பாரதி பள்ளியின் பெருவிழா - ரஸஞானி

.
மெல்பனில்  குளிரையும்   பொருட்படுத்தாமல்  ஆயிரக்கணக்கானோர்

ஒன்றுகூடிய  பாரதி  பள்ளியின்  பெருவிழா.

மகாகவி  பாரதியின்  கனவை  நனவாக்கும்  புகலிடத்தின்

தமிழ்க்குழந்தைகள்.

                                        ரஸஞானி

மெல்பன்  பாரதி  பள்ளியின்  20  வருட  நிறைவுவிழா  பலதரப்பட்ட

நிகழ்ச்சிகளுடன்   குழந்தைகள்,  பெற்றோர்,  ஆசிரியர்,  பொதுமக்கள்,

கலைஞர்கள்,  எழுத்தாளர்களின்  மாபெரும்  ஒன்று கூடலாக  கடந்த

26  ஆம்  திகதி  ஞாயிற்றுக்கிழமை  காலை  10   மணி  முதல்  மாலை

6  மணி வரையில்  நடைபெற்றது.

மெல்பனில்  1994  ஆம்  ஆண்டு  தொடங்கப்பட்ட  பாரதி  பள்ளி

தங்குதடையின்றி   தொடர்ச்சியாக  இயங்கி  ஆயிரக்கணக்கான

தமிழ்க்குழந்தைகளிடத்தில்  தமிழ்  மொழி  அறிவையும்  தேர்ந்த

கலையுணர்வையும்  வளர்த்துவருகிறது.

பாரதி பள்ளியின்  20  வருட  நிறைவை  பல்வேறு  நிகழ்ச்சிகளுடன்

ஒழுங்குசெய்வதில்  பெற்றோரும்  ஆசிரியர்களும்  அர்ப்பணிப்புடன்

கடந்த  சில  மாதங்களாகவே  ஈடுபட்டனர்.  பாரதி  பள்ளியின்  20

ஆவது   வருட நிறைவு  விழாவும்  தமிழ்  மாணவர்களின்

சுயவிருத்தியை   மேம்படுத்தும்   நிகழ்ச்சிகளுடன்

ஒருங்கிணைக்கப்பட்டிருந்தமை  குறிப்பிடத்தகுந்தது.

பாரதி  பள்ளியின்  ஸ்தாபகர்  திரு. மாவை  நித்தியானந்தனின்

தலைமையில்  மெல்பன்  டன்டினொங்    உயர்தரக்கல்லூரி

வளாகத்தின்  மைதானத்திலும்  மண்டபங்களிலும்  தொடங்கிய

விழாவில்   குளிரையும்  பொருட்படுத்தாமல்  குழந்தைகள்  முதல்

பெரியவர்கள்  வரையில்  திறந்த  வெளி  நிகழ்ச்சிகளிலும்

ஆர்வமுடன்   பங்குபற்றினர்.

தமிழறிவை   அடிப்படையாகக்  கொண்ட  திறன்  அறியும்

போட்டிகளுடன்    ஆரம்பமாகிய  விழாவில்  பல  நூறு  தமிழ்ப்

பிள்ளைகள்   ஆர்வத்துடன்  பங்கு  பற்றினர்.   ஒவ்வொருவருக்கும்

பரிசு   வழங்கப் பட்டதோடு  வெற்றி  பெற்றவர்களுக்கு  விசேட

பரிசுகள்   வழங்கப்பட்டன.   வளர்ந்தவர்களுக்கான  போட்டியில்

முதியவர்கள்   உட்பட  ஏராளமானவர்கள்  கலந்து  கொண்டனர்.

மாணவர்களின்   கைவினை  மற்றும்   ஓவியக்கண்காட்சி  என்பனவும்

இடம்பெற்றன.

தொடர்ந்து   நடந்த  ஆரம்ப  வைபவத்துக்கான  ஊர்வலத்தில்  தவில்

நாதஸ்வர  இசைக்  கலைஞர்கள்  இன்னிசை   வழங்கினர்.   பெரும்

தொகையான    குழந்தைகளும்  வளர்ந்தோரும்  பாடசாலை  அதிபர்,

வளாக  அதிபர்கள், ஆசிரியர்கள்  சகிதம்  ஊர்வலமாக  வந்தனர்.

ஊர்வலம்  புத்தகக்  கண்காட்சி  மண்டபத்தை  அடைந்தது.

விசேட   விருந்தினராக  அழைக்கப்பட்டிருந்த  திரு. ராஜதுரை

வரேந்திரன்  நாடாவை  வெட்டி,  புத்தகக்  கண்காட்சியை   ஆரம்பித்து

வைத்தார்.

புத்தக கண்காட்சி  நடந்த  மண்டபத்தில்  தமிழுக்கு  தொண்டாற்றிய

முன்னோர்கள் ,  இலங்கை  இந்திய  மறைந்த  எழுத்தாளர்கள்,

தமிழ்ப்பேராசிரியர்கள் ,   புலம்பெயர்ந்த பின்னர்  மறைந்த

படைப்பாளிகளின்    ஒளிப்படங்களும்   கண்காட்சிக்கு

வைக்கப்பட்டிருந்தன.

  தொடர்ந்த  ஊர்வலம்  பாரதி  பள்ளி   மாணவர்களின்  தமிழ்  மொழிச்

செயற்பாடுகளையும்  திறமையையும்  வெளிப்படுத்தும்  மாணவர்

கண்காட்சியை    அடைந்தது.   இக்  கண்காட்சியின்  முதலாவது

மண்டபத்தையும்   இரண்டாவது  மண்டபத்தையும்  விசேட

விருந்தினரான   திருமதி  ரஞ்சினி  சிறிரட்னம்  திறந்து  வைத்தார்.

பாரதி  பள்ளியின்  அதிபரும்  இயக்குனருமான  திரு. மாவை

நித்தியானந்தன் விழாவில்  பேசுகையில்:  " பாரதி  பள்ளி

இருபத்தொரு வருடங்களின்   முன்  ஒரு  தேவை   கருதித்

தொடங்கப்பட்டது.  பாரதி பள்ளியின்   தோற்றம்  மெல்பனில்  தமிழ்

மொழிக்  கல்விக்கு ஆரோக்கியமான   ஒரு  புதிய  திசையையும்

அணுகு முறையையும் கொடுத்தது.   தமிழ்  கற்பதில்  ஒரு  புதிய

உற்சாகம்  ஏற்பட வழிகோலியது.   பாரதி  பள்ளியின்  பாதிப்பு

மெல்பனில்  மட்டுமன்றி,  உலக  ரீதியிலும்  உணரப்பட்ட

ஒன்றாகும்.   இந்த  இருபத்தொரு வருடப்   பயணத்தில்  ஆயிரக்

கணக்கானவர்கள்  என்னுடன்  சேர்ந்து பணியாற்றி    இருக்கிறார்கள்.

எவ்வளவோ   உதவிகளைச் செய்திருக்கிறார்கள்.   பெயர்களைச்

சொல்வது  சாத்தியமில்லா விட்டாலும்,   இவர்கள்  யாவருக்கும்

என்  அடி  மனதிலிருந்து  நன்றி  தெரிவிக்கிறேன்." -  என்றார்.

தொடர்ந்து  பாரதி  பள்ளியின்  உப  அதிபரான  திருமதி புவனா

ராஜரட்னம்  பேசுகையில்: " பாரதி  பள்ளி  மாவை   நித்தியானந்தனின்

வழிநடத்தலில்   இதுவரை  எத்தனையோ   சாதனைகளைச்

செய்திருக்கிறது.   உலகிலேயே   சிறுவர்களுக்கான  முதலாவது

தமிழ் வீடியோ   இருபது  ஆண்டுகளுக்கு  முன்  பாரதி  பள்ளியால்

வெளியிடப்பட்டது.    எந்தத்  தமிழுமே   தெரியாமல்  வரும்

குழந்தைகளுக்கு,  மூன்று  வயதிலிருந்து  வெற்றிகரமாகத்  தமிழ்

கற்பிக்கிறோம்.   பலர்  பல்கலைக் கழகப்  புகுமுகத்துக்கான  பரீட்சை

வரை   சிறப்பாகத்  தமிழ்  கற்கிறார்கள்." -  என்றார்.

பாரதி  பள்ளியின்  இருபதாண்டு  நிறைவுச்  சிறப்பு  மலர்

வெளியீடு  நடைபெற்றது.   மலர்க் குழு  சார்பில்  திரு ச. தேவபாலன்

மலரின்   பிரதிகளை   பாரதி  பள்ளியின்  ஐந்து  வளாகங்களினதும்

அதிபர்களான   திரு வே. பரந்தாமன்,  திரு இ. ஜெயராஜா,  திருமதி

தேவராணி   வாமதேவன்,   திரு. செ. சிறீகுமார்,  திருமதி  பிரமிளா

விசாகன்    ஆகியோருக்கு  வழங்கினார்.

தமிழ்  மொழித்  திறன்  அறியும்  போட்டிகளில்  வெற்றி

பெற்ற மாணவர்களுக்குப்   பரிசுகள்  வழங்கப்பட்டன.

தொடர்ந்து,  சிறுவர்கள்  யாவரும்  மாதக்கணக்காக

ஆவலுடன் எதிர்பார்த்திருந்த    சவாரிகள்  (Rides ) ஆரம்பமாகின.

பென்னம்  பெரிய   ராட்டினங்கள்  சிறுவர்  சிறுமியரை   மட்டுமன்றி

வளர்ந்தோரையும்   தாங்கிக்  கொண்டு  வானளாவ  உயர்ந்தும்

பதிந்தும்   வேகமாகச்  சுற்றின.  வானுயர்ந்த  சறுக்கிகளில்

குழந்தைகள்   சறுக்கி  வந்து  சேர்ந்து  திகிலடைந்தனர்.   சுற்றித்

திரிந்தும்   மோதி  விளையாடியும்  மகிழக்  கார்கள்,  குழந்தைகள்

துள்ளி   விளையாடப்    பெரிய  கோட்டைகள்  என  வகை வகையான

நவீன  சாதனங்கள்  சிறியவர்களையும் பெரியவர்களையும்  ஒரே

வேளையில்  குதூகலிக்க  வைத்தன.

விதம்  விதமான  மிருகங்களைக்  கொண்ட  கண்காட்சி

ஒருபுறம்    நடந்தது.

பல்வேறு  உணவுக்  கடைகள்   அறு சுவை  உணவுகளைப்

பரிமாறியபடி  இருந்தன.

“தமிழ்  எங்கள்  தொடர் கதை” என்ற  பெயரில்  பாரதி   பள்ளி

தயாரித்த    ஆவணப் படம்  வெவ்வேறு  இடைவேளைகளில்

திரையிடப் பட்டது.    கலாநிதி  மௌனகுருவின்  “இராவணேசன்”

நாடகத்தின்   சுருங்கிய  திரை   வடிவமும்  திரையிடப் பட்டது.

திரு. லெ. முருகபூபதியின்   ஒருங்கிணைப்பின்  கீழ்  நடைபெற்ற

புத்தகக்  கண்காட்சியை  ஏராளமானோர்  பார்த்துப்   பயனடைந்தனர்.

பல்வேறு    எழுத்தாளர்களின்  நூல்களும்  விற்பனையாகின.

வாசிப்புப் பழக்கத்தை   விருத்தி  செய்தல்  எப்படி...? என்ற

தலைப்பில்  ஒரு கலந்துரையாடலும்   இடம்பெற்றது.

நிலைபேறான  வாழ்க்கைத்  தீர்வுகள்  நிதியம்  ஒழுங்கு

செய்த கலந்துரையாடல்களும்   இரு  தடவைகள்  இடம்  பெற்றன.

இவற்றில், போரினால்   பாதிக்கப்பட்ட  மக்களுக்குப்  பொருளாதார

வலுவை வழங்குவது   எப்படி...? என்பது  பற்றிய  கருத்துக்கள்

பரிமாறப்பட்டன.

பாரதி  பள்ளி   மாணவர்களின்  காட்சியறைகளுக்கு

ஏராளமானோர்   வருகை   தந்தனர்.  மூன்று  வயதிலிருந்து

மாணவர்கள்   தமது  வகுப்புகளில்  உருவாக்கிய  பல் வகைப்பட்ட

ஆக்கங்கள்  பார்வைக்கு  வைக்கப்பட்டிருந்தன.   மாணவர்கள்

தமிழில் காட்டும்  வல்லமையும்  ஆர்வமும்  பலரையும்  வியக்க

வைத்தன.

மெல்பன்  வாழ்  தமிழர்களுக்கு,  தமிழுடன்  உறவு  கொண்ட

ஒரு  நீண்ட  நாளாக, தமிழினால்  குதூகலித்த  ஒரு  இனிய   நாளாக

இக் கொண்டாட்டம்  பரிணமித்தது  எனலாம்.   மெல்பனில்  உள்ள

தமிழர்  சமூகத்தால்  இது வரை   கொண்டாடப் பட்ட  விழாக்களில்

மிகப்   பெரியது  என்ற  பெயரையும், முற்றிலும்  வித்தியாசமான

புதுமையான   விழா  என்ற  பெருமையையும்  இந் நிகழ்வு

பெற்றுக்கொண்டுள்ளது.

No comments: