சங்க இலக்கியக் காட்சிகள் 37- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.

பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

மனம் விரும்புதே உன்னை!

விதை விதைத்தல், அருவிவெட்டுதல், ஆடுமாடு மேய்த்தல் என்று ஓடியோடி உழைத்துப் பல தொழில்களைச் செய்யும் முல்லை நிலத்து மக்கள் உடற்பலம் மிக்கவர்கள். தலைவன் தொழில் காரணமாக பிரிந்து செல்வதும் அவன் வரும்வரை கவலையோடு தலைவி காத்திருப்பதும் முல்லைநிலத்து மக்களின் வழமையான வாழ்க்கைமுறை. அதனால்தான் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் முல்லை நிலத்து உரிப்பொருள் என இலக்கணம் வகுக்கிறது தொல்காப்பியம்.ஏறுதழுவுதல் முல்லைநிலத்துப் பண்பாடு. வசதிபடைத்தவர்களது வீட்டிலே ஒரு பெண்குழந்தை பிறந்துவிட்டால், அவள் கன்னிப்பருவத்தை அடையும்போது அந்த வீட்டிலே நன்கு மதமதத்து வளந்த நிலையிலே ஒரு காளையும் நிற்கும். அதற்கென்றே வளர்க்கப்பட்ட அந்த முரட்டுக்காளையை அடக்குபவனுக்கே அந்தப் பெண்ணை மணமுடித்துவைக்கும் ஏறுதழுவுதல் என்ற வழக்கம் பண்டைத் தமிழகத்தில் நிலவியமையைக் கலித்தொகையின் முல்லைத்திணைக்குரிய (முல்லைக்கலி) பாடல்கள் நன்கு எடுத்தியம்புகின்றன.

வீரமும் காதலும் விளைந்த நிலமாக சுவைமிகுந்த பாடல்களால் முல்லை நிலம் விபரிக்கப்படுகின்றது.

முல்லைக்கலியின் பாடல்கள் தலைவன், தலைவி, தோழி என்பவர்களுக்கிடையிலான உரையாடல்களாக, நாடகம் போல அமைந்துள்ளமை ஒரு தனிச்சிறப்பாகும். இதோ அப்படியொரு காட்சியைச் சித்திரம்போல நமக்குக் சித்தரித்தக்காட்டுகின்ற ஒருபாடல்.

மலர்பறித்து வருவதற்காகத் தோழிகளோடு வனத்திற்குச் செல்கிறாள் ஒருத்தி. பனையோலையால் நெய்யப்பட்ட கூடைகளோடு செல்லும் அவர்கள் எல்லோரும் மகிழ்சியாக மலர்களைப் பறித்துக் கூடைகளிலே நிரப்பிக்கொண்டு திரும்பி வருகிறார்கள். ஒவ்வொருத்தியும் அவரவர் வீட்டுக்குச் செல்கிறார்கள். தலைவியும் தன் வீட்டைநோக்கி மலர்க்கூடையுடன் நடந்து செல்கிறாள். அப்போது அவளை வழிமறித்துக் காதல் வார்த்தை பேசுகிறான் ஒருவன்(தலைவன்). அவளுக்கும் அவன்மேல் காதல் பிறக்கிறது. இருவருமே தம் காதலை வெளிப்படையாகக் கூறாமல் மறைமுகமாக உணர்த்துவதாக அமைந்துள்ளது இந்தப்பாடல். இருவரின் உரையாடல்களும் ஒரேபாடலில் அடங்குவது இதன் தனிச்சிறப்பு.

“மாண உருக்கிய நன்பொன் மணிஉறீஇ
பேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இளமுகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வனமுலையாய்! மற்று நின்
கையது எவன்? மற்று உரை.
கையதை சேரிக்கிழவன் மகளேன் யான்ää மற்று இ ஃ  தோர்
மாதர்ப் புலைத்தி விலையாகச் செய்ததோர்
போழில் புனைந்த வரிப்புட்டில் - புட்டிலுள் என் உள?
காண்தக்காய்! எற் காட்டிக்காண்
காண் இனி, தோட்டார் கதுப்பின் என்தோழி அவரொடு
காட்டுச் சார்கொய்த சிறுமுல்லை, மற்று இவை.
முல்லை இவை ஆயின் - முற்றிய கூழையாய்!
எல்லிற்றுப் போழ்தாயின் - ஈதோளிக் கண்டேனால்,
செல் என்று நின்னை விடுவேன் யான், மற்று எனக்கு
மெல்லியது ஓராது அறிவு.”  

(கலித்தொகை. முல்லைத்திணை  பாடல்: 17. புhடியவர்:  சோழ மரபிலே தோன்றிய சோழன் நல் உருத்திரன் என்ற புலவர்.)


அவன் கேட்கிறான்: உருக்கிய பொன்னில் நீலமணியைப் பதித்து அமைத்து மெருகூட்டியதுபோல அழகிய உடலைக் கொண்டவளே! இலவமரத்தின் இளமொட்டைப்போல விம்மிப்புடைத்த மார்பகங்களை உடையவளே! உனது கையிலே என்ன இருக்கிறது என்று சொல்வாயா?

அவள் சொல்கிறாள்: நான் இந்த ஊரின் தலைவரின் மகள். இது புலைத்தியொருத்தி செய்து எனக்கு விற்ற பனையோலையில் செய்து வண்ணம் தீட்டப்பட்ட கூடை.

அவன் கேட்கிறான்: கூடை என்பது எனக்குத் தெரியும். குண்களால் பார்த்துக்கொண்டே இருக்கத்தக்க அழகியே! அந்தக் கூடையினுள்ளே என்ன இருக்கிறது? அதை எனக்குக் காட்டுவாயா?

அவள் சொல்கிறாள்: இதோ பார்த்துக்கொள். இவையெல்லாம் எனது தோழிகளோடு நான் காட்டிலே பறித்த சிறுமுல்லைப் பூக்கள்.

அவன் சொல்கிறான்: முல்லைப் பூக்கள்தான் இவை. அப்படியென்றால்ää நீண்டு வளர்ந்து அடர்ந்த கூந்தலை உடையவளே! இப்போது மாலையாகின்றது. ஒருவரை ஒருவர் காணமுடியாதவாறு இருள் சூழ்கின்றது. நீ போகலாம் என்று உன்னை விட்டுவிடுவேன். ஆனால் என் அறிவு மிகவும் மென்மையானது. நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்க்கும் தெளிவில்லாதது. அது உன்னை விரும்புகிறதே என்னால் என்ன செய்யமுடியும்?

இதுதான் பாடலின் கருத்து. எவ்வளவு இதமான உரையாடல்! பெண்ணொருத்தியை விரும்பி அவளோடு பேசுகின்ற ஆணின் வார்த்தைகளில் இருக்கும் நாகரிகமும், நாணத்தோடு அவனுக்குப் பதில்கூறும் பெண்ணின் நளினமும் இலக்கியச்சுவையோடு எடுத்தியம்பப்பட்டுள்ள இதுபோன்ற பாடல்களைப் படிக்கப்படிக்க அவற்றில் அடங்கியுள்ள காட்சிகள் நம் மனத்திரையில் விழுந்து நம்மைப்பரவசப்படுத்துகின்றன.

No comments: