன் பேத்தியுடன் வெளியே சென்று வர அவருக்கும் ஆசைதான். முதல்மாடி கணேசன் தினமும் பேரப்பிள்ளைகளுடன்தான் கோவிலுக்கு வருவார். அவர் மகள் அவருக்கு செல்ஃபோன் வாங்கி தந்திருந்தாள். அவர் மட்டும் என்ன குறை வைத்தார். அவர் கடமையை சரியாகதானே செய்துமுடித்தார். தனக்கு மட்டும் ஏன் எல்லோரைப்போலவும் மகிழ்ச்சியான குடும்பம் அமையவில்லை. யோசித்துக்கொண்டே அரைமணி நேரமாகிவிட்டது. பாட்டி உள்ளிலிருந்து கத்தினாள். எப்போதும்போல, வந்த காரியம் மறந்துபோய், யோசனையில் மூழ்கிவிட்டார். மனது கொஞ்சம் லேசான மாதிரி இருந்தது. கால் கழுவிக்கொண்டு வெளியே சென்றார்.
old+kitchen
கூடத்து பிளாஸ்டிக் மேஜையில் காபி தம்பிளாரும் டவராவும் இருந்தது. நல்ல ஃபில்டர் காபி. சற்றே கூன் விழுந்திருந்தது அவருக்கு. மெதுவாக, படுக்கையறை கதவைப் பிடித்தவாறு கூடத்து நாற்காலியில் வந்து அமர்ந்தார். மேஜை இன்னும் தள்ளியிருந்தது. “அட ராமா” என்றவாறு மீண்டும் நாற்காலியைத் தள்ளிக்கொண்டு மேஜை அருகே சென்றார். மெதுவாக காபி டவராவை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டார். சூடு இதமாக இருந்தது. இன்னும் நெற்றியில் கன்னத்தில். பின் ஒரு ஆத்து ஆத்திவிட்டு, கையில் டவராவுடன் மௌனமானார். எதைப் பற்றி யோசிப்பது. உள்ளங்கால் அரிப்பதுபோல இருந்தது. குனிந்து பார்த்துக்கொண்டார். சில நாட்களாகவே கையும் மரத்துப்போகிறது. இடது கையை தூக்கவே முடிவதில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு. எதற்கும் சாயங்காலம் ஒரு நடை டாக்டரைப் பார்த்துவிட்டு வரவேண்டும். இப்போதே டோக்கன் வாங்கி வைத்தால்தான் உண்டு. ஃபேன் காற்றில் காபி ஆறிபோயிருந்தது. “ஏ கமலம்..இப்படி வா..இத கொஞ்சம் சூடு பண்ணி கொண்டுவா..”. “ராமா ராமா ராமா” என்றவாரே பாடி வந்தாள். சரியாக இந்த நேரத்தில் இப்படியொரு கோரிக்கையை எதிர்ப்பார்த்தவள் போல வந்து காபி டவராவை எடுத்து சமையல் கட்டுக்கு சென்றாள்.
தாத்தா, மெதுவாக எழுந்தவர், வாசலில் போட்டிருந்த ‘ஈஸி சேரில்’ போய் அமர்ந்தார். வாட்ச்மேன் அன்றைய தின நாளிதழை அவருக்காக எடுத்துவந்து தந்தான். மாடி வீட்டு கணேசன் காலை காய்கறியும் பாலும் வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்தார். தாத்தா மெல்ல எழுந்தமாதிரி உட்கார்ந்தார். கணேசன், “என்ன சார்..சொளக்கியமா..காபி ஆச்சா?”. “குட் மார்னிங்க் கணேசன். ஹாஹா..ஆமாம், மார்னிங்க் காஃபிக்குத்தான் வெயிட்டிங்க். அப்படியே காத்தாட பேப்பர் படிக்கலாம்னு வந்தேன்.” “யெஸ் யெஸ்..கேரி ஆன்..பொண்ணு ஊர்லேந்து வந்திருக்கா..அதான் போயிண்டே இருக்கேன்..அப்போ பாப்போம்..நமஸ்காரம்” என்று சொல்லி துள்ளி குதித்து சென்றார்.
பாட்டி கையில் சுட வைத்த காபியுடன் வந்துகொண்டிருந்தாள். வரும் வழியில் கணேசன் வீட்டு மாமிதான், என்னவோ மெதுவாக பேசிக்கொண்டிருந்தாள். பாட்டி மிகவும் அனுசரணையாக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, “என்னமா பண்றது.. தெய்வத்ததான் நம்பணும்.. வெள்ளிக்கெழம தவராம போய் அம்மனுக்கு நெய் தீபம் ஏத்து..எல்லாம் செரியாயிடும். சாயந்திரம் ஆத்துக்கு வா, வெத்தல பாக்கு பழம் வாங்கிண்டு போ..” மாமியும் முந்தானையில் கண்ணைத் துடைத்துக்கொண்டு படியேறி சென்றாள். தாத்தா எல்லாவற்றையும் பார்த்தவாறே பொறுமையின்றி காத்திருந்தார். காபி வந்ததும் மீண்டும் கண்களில் ஒற்றி கொண்டார். “என்ன இது சூடு பத்தலயே..”. பாட்டி, “அட என்ன..இப்பத்தானே சூடு பண்ணினேன்..இங்க கொண்டாங்கோ” என மீண்டும் உள்ளே கொண்டுபோனாள்.
காபி பலகாரம் முடிந்ததும் தாத்தா வீட்டிற்குள் நுழைந்தார். பாட்டி காய்ச்சிய எண்ணையைக்கொண்டு வந்தாள். எண்ணைக் கிண்ணத்தைப் பார்க்காமலேயே தாத்தா, “மிளகு சீரகம் போட்டு காய்ச்சினயா? எண்ண ரொம்ப சூடா இருக்கா? நல்லெண்ணதானே?” என்று கிண்ணியைக் கையில் வாங்கினார். தலையெல்லாம் வழுக்கை. கோழிமுட்டைத் தலை தாத்தா என்று தன்னை யாரோ அழைத்தது நினைவிற்கு வந்து சிரித்துக்கொண்டார். கிண்ணத்தை வாங்கியதும், “ஏ கமலம்..இங்க வா…”. பாட்டி, “என்ன வேணும் இப்போ..”. “எதுக்கு இத்தனை மொளகு இதுல…விக்கற வெல வாசிக்கு..எத்தனை மொளகு போட்டு வச்சிருக்க இதுல.. இங்க வா..இன்னொரு கிண்ணி கொண்டுவா..”. “அய்யய்யோ..இந்த இந்த கெழம் என்ன கேள்வி கேட்டே கொண்ணுடும்” என்று முணுமுணுத்தபடி பாட்டி கிண்ணியை அவர் கையிலிருந்து பிடிங்கி சென்றாள். பிடிங்கிய வேகத்தில் தரையில் இரண்டு சொட்டு எண்ணை சிதறியது. “அட ஆண்டவா..கீழெல்லாம் சிந்தறது..அந்த துணிய கொண்டு வா மொதல்ல..இத தொட..” பாட்டி சுலோகத்தை சொல்லியபடியே எண்ணைக் கிண்ணத்தை மீண்டும் கொண்டு வந்தாள். அப்படியே காலோடு ஒரு மிதியடி. “ஏய் அத அப்படி இழுக்காதே..எல்லா எடத்துலயும் ஈஷறது… ” பாட்டி, காதில் எதுவும் விழாததுபோல, குனிந்து எண்ணையைத் துடைத்துவிட்டு சென்றாள். சாப்பிடுவதற்கு முன் சாப்பிடவேண்டிய மாத்திரைகளையெல்லாம் தான் சாப்பிட்டுவிட்டு, தாத்தாவுக்கும் இரண்டு தந்தாள்.
தலையில் எண்ணெய் தேய்த்துக்கொண்டவர், “இன்னிக்கு…” என்று இழுத்தவாரே “..ஓமப்பொடி பண்ணேன்..” என்றார். உள்ளிருந்து பதிலேதும் இல்லை. “கேட்கறியா..” என்று தொண்டையைக் கனைத்துக்கொண்டு மீண்டும் “ஓமப்போடி பண்ணலாமேன்னேன்..”. “நீங்க போய் குளிச்சிட்டு வரேளா கொஞ்சம்…”. பின் தனக்குத்தானே, “நன்னா கேட்கறது..போனதடவ ஓமப்பொடி பண்ணு பண்ணுனு சாப்டுட்டு தலையச்சுத்தி இருக்கறவாளேல்லாம் பயமுறுத்தியாச்சு..” என்று சொல்லிக்கொண்டாள். அவருக்கு இன்றைக்கு பிறந்த நாள் என்று பாட்டிக்கு நினைவிருந்தது. கம்மியாக வெல்லம் போட்டு பாயசம் செய்துகொண்டிருந்தாள். வீட்டில் வெத்தலை பாக்கு வைத்து தர இரண்டு சுமங்கலிகளையும் அழைத்திருந்தாள். காலையில் எழுந்து தலைக்கு குளித்து கோயில் போய் அர்ச்சனையும் செய்துவந்திருந்தாள். பாட்டி, நாள் கிழமைகளையும் பிறருடைய பிறந்த நாள் கல்யாணங்களையும் மறப்பதே இல்லை. அவளுக்கு உள்ளேயே ஒரு காலண்டர் ஓடிக்கொண்டே இருந்தது.
தாத்தா குளித்து வந்து நேராக சாமியறைக்கு சென்றார். அவருக்கென்று அங்கு சிறு முக்காலி போடபட்டிருந்தது. இப்போதெல்லாம் கீழே அமர்ந்து பூஜை செய்ய முடிவதில்லை. சாமி அலமாரியை ஒரு முறை பார்வையிட்டார். “ஏ கமலம்..இந்த வெளக்க தேய்ச்சு வச்சியா.. இந்த பூவெல்லாம் எடுக்கவே இல்லையே….இங்க வா..இத கொஞ்சம் நன்னா தொட”. “என்னத்த நொய் நொய்ன்னுட்டு..தொடச்சுத்தானே வச்சேன்..” என்று வந்த பாட்டி வாடிய பூக்களை அள்ளிக்கொண்டு சென்றாள். தாத்தா மெதுவாக ஜபம் செய்ய தொடங்கினார். அதற்குள் பாட்டி, ஒவ்வொருவராக ஃபோனில் கூப்பிட்டு நலம் விசாரித்துக்கொண்டிருந்தாள். ஜபம் செய்துகொண்டிருந்தவர் காதெல்லாம் அங்கேயே இருந்தது. யாராவது தம்மைக் கூப்பிடுவார்களா என பார்த்துக்கொண்டே இருந்தார். பாட்டியோ, இரண்டு வார்த்தைகளில் எல்லோருடைய க்ஷேம நலன்களையும் விசாரித்து முடித்துவிட்டாள். “என்னம்மா..சௌக்கியமா..கொழந்த என்ன பண்ரா..சரி ரைட்டு.. இன்னிக்கு என்ன சமச்ச..சரி அடுப்புல கொதிக்கறது..நான் ஃபோன வைக்கறேன்.”. அவ்வளவுதான்.
தாத்தா பூஜையை முடித்துக்கொண்டுவர மதியமாகிவிட்டது. குழைந்த சாதம், கீரை மசியல், பாயசம். தாத்தா, பாயசத்தை விரும்பி சாப்பிட்டார். பின், மதிய நேர தூக்கம். இருவரும் ஃபேனை முழு வேகத்தில் வைத்துக்கொண்டு தூங்கினார்கள். தாத்தா கண்முழித்தபோது, பாட்டி ஏற்கெனவே எழுந்து காபி போட்டுக்கொண்டிருந்தாள். அவர் தூக்கம் கலைந்து காபியை எடுத்துக்கொள்வதற்குள் அது மீண்டும் ஆறிப்போயிருந்தது. மாடி கணேசன் வீட்டு மாமி வந்தாள். “நமஸ்காரம் மாமா”. தாத்தா, இன்னும் தூக்க கலக்கத்தில் உட்கார்ந்திருந்தார். கையில் காபி ஆறிப்போய் கொண்டிருந்தது. பாட்டி, வெற்றிலை பாக்கும், ஒரு புதிய புடவையும் எடுத்துக்கொண்டு வந்தாள். தாத்தா, பாட்டியைக் கண்டதும் “ஏ கமலம்..இது ஆறிப்போய்டுத்து பாரு..கொஞ்சம் சூடு பண்ணி கொண்டுவா..” என்றார். “செத்த இருங்கோளேன்..அன்பே இல்லாத மனுஷன்… என்னத்தப்பண்றது.. அவாவாளுக்கு அவாவா வாழ்க்க.. எப்ப பார்த்தாலும் தான் தான் தான்..”. கணேசன் மாமி, மெதுவாக புன்னகைத்தவளாய், பாட்டி காலில் விழுந்து வெற்றிலை பாக்கு புடவையை வாங்கிக்கொண்டாள். “நன்னா..க்ஷேமமா இருடியம்மா.. கொழந்தைக்கு ஒன்னுமாகாது..கவலப்படாதே..” என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள்.
வீட்டுக்கு வந்தவர் வெளியே சென்றதும் தாத்தா தூக்கம் கலைந்தவராய்..”இப்ப வேறாள் முன்னாடி என்னத்துக்கு அப்படி கத்தணுங்கறேன்….” என்று பேசிக்கொண்டே இருந்தார். பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. பாட்டி விளக்கேற்றிவிட்டு, சமைலறைக்குள் அடைந்தாள். மீண்டும் சாப்பாடு. இருவரும் சேர்ந்து தொலைகாட்சியில் செய்திகள் பார்த்தார்கள். தாத்தாவிற்கு கட்டிலில் படுக்கையை விரித்துவிட்டு, கீழே தனக்கு பாய் விரித்துக்கொண்டாள், பாட்டி. தாத்தா, “மீனாக்ஷி தாயே காப்பாத்து” என்றவாறு மெதுவாக கட்டிலில் சாய்ந்தார். தூக்கம் இன்னும் தொலைவில் வந்துகொண்டிருந்தது. கட்டிலுக்கு நேராக நின்றுகொண்டே ஃபேன் ஓடிக்கொண்டிருந்தது. அதனருகே அலமாரியில் குழந்தைகள் என்றோ விட்டு சென்ற பவுடர் டப்பாக்களும், செண்டு புட்டிகளும்.
பாட்டி, “பகவானே..இவர நல்லபடியா அனுப்பி வச்சுட்டு நானும் போய் சேரணும்” என்றபடி போர்வையை இழுத்துக்கொண்டாள். நாளை எப்போதும்போல ஆறு மணிக்கு எழுந்துவிடுவாள்.

No comments: