எழுதமறந்த குறிப்புகள். - முருகபூபதி

.
அவுஸ்திரேலியாவில்  சமூகப்பணிக்கு  முன்மாதிரியான உதாரண புருஷர்
பாதிப்புற்ற  குழந்தைகளின்  பக்கம்  நிற்கும்  தொண்டர் நவநீதராஜாவுக்கு 70வயது.
அவுஸ்திரேலியாவுக்கு  வந்து  குடியேறியது   முதல்  என்னை பிரமிப்பில்   Mr.Navaneetharajahஆழ்த்திக்கொண்டிருக்கும்  இந்த  கடல்  சூழ்ந்த கண்டத்தின்    முன்னேற்றமும்    வளர்ச்சியும்  பற்றிய  தேடலில் ஈடுபட்டிருக்கும்    தருணங்களில் -  கடின  உழைப்பினால்  முன்னேறி தான்    சார்ந்த  சமூகத்திற்கும்  தான்    உளமார  நேசிக்கும் தாயகத்திற்கும்  தன்னாலியன்றவரையில்  தொண்டாற்றிக்கொண்டிருப்பவர்களும்     என்னை    பிரமிப்பில் ஆழ்த்துகிறார்கள்.    அப்படிப்பட்டவர்கள்  எனது  நேசத்துக்குரியவர்களே.
அத்தகைய   உதாரண புருஷர்கள்  தாம்  எங்கு  வாழநேரிட்டாலும் தமக்கும்  தம்முடன்  இணைந்திருப்பவர்களுக்கும்  தான்  வாழும் நாட்டுக்கும்    மிகுந்த  விசுவாசமாகவே    இருப்பதனால்   அவர்கள் குறித்த    மனப்பதிவும்  மரியாதைக்குரியதாகவே    இருக்கிறது.
 அந்த  வரிசையில்  இந்த  எழுத  மறந்த  குறிப்புகள்  தொடரில்   நான் சொல்ல விரும்புவது    எம்மத்தியில்  வாழும்  அன்பர்   திரு. நவநீதராஜா    அவர்கள்   பற்றியது.   அவருக்கு  எதிர்வரும்  6   ஆம் திகதி   70    வயது   பிறக்கிறது.


06-02-1945    ஆம்  திகதி  தென்மராட்சியில்  சாவகச்சேரியில்    ஒரு சாதாரண    விவசாயக்குடும்பத்தில்  பிறந்து  கடின  உழைப்பினால் வர்த்தகத்துறையிலும்   முன்னேறி  அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து  வந்த   நாள்  முதலாக  இலங்கையில்  நீடித்த  போரில்    பாதிக்கப்பட்ட  ஏழைத்தமிழ்க்குழந்தைகளின்    நலன் குறித்த சிந்தனையிலேயே    சதா    காலமும்  வாழ்ந்துவருபவர்  நவநீதராஜா அவர்கள்.
இவர்    பல  நல்லியல்புகளைகொண்டிருப்பதனால்  எனது நெஞ்சத்துக்கும்    நெருக்கமானார்.    1990   ஆம்  ஆண்டு மெல்பனிலிருக்கும்    சில  கலை,   இலக்கிய  ஆர்வலர்ளை இணைத்துக்கொண்டு    அவுஸ்திரேலியா    தமிழர்   ஒன்றியம்   என்ற அமைப்பினை    தொடக்கியபொழுது    கதம்ப விழா,  கலைமகள்  விழா, பாரதி விழா ,   முத்தமிழ்  விழா     முதலான  பல  நிகழ்ச்சிகளை நடத்தினோம்.    குழந்தைகளுக்கு  கலைமகள்  விழாக்களில் விஜயதசமியை    முன்னிட்டு   ஏடுதுவக்கி    வித்தியாரம்பமும் செய்துவைத்தோம்.
பாரதி   விழாவை    நடத்தியபொழுது  இங்கு   தமிழ்மொழியை கைவிடாமலிருந்த  பிள்ளைகளுக்கு  பாரதி  நினைவாக நாவன்மைப்போட்டிகளும்    நடத்தி  தங்கப்பதக்கம்  உட்பட  பல பரிசில்களும்     சான்றிதழ்களும்    வழங்கினோம்.
சட்டத்தரணி    ரவீந்திரன்  தலைமையில்  பாரதி  விழா    மெல்பன் பல்கலைக்கழக    உயர்கல்லூரியில்  நடந்தபொழுது  சிட்னியிலிருந்து ' ' எஸ்.பொ.' பொன்னுத்துரையும்    சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.
அந்த    விழாவுக்காக   மகாகவி  பாரதி  என்ற     நாடகத்தை   எழுதி இயக்கினேன்.    பாரதியாரின்  புதுச்சேரி  வாழ்க்கையை    சித்திரிக்கும் நாடகம்.    பாரதியாக  வீடியோ   தொழில்  நுட்பத்தில்  ஈடுபாடுள்ள இலக்கிய    ஆர்வலர்  கிருஷ்ணமூர்த்தியும் -  வா.வே.சு. அய்யராக சட்டத்தரணி    தமிழரசனும் -  பாரதிதாசன்  சுப்புரத்தினமாக  கலைஞர் அளவெட்டி    வித்தியும்   -  பாரதியார்  பூநூல்  சடங்கு  செய்த கனகலிங்கம்   பாத்திரத்தில்  பிரகாஷ்    அந்தோனிப்பிள்ளை    ஆகியோர்    நடிக்க  முன்வந்தனர்.   செல்லம்மாவாக  நடிப்பதற்கு யாரைத்தேடுவது...? என்று  நான்  கடுமையாக யோசித்துக்கொண்டிருந்தபொழுது    எனக்கு   உதவ    முன்வந்தவர் நண்பர்  நவநீதராஜா.  அவருடைய   இரண்டாவது  மகள்  கோகிலவாணி   அச்சமயம்  படித்துக்கொண்டிருந்தார்.    அவரை செல்லம்மா   பாத்திரம்  ஏற்று  நடிக்கச்செய்தால்  அந்தப்பாத்திரத்திற்கு  ஏற்ற   ஒருவரை   தேடவேண்டிய  நிர்ப்பந்தம் இருக்காது  என்று  அவரிடம்  சொன்னேன்.  அதற்கு  அவர்  உடனே சம்மதித்தார்.     மகளும்  திறம்பட  நடித்தார்.  குழந்தை  தங்கம்மா பாத்திரத்திற்கு   இலங்கை  வானொலியில்  முன்னர்  பணியாற்றிய குமாரலிங்கம்   என்பவரின்  குழந்தை  முன்வந்தார்.Mahadeva Achchiramam  Children Home Girls
இதில்   நடித்தவர்கள்  தற்பொழுது  பெற்றோர்களாகிவிட்டனர். எனினும்  மகாகவி  பாரதி  இன்றும்  மனதில்  வாழ்வதுபோன்று  1990 இல்  அந்தப்பத்திரம்  ஏற்றவர்களும்  நினைவில்  வாழ்கின்றனர்.   நவநீதராஜா   தமது  வீட்டிலேயே   நாடக    ஒத்திகை     நடத்துவதற்கும்    அனுமதி    தந்தார்.
புதுச்சேரியில்    பாரதியாருக்கு  அவ்வப்பொழுது  உதவும்  ஒரு செட்டியார்    பாத்திரத்திற்கு    ஒருவரைத்தேடிக்கொண்டிருந்தேன்.    எமது    ஒத்திகைகளை    பார்த்துக்கொண்டிருந்த  நவநீதராஜா, நாடகத்தின்    பிரதியை    வாங்கிப்பார்த்தார்.   செட்டியாருக்கு   வசனம் குறைவாகவும்  இருந்தது.
தானே  நடிக்கிறேனே...  என்று    முன்வந்தார்.    சில  நிமிடங்களில் பிரதியிலிருந்த   செட்டியாருக்குரிய  வசனங்களை   கிரகித்துக்கொண்டு ,  மேலும்  மெருகேற்றி  அற்புதமாக  நடித்தார். எனக்கு   நெஞ்சில்  பாலைவார்த்ததுபோல்  இருந்தது.    நான்கு வாரங்கள்   ஞாயிறு  தினங்களில்    காலைவேளையே    அவர்    வசித்த    Dandenong     என்னுமிடத்திற்கு  ரயிலில்  சென்றுவிடுவேன். அவரே  ரயில்  நிலையம்  வந்து  அழைத்துச்சென்று  உரியநேரத்தில் ஒத்திகைக்கு  வருபவர்களுக்கு  காலை   உணவும்  தந்து  உபசரித்து எமது    நாடகம்   பாரதி விழாவன்று    மேடையேறுவதற்கு   பூரண ஒத்துழைப்பு   வழங்கினார்.
விழா  மேடையில்  அவரது  செட்டியார்  தோற்றத்தை    மேக்கப்பில் பார்த்ததும் ,  அவரை  நன்கு  தெரிந்த  அன்பர்கள்  பலத்த  கரகோஷம் செய்து    வரவேற்றனர்.    அவர்  அன்று  செய்த  உதவியை   நான் என்றைக்கும்   மறக்கவில்லை.
பின்னர்    அவர்    சொந்தமாக  வர்த்தக  ஸ்தாபனங்களை   மெல்பனில் சில   இடங்களில்  தொடங்கிய பின்னரும்  அதே   புன்முறுவலுடன் பழகிவருபவர்.    அதிர்ந்து  பேசாமல்  இன்முகத்துடன்  அரவணைக்கும் இயல்பு    அவரது   குணாதிசயம்.
மெல்பனில்   இயங்கும்  தமிழ்  அமைப்புகளின்  நிகழ்ச்சிகளுக்கும் தமது   தனிப்பட்ட  உதவிகளையும்  தமது  வர்த்தக (MKS INTERNATIONAL PTY LTD)  ஸ்தாபனத்தின்  ஆதரவையும்  தயங்காது வழங்கிவருபவர்.
இலங்கையில்   தென்மராட்சியில்  அவர்  வாழ்ந்த  காலத்தில் முற்போக்கு  சக்திகளுடன்தான்    நெருக்கமான உறவுகளைப்பேணிவந்தவர்.    எனக்கு  நன்கு  தெரிந்த  பல இடதுசாரித்தோழர்கள்    மற்றும்  முற்போக்கு  எழுத்தாளர்களுடனும் அவருக்கு   தோழமை    நீடித்திருக்கிறது.
கிளிநொச்சியில்    ஆனந்தசங்கரி  அவர்களின்  பிரவேசத்திற்கும் நவநீதராஜா    முக்கிய   காரணமாக  திகழ்ந்துள்ளார்.   முன்னாள் அமைச்சர்    செல்லையா   குமாரசூரியர்  கிளிநொச்சி  உட்பட தென்மராட்சிப்பிரதேசங்களில்   மேற்கொண்ட   பல அபிவிருத்திப்பணிகளுக்கும்    பக்கபலமாக    நின்றுள்ளார்.
சில   வருடங்களுக்கு  முன்னர்,  ஆனந்த சங்கரி  அவர்கள்  மெல்பன் வருகைதந்தபொழுது    தமது   இல்லத்தில்  அவருக்கு  பிரத்தியேகமான    வரவேற்பையும்   வழங்கினார்.
எப்பொழுதும்   பொதுத்தொண்டுகளில்  ஈடுபட்டுவரும்  நவநீதராஜா அவர்கள்  -  மல்லிகை   இதழ்  அவுஸ்திரேலியா  சிறப்பு இதழ் வெளியிட்டபொழுது     (நவம்பர் 2000)  அவரிடமிருந்தும்  விளம்பரம் கேட்டேன்.
அவர்    தந்த   விளம்பரம்    இவ்வாறு   அமைந்திருந்தது:
நான்கு  தசாப்த  காலங்களுக்கும்  மேலாக  நீடித்த  அரசியல் -  கலை இலக்கிய   -  உறவில்  மல்லிகை   அவுஸ்திரேலியா  சிறப்பிதழுக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்.
இடப்பெயர்வும்  புலப்பெயர்வும்  இடைவெளிகளை   ஏற்படுத்தாமல் இதயங்களை   இணைப்பது  இலக்கியமே
35 ஆண்டு  காலமாக   மல்லிகை  வாசகராக   வாழ்வதும்   இனிய  சுகம்.
நவநீதராஜா   உள்நாட்டு  வெளிநாட்டைச்சேர்ந்த   பல  இரக்கமுள்ள அன்பர்களின்   ஆதரவுடன்  கிளிநொச்சியில்  மேற்கொண்டுவரும் சமூகப்பணி    விதந்து  போற்றுதலுக்குரியது.    நவநீதராஜாவை   அவரது 70   ஆவது  பிறந்ததின  வேளையில்  வாழ்த்தும்  அதேவேளையில் - அவர்    சம்பந்தப்பட்ட  கிளிநொச்சி  மகாதேவா  ஆச்சிரமத்தின்  சிறுவர்    இல்லத்தின்  தோற்றம்  வளர்ச்சி  அதன்  இன்றைய தேவைகள்   குறித்தும்   சொல்லவேண்டியது    அவசியம்.
கிளிநொச்சி  மகாதேவா  ஆச்சிரமம்   சிறுவர்  இல்லம்
இலங்கையில்   தேசிய   இனப்பிரச்சினை     கூர்மையடைந்த   1970  ஆம்   ஆண்டு    காலப்பகுதியிலேயே  அதனை     தீர்ப்பதற்கு  ஆளும்தரப்பும்    எதிர்த்தரப்பும்    ஒருங்கிணைந்து     அர்த்தமுள்ள  பணிகளை   முன்னெடுக்காமல்   விட்டதன்   விளைவை    பின்னர்  நிகழ்ந்த     சம்பவங்கள்   உறுதிப்படுத்திவிட்டன.
தேசிய    இனப்பிரச்சினை   இனவிடுதலைப்போராட்டமாக   உருவெடுத்து   நீடித்த   பல  கட்ட  போர்களினால்    முழு    இலங்கை  மட்டுமல்ல     சாதாரண  மக்களின்    வாழ்வும்  பெரிதும்  பாதிக்கப்பட்டது.    குறிப்பாக  போர்  நீடித்த தமிழ்ப்பிரதேசங்களில்    உயிரிழப்புகளும்    சொத்தழிவுகளும்   தவிர்க்கமுடியாத    நிகழ்வுகளாக  வரலாற்றில்    இடம்பெற்றுவிட்டன.
எனினும்    மனிதம்  அந்தக்கொடூரமான    போர்க்காலத்திலும் மரணிக்கவில்லை.   மனிதநேயம்  மிக்க  பலர்  எப்பொழுதும்  பாதிக்கப்பட்ட   மக்களின்    பக்கமே  நின்றார்கள்.  அத்தகைய  மனிதநேயவாதிகளிடம்  ஆன்மீக   உணர்வுகளும்  இருந்தமையால்    பாதிக்கப்பட்ட     மக்களுக்கு    உதவும்பொருட்டு    அமைப்புகளை  உருவாக்கி    இயங்கச்செய்தார்கள்.DSCN0179
அவ்வாறு   உருவாக்கப்பட்டு  நீண்ட  காலமாக  இயங்கிவரும்  அமைப்பு கிளிநொச்சியில்  மகாதேவ  ஆச்சிரம  சிறுவர்  இல்லமாகும்.
யாழ்.குடாநாட்டில்  கொழும்புத்துறையிலிருந்த  யோகர்  சுவாமிகளின் சீடர்களில்  ஒருவரான  வடிவேல்  சுவாமிகளின்  கிளிநொச்சி  வருகை சமயம்  சார்ந்து  மாத்திரம்  இல்லாமல்  கல்வி,   சமூகம், புனர்வாழ்வு முதலான    சிந்தனைகளையும்  உள்ளடக்கியிருந்தமையினால்    அங்கு உருவான    குறிப்பிட்ட  ஆச்சிரமத்தின்  தோற்றமும்  வளர்ச்சியும் தமிழ்மக்களின்   வாழ்வில்  குறிப்பிடத்தகுந்த  தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
அவரைத்தொடர்ந்து    தவத்திரு  கணேசானந்த  சுவாமிகளின்  வருகையின்    பின்னர்    அங்கு  பாதிக்கப்பட்ட  சிறுவர்களுக்கு  அடைக்கலம்  வழங்கும்    அமைப்பாக   அந்த  ஆச்சிரமம்  புதிய  பரிமாணம்     பெற்றது.
எனினும்   தங்கு  தடையற்று    நீடித்த  போர்க்காலத்தினால்  ஆச்சிரமமும்    இல்லமும்   பல  பிரதேசங்களுக்கும்  மக்களைப்போன்று  இடம்பெயரும்    துர்ப்பாக்கிய   நிலைமையும்    தோன்றியது. ஷெல்வீச்சுக்களினாலும்   குண்டுத்தாக்குதல்களினாலும்  ஆச்சிரமத்தின்    சிறுவர்   இல்ல  விடுதிக்கட்டிடங்கள்    சேதமடைந்தன.
எத்தனை   இடர்கள்  வந்துற்றபோதிலும்    ஆச்சிரமம்  தனது  சேவை மனப்பான்மையை  கைவிடவில்லை. ஆச்சிரமத்தின்    மெல்பன்   கிளையின்  அமைப்பாளரும்  தலைவருமான    அன்பர்  திரு. நவநீதராஜா    நான்   சம்பந்தப்பட்ட கலை,    இலக்கியம்  மற்றும்  கல்வி  சார்ந்த  பணிகளுக்கு  தார்மீக  ஆதரவு வழங்கிவருபவர்.   அவர்   இரக்க   சிந்தனையுள்ள   மனிதநேயவாதி.
அவருடன்     உரையாடும்   சந்தர்ப்பங்களிலெல்லாம்   அவர்  கிளிநொச்சி   மகாதேவ    ஆச்சிரம  சிறுவர்  இல்லம்  பற்றியும்  அங்கு  பராமரிக்கப்படும்    பெற்றவர்களை  போரில்  இழந்த  குழந்தைகளைப்பற்றியும்தான்   குறிப்பிடுவார்.
அன்பர்   நவநீதராஜாவின்  வாழ்வும்  பணிகளும்  குறிப்பிட்ட  பாதிக்கப்பட்ட   குழந்தைகளைச்சார்ந்தே  இருப்பதை  தொடர்ந்தும்  அவதானித்து     வந்த நிலையில்   வன்னியில்  போர்  முடிவுக்கு  வந்தபின்னர்   வடபகுதிக்குச்சென்றபொழுது   சில  நாட்கள்  கிளிநொச்சியிலும்   தங்கியிருந்து    இறுதிக்கட்ட  போர்  நிகழ்ந்த  நந்திக்கடல் -  முள்ளிவாய்க்கால் -    புதுமாத்தளன் -  வலைஞர்மடம் - புதுக்குடியிருப்பு -  தண்ணீர்  ஊற்று   முதலான  பிரதேசங்களுக்கும்  சென்றேன்.
இந்தப்பிரதேசங்களுக்கு  செல்லும்  பாதைகள்    தெரியாதிருந்த   எனக்கு    வழித்துணையாக   வந்தவர்   நண்பர்  இலக்கியப்படைப்பாளி    கருணாகரன்.
ஒருநாள்    கிளிநொச்சி   ஜெயந்தி   நகரில்   நீண்ட   காலமாக  இயங்கும்    மகாதேவ   ஆச்சிரமத்தின்   சிறுவர்  இல்லத்திற்கும்  சென்று  அங்கிருந்த    பிரதம   நிறைவேற்று    அலுவலர்     அன்பர்  இரத்தினசிங்கம்    மற்றும்  அங்கு  பணியாற்றும்   சகோதர  சகோதரிகளையும்     சந்தித்து   உரையாடினேன்.
அந்த   அலுவலக  வாயிலில்  இருந்த  ஒரு  அறிவித்தல்  பலகையில்  நான்  கண்ட  காட்சி  மனதை    உருக்கியது.    ஏற்கனவே அவுஸ்திரேலியாவிலிருந்து    இயங்கும்  இலங்கை    மாணவர்  கல்வி நிதியத்தின்   பராமரிப்பிலிருக்கும்  பெற்றவர்களை   இழந்த  மாணவர்களுக்கு  உதவும்    பணிகளுக்காக   அந்தப்பயணம்  மேற்கொண்டிருந்தபொழுது  கிளிநொச்சி  மகாதேவ   ஆச்சிரமத்தில்  தங்கியிருந்து     தமது    கல்வியைத்தொடரும்   அந்த  ஏழை    மாணவர்களின்     நிலை   கண்டு  ஆழ்ந்த கவலையடைந்தமைக்கும்  ஒரு   முக்கிய  காரணம்    இருக்கிறது.
அங்கே   தங்கவைக்கப்பட்டு    பராமரிக்கப்படும்   நூற்றுக்கணக்கான குழந்தைகளின்  வாழ்வு  எமக்கு  அந்நியமானது  அல்ல.  அவர்களில் சிலருக்கு  தாய்மார்  இல்லை.   சிலருக்கு  தந்தைமார்  இல்லை.   மேலும்  சிலருக்கு  இருவருமே   இல்லை.
அதனால்   அவர்கள்  அந்த  இல்லத்தில்  அடைக்கலம்  பெற்றிருக்கிறார்கள்.Mahadeva Achchirama  Children Home boys are Going to school
அங்கே     தங்கியிருந்து   கல்வியைத்தொடரும்    குழந்தைகள்  தமது பாடசாலைக்கல்வியை    மாத்திரம்  தொடராமல்   உளவளர்ச்சி பயிற்சிகளிலும்    ஈடுபடுவதும்    முக்கியமாக    நாம்   கவனிக்கவேண்டியதாகும்.
தன்னம்பிக்கையுள்ள    பிரஜைகளாக   அவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.     அந்த    இல்லம்    குடும்பப்பாங்குடன்  உறவுகளையும்      மேம்படுத்துவதையும்   அவதானிக்க    முடிகிறது. அந்தக்குழந்தைகளின்  வளர்ச்சிப்படிகளில்  தொடரும்  சீர்மியம் குறிப்பிடத்தகுந்தது.   அவர்களுக்கும்  பிறந்தநாள்  வருகிறது.    பூப்புனித சடங்குகள்   நடக்கின்றன.   அவர்கள்  மத்தியில்   விளையாட்டுப்போட்டிகள்    மற்றும்     மனனப்போட்டிகள்    நடக்கின்றன.      அதனால்  அவர்கள்    ஆதரவற்றவர்கள்   என்ற   உணர்வு  ஏதும்    இன்றி    ஆரோக்கியமாக   வளர்க்கப்படுகிறார்கள்.
அங்கு  சிறந்த  பராமரிப்பும்  கண்காணிப்பும்  இருந்தபோதிலும்   அவர்களின்   சில   தேவைகள்  இன்னமும்  பூர்த்திசெய்யப்படவேண்டியதாகவே   இருக்கின்றன. அதனால்தான்     புலம்பெயர்ந்துவாழும்   இரக்கமுள்ள   அன்பர்களிடம் உருக்கமான     வேண்டுகோளை     கிளிநொச்சி   மகாதேவா    ஆச்சிரமத்தின்     சிறுவர்   இல்லம்  தொடர்ந்து  விடுத்துவருகின்றது.
இந்த     இல்லத்திற்கு  அன்பர்கள்  உதவுவது  வீண்போகாது  என்பது  மாத்திரம்    நிச்சயம்.   இங்கேயிருந்து  தமது  கல்வியைத்தொடர்ந்த  பல பிள்ளைகள்   தமது  மேற்கல்வியை    தொடர்ந்து  பல்கலைக்கழகங்களுக்கும்  பிரவேசித்திருக்கிறார்கள்.   அந்தப்புண்ணியம்    அவர்களுக்காக     உதவிய   இரக்கமுள்ள   நெஞ்சங்களையும்    சென்றடையும்.
கல்விக்காக   செலவிடப்படும்  ஒவ்வொரு  சதமும்  என்றைக்கும் வீண்போவதில்லை.
அதனால்தான்   உலக   மகா கவி  பாரதியும்   கூட    ஆங்கோர் ஏழைக்கு  எழுத்தறிவித்தல்  புண்ணியம்  கோடி....    என்று  பதிவுசெய்தார். கல்வி    மட்டுமன்றி   தொழில்  நுட்ப  பயிற்சிகள்   - தொழில்  பயிற்சிகள் சுயதொழில்   பயிற்சிகள் - நவீன  விவசாய  உற்பத்திப்பயிற்சிகள்  என பல்துறை   சார்ந்த  பயிற்சிகளும்   அந்தப்பிள்ளைகளுக்கு வழங்கப்படவிருக்கிறது.
போரினால்   அனாதரவான   ஒரு  குழந்தை  படித்து  முன்னேறி  தனது  சுய உழைப்பில்   தன்னம்பிக்கையும்  ஆளுமையும்  கொண்ட  பிரஜையாக    உருவாகும்பொழுது    அதற்கு  அடித்தளமிட்ட  அன்பர்களையும்    அந்தப்பெருமை    சென்றடையும்.
எனவே     இதுகுறித்து    சற்றுநேரம்  ஆழ்ந்து  சிந்தித்துப்பாருங்கள்.
உங்களது    ஆதரவு  ஒரு  பாதிக்கப்பட்ட  குழந்தையின்  வாழ்வில் மிகப்பெரிய  மாற்றத்தை    நிச்சயம்  உருவாக்கும். அன்றாடம்   நாம்  எத்தனையோ    அநாவசிய  செலவுகளை  மேற்கொள்வோம்.  மாத  இறுதியில்  வரவு – செலவு  பார்க்கும்பொழுதுதான்   அந்த   அநாவசிய  செலவுகள்  மனதில்  கவலையை   தோற்றுவிக்கும். அதனைத்தவிர்ப்பதற்கு   மாற்று   யோசனைகளும்   இருக்கின்றன.
அந்த   யோசனை   எமது  தாயகத்தில்  எந்தப்பாவமும்  செய்யாமல் போரினால்   சிக்குண்டு  பெற்றவர்களை  இழந்த  இந்தக்குழந்தைகளின் எதிர்காலம்   குறித்ததாக  இருந்தால்  மிகச்சிறந்த  பலன்களும்   பயனும் உதவி   பெறும்  அந்தக்குழந்தைகளுக்கு  மட்டுமல்ல  உதவும் அன்பர்களுக்கும்  கிட்டும். நீடித்த  போர்   வழங்கியிருக்கும்  விடை   பாதிக்கப்பட்ட  குழந்தைகளும் கணவர்மாரை  இழந்த  விதவைகளும்தான்.
நவநீதராஜா   பற்றிய  இந்தகுறிப்புகளை   எழுத  நேர்ந்தபொழுது அவரது   70 வயது  பிறந்ததினத்தை   முன்னிட்டு     " எனது வாழ்த்துக்களை    தெரிவிக்கின்றேன் " -     எனச்சொன்னேன்.   அப்பொழுதும்  அவர்    மகாதேவா    ஆசிரமத்திலிருக்கும்    பிள்ளைகளைப்பற்றித்தான் உரையாடினார்.    அத்துடன்   மேலும்  சில  தகவல்களையும்    பகிர்ந்துகொண்டார். அவரது    பிறந்ததினத்தை  முன்னிட்டு  குறிப்பிட்ட   தகவல்களையும்   வாசகர்களுடன்   பகிர்ந்துகொள்ள   விரும்புகின்றேன்.
மகாதேவா    ஆசிரமத்தில்    தங்கியிருந்து   தமது கல்வியைத்தொடர்ந்துள்ள   மாணவர்களில்  14   பேர் பல்கலைக்கழகங்களுக்கு    தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். தமது    பெற்றோரை   இழந்து  எதிர்காலமே    கேள்விக்குறியாக இருந்தவேளையில்  நூற்றுக்கணக்கான  தமிழ்  மாணவர்களுக்கு ஆதரவுக்கரம்  நீட்டி    அரவணைத்தது   கிளிநொச்சி   மகாதேவா ஆசிரமம்.
அவர்களின்    கல்விக்கு    கலங்கரைவிளக்கமாகத்திகழ்ந்த  ஆசிரமம் உலகெங்கும்   புலம்பெயர்ந்து    வாழும்   தமிழ்   அன்பர்களின் ஆதரவுடனும்    உள்நாட்டு    அன்பர்களின்    ஒத்துழைப்புகளுடனும் இம்மாணவர்களின்    நலன்களை   கவனித்து   வருகிறது.
இந்தப்பின்னணிகளுடன்   ( 2015 )  புத்தாண்டில்    மகாதேவ   ஆசிரமம்Mahadeva Achchiramam  Children.01jpgஇதுவரைகாலமும்  உதவிய    அன்பர்கள்   அனைவருக்கும் வாழ்த்துக்களையும்    தெரிவித்து   ஒரு  நற்செய்தியையும் கூறுகின்றது. ஆசிரமத்திலிருந்து    தமது    கல்வியை  தங்கு  தடையின்றி   தொடர்ந்த   மாணவர்களில்    க.பொ.த.(உயர்தர)  (G.C.E A/L)  வகுப்பில்  பயின்ற  பதினான்கு   (14)   பேர்  இலங்கையில்  உள்ள  சில பல்கலைக்கழகங்களுக்கு  தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்கள்   பல்கலைக்கழகத்திலும்   தமது   கல்வியை தொடருவதற்கு   பல  தேவைகள்  உருவாகியுள்ளன.   இன்றைய கல்வி  முறையானது  கணினியின்  தேவையையும் அடிப்படையாகக்கொண்டிருக்கிறது.
கணினி   தொழில்  நுட்பம்  இன்றைய  கல்வி  முறையில்  தவிர்க்க முடியாதது.   பல்கலைக்கழக  மாணவர்கள்  தமது  பட்டப்படிப்பு   சார்ந்த    தகவல்களை   உடனுக்குடன்  தரவிறக்கம்   செய்து படிப்பதற்கு தேவைப்படும்    கணினிகளை    (Laptop ) பெற்றுக்கொடுக்கவேண்டிய கடமையும்   கிளிநொச்சி  மகாதேவா   ஆசிரமத்திற்கு  தோன்றியுள்ளது.
பல்கலைக்கழகத்திற்கு    தெரிவாகியுள்ள  குறிப்பிட்ட  மாணவர்களின் கணினி    தேவையை  பூர்த்தி  செய்து  உதவ  முன்வருமாறு மகாதேவா    ஆசிரமம்   வேண்டுகோள்   விடுத்துள்ளது. புகலிடத்தில்   வாழும்  இரக்கமுள்ள  அன்பர்களுக்கு  உருக்கமான வேண்டுகோளை  விடுக்கும்  கிளிநொச்சி   மகாதேவா  ஆச்சிரமத்தின்  சிறுவர்  இல்லம்  பற்றிய  மேலதிக விபரங்களுக்கு: www.mahadevahome.org
அன்பர்    நவநீதராஜா    பல்லாண்டு  வாழ்ந்து    மேலும்  பல ஆக்கபூர்வமான    சமூகப்பணிகளை   முன்னெடுக்க  வேண்டும்.

No comments: