தில்லை என்னும் திருத்தலம் - அன்பு ஜெயா

.


தில்லை என்னும் திருத்தலம்
- அன்பு ஜெயா
சிதம்பரத்தின் ஆன்மீக, அணுவியல், கலை அம்சங்களை உலகுணரச் செய்யும் நூல் க. நீலகண்டன் . கொழும்பு இந்து மாமன்றம், பாராட்டு.
ஆஸ்திரேலிய வழக்குரைஞரும், தமிழ் அவுஸ்திரேலியன் ஆசிரியர் கலாநிதி சந்திரிகா சுப்ரமண்யன் எழுதியுள்ளதில்லை என்னும் திருத்தலம்”நூல் வெளியீடு, சிதம்பரம் குடமுழுக்கை ஒட்டி, இறைவன் திரு உளம் கொண்டருளி, மே மாதம் முதலாம் தேதி சிதம்பரத்தில் நடைபெற்றது. இந் நூலை தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி சிதம்பரத்தில் தருமை ஆதீன மடத்தில் மக்கள் முன்னிலையில் வெளியிட்டுள்ளார். மலேசியா திருப்பீடம், தவத்திரு பால யோகி சுவாமிகளின் ஆசியுரையுடன் வெளியிடப்பட்டது. சென்னை, கண்ணதாசன் பதிப்பகம் அச்சிட்டு முதல் பிரதி இரண்டாயிரம் பிரதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்து ஐந்நூறு பிரதிகள் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நூலில் பன்னிரு திருமுறைகளைக் குறிக்கும் முகமாக பன்னிரெண்டு அத்தியாயங்கள் உள்ளடக்கமாகி உள்ளன.தில்லை தலவரலாறு, மூர்த்தி சிறப்பு, தீர்த்த விசேடம் தவிரஅணுவியலும் ஆடல் வல்லானும்என்ற சிறப்புத் தலைப்பும், ஆடற்கலையும் ஆனந்தக் கூத்தனும் என்ற தலைப்பில் நூற்றெட்டுக் கரணங்கள் குறித்து படங்களுடன் குறிப்புக்கள் எழுதப்பட்டு உள்ளது. 16 பக்க வண்ணப்படங்களுடன் சிதம்பரம் தொடர்பான அனைத்துத் தகவல்களும் ஒரே இடத்தில் காணக் கூடியதாக உள்ளது

தருமை ஆதீன அருளுரை:
தில்லை உலகத்திற்கு இருதய ஸ்தானமாக விளங்குகிறது. பஞ்ச பூதத் தலங்களில் ஆகாயத் தலம், பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும் விளங்குகிறது. அறுபத்தி மூன்று நாயன்மார்களில் திருநீலகண்ட குயவனார் அவதரித்தத் தலம். தியாகராஜ பெருமான் திருவாக்கினால் தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கு அடியேன் என்று தில்லையில் பூசிக்கின்ற மூவாயிரவருடைய சிறப்பை உலகுக்குக் காட்டியாதாகவும், மனித உடலோடு ஒட்டி அமைந்திருக்கின்ற தில்லைக் கோயிலுக்குள்ளே உள்ள பொற்சபையையும், ஐந்து சபைகள் பற்றிய சிறப்பினையும் பற்றி பல நுணுக்கமான விடயங்களையும், அநுபவ மொழிகளையும் ஆன்றோர் சான்றுகளையும் மிக அழகாகவும், ஒழுங்குபடவும் பாராட்டுதற்குரிய வகையில் ஆஸ்திரேலியா வழக்குரைஞர் டாக்டர் சந்திரிகா சுப்ரமண்யன் மிகவும் சிறப்பாக வழங்கியுள்ளார்கள். என்று சிதம்பரம் தருமை ஆதீன தம்பிரான் மௌனகுரு சுவாமிகள் அருளுரை வழங்கி உள்ளார்.


திருப்பீடம் பால யோகி சுவாமிகள் ஆசியுரை:
சைவ சமயத்தில் கோவில் என்றாலே அது சிதம்பரம் தான்.உலகில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் நித்தமும் இங்கு வந்து கூடி எம்பெருமானைச் சாருகிறது என்கிறது ஆகமம். ஆஸ்திரேலியாவில் இருந்து சட்டத்துறையிலும், சமயம், தமிழ் இலக்கியம், இசைத்துறை, ஆய்வுகள், இசைத் திறன்கள், ஊடகத்துறை என பல துறைகளிலும் மேன்மைப் பெற்று விளங்கும் டாக்டர் திருமதி சந்திரிகா சுப்பிரமணியத்தின் தில்லை என்னும் திருத்தலம் என்ற இந்நூல் வாசிப்போரை சிந்திக்கத் தூண்டும்.என்று பால யோகி சுவாமிகள் ஆசியுரை வழங்கி உள்ளார்.

கண்ணதாசன் பதிப்பகம் பதிப்புரை
ஆன்மீக நூல்கள் முழுமையாகவும், அத்திருத்தலத்திற்கு என்று போவோம் என்கிற வேட்கையையும் தூண்டுவதாக இருக்கவேண்டும். எனது சகோதரி சந்திரிகா சுப்ரமணியன் எழுதிய தில்லை என்னும் திருத்தலம்” என்ற நூலின் பயன் இதுதான். எனது சகோதரியின் மீதும், எழுத்தின் மீதும் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. என்று கண்ணதாசன் பதிப்பகம் சார்பில் கண்ணதாசன் மகன், காந்தி கண்ணதாசன் பாராட்டி உள்ளார்.

ஆசிரியரின் முன்னுரை:
நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத்துள்ளே
நாயினுக்குத் தவிசு இட்டு நாயினேற்கே
காட்டாதன எல்லாம் காட்டிப் பின்னும்
கேளாதன எல்லாம் கேட்பித்து என்னை
மீட்டேயும் பிறவாமல் காத்து ஆட்கொண்டான் - என்று திருவாசகத் தேன் சொன்னது போல எத்தனையோ பேர் இருக்க என்னைத் தேர்ந்தெடுத்து எனக்கு அறிவித்து, நான் அறிந்ததை உலகறியச் சொல்லவைத்த தில்லைக் கூத்தனின் திருவருளை என் சொல்வது? என்ற ஆசிரியரின் என்னுரை அவரது ஆன்மீகப் பற்றையும் எழுத்தின் ஆழத்தையும் புலப்படுத்துகிறது.

நூலின் உள்ளே:
சிவ வடிவம் அருவுருவ ஸ்படிக லிங்க வடிவமாக, அருவமாக ஆகாய வடிவிலும் சிவன் ஆடும் திருக்கோலத்தில் நடனமாடும் நிலையில் உருவ வடிவிலும் இத்திருக்கோயிலில் காட்சி தருகிறார்.
வளரும் முருகன் - அறுபது ஆண்டுகளாக அழகிய உருவமாக கம்பத்தமர் கந்தன் வளர்ந்து வருவது சிதம்பரத்து அதிசயமே.
பாலுக்கு அழுத உபமன்யு என்ற பாலகனுக்குச் சிவபெருமான் தெய்வத்தன்மை வாய்ந்த பாற்கடலையே வரவழைத்து உணவாக ஊட்டினார்.
சிதம்பர ரகசியம்’ - விளக்கம்
நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற திருக் கோலம் காஸ்மிக் நடனம் (cosmic dance) என்று பல ஆய்வுகளால் கருதப்படுகிறது. மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கிறது சிதம்பரம் கோயில்.
பஞ்ச பூதங்களான ஐந்து இயற்கை அம்சங்களில், வானைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், புவியைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஆகிய மூன்றும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 பாகை,  41 கலை கிழக்கில் தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது. கோடானுகோடி அணுக்கள் வினாடிக்கு வினாடி உருவாகி, மறைவதுதான் பிரபஞ்சத்தின் நடனம் (cosmic dance). அதுவே தான் நடராஜரின் நடனமும் ஆகும் என்றார் காப்ரா.
ஐன்ஸ்டீன், சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் போன்ற பிரபல அறிவியல் நிபுணர்கள், அத்வைத சித்தாந்தத்திற்கு ஒத்த அறிவியல் சித்தாந்தங்களைக் கொணடிருந்தனர்
விஞ்ஞானமும் மெய்ஞானமும் இணையும் ஒரு புள்ளியாக அணு தத்துவம் உள்ளது.அணுவின் அசைவை ஆனந்தக் கூத்தனும், அறிவியில் ஆய்வுகளும் பிரதிபலிப்பது அற்புதம்.

நூற்றெட்டுத் தாண்டவம் :
சிவனார் உடலை வளைத்து ஆடிய நூற்றெட்டு கரணங்களையும் சிதம்பரம் திருகோயிலில் கிழக்கு ராஜகோபுரம் வழியில் உள்ளது.

ஆசிரியர் பற்றி:
இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் ஆய்வுப்பட்டம் பெற்று சுமார் முப்பது ஆண்டு காலத்துக்கு மேலாக பத்திரிகை, வானொலி, தொலைகாட்சி துறைகளில் பணியாற்றியவர் .ஆஸ்திரேலியாவில் சட்டத்துறை இளம், முது கலை ஆய்வுப் பட்டங்கள் பெற்று தற்போது சிட்னியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிபுரிகிறார்.
ஆஸ்திரேலிய தமிழ் மாத இதழ் “தமிழ் அவுஸ்திரேலியனின்” ஆசிரியர் பொறுப்பில் இருக்கிறார். பதிப்புத் துறையில் கணினியை பயன் படுத்துவது தொடர்பாக ஜப்பானில் நடத்திய சர்வதேச பயிற்சிப் பட்டறையில் யுனெஸ்கோ புலமைப் பரிசிலும், பயிற்சியும் பெற்றுள்ளார். கணினித் துறையில் மைக்ரோசொஃப்ட் மென்பொருள் திறமையாளர் மற்றும் பயிற்சியாளர் அங்கீகாரம் பெற்று பணியாற்றி உள்ளார்.
சென்னை, மதுரை, மற்றும் இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இதழியல் கற்பித்தவர். தற்போது மேற்கு சிட்னி, பெடெரேசன் பல்கலைக் கழகங்களில் சட்டம் கற்பிக்கிறார். பத்துக்கும் மேலான நூல்களை எழுதி இருக்கிறார்.அவற்றுள் மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் என்ற நூலுக்கு தமிழக அரசின் சிறந்த நூல்களுக்கான விருது 1987இல் கிடைத்து உள்ளது. சிட்னி முருகனின் மீது இவர் எழுதிய திருப்பள்ளி எழுச்சி முதலாகத் தொடங்கி தாலாட்டில் முடியும் ஏழு பாடல்கள் இசைத் தட்டாக வெளிவந்துள்ளன.
2004இல் மனித உரிமைகள் தொடர்பான சட்டத்துறை ஆய்வுக்காக பட்டர்வேர்த் விருது கிட்டியது. தவிர சட்ட பணிக்காக மூன்று உயர் ஆஸ்திரேலிய விருதுகள் கிட்டியுள்ளன.
·        Woman of the West Commended Award 2012 University of Western Sydney
·        Highly commended Award 2011 – Women Lawyers Association
·        Nominee 2009 Justice Medal

ஆசிரியரின் பிற நூல்கள்
·        மக்கள் தொடர்பு சாதனமும் மகளிரும் 1987 – சிறந்த நூல்களுக்கான தமிழக அரசின் இரண்டாம் பரிசு -1988
·        இன்றைய இதழியல்
·        அபிவிருத்தி இதழியல்
·        தென்னகத் திருக்கோயில்கள்
·        இலங்கைத் தெனாலிராமன் கதைகள்
·        கற்பக விநாயகர்
·        சிறுவர்களுக்குக் கணினி
·        சூரிய நமஸ்காரம்
·        இந்திய ரஷ்ய உறவு ஒரு பார்வை
·        பெருமைக்குரிய பெண்கள்
·        முதல் மொழி தமிழ் - Mother Tongue Tamil – Bilingual
விரைவில் யாழ், கொழும்பு நகரங்களில் வெளியிட கொழும்பு இந்து மாமன்றம் முன் வந்துள்ளது.


No comments: