கீரை வகைகள்

.
     கீரை வகைகள்


குப்பைமேனிக்கீரை

  குப்பை மேட்டிலும், வழியோரங்களிலும், தோட்டங்களிலும் மானாவாரியாக வளர்ந்திருப்பதை காணலாம். பெரும்பாலும் சமையலுக்கு பயன்படுவதில்லை. கலவைக்கீரையில் சிறிதளவு இக்கீரையை சேர்ப்பார்கள்.
சரும வியாதிகள் நீங்க :

  பலருக்கு தோலில் சொறி, சிரங்கு, புண் போன்றவைகளால் வடுவடுவாய் கறுத்து தேகம் அழகற்று காணப்படும். இப்படிப்பட்டவர்கள் விலையுயர்ந்த லோஷன்களை தடவியும் தோல் பழைய நிலைக்கு வருவதில்லை.



  குப்பைமேனிக் கீரையை தேவையான அளவு எடுத்து அதனோடு மஞ்சள், உப்பு சேர்த்து மைபோல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வரவேண்டும். ஒரு மாதத்திற்கு விடாமல் இப்படி செய்து வந்தால், தோல் நோய்கள் பாதிக்கப்பட்ட தோல் சுத்தமாகி அழகு பெற்றதாக மாறிவிடும்.
மலக்கட்டு நீங்க :

  பலர் டாய்லெட்டில் (கழிப்பறையில்) மலம் கழிக்க மிகவும் சிரமப்படுவார்கள். இவர்கள் குப்பைமேனி இலையை கொதிக்கும் குடிநீரில் போட்டு போட்டு ஆறியபின் அந்த நீரில் ஒரு டம்ளர் எடுத்து சிறிதளவு உப்பு கலந்து தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வந்தால் மலம் இளகி கழியும். சிரமப்பட வேண்டாம். இரவு சாப்பிட்ட பின் இந்த நீரைப் பருகவும்.


 இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

  குடற்புழுக்களை அழிக்கும். கட்டிகள், வீக்கங்கள் சரியாகும்; தீப்பட்ட புண்ணுக்கு இவ்விலைச்சாறு நல்ல மருந்து; வயிற்றுவலியைப் போக்கும்.



முருங்கைக் கீரை :

  இம்மரத்தின் வேர், பட்டை, காய்கள், பூக்கள், கீரையாவும் மனித உடலுக்கு தேவையானவைகளாகத் திகழ்கின்றன. அருமையான சுவையை கொண்டது. இக்கீரை வாரத்திற்கு இரண்டு நாட்கள் இக்கீரையை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நல்ல வலுவையும் ஆயுட்காலம் வரை பெறலாம்.

உடல்பலம் பெற :

  தினமும் முருங்கைக் கீரையை வாங்கி, அதனை சுத்தம் செய்து இதனுடன் வேர்க்கடலையை பொடித்துப் போட்டு, நெய்யை தேவையான அளவு ஊற்றி, சமைத்து சாப்பிட்டு வாருங்கள் போதும். ஒரு மாதத்தில் உங்கள் உடலின் மாற்றத்தைக் காணலாம். இச்சமையலின் போது நாட்டுக் கோழி முட்டையையும் சேர்க்கலாம்.


உடல் அசதி தீர வேண்டுமா?

  கீரையை உருவி விட்டபின் நாம் தேவையற்றது என உதறும் இளம் காம்புகளை நறுக்கி, மிளகுரசம் வைத்து தினம் மதியம் ஒரு அவுன்ஸ் (அரை டம்ளர்) பருகி வந்தாலும் சரி, சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் சரி, நாளடைவில் கை கால் உடல் அசதி யாவும் நீங்கி, தேகத்தில் புத்துணர்ச்சி ஏற்படும்.

தாது கெட்டியாக :

  முருங்கைக் கீரையோடு வேக வைத்த வேர்க்கடலையையும் கலந்து சமைத்து சாப்பிட்டு வர, விலையுயர்ந்த பருப்புகளில் உள்ள சத்துக்களை விட பல மடங்கு சத்துக்களைப் பெறலாம்.

  முருங்கைக்காய்க்கு நமது உடலை என்றும் இளமையாக வைத்திருக்கும் சக்தி உண்டு. அதனால் அடிக்கடி காயையும் சாப்பிட்டு வாருங்கள்.

மலத்திலுள்ள பூச்சிகள் வெளியேற

  முருங்கைக்கீரைச் சாறு பூச்சிகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. சிறுவர்களுக்கு அடிக்கடி மலக்குடலில் பூச்சி உண்டாகும்.


  முருங்கைக்கீரையை நன்கு நசித்து சாறெடுத்து அதனோடு தேன் கலந்து, இரவில் படுப்பதற்கு முன் இரு டீஸ்பூன் கொடுத்து வந்தால் மலப்பூச்சிகள் சில நாட்களில் வெளியேறிவிடும்.


இதயம் வலிமைபெற :
  முருங்கைப் பூக்களை சேகரித்து சுத்தப்படுத்தி, அதை எண்ணெய் கலந்து பொறிக்காமல் வறுக்காமல் அவித்து சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமை பெறும்.


இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

  பித்தமயக்கம் வராது; இருமல், குரல் கம்மல் நீங்கும்; இடுப்புவலி தீரும்; ஆஸ்துமா கட்டுப்படும்; கண்நோய்கள் நீங்கும்; சொறி, சிரங்கு நீங்கும்; காதுவலி நீங்கும்; கொழுப்பைக் கரைக்கும்; இரத்தக் கொதிப்பை அடக்கும்; காமாலையை கட்டுப்படுத்தும்; நீர்க்கட்டு உடையும்; பற்கள் உறுதிப்படும்.


வல்லாரைக்கீரை


  ஞாபக சக்தியை கொடுக்க இதற்கு இணையாக ஒரு கீரை உலகளவிலேயே கிடையாது என்று கூறலாம். வல்லாரை ஏரி, குளம், குட்டை, வாய்க்கால், வேலி ஓரங்கள் என்று நீர்ப்பரப்பு பரவலான இடங்களில் தான் வளர்ந்து காணப்படும். வல்லாரையை சமையலுக்கு பயன்படுத்தும்போது புளியை சேர்க்க வேண்டாம். புளி வல்லாரையின் சக்தியைக் கெடுத்துவிடும். உப்பையும் பாதியாய் போட்டுதான் சமைக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு

  வல்லாரையை நெய்யால் வதக்கி சிறிதளவு இஞ்சி, இரண்டு பூண்டு கீற்றுகள், சேர்த்து துவையல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகள், நரம்புக்கோளாறுகள், வயிற்றுப்போக்கு முதலியவைகள் எல்லாம் குணமாகும்.

பற்கள் பளீரென வெண்மையாக :

  பற்களில் பலருக்கு வண்ணம் படிந்து சிரித்தால் பார்ப்பவர் முகஞ் சுளிப்பார்கள். மஞ்சளைப் போக்க வல்லாரை உதவுகிறது. வல்லாரைக் கீரையைப் பற்களின் மீது வைத்துத் தேய்ப்பதினால் மஞ்சள் போவதோடு, பற்கள் வெண்மையாக பளிச்சிடும்.

அளவோடு உண்ணுதல் :

  வல்லாரையை அளவோடு குறைந்த அளவுதான் சாப்பிட வேண்டும். உடம்பை பிழிவதைப் போல் வழி ஏற்படும். எனவே, இக்கீரையை அடிக்கடி உண்ணாமல் பத்து நாட்களுக்கு ஒரு முறை சாப்பிடுவதே நல்லது.


இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

  ஆயுளைப் பெருக்கும்; குறிப்பாக இரத்தத்தை சுத்தப்படுத்தும்; மூளை பலப்படும்; மாலைக்கண் நோய் நிவர்த்தியாகும்; கை, கால் வலிப்புநோய்களை கட்டுப்படுத்தும்; வயிற்றுக் கடுப்பு நீங்கும்; காய்ச்சலைப் போக்கும்; முகத்திற்கு அழகைத் தரும்; மாரடைப்பு வருவதை தடுக்கும்; பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்கும்.


புளிச்சக்கீரை

  உடலுக்கு நல்ல பலத்தை தரக்கூடிய இக்கீரையை அடிக்கடி பயன்படுத்தலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் அதிகளவில் அடங்கியுள்ளன. இதன் பூக்களையும் சேகரித்து சமைத்து உண்கிறார்கள்.
மலச்சிக்கல் நீங்க :

  மலச்சிக்கலால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். இக்கீரையை மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.

தாது விருத்திக்கு:

  எதுவாக இருப்பினும் புளிச்ச கீரையை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். இந்திரியத்தை கெட்டிப்படுத்தும்.


இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள் :

  சொறி, சிரங்குகளை போக்குகிறது; குடற் புண்ணை ஆற்றும்; உடலிலுள்ள புண்களை ஆற்றுகிறது; பசி மந்தத்தை போக்குகிறது; வயிற்று வலியை போக்கும்; இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்; ஜீரணக் கோளாறுகளை சரிபடுத்தும்; இதய நோய் வராமல் பாதுகாக்கும்; சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்தும்.


வெந்தயக்கீரை

  இக்கீரை பெரும் மருத்துவப் பயன்கள் கொண்டது. பல நோய்களைத் தீர்க்கும். இக்கீரையின் மாறுபட்ட சுவை கசப்புத் தன்மையால் அதிகம் பேர் இதை பயன்படுத்துவதில்லை.

மாதவிடாய் கோளாறா:

  இக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகளை அற்புதமாய் நீக்கிவிடும்.
இடுப்பு வலியா :

  இக்கீரையோடு தேங்காய் பால், நாட்டுக்கோழி முட்டை (நீரிழிவு உள்ளவர்கள் மஞ்சள் கருவை நீக்கவும்) கசகசா, சீரகம், மிளகுத்தூள், பூண்டு இவைகளோடு நெய்யையும் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் இடுப்புவலி பறந்து போகும்.

இக்கீரையை உண்பதால் தீரும் நோய்கள்:

  கபம், சளியை அகற்றுகிறது; மந்தமாய் இருப்பவர்களை சுறுசுறுப்பாக்குகிறது; உடலுக்கு வனப்பைக் கொடுக்கிறது; கண் பார்வையைத் தெளிவாக்குகிறது; நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது; வயிற்றுக்கோளாறுகளை வயிற்று உப்புசம், வயிற்றிரைச்சல், வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்களை குணப்படுத்துகிறது. மார்பு வலியிலிருந்து காக்கிறது; தலைசுற்றலை நிறுத்துகிறது; உடல் சூட்டை தணிக்கிறது

No comments: