“பேனாவைக்கொல்ல முடியாது” ருத்ரா

.
charlie-hebdo-cartoon-morin
இந்த‌
“ஒரு வரிக் கவிதையை”
தலைப்பாய் சூட்டியிருக்கிறது
“தி இந்து தமிழ்”
தனது தலையங்கத்தில்!
பிரெஞ்சு மண்
ஒரு புரட்சியை ருசி பார்த்திருக்கிறது.
வற‌ட்சி தீப்பிடித்த சிந்தனை
இப்படிவெறி பிடித்ததை
இன்று தான் பார்க்கிறது.
அது என்ன‌
வெறும் விறைத்த “ஈஃப்பில் கோபுரமா?”
ஃப்ரான்ஸ் நாட்டு பாரீஸில்
மக்கள்
நட்டு வைத்த
சுதந்திரத்தின் முதுகெலும்பு அது!
முதுகெலும்பற்ற
துப்பாக்கிப்புழுக்கள்




துப்பிய எச்சிலால்
“லிபெர்டி ஈக்குவலிடி ஃப்ரெட்டனிடி”
என்ற “ஜீன் ஜேக்குவஸ் ரூஸோ”வின்
உயிர் மிகுந்த சொற்களையா
அழிக்க வந்திருக்கின்றன
நாகரிகம் அழுகிப்போன இந்தப்பிணங்கள்?
“சமுதாய ஒப்பந்தம்” என்ற நூலில்
ஒரு தீப்பந்தம் பிடித்து
மானுட வெளிச்சம் காட்டிய
தேசம் அல்லவா அது!
கார்ட்டூன் தூரிகையைக்கூட‌
கனரக பீரங்கியாய் கண்டு மிரண்
ட‌கரப்பான் பூச்சிகள்
விடியலுக்கு மீசை முறுக்குவது
அநாகரிகத்தின் உச்சம்.
மனிதக்கொலை செய்யும்படி
குரல் கொடுக்க‌
சைத்தான்கள் கூட விரும்புவதில்லையே.
ஏனெனில்
அவை கூட அந்த கார்ட்டூன்களைக்
கண்டு சிரிக்கும் சிந்திக்கும்.
வெறி பிடித்த தோட்டாக்களை
தின்று வயிறு வளர்க்கும் மிருகங்களின்
நெறியற்ற செயல் இது.
பேனாவைக் கொல்ல முடியாது.
ஏனெனில் அவற்றிற்கு உயிர் இல்லை.
பேனாவைத் திறந்தால் தான் உயிர்.
மனிதன்
எப்போது பேனாவைத் திறந்தானோ
அப்போதே பிரம்மன்களும் எமன்களும்
வேலை இழந்து போனார்கள்.
துப்பாக்கிக் குதிரைகளை தட்டி விளையாடும்
அறிவற்ற கழுதைகளின்
அடங்காத வெறியாட்டம் கண்டு
இந்த உலகமே சிலிர்த்து நிற்கிறது.
தூரி”கை”களே!
கோடுகள் வழியே நீங்களும்
கைகள் உயர்த்துங்கள்.
இந்த ஆயில் வண்ணங்கள்
மானுட எண்ணங்களின்
லாவா ஆகட்டும்.
இருட்டின் மூளி வெறி இங்கு
கந்தல்களாய் கருகி அழியட்டும்.
மனித நேயம் காட்டும்
ஒளி படைத்த கண்ணொளியின்
கனல் ஒளி
பொங்கிப்பெருகட்டும்.
நன்றி http://puthu.thinnai.com/

No comments: