விழுதல் என்பது எழுகையே" - பகுதி 37 ச.நித்தியானந்தன் ,இலங்கை.

பகுதி – 37 தொடர்கிறது
நடந்தது யாவுமே ஒரு கனவாக இருக்கக்கூடாதா 
யாழ்ப்பாண பல்கலைக்கழகம் , மருத்துவபீடம் பேராசிரியர் குமாரவேல், கலா, சாந்தன் கோப்பாய் இராணுவ புலனாய்வாளர்களால் இலக்கத்தகடற்ற வாகனத்தில் கடத்தப்பட்டது.
இராணுவத்தினரின் சித்திரவதைகள்
கோபமடைந்த அதிகாரியின் கையால் அடிபட்டு உடைந்த கையெலும்பு
பொலிஸ் விசாரணைகள்
தலைகீழா கட்டித் தொங்கவிட்டது
மனித உரிமைக்குழுவினர் வந்து பார்வையிட்டமை
செஞ்சிலுவைச்சங்கம் உணவுப் பொதிகள் தந்தமை
பூசா பனாகொடை வெலிக்கடையென்று மாறி மாறி அடைக்கப்பட்டமை
நோ டேற் என்னும் கொடுமையான விளக்கமறியலில் கழிந்த 3 வருடங்கள்.
இறுதியாக சாட்சிகள் போதவில்லை நிதாஸ் என்று கூறி தீர்ப்பெழுதிய நீதிபதி
இனி இந்த நாட்டிலிருக்க முடியாதென்று எல்லா சொத்துகளைகளையும் ஈடு வைத்து ஏஜன்சியிடம் பணம்கட்டிய அந்த நாள்.
கொழும்பில் லொட்ஜில் ஆடு மாடுகள் போல் அடைபட்டு கிடந்த அந்த ஆறேழு மாதங்கள்
இறுதியாக கனவு நாடாகிய சுவிஸ் நோக்கிய பயணம் புறப்பட்ட அந்த அதிகாலை
தாய்நாட்டைவிட்டு மேலெழுந்த விமானம்.
அதன் பின் இங்கு வந்து பட்ட அவலங்கள் ”
சீலன் மாரிமுத்தாகிய உச்சக்கட்ட அவலம்: 
இதெல்லாம் கனவாயிருக்காதா 
கண் விழித்து பார்க்கையில் மருத்துவபீடத்;தில் பேராசிரிய பாலசுப்பிரமணியம் உயிர் இரசாயனவியல் பாடம் எடுத்துக்கொண்டிருக்கும் காட்சி விரியாதா?
மனம் அங்கலாய்த்தது 


பின் அழுதது
இறுக்கி கிள்ளிப்பார்த்தான்
வலித்தது
இது நிஜந்தான்
இதை தாங்கித்தான் ஆகவேண்டும்
தாண்டித்தான் ஆகவேண்டும் 
எங்கோ யாழ்ப்பாணத்தில் இராமசாமிப்பரியாரியின் பீட்டனாயும். பிரக்கராசி கந்தவடிவேலரின் பேரனாயும் போலிஸ்கார புத்மநாதனின் மகனாயும் பிறந்த தர்மசீலனின் வாழ்க்கை இது.
எனக்கு விதிக்கப்பட்டது.
இது எனது விதி
சில நல்ல கிரகங்களும் சில பாவக்கிரகங்களும் என்னை இந்ம நிலைக்கு ஆளாக்கியுள்ளன
கோப்பாய் பொலிஸ் அதிகாரிரி சமிந்தவாஸ் - பத்தில் வியாழன்
நோ டேற் அடித்த நீதவான் இராகு
நிதாஸ் தந்தவர் - கேது
சிவம் ஏழரைச்சனியன்
டேவிட் அங்கிள் எம்மைக்காக்கும் புதன்
தவம் அண்ணை, பானு எல்லாம் நல்ல கிரகங்கள் 
சீலன் என்கிற மாரிமுத்து தலையை உதறிக் கொள்கிறான்
இனி அவனது கண்கள் அழமாட்டாது.
இராமசாமிப்பரியாரியின் பீட்டனாயும்.....
பிரக்கராசி கந்தவடிவேலரின் பேரனாயும்....
போலிஸ்கார பத்மநாதனின் மகனாயும் பிறந்த தர்மசீலனின் வாழ்க்கையை அவன்தான் வாழ்ந்தாக வேண்டும். 
வீழ்ந்தான் என்பது சிறுமையல்ல.
வீழ்ந்தவன் ஒவ்வொரு விழுகையின் அடுத்த கணமே எழுந்தான் என்பதே பெருமை. 
சீலனாக வீழ்ந்தவன் மாரிமுத்தாக எழுந்தான்
போன் வேலை செய்யத் தொடங்கிவிட்டது.
டேவிட் அங்கிளின் நம்பரை டயல் செய்தான் 
சீலனிடம் இப்போது பயம் இல்லை
கவலை இல்லை
பாசம் இல்லை 
எழவேண்டும் என்ற வெறி மட்டுமே எஞ்;சியிருந்தது.
போன் மணி அடிக்கத் தொடங்கியது 
( தொடரும் .....38) 

No comments: